பதிவுகள்

Sunday 22 May 2011

என்னதான் செய்யும் திமுக?

இந்த அளவுக்கு மோசமான ஒரு சோதனையை திமுக இதுவரை சந்தித்ததே இல்லை என்கிற அளவுக்குக் கனிமொழியின் கைது அந்தக் கட்சியை அனைத்து மட்டங்களிலும் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. ஆ. ராசாவின் கைது, கலைஞர் தொலைக்காட்சியில் சோதனை, முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் விசாரிக்கப்பட்டது, என்று ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் வந்தபோதுகூடத் தனது நெஞ்சுரத்தையும், எதையும் சந்தித்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையையும் இழக்காத திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு ஆடிப் போயிருக்கிறார் என்பதை விட இடிந்து போயிருக்கிறார் என்பதுதான் உண்மை.÷முந்தைய நிகழ்வுகளின்போது பதவி பலம் துணிவைக் கொடுத்தது. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், காங்கிரஸ் தனக்குத் துணை நிற்கும் என்றும், நீதித்துறைகூடத் தனது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கும் என்றும் கருணாநிதி கருதினார் என்றுகூட அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அவர் நம்பினார் என்பதைவிட அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்பதுதான் உண்மை.÷""தலைவரே, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பணம் முறையாகப் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. நமது ஐந்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு இலவசத்தால் பயனடையாத குடும்பமே தமிழகத்தில் கிடையாது. குறைந்தபட்சம் திமுக 80 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களிலும் வெற்றி பெற்று விடும்'' என்று அவரை நம்ப வைத்தவர்கள் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் மட்டுமல்ல, அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட மாநில புலனாய்வுத் துறை அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும்கூட.÷""நீதிபதி சைனியின் உறவினர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் மூலம் அவரைச் சரிக்கட்டியாகிவிட்டது. சந்தேகம் ஏற்படாத வகையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க அவர் சம்மதித்துவிட்டார்'' என்றுகூட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உறுதி அளித்திருந்தாராம். மூத்த வழக்கறிஞர் ஜேட்மலானியை கனிமொழிக்காக வாதாட ஒப்பந்தம் செய்ததிலேயேகூட ஊழல் நடந்ததாகவும், ஜேட்மலானி வாதிட்டதாலேயே வழக்கு ஜெயிக்கவில்லை என்றும்கூட கூறப்படுகிறது.÷1977-ல் எம்.ஜி.ஆரின் அதிமுகவிடம் தோற்றுப் போய் ஆட்சி இழந்தபோதும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து மிகப்பெரிய தேர்தல் தோல்வியைச் சந்தித்தபோதும் கருணாநிதியால் கட்சியை நிலைகுலையாமல் காப்பாற்ற முடிந்தது. அதற்குக் காரணம், அவருக்கு வயதும் துணிவும் சாதகமாக இருந்தன. இப்போது முதுமை ஒரு புறமும், முன்பு போலப் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று செயல்பட முடியாமல் உடல்நலக் குறைவு இன்னொரு புறமும் கருணாநிதியை முடக்கிப் போட்டிருக்கிறது. போதாக் குறைக்குக் குடும்பப் பிரச்னைகள் வேறு.÷""தலைவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரத்தில், தனது மனைவி மக்களைப் பற்றிக் கவலையே படாமல் கட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இப்போது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் அவர் குடும்பத்தைப் பற்றிய கவலையில் மூழ்கி இருக்கிறார். 2001 தேர்தலில் "இதுதான் எனது கடைசித் தேர்தல்' என்று அறிவித்தது போல, அவர் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியலிருந்து விலகி இருந்தால் இன்று அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது'' என்று சிஐடி காலனி வீட்டில், கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு கூடியிருந்த முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் கூறியதைத் தொண்டர்கள் பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் நடந்த முறைகேடுகள் பற்றிய விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்து வருவதால் ஆ. ராசாவின் நிலைமை மேலும் தர்மசங்கடமாகிறது. கலைஞர் தொலைக்காட்சிப் பிரச்னை, கனிமொழி கைதுக்குப் பிறகு என்னவாகும் என்பதை உடனடியாகச் சொல்ல முடியவில்லை.  அதிகாரத்தை எல்லாம் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு தான் அளித்துவிட்டதாகக் கூறி தயாளு அம்மாள் தப்பித்துக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. 60% பங்குகளை வைத்திருக்கும் ஒருவர் தனக்குத் தொடர்பே இல்லை என்று பிரச்னையிலிருந்து நழுவ முடியுமா என்று கேள்வி எழுப்புகிறது சி.பி.ஐ.÷இனி அடுத்த கட்டமாகக் கலைஞர் தொலைக்காட்சி முடக்கப்படக் கூடும். முன்பு ஜெ.ஜெ. டிவியை முடக்குவதற்காகக் கூறப்பட்ட எல்லா காரணங்களும் இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள்.÷மிகவும் மோசமான நிலையில் இருப்பது கருணாநிதி குடும்பத்தில் காணப்படும் குழப்பம்தான். "கனிமொழிக்காகக் கட்சியை ஏன் காவு கொடுக்க வேண்டும்?' என்கிற கேள்வியுடன் மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்றும், "20% பங்கு வைத்துக் கொண்டிருக்கும் எனது மகள் சிறையிலும், 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாளும் குடும்பமும் ஸ்பெக்ட்ரம் பணத்தை அனுபவிப்பது என்ன நியாயம்?' என்று ராஜாத்தி அம்மாள் தரப்பும் கருணாநிதியைத் தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது.÷""இத்தனை பிரச்னைக்கும் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று கட்சியினர் மத்தியில் பரவலாக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பும், தயாநிதி மாறன் எப்படியாவது ஆ. ராசாவை அகற்றிவிட்டுத் தான் மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராவதற்குச் செய்த பின்னணி வேலைகளும்தான் இத்தனைக்கும் காரணம் என்று கூறி வருத்தப்படாத கட்சிக்காரர்களே கிடையாது.÷""ஆ. ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்'' என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர். ""2009 மக்களவைத் தேர்தலுக்கு ஆ. ராசா கொடுத்த பெரும் பணம்தான் திமுக கூட்டணி தமிழகம் (27), புதுவை (1) இடங்களில் வெற்றி பெறக் கை கொடுத்தது. கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கும் ஆ. ராசாவிடமிருந்துதான் பணம் பெற்றுக் கொண்டார்கள். அது ஏன்? இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்கள் செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது?' ராசா கைதானபோது கவலைப்படாதவர்கள், அவருக்கு ஜேட்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும் என்று நினைக்காதவர்கள் இப்போது கனிமொழிக்கு ஒன்று என்றால் மட்டும் துடிதுடித்துப் போகிறார்களே, அது என்ன நியாயம்?'' என்று கேள்வி எழுப்பினார் அந்த ராசாவின் நண்பர்.÷""ராசா ஒரு "தலித்' என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்று தலைவர் சொன்னபோது அதை நாங்கள் நம்பினோம். இப்போதுதான் தெரிகிறது, ராசா ஒரு தலித் என்பதால்தான் தலைவர் அவரைப் பலிகடா ஆக்கப் பார்த்திருக்கிறார். தனது மனைவியும் மகளும் நிரபராதிகள், ஒன்றும் தெரியாதவர்கள் என்றும், ஆ. ராசாதான் அத்தனை தவறுகளுக்கும் காரணம் என்றும் நீதிமன்றத்தில் வாதாட எப்படி மனம் வந்தது?'' தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத, கடந்த திமுக ஆட்சியில் பொறுப்பான பதவி வகித்த "தலித்' ஒருவரின் குமுறல் இது. ÷""தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது கருணாநிதிக்கு எப்போதுமே உதட்டளவுப் பாசம்தான் இருந்திருக்கிறது. இதற்கு நேர் எதிராக முதல்வர் ஜெயலலிதாவைப் பாருங்கள்.  சீனியர்கள் பலர் இருந்தும்கூட, தாற்காலிக பேரவைத் தலைவராக குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவிலிருந்து அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த செ.கு. தமிழரசன் மூலம் பதவிப் பிரமாணம் செய்ய வைத்து நிஜமாகவே ஒரு புரட்சியைச் செய்து காட்டி இருக்கிறார் முதல்வர். இதை கருணாநிதி நிச்சயமாகச் செய்திருக்க மாட்டார்'' என்று கருத்துத் தெரிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கணிப்பின்படி, ஆ. ராசா அப்ரூவராகக் கூடும்.÷இன்றைய நிலையில் திமுக மத்திய அமைச்சரவையில் தொடருமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் திமுகவைக் கழற்றி விடுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இரண்டுமே நடக்காது என்கிறார்கள் தில்லியிலுள்ள அரசியல் நோக்கர்கள்.÷""ஆட்சியையும் இழந்துவிட்ட நிலையில் திமுகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்சப் பாதுகாப்பு மத்திய அரசில் அங்கம் வகிப்பதுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் திமுகவுக்கு என்ன லாபம் ஏற்பட்டுவிடப் போகிறது. நிலைமை மேலும் மோசமாகக் கூடும். அந்தத் தவறைக் கருணாநிதி ஒருநாளும் செய்யமாட்டார்'' என்பதுதான் பரவலான கருத்து.÷காங்கிரஸýம் சரி, திமுகவைத் தனது கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு, காமன்வெல்த் போன்ற ஊழல்களில் சிக்கி இருக்கும் நிலையில் திமுகவை ஊழல் என்று காங்கிரஸ் கூறுவது "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற கதையாகத்தான் இருக்கும்.÷""தமிழகத்தில் அதிமுக ஆட்சியுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ள நிச்சயமாகக் காங்கிரஸ் தலைமை விரும்பும். அதற்காக, திமுகவை வெளியே அனுப்பிவிட்டு அதிமுகவுடன் உடனடியாகக் கைகோர்க்குமா என்பது சந்தேகம்தான். பலவீனமான திமுகவின் தோழமையும், வலிய நேசக்கரம் நீட்டும் அதிமுகவின் ஆதரவும் கிடைத்தால் காங்கிரஸýக்குக் கசக்கவா செய்யும்? அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருப்பதால், இப்போதைக்கு உறவில் மாற்றம் இருக்காது. ஆனால், திமுகவுக்கு அதனால் எந்தவித லாபமும் இருக்காது. இதுதான் நிலைமை'' என்று கணிக்கிறார்கள் தில்லி அரசியல் பார்வையாளர்கள்.÷திமுகவின் நிலைதான் என்ன? என்ன செய்வது என்று சிந்திக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறது திமுக. எந்தக் கருணாநிதியால் பல சோதனைகளைக் கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றப்பட்டதோ, அதே கருணாநிதியின் குடும்பப் பாசத்தால் திமுக இப்போது நிலைகுலைந்து போயிருக்கிறது. கருணாநிதியை விலக்கி நிறுத்திவிட்டுக் கட்சித் தலைமையிடத்து திமுகவை வழிநடத்தக் கூடிய திறமை யாருக்குமே இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை. திமுக சார்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல் விவாதங்களில் பங்கேற்க நடிகை குஷ்பு அனுப்பப்படுகிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி ஆட்சியைப் பிடித்த கட்சி இப்போது சுயமரியாதையை முற்றிலுமாக இழந்து, "விதிவிட்ட வழி' என்கிற பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய நிலைமை.÷இதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்ததால்தானோ என்னவோ, அறிஞர் அண்ணா தனது தம்பிகளிடம் "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று வலியுறுத்தினார்? என்னே அண்ணாவின் தீர்க்க தரிசனம்!

Friday 20 May 2011

இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.!

சென்னை பழவந்தாங்கல் என்ஜிஒ காலனியில் உள்ள அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் யாரும் அது ஒரு எம்.எல்.ஏ.வின் வீடு என்றால் நம்பமாட்டார்கள். ஒரு மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடு அது.

அந்த வீட்டில்தான் மதுரவாயல் தொகுதியில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.பீம்ராவ் வசிக்கிறார்.

வீட்டிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தவிர ஆடம்பரப் பொருள்கள் எதுவும் இல்லை. விலை உயர்ந்த பொருள்களாக இரண்டைக் குறிப்பிடலாம்.

ஒன்று ஒரு பித்தளை தவலை. இரண்டாவது திமுக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இலவசக் கலர் டிவி. (அந்த டிவியும் பீம்ராவ் மனைவி பிடிவாதமாக வாங்கி வைத்ததாம்.)

இந்த எளிமையான வீட்டில் இருந்துதான் க.பீம்ராவ் கட்சி ரீதியாக சிறப்பாகப் பணியாற்றி வந்துள்ளதுடன், இப்போது தேர்தலிலும் சாதனை படைத்துள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதே தமிழகத்தில் பெரும் போராட்டம். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து வார்டுகள் இதற்குச் சரியான உதாரணம்.

