பதிவுகள்

Sunday, 15 May 2011

கேரளாவும்..!!! இந்தியாவும்..!!!..

படிப்பறிவு அதிகம் உள்ள சனம் – ஆனால்

எல்லாம் அரை குறைதான்,

உலகமே உள்ளங்கையில் என்பர் – நல்ல

விலை கிடைத்தால் விற்றும் விடுவர்..



நிலவில் கால் வைக்கும் வரை

ஆம்ஸ்ட்ராங் யாரென்று தெரியாது – கால் வைத்து

திரும்பியபோது அவன் மலயாளியோ எனும்

சந்தேகம் கேரளாவில்

இன்றும் தினப்படி சர்ச்சைதான்....



ஆழிப்பேரலை ட்சுனாமி

ஆய்ந்தடித்தபோது அழிந்துபோன மக்களில்

மலையாளிகள் குறைவாம் – இது ஒரு

மலையாளிக்கு அபிமானம்....



ஆஷ்கார் விருது அறிவிப்பு வந்தது,

கேரளாவுக்கு ஒன்றும்

இந்தியாவுக்கு இரண்டும் – அந்த

இரண்டும் கூட தந்தை வழி கேரளாதானாம்...





உலகப் பொருளாதார மையம்

தகர்ந்து வீழ்ந்தது – எல்லா

மலையாள ஊடகமும் நேரலையில்

கேட்டது  "" மரிச்சதில் இந்தியக்கார் எத்றா?""

மலையாளிகள் எத்தறா?""....



20க்கு 20 உலகக்கோப்பை

மலையாளியாய ஸ்ரீசாந்த்

இல்லாவிட்டால் இந்தியா கேரளாவிடம்

தோற்க வேண்டும்...



50 க்கு 50 உலகக்கோப்பை கிறிக்கெட்

இந்தியா கிரீடம் வென்றது –

பைனலில் மலையாளியாய ஸ்ரீசாந்த் எறிஞ்சு

இந்தியா ஜெயிச்சு.....

ஸ்ரீசாந்தா காக்கா....



உலகில் எந்த விருது யாருக்கு

வழங்கப்பட்டாலும் அவனின்
ஏதாவது ஒரு தலைமுறை

மலையாளியாக்கப்படும்.



தமிழனுக்கு கேரளாவில் பெயர்

பாண்டி – ஆனால் பாண்டியின்

லாறி படுத்துவிட்டால் பால் கூட

பாண்டியாடும் கேரள அடுப்புகளில்....



வளைகுடாவில் எங்கு பார்த்தாலும்

கேரள முதலாளிகள் – அவர்களின்

கணக்குகள் பார்க்க மட்டும் தமிழக

அறிவு ஜீவிகள்....





எவன் தலையை மிதித்தும்

மேலே போவான் - எந்த

தலையும் ஒரு தடையில்லை - ஆனால்

கடைசி தலையிடம் மட்டும் தோற்றுப்போவான்

அதைதாண்ட முடியாது, அது

அறிவுத்தடையல்லவா – அங்கே எசமானன்

தங்கத்தமிழனல்லவா.....



உயர உயரப் பறந்தாலும்

ஊர் குருவி பருந்தாகுமா –

எவ்வளவு பாரை வைத்தாலும்

மெத்தப்படித்த தமிழனைத்

தாண்ட முடியுமா...

அறிவுக்கும் பொருளுக்கும்

போர் வந்தால் பொருள்தான்

பொசுங்கிப்போகும்...



எதையும் விற்று காசு பார்த்தால்

அவன் மலையாளி – எதை விற்கவேண்டும்

என்று தெரிந்து விற்பவன் வியாபாரி...



ஆனால் உலகம் வியக்கும் அவன்

ஒற்றுமையை

உலகம் தோற்கும் அவன் இன பாசம்

முன்னால்

உலகம் தோற்கும் அவன் அன்புக்கரம்

முன்னால்...

பாரதி கண்ட ஒற்றுமை கேரளக்கரையில்

படர்ந்து பந்தலித்து நிற்கிறது...



அன்பு காட்டினால் உயிரையும் கொடுப்பான்

மலையாளி

ஆப்பு வைக்க நினைத்தால்

மவனே உனக்கு

ஆப்பிளே தருவான் ஆப்பாக....

Saturday, 14 May 2011

மாப்பு! வைசிட்டாங்க ஆப்பு !

மாப்பு! வைசிட்டாங்க ஆப்பு ! 

தன்மானத் தமிழன்!

தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரியான மனோபாவம் காணப்பட்டிருப்பது புதியதொன்றும் அல்ல. தமிழக மக்கள் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர, ஏனைய தேர்தல்களில் எல்லாம் ஏதாவது ஒரு கட்சிக்குப் பேராதரவு அளித்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் சரித்திர உண்மை. 1967-லும், 1977-லும், 1996-லும் காணப்பட்ட எழுச்சியை இந்தத் தேர்தலிலும் காண முடிகிறது. பெருந்திரளாக மக்கள் வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுத்ததை, ஆளும் கட்சியினர் தங்களது பணப் பட்டுவாடாவின் விளைவு என்று தப்புக்கணக்குப் போட்டனர் என்றால், பல தேசியத் தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும்கூட அல்லவா, எதார்த்த நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்குக் கட்டியம் கூறின? குழப்பம் ஆட்சியாளர்களிடமும், ஊடகங்களிடமும் இருந்ததே தவிர, மக்களிடம் இருக்கவில்லை. மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ "குடும்ப ஆட்சி' என்கிற அருவருப்பான விஷயம்தான். ஜெயலலிதா தலைமையில் அமைய இருக்கும் அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாவிட்டாலும் நிச்சயமாகத் தலையீடு தவிர்க்க முடியாதது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது நன்றாகத் தெரிந்திருந்தும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில், அவரது மனைவி மட்டுமோ அல்லது அவரால் வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்பம் மட்டுமோ ஆதிக்கம் செலுத்தி இருந்தால்கூட மக்கள் இந்த அளவுக்குக் கோபமும் வெறுப்பும் அடைந்திருக்க மாட்டார்கள். கருணாநிதியின் குடும்பம் என்கிற பெயரில், மனைவி, துணைவி, மக்கள், பேரக் குழந்தைகள் என்று ஒரு டஜன் குடும்பங்களின் ஆதிக்கமல்லவா நடந்தது? அதைக்கூடப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். மாவட்டத்துக்கு மாவட்டம், தொகுதிக்குத் தொகுதி, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு என்று அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், வட்டச் செயலர்கள் என்று பல நூறு குடும்பங்கள் செலுத்திய ஆதிக்கமும், அரங்கேற்றிய அட்டகாசங்களும் கொஞ்சமா நஞ்சமா? அத்தனை அடாவடிப் பேர்வழிகளுக்கும் வாக்குச் சீட்டின் மூலம் தக்க பாடம் புகட்டி இருக்கிறாôர்கள். தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள். யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் ஃபார்முலா, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளும் கட்சியினராலோ, எதிர்க்கட்சியினராலோ, அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும்? இந்தியா தமிழனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா? முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள். பல இடங்களில் நரிக்குறவர்களின் காலனியில் பண விநியோகம் செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள். பட்டணத்தில் படித்தவர்கள் காரில் வந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெட்கமில்லாமல் கேட்டுச் செல்லும்போது, பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் தங்களை விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது மேனி சிலிர்க்கிறது. இனிமேல், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க மாட்டார்கள். பண விநியோகத்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படாது என்பதால், தங்கள் கைப்பணத்தை விரயமாக்கத் தயாராக மாட்டார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன். ஆட்சியாளர்கள் என்னதான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். என்னவொரு அரசியல் முதிர்ச்சி, பெருமிதமாக இருக்கிறது! ஈரோட்டில் முத்துசாமி, முதுகுளத்தூரில் சத்தியமூர்த்தி, கிணத்துக் கடவில் மு. கண்ணப்பன், ஆர்.கே. நகரில் சேகர்பாபு என்று கடைசி நேரத்தில் கட்சி மாறிய அத்தனை சந்தர்ப்பவாதிகளும் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். ஜாதிக் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்று சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தவை மண்ணைக் கவ்வி இருக்கின்றன. காங்கிரûஸப் பற்றி சொல்லவே வேண்டாம். வாக்காளர்களிடம்தான் என்னவொரு தெளிவு... கடந்த மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் ஒரு மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பூத் வாரியான வாக்குகளைப் பதிவு செய்து காட்டுகின்ற படிவம் 20-ல் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்குக் கிடைத்த வாக்குகளைக் காங்கிரஸ் வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும், அவரது வாக்குகளை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றி எழுதி, காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதா. யார் கண்டது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் முழு வெற்றியே இப்படி ஒரு தில்லுமுல்லால் பெறப்பட்டதுதானோ என்னவோ? சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அப்படி ஓர் ஐயத்தை எழுப்புகிறதே... தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தரப்பட்டிருக்கும் தண்டனை என்றால், திறமையான அதேநேரத்தில் நேர்மையான நிர்வாகம், மக்களின் உணர்வுகளையும், பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் ஆட்சி, கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய குடும்ப ஆதிக்கமும், தலையீடும் இவையெல்லாம் இல்லாமல், கேவலம், பணத்தையும், இலவசங்களையும் காட்டி இனிமேலும் யாரும் எங்களை ஏமாற்ற முடியாது என்பது அதிமுகவுக்கும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் செல்வி. ஜெயலலிதாவுக்கும் அவர்கள் உணர்த்தும் பாடம். ""தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!'' என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை ""தினமணி'' பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!

Thursday, 12 May 2011

வேண்டுகோளுடன் வாழ்த்துகள்!

ஒரு மாணவர் அல்லது மாணவி அதிக மதிப்பெண்கள் பெறும்போது, அதற்காக அதிகம் மகிழ்ச்சி கொள்வது பள்ளி நிர்வாகம்தான். பெற்றோருடைய மகிழ்ச்சி வெறும் குடும்ப மகிழ்ச்சி மட்டுமே.  பள்ளி நிர்வாகத்தின் மகிழ்ச்சி பரந்துபட்டது. அப்பெருமை அவர்களது உழைப்புக்குக் கிடைத்த பரிசு. அதனால்தான் அவர்கள் மாணவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து, இனிப்பு வழங்கி, ஊர்ப்பிரமுகர்களையும், மாவட்ட ஆட்சியரையும் வைத்துப் பாராட்டுகிறார்கள். சில நிர்வாகங்கள் அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குகின்றன. சில நிர்வாகங்கள் அம்மாணவர்களின் உயர் கல்விச்செலவை ஏற்கவும் முன்வருகின்றன.  பள்ளி நிர்வாகங்களின் இந்த மகிழ்ச்சி வெளிப்பாட்டை வெறும் விளம்பரம் என்று சொல்லிவிட முடியாது. இதன் மூலம் கூடுதலாக மாணவர்களைக் கவர்ந்து அதிக கட்டணங்களை வசூலித்துவிடுவார்கள் என்று தடாலடியாகப் பேசிவிடவும் கூடாது. ஏனென்றால், மாவட்ட, மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுவிட்டால், அந்தப் பள்ளிகளுக்கு உயர் அதிகாரிகளின் பரிந்துரைகளும், நெருக்கடிகளும் மேலதிகமானவை. புகழோடு சேர்ந்து பிரச்னைகளும், அன்புக் கட்டளைகளும்கூட அவர்களுக்கு வருகின்றன. இருந்தாலும்கூட, பள்ளி நிர்வாகத்தின் மகிழ்ச்சி களங்கமற்ற ஒன்றுதான்.  தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் கட்}ஆப் மதிப்பெண் 180-க்கும் அதிகமாகப் பெற்றவர்கள் சுமார் 50,000 பேர் என்றால், அதில் 99 விழுக்காடு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள். அரசுப் பள்ளிகளில் இந்தச் சாதனை மிகக் குறைவாகவே நடைபெற்றுள்ளது. அதுவும்கூட, விருதுநகர் போன்ற சில மாவட்டங்களில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில், மாணவர்களைத் தேர்வுக்குச் சரியாகப் பயிற்றுவிக்கும் திறமை படைத்தவர்கள் என்பதைத் தனியார் பள்ளிகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. இதற்காகப் பாராட்டத்தான் வேண்டும்.  இவ்வளவு சிறப்பாகத் தேர்ச்சிபெறச் செய்யும் தனியார் பள்ளிகள், சமூகக் கடமையாக அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஏன் கல்வி புகட்டக்கூடாது என்ற கேள்வியை, ஒரு சிறந்த தனியார் பள்ளி நிர்வாகியிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில் வேதனையானது. அவர் சொன்னார்: "எத்தகைய மாணவர்களை வேண்டுமானாலும் கொடுங்கள். அவர்களுக்கு ஏற்பப் பாடம் நடத்தி, அவர்களை எங்கள் வழிக்குக் கொண்டுவர முடியும். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களை...' என்று கையெடுத்துக் கும்பிட்டார். அவரது பள்ளியில் மிகச்சிறந்த ஆசிரியையாக இருந்தவர் அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியமர்ந்தவுடன் அவரா இவர் என்கிற அளவுக்கு மாறிப்போய்விட்டார் என்பதையும் குறிப்பிட்டார்.  அது தொலையட்டும். அது அரசின் தலைவலி. அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள், அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்கிற நிலை வராத வரை, "மழைக்கு ஒதுங்க அரசுப் பள்ளி, மதிப்பெண்ணுக்குத் தனியார் பள்ளி' என்பதுதான் தமிழகத்தின் தலைவிதியாக இருக்கும்.  இப்போது மகிழ்ச்சியில் திளைக்கும் தனியார் பள்ளிகளிடம் இந்தவேளையில் கேட்டுக்கொள்ள ஒன்று இருக்கிறது. விருந்து இலையில் கொஞ்சம் வேப்பம்பூ குழம்பு போன்றதுதான் இதுவும். தனியார் பள்ளிகள் வசூலிக்கும் அதிகமான கட்டணத்தால் நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டுவரும் வேதனைதான் அது.  அரசுப் பள்ளிகள் மீதும், அரசுப் பள்ளி ஆசிரியப் பெருந்தகைகள் மீதும் நம்பிக்கையிழந்து, சாதாரண அன்றாடக் கூலித்தொழிலாளியும்கூட தன் குழந்தைக்கு இடம் கேட்டு தனியார் பள்ளி வாசலில் காத்துக் கிடக்கிறார் என்பது நீங்கள் அறியாதது அல்ல. பலதரப்பட்ட மக்களும் உங்களை நாடி வரும்போது, கட்டணத்தை மேலதிகமாக நிர்ணயிப்பது நியாயமானதுதானா என்பதை எண்ணிப் பாருங்கள்.  அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் குழந்தைகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ. 60,000 என்றால் அதைப் பற்றி வருத்தப்படுவோர் யாருமில்லை. ஆனால், ஒரு சாதாரண நடுத்தர வருவாய்க் குடும்பத்தில், ஆறாம் வகுப்புப் படிக்கும் குழந்தைக்கு ரூ. 16,000 கட்டணம் என்றால், குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்றது என்பதைச் சொல்லித் தெரிந்துகொள்ளும் நிலையில் நீங்கள் இல்லை.  கல்விக் கட்டணச் சீரமைப்பு தொடர்பான புதிய குழுவின் அறிக்கை வெளிவரும்வரை 2009-10-ம் கல்வி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக்கட்டணத்தையே வசூலிப்பது என்கிற முடிவு சரியானதாக இருக்கலாம். ஆனால், எல்லா மக்களாலும் தாங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்காது. எல்லோரும் அரசு ஊழியர்கள் அல்ல. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்திலிருந்து அள்ளி வழங்க!  தனியார் நிறுவனங்களில் கணவரும் மனைவியுமாக வேலை செய்து சம்பாதித்து, எப்படியும் தங்கள் குழந்தைகளைக் கரைசேர்க்க வேண்டும் என்று உழைத்துக்கொண்டிருக்கும் சாதