பதிவுகள்

Saturday, 9 April 2011

தமிழகத்தில் தேர்தல் நடத்தும் பணி சவாலானது- குரேசி




தேர்தல் ஆணையரின் கருத்து ஒவ்வொரு தமிழனும் தலைக்குனியக்குடிய வகையில் உள்ளது தேர்தல் ஆணையரின் கருத்து!  சரியா? தவறா? என் ஆராயத் தேவை இல்லை.நம் மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக சோதனையின்போது கைப்பற்றபடும்.பணங்களே இதற்கு  சாட்சிகளாக உள்ளன.அப்படி உண்மையில் நாமும் சொல்லலாம் இந்த தேர்தல் பணநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் நடக்கும் தேர்தல் அதனால் தான் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சிகளும்  பெரும்பாலும் பண முதலைகளை வேட்பாளர்களாக அறுவித்துள்ளனர். இதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்தான் உள்ளது. ஏன் பண முதலைகளாக இருந்தால் மட்டும் தான் சட்டமன்றதிக்கும் நாடாளுமன்றதிக்கும் செல்ல முடியும் என்பது எழுதப் படாத விதியாக மாறிவிட்டதே !   பணத்தை மட்டுமே தகுதியாக கொண்டு எத்தனையோ முதலைகள் ஜனநாயகத்தையே  மவ்னமாக்கி கொண்டு இருக்கிறார்களே   மக்களுக்கு சேவை செய்யவா பணங்களை வாரி இறைக்கிறார்கள்?.                 

திமுகவின் திராவிட முகம் !


Thursday, 7 April 2011

வெற்றுப்பத்திரிகை!

2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) முறைகேட்டுக்கு ஓர் அதிர்ஷ்டம் உண்டு. அந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் வேறு ஏதாவது பரபரப்பான செய்தி வெளிவந்து ஸ்பெக்ட்ரம் பிரச்னை ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாமல் பின்னுக்குத் தள்ளிவிடும்.  ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்திலிருந்து வெட்டப்பட்ட ஒரு கால்வாய் திமுகவின் தலைமையிடமான சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்திலிருந்து இயங்கும் கலைஞர் தொலைக்காட்சியைச் சென்றடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்காக மத்தியப் புலனாய்வுத் துறையினர் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும், மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியையும் விசாரித்தனர்.  பாருங்கள் அதிர்ஷ்டத்தை, எந்தப் பத்திரிகையும் விசாரணை தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் தர முடியாமல் ஜப்பானை சுனாமி தாக்கிய செய்தி தடுத்துவிட்டது. முக்கிய ஊடகங்களான சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் அவர்கள் குடும்ப நிறுவனங்கள் என்பதால் அடக்கி வாசித்து விசாரணை நடந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தவிர்த்துவிட்டன.  இப்போதும் பாருங்கள், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சிபிஐயின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று, அந்தச் செய்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. சுமார் 80,000 பக்கங்களுக்கும் அதிகமான அந்தக் குற்றப்பத்திரிகை 654 ஆவணங்களையும், 125 சாட்சிகளையும் முன்வைத்திருக்கிறது. ஒன்பது நபர்களையும், மூன்று நிறுவனங்களையும் இந்திய குற்றவியல் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டியிருக்கிறது.  கைது செய்யப்பட்டுள்ள முக்கிய எதிரிகளான முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரும், திமுகவின் கொள்கை பரப்புச் செயலருமான ஆ. ராசா, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலர் சித்தார்த் பெஹுரா, ஆ. ராசாவின் தனிச்செயலர் ஆர்கே. சந்தோலியா இப்போது எட்டிசலாட் டி.வி. என்று வழங்கப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் உஸ்மான் பால்வா ஆகிய நால்வருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்வான் டெலிகாம், யூனிடெக், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கலைஞர் தொலைக்காட்சி போன்றவை குற்றப்பத்திரிகையில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன, அவ்வளவே.  கடந்த 2-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், ஆ. ராசாவின் காவல் 60 நாளைக் கடந்திருக்கும் என்பதால் அவரைக் கட்டாயமாகப் பிணையில் விடுவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். ஏற்கெனவே, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராசாவின் விடுதலை மேலும் தலைவலியை ஏற்படுத்திவிடும் என்பதாலோ என்னவோ அவசரக் கோலத்தில் ஒரு குற்றப்பத்திரிகையைப் புலன் விசாரணைத்துறை தாக்கல் செய்திருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.  சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகை 80,000 பக்கங்கள் கொண்டது என்கிற பிரமிப்பை ஏற்படுத்துகிறதே தவிர, முறையாகக் குற்றங்களைப் பட்டியலிட்டுத் தகுந்த சாட்சிகளுடனும், ஆதாரங்களுடனும் தாக்கல் செய்திருக்கிறதா என்றால் இல்லை. ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு இருப்பது தெரிந்தும், அரசியல் நிர்பந்தங்களை மீறி நமது புலனாய்வுத் துறையால் செயல்பட முடியவில்லையோ என்கிற தோற்றத்தைத்தான் குற்றப்பத்திரிகை ஏற்படுத்துகிறது.  60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், எதிரிகளாக அடையாளம் காட்டப்பட்டிருப்பவர்கள் பிணையில் விடுதலையாகி விடுவார்கள் என்பது, அரைகுறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குக் காரணமாக இருக்க முடியாது. குற்றம் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் எதிரிகள் அனைவரும் ஐயம் திரிபறக் கண்டறியப்பட்டு, தகுந்த ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகைகளில் அடையாளம் காட்டப்பட்டிருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?  சிபிஐ கைது செய்திருப்பதும்கூட தேர்ந்தெடுத்த சிலரைத்தானே தவிர, குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படவில்லையே, ஏன்? கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் போயிருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியில் விசாரணை நடத்தப்பட்டு அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால், கலைஞர் தொலைக்காட்சி முதல்வரின் குடும்பத்தினருடன் தொடர்புடையது என்பதால், சட்டப்பேரவைத் தேர்தல் முடியும்வரை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா? அரசியல் காரணங்கள் சிபிஐயின் கையை ஏன் கட்டிப்போட வேண்டும்?  தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாக எடுத்துக்கொண்டுதான் மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. தணிக்கை அதிகாரியின் அறிக்கைப்படி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளால் ஏற்பட்டிருக்கும் உத்தேச இழப்பு ரூ. 57,666 கோடியிலிருந்து ரூ. 1,76,645 கோடிவரை. ஆனால், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ. 22,000 கோடி மட்டும்தானே, ஏன் அப்படி?  முறைகேடு நடக்கிறது என்று மன்மோகன் சிங்குக்குத் தெரிந்தும், தனக்குப் பலர் தகவல்கள் தந்தார்கள் என்று பிரதமரே வாக்குமூலம் அளித்தும் அவரைப் பற்றிக் குற்றப்பத்திரிகையில் ஒரு வார்த்தைகூட இல்லையே, ஏன்? பிரதமர் மத்தியப் புலன் விசாரணைத் துறையின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டவரா?  அனில் அம்பானியில் தொடங்கி ரத்தன் டாடா வரை பல பெரு முதலாளிகள், கார்ப்பரேட் முதலைகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களே, அவர்களை நெருங்க மத்தியப் புலனாய்வுத் துறை பயப்படுகிறதே, ஏன்? ஏனோ தானோ என்று வழக்கை ஜோடித்து, கார்ப்பரேட் முதலாளிகளும், அவர்களது இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்களும் தப்பித்துப்போக வழிவகுத்து விடுமோ மத்தியப் புலன் விசாரணைத் துறை என்கிற அச்சம் மேலிடுகிறது. குற்றப்பத்திரிகையில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல் தொடர்புள்ள குடும்பத்தினரும் ஏன் இடம்பெறவில்லை என்கிற கேள்விக்கு இடமாகிவிட்டது.  சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இனம் காணப்பட்டுத் தகுந்த ஆதாரங்களுடன் சட்டத்தின்முன் நிறுத்தப்படாவிட்டால், மக்களாட்சியின் மீதான நம்பிக்கையே தகர்ந்துவிடும் என்பதை மத்தியப் புலன்விசாரணைத் துறை புரிந்துகொள்ள வேண்டும்!

Tuesday, 5 April 2011

வாழ்க பணநாயகம்!

பணக்காரர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டி போட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால், ஜனநாயகத்துக்கு அதைவிடப் பெரிய ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒன்றிரண்டு தேர்தல்களில் வேண்டுமானால் இது செல்லுபடியாகுமே தவிர, இதுவே பரவலான அதிருப்தியையும், மக்களாட்சிக்கு எதிரான மனப்போக்கையும் ஏற்படுத்தித் தீவிரவாதிகளுக்குத் தீனிபோடும் சூழ்நிலைக்குத் தேசத்தைத் தள்ளிவிடக்கூடும். 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 240 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் முதலிடத்தில் இருக்கும் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எச். வசந்தகுமார், ஊரறிந்த வியாபாரி. தமிழகத்தின் மிகப்பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளர். இவருக்கு ரூ. 133 கோடி சொத்து இருப்பதில் குற்றம் காண முடியாது. ஆனால், எந்தவிதப் பின்னணியும் இல்லாத பலர் கோடீஸ்வரர்களாக வலம் வருவது எப்படி என்பதுதான் புரியவில்லை. 240 வேட்பாளர்களில் 75 பேர் அதிமுகவினர். 73 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் (33), பாஜக (25), தேமுதிக (12) பாமக (11) போன்ற கட்சிகள் மட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள்கூடத் தங்களது வேட்பாளர்களாகக் கோடீஸ்வரர்களைக் களமிறக்கி இருக்கின்றன என்பதுதான் வியப்புக்குரிய ஒன்று. ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தால் ஐம்பது தலைமுறை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம் போலிருக்கிறது. எப்படித்தான் இவர்களுக்கு இவ்வளவு சொத்துச் சேருகிறது என்று யாரையும் கேட்கவிடாமல் இருப்பதற்காகவே, நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதுபோல, தனது தொகுதியிலுள்ள வாக்காளர்களின் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டதுக்கு "மொய்' எழுதிவிடுகிறார்கள். அவர்களும் "அள்ளிக் கொடுக்கும் வள்ளல்' என்று வாயாரப் புகழ்ந்து வாலாட்டவும் செய்கிறார்கள். தமிழக உணவு அமைச்சர் எ.வ. வேலு கடந்த 2006 தேர்தலில் போட்டியிடும்போது தனது வேட்புமனுவுடன் இணைத்திருந்த சொத்து விவரப்படி, அவரிடம் ரூ. 60,000 மதிப்புள்ள 1.1 ஏக்கர் விவசாய நிலமும், வெறும் ரூ. 15,000 மதிப்புள்ள நகைகளும், வங்கியில் ரூ. 25,000 இருப்பதாகவும் கணக்குத் தாக்கல் செய்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவரது வங்கிக் கணக்கில் ரூ. 17.47 லட்சம் இருக்கிறது. ரூ. 1.75 கோடி மதிப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன. அவரது வீட்டின் மதிப்பு ரூ. 4.5 கோடி. சொத்து பத்து எதுவும் இல்லாமல் இருந்த அவரது மனைவிக்கும் இப்போது லட்சக்கணக்கில் சொத்து சேர்ந்திருக்கிறது. அவரை விடுங்கள் பாவம். தனது பெயரிலும், மனைவி பெயரிலும்தான் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார். முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களைவிடத் தங்களது மனைவியின் பெயரிலும், அதைவிட அதிகமாகத் துணைவியின் பெயரிலும் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார்களே, அவர்களை என்ன சொல்ல? முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெறும் ரூ. 4.92 கோடி மட்டுமே. அவரைவிட அவரது மனைவி தயாளு அம்மாளுக்குச் சொத்து அதிகம் - ரூ. 15.45 கோடி. அதைவிடத் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு அதிகம் - ரூ. 23.97 கோடி. தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து மதிப்பு ரூ. 75.18 லட்சம் மட்டும்தானாம். அவரது மனைவி ரங்கநாயகியின் சொத்து மதிப்பு ரூ. 93 லட்சம். ஆனால், துணைவியார் லீலாவின் சொத்து எவ்வளவு தெரியுமா? ரூ. 2.25 கோடி. அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், பெரியகருப்பன், பரிதி இளம்வழுதி, என். செல்வராஜ், வெள்ளக்கோவில் சாமிநாதன், தங்கம் தென்னரசு என்று இவர்களைவிட இவர்களது மனைவிகளுக்குத்தான் பல மடங்கு அதிகமாகச் சொத்துக் குவிகிறது. எந்தப் பதவியும் வகிக்காத அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர முடியாது. கேட்டால் வியாபாரம் செய்கிறார்கள் என்றோ, இப்போது யாரைக் கேட்டாலும் சொல்லும் பதிலான "ரியல் எஸ்டேட் செய்து சம்பாதித்தது' என்றோ கூறுவார்களோ என்னவோ... சட்டப்பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில் எப்படி இவ்வளவு சொத்துகளைத் தங்கள் பெயரிலும், தங்கள் உறவினர்கள் பெயரிலும் வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதைத் தட்டிக் கேட்க வேண்டிய வருமானவரித் துறையோ, லஞ்ச ஊழல் தடுப்புத் துறையோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே கிடையாது. கேட்டால் ஆடிட்டர் மூலம் முறையாகக் கணக்குத் தாக்கல் செய்து வரியும் கட்டி இருக்கிறார்கள் என்று பதிலளித்து விடுகின்றனர். முறைகேடாகச் சம்பாதித்து முறையாக வரி கட்டி விட்டால் நேர்மையான மனிதர் என்று நற்சான்றிதழ் கொடுக்கப்படும் ஒரே தேசம் நமது இந்தியாவாகத்தான் இருக்கும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று வேறுபாடே இல்லாமல் கோடீஸ்வரர்களை அடையாளம் கண்டு வேட்பாளர்களாகக் களமிறக்கி இருக்கின்றன. வேட்பாளர் தேர்வுக்கு வரும்போதே "உங்களால் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?' என்கிற கேள்வியுடன்தான் நேர்முகமே தொடங்குகிறது. பணம் கொடுத்து வேட்பாளர்களானதாகக் கூறப்படுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவைக்கான ஒன்றாக இல்லாமல் ஆதாயம் தரும் தொழிலாக மாறிவிட்டதன் காரணம் இதுதான். தெருக்கோடியில் மக்கள், பல கோடிகளில் புரளும் வேட்பாளர்கள். வாழ்க பணநாயகம்!

Monday, 4 April 2011

இந்தியாவின் கேட்பாரற்ற நிலை!

உலகப் பணக்காரன், அமெரிக்க கோடீஸ்வரன் வாரன் பப்பெட்டின் இந்திய விஜயம்  களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற அவாளின் மேல்  லோகங்கள் மட்டுமல்ல, தினகரன் பத்திரிகை வரை எஜமான் காலடி மண்ணெடுத்து எழுத  ஆரம்பித்து விட்டன. “பாவம்! பப்பெட் கஷ்டப்பட்டு பாட்டில் கழுவி பங்குச் சந்தை வரை முன்னேறி,
 ஜெயலலிதா நான் ஏழு வயசுல இளநி வித்தவ என்று பாடியது போல பப்பெட் பதினேழு  வயசுலயே பங்குச் சந்தையை வித்தவன்னு தினகரன் பலூன் ஊதுகிறது. தமிழ்நாட்டு  சனீஸ்வரன் கோயிலுக்கும் திருச்செந்தூருக்கும் சட்டையில்லாமல் பக்திப் பழமாகும்  கர்நாடக -எடியூரப்பா பெங்களூருவில் குண்டு குண்டுன்னு போய் அமெரிக்க  குலதெய்வம்   பப்பெட்டை கோட்டு சூட்டோடு ஈர்த்து வரவேற்றிருக்கிறார்.
 திரைக்கு வந்து சில மாதங்களே ஆன உத்தமபுத்திரன் படத்தில் அமெரிக்க
 கோடீஸ்வரனுக்கு பொண்ணைக் கொடுத்து தானும் கோடீஸ்வர சம்பந்தியாக கொண்டைய  அறுத்துக் கொள்ளும் அந்தப் படத்தின் அற்ப கதாபாத்திரங்களை நிஜத்தில்  தோற்கடித்து விட்ட்டார் எடியூரப்பா. வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில்  கருணாநிதி கறுப்புக் கண்ணாடியை துடைத்து மாட்டுவதற்குள் எடியூரப்பா முந்திக்  கொண்டாலும், வந்தாரை வாழவைக்கும் தமிழனின் பண்பாட்டுப்படி பப்பெட்டை  சென்னைக்கு அழைத்து வந்து ஒருவாய் சோறுபோடாமலா அனுப்பி விடுவார் தளபதி… உலகப்  பணக்காரனோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதன் மூலம் அப்படடியே நாமும் ஒரு
 ஓரத்தில் உள்ளூர் பணக்காரனாக சுவிஸ் வங்கியில் ஒரு குடிசையைப் போட்டுக்  கொள்ளலாம் என்ற இந்த அடிமைகளின் ஆசை தனிக்கதை..
 விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க  உன் பொண்டாட்டிய தர்றியேன்னு  கேட்ட கதையாய், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே  “என் விருந்துக்கு உபசாரமாய் இந்தியாவின் இன்சூரன்ஸை தூக்கி தரவேண்டும்  என்கிறான் பப்பெட். எம்பெருமான் மனம் நோகாதிருக்க இயற்பகை நாயனார்கள் எதை
 வேண்டுமானாலும் கொடுக்கலாம். மூலதன அடியார்கள் முற்றும் துறந்தவர்கள்.  நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் பப்பெட்டை லெப்ட் ரைட் வாங்க வேண்டாமா? அமெரிக்காவில் பணம் கட்டி படிக்கப் போன இந்திய மாணவர்களையே சந்தேகக் கேசு  என்று காலில் கேமராவைப் பொருத்தி இழிவுபடுத்துகிறான். அங்கு போய் நாம்  வாழ்வதற்கான உரிமைக்கே போராட வேண்டியிருக்கிறது.  இங்கு வரும் அமெரிக்க  பணக்காரனோ ஒரு விருந்துக்கே இட்லி வடையைக் கேட்பது போல் இன்சூரன்ஸை கேட்பதும்
 சில்லறை வணிகத்தை திறந்து விடச் சொல்வதும் இந்திய சந்தையை தடையில்லாமல்  மேய்ந்து கொள்ள கனிம வளங்கள் வரை கையை வைப்பதும் இந்தியாவின் கேட்பாரற்ற  நிலைமையையும், அமெரிக்க ஆதிக்கத்தின் கொக்கரிப்பையும் நம் கண்முன்னே  நிறுத்துகிறது.
 வாரன்பப்பெட்டுடன் யார் விருந்தில் கலந்து கொண்டாலும் அவனுக்கு 11 கோடி  ரூபாய் தரவேண்டுமாம். அவனோடு விருந்து சாப்பிட தரப்படும் “மொய்” அவனது  அறக்கட்டளைக்கு போய்ச் சேருமாம். இதற்குப் பெயர்தான் ஊரை அடித்து உலையில்  போடுவது! இவனோடு உக்காந்து ஒருவாய் சோறுதிங்க 11கோடி கேட்கும் இந்த பங்குச்  சந்தை தாதா இந்தியாவில் மட்டும் தன்னோடு விருந்து சாப்பிட இந்திய இன்சூரன்ஸ்  துறையின் அதிகாரி நாராயணனை விரும்பி அழைப்பதாகவும், அவர் தனக்கு 11 கோடிக்குப்  பதில் இன்சூரன்ஸ் துறையிலிருக்கும் வெளிநாட்டு மூலதனத்திற்கான வரம்பு  26 %
  என்பதை 49 % உயர்த்த வேண்டும் என திருவாய் மலர்ந்திருக்கிறான்
 பப்பெட். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்பார்கள். இவனோ உண்ண வரும்போதே  ரெண்டகம். ஊரான் வூட்டு நெய்ய, பப்பெட்டு கையேன்னு இந்தியாவையே வழிச்சு நக்க  பாக்கறான். அதாவது மத்தவன மாதிரி நான் மட்டமான ஆள் கிடையாது. ஒரு வேள விருந்துக்கு உன்  வீட்ட எழுதித் தர்றவேணாம்…. வயசுக்கு வந்த பொண்ண குடுங்குறான்… விலை
 மதிப்பில்லாத பொதுத்துறைகளை மட்டுமல்ல முன்பு இந்தியாவுக்கு வந்த ஒபாமா, ஜனாதிபதி வரவேற்பில் இடம்பெற்ற ஒட்டகத்தைக் கொடு  என்று ஆசைப்பட்டு கேட்க, ஒட்டகத்தோடு இந்திய அணுசக்தி உரிமையையும் ஒட்ட ஓட்டிவிட்டனர் அடிமைகள். பொதுவாக நம் ஊரில் விருந்துக்குப் போகிறவன்தான் மொய் வைத்துவிட்டு வருவது  வழக்கம். அமெரிக்க, பன்னாட்டு முதலாளிகளோ இந்தியாவில் விருந்துக்கு வந்தாலே
 மின்சாரம், தண்ணீர், மருத்துவம் என்று எல்லாப் பொதுத்துறைகளையும் மொய்யாய்  வை.. என அன்புக் கட்டளையிடுகிறான். எச்சிலை எடுக்கும் பாராளுமன்ற மாமாக்களோ  பப்பெட் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் மன்மோகன் சிங்குக்கு மாமலையும் ஓர்  கடுகாம்..என ஆடை வரைக்கும் அவிழ்த்துப் போட தயாராகி விட்டார்கள்.  பொதுத்  துறைகள் மட்டுமல்ல வெளிநாட்டுக் காரன் பிள்ளை பெற இந்தியாவின் கருப்பைகள் வரை
 உலகச் சந்தைக்கு திறந்துவிடப் பட்டுவிட்டது. வர்றவன் போறவன்லாம் இந்த நாட்டையே  எச்சிலை ஆக்கும் இழிநிலையை உலகப் பணக்காரர்களையே இந்தியா ஈர்த்துவிட்டது என்பது  போல பிரச்சாரம் செய்கின்றன மானங்கெட்ட ஊடகங்கள். தலையைக் கவிழ்ந்து கொண்டு தானுண்டு வேலையுண்டு என்று கைக்குட்டைகளால் மட்டும்  இந்த அவமானத்தை துடைத்து விட முடியாது. அமெரிக்க மற்றும் பன்னாட்டு மூலதன  ஆதிக்கத்திற்கெதிரான போராட்ட அணிகளில் கை கோர்ப்பதன் மூலமாகவே நாடும் நாமும்  இனி தலைநிமிர்ந்து வாழமுடியும்.