இந்நிலையில்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான க.பீம்ராவ் பொது தொகுதியான மதுரவாயலில் நின்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.செல்வத்தைவிட பீம்ராவ் கூடுதலாக 24,011 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் இரண்டு சந்தோஷங்கள் கிடைத்திருப்பதாக க.பீம்ராம் கூறுகிறார்.

ஒன்று: "இன்னும் கூடுதலாக மக்கள் பணியாற்ற ஒரு பதவி கிடைத்திருக்கிறது. ஆனால்

இதைப் பதவி என்று நாங்கள் சொல்ல மாட்டோம். பொறுப்பு என்றுதான் சொல்வோம். இதன் மூலம் மக்களோடு இன்னும் நெருங்கிப் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.'

இரண்டு: "புது பேன்ட் சட்டைகள் கிடைக்கின்றன. எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் அழுக்கு சட்டையோடு எங்கும் போகக்கூடாது என்று தோழர்கள் நினைக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு பத்து பேன்ட் சட்டைகள் எடுத்துக் கொடுத்தார்கள். இதைப்போல பல தோழர்கள் புது பேன்ட் சட்டைகள் எடுத்து வருகிறார்கள். இது ஒரு பெரிய சந்தோஷம்' என்கிறார்.

புது பேன்ட் சட்டை கொடுக்கும்போது க.பீம்ராவ் கண்டிப்பாகத் தையல் கூலியையும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

இந்த முறையைச் சிலர் தவறாக நினைக்கக்கூடும். ஆனால் கட்சி ரீதியான அவர் நடைமுறை வாழ்க்கையைப் புரிந்தவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.

1983-ம் ஆண்டு வாலிபர் சங்கம் மூலம் பீம்ராவ் அரசியல் பணிக்கு வந்து, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்திச் சிறை சென்றவர்.

இப்போது தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். முழு நேர கட்சி ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியால் அளிக்கப்படும் மாதாந்திரப் படியான 3 ஆயிரம் ரூபாயே அவரின் வருமானம்.

முழு நேர கட்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள் வேறு பணிகளிலும் இருக்கக்கூடாது. இந்தப் பணத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல். 2 மகன்கள்; ஒரு மகள் என இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றவர்கள் பள்ளி வகுப்புகளில் படித்து வருகிறார்கள். இவர்களின் கல்விச் செலவுகளை எல்லாம் உறவினர்களே கவனித்துக் கொள்கிறார்கள்.

எம்.எல்.ஏ.சம்பளம்: எம்.எல்.ஏ.க்களுக்குப் படிகளுடன் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தச் சம்பளத்தால் பீம்ராவ் குடும்பம் வசதி பெறும் என்று நினைத்தால் அதுவும் தவறானதாகும். இந்தச் சம்பளம் அனைத்தும் கட்சிக்குச் சென்று அவருக்குக் கிடைக்கப்போவது வெறும் 5 ஆயிரத்து 600 ரூபாயே.

"சம்பளம் முழுவதும் கட்சிக்கே போய்விடுவதால் வருத்தமா?' என்றால் "சம்பளம் என்பது பொருட்டல்ல. எனக்கு மக்களுக்குப் பணியாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதுதான் கவலையாக இருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்றுவதற்குப் போராடும் ஒரு மருத்துவரைப் போல நான் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்' என்று நினைக்கிறேன் என்றார்.

"பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் வெற்றிபெற்று இருப்பதன் மூலம் தமிழகத்தில் ஜாதி கண்ணோட்டம் குறைந்து போய்விட்டது என எடுத்துக் கொள்ளலாமா?' என்று கேட்டால், "தமிழகம் முழுவதும் குறைந்து போய்விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது. நான் வெற்றிபெற்றது நகர்ப்புறத்தைச் சார்ந்த பகுதி. இங்கு ஜாதி எண்ணம் குறைந்திருக்கலாம்.

ஆனால் ஜாதி உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. எந்தச் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறப்பான மக்கள் தொண்டு செய்பவர்களாக இருந்தால் அவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

ஜாதியற்ற சமுதாயத்தைக் காணவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதில் வெற்றிபெறலாம் என்கிற நம்பிக்கையை என் வெற்றி ஏற்படுத்தி இருக்கிறது' என்கிறார் க.பீம்ராவ் எம்.எல்.ஏ.

Thursday 19 May 2011

தோல்வியில் வெற்றி!

 எதிர்பாராதது நடந்திருக்கிறது. அதை நிகழ்த்தி இருப்பவர் 88 வயதான வி.எஸ். அச்சுதானந்தன். ""2015-ல் கேரள அரசு 93 வயது முதியவர் ஒருவரை முதல்வராகக் கொண்டு செயல்படுவதை நீங்கள் விரும்புவீர்களா?'' என்கிற கேள்வியைக் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி கேரள வாக்காளர்களிடம் கேட்டபோது, அது அவர்களது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகக் கேரள மக்கள் எடுத்துக் கொண்டதன் விளைவுதான் கேரளத் தேர்தல் முடிவுகள்.  அண்டை மாநிலமான தமிழகத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து செயல்படும் 87 வயது முதியவரின் தலைமையிலான திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் காங்கிரஸ், தங்கள் மாநிலத்தில் அப்பழுக்கில்லாத, தனது பொதுவாழ்க்கையில் ஒரு சின்ன கறைகூடப் படியாத ஒருவரை அரசியலில் அரிச்சுவடிப் பாடம் படிக்கும் ராகுல் காந்தி விமர்சித்ததை ஏற்றுக்கொள்ளப் பலரும் தயாராக இருக்கவில்லை. படுதோல்வியைச் சந்திக்கும் என்று எதிர்பார்த்த இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி மயிரிழையில்தான் ஆட்சியை இழந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் வி.எஸ். அச்சுதானந்தன் என்கிற மனிதருக்குக் கேரள மக்களிடம் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்குத்தான் காரணம் என்பது தெளிவு.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைந்த இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி அரசின் ஐந்தாண்டுகால ஆட்சியைப் பற்றிப் பெரிதாகக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. பெரிய சாதனைகள் என்று வர்ணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, சுறுசுறுப்பான நிர்வாகம் இருந்ததாகவும் சொல்ல முடியாது. ஆனால், ஊழலற்ற நிர்வாகத்தை முதல்வர் அச்சுதானந்தன் முன்வைத்தார் என்பதை மறுத்துவிடவும் முடியாது.  கட்சிக்குள்ளேயே அச்சுதானந்தனுக்கு எதிராகக் கட்சியின் செயலர் பினராயி விஜயன் நடத்திய பனிப்போர்கள் ஒருபுறம். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை இனத்தவர்களின் மதகுருமார்கள் இடதுசாரி அரசுக்கு எதிராக வெளிப்படையாகவே முன்வைத்த விமர்சனங்கள் மற்றொருபுறம். இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த மூன்று கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக மாறியதும், 2009 மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் இடதுசாரிக் கூட்டணி தோல்வியைத் தழுவியதும், கடந்த அக்டோபரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கூட்டணி மீண்டும் படுதோல்வி அடைந்ததும், அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்திக்கப் போகிறது என்கிற கருத்துக்கு வலு சேர்த்தன.  ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியபோது, நகத்தைக் கடிக்கத் தொடங்கியது என்னவோ காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்தான். திருவனந்தபுரத்திலுள்ள காங்கிரஸ் தலைமையிடமான இந்திரா பவனைவிட, தோல்வியடைந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையகமான ஏகேஜி சென்டரில்தான் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.  மாபெரும் வரலாறு காணாத வெற்றி என்று ஊடகங்களால் கணிக்கப்பட்ட ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி என்பது கனவாகி, வெறும் நான்கு இடங்கள் அதிகம் பெற்று குருட்டு அதிர்ஷ்டத்தில் பெற்ற வெற்றியாக மாறியதற்குக் காரணம் என்ன? ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் உம்மன் சாண்டியின் பதிலில் தெளிவு இருந்தது - ""முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு மக்கள் மத்தியிலிருந்த தனிப்பட்ட செல்வாக்கும், அவரது பிரசாரமும்தான் எங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய மிகப்பெரிய வெற்றியைத் தட்டிப் பறித்து விட்டிருக்கிறது''.  மக்களின் பேராதரவைப் பெற்ற 88 வயது வி.எஸ். அச்சுதானந்தனுக்குக் கட்சிக்குள் ஆதரவு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். 47 ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டபோது இருந்த 32 ஸ்தாபகத் தலைவர்களில் எஞ்சி இருப்பவர் அச்சுதானந்தன் மட்டுமே. கேரள முதல்வராக இருந்த அச்சுதானந்தன் கடந்த 2008 முதல் பொலிட்பீரோ உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றி நிறுத்தப்பட்டிருக்கிறார் என்றால் அந்த வேதனையை யாரிடம் சொல்லி நியாயம் கேட்பது?  கேரள சட்டப்பேரவை சரித்திரத்தில் இதுவரை இவ்வளவு குறைந்த வித்தியாசத்தில் தேர்தல் முடிவுகள் வெற்றி, தோல்வியைக் கொடுத்ததே இல்லை. ஒன்பது கட்சிகள் அடங்கிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி, சட்டப்பேரவையிலுள்ள 140 இடங்களில் 72 இடங்களையும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான எட்டு கட்சி இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி 68 இடங்களையும் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  கேரள மாநில அரசியல் விசித்திரமானது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களைவிடத் தோல்வி அடைந்தவர்களைப் பற்றிய பெருமைகளைத்தான் அதிகம் பேசுகிறார்கள். ஒரு மிகப்பெரிய தோல்வியை எப்படி 88 வயது அச்சுதானந்தன் திறமையாக எதிர்கொண்டு மயிரிழையில் தோல்வி அடைந்தார் என்று அவரது வீரதீரப் பிரதாபங்களைத்தான் பத்திரிகைகள் வர்ணிக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தனது முழு ஒத்துழைப்பையும் அச்சுதானந்தனுக்கு அளித்திருந்தால், இன்னும் நான்கைந்து இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் என்று கருத்துத் தெரிவிக்காத அரசியல் நோக்கர்களே இல்லை.  படுதோல்வி அடைந்த கட்சித் தலைவர்கள்கூடத் தங்களது பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இல்லாத ஒரு காலகட்டத்தில், கேரள மாநிலக் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, தங்களது கூட்டணி ஆட்சியைப் பிடித்தாலும் தனது கட்சி எதிர்பார்த்த வெற்றி பெறாததற்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். தனது தலைமையில் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், தான் முதல்வர் பதவிக்கு ஏற்றவரல்ல என்றுதானே பதவிப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.  உம்மன் சாண்டி இரண்டாவது முறையாகக் கேரள முதல்வராகிறார். கேரள காங்கிரஸ் (மாணி) நிதி உள்ளிட்ட மூன்று அமைச்சரவைத் துறைகளும், முஸ்லிம் லீக் நான்கு அமைச்சர்களும் கல்வி, தொழில், உள்ளாட்சி உள்ளிட்ட ஏழு துறைகளும் பெற்று, சுமுகமான பதவிப் பங்கீடு முடிந்திருக்கிறது. இனிமேல் காங்கிரஸ் கட்சிக்குள் யாருக்கு என்ன துறைகள், எத்தனை அமைச்சர்கள் என்பது வழக்கம்போலப் போட்டாபோட்டிகள், கோஷ்டிப் பூசல்கள், காங்கிரஸ் மேலிடத்துத் தலையீடு என்று தீர்மானிக்கப்படும்.  "ஜெயித்தவர் தோற்றார்; தோற்றவர் வென்றார்' என்று சொல்வார்கள். அது கேரளத்தில் நடந்திருக்கிறது!

Wednesday 18 May 2011

கலைஞருக்கு பழ.நெடுமாறன் எழுதிய பகிரங்கக் கடிதம்!

"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
 தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.

 "
பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.

 
ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.

 1969-
ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள்.


6
மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.

 
எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

 1978-
ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள்.

உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

 1985-
ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.


ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
 காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.

 
காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.

 
ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

 
தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை.

ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.

 
இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!

 
கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.

 
நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.
 1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.
 1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.
 பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.
 1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
 அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.
 தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.
 அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?
 நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?
 தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?
 இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸூக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?
 முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!
உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.
 திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.
 ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.
 உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரஸையும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.
 மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?
 கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.
 அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.
 பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.
 தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?
 ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?
 ""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
 கருமமே கட்டளைக் கல்''  ’’ என்று கூறியுள்ளார்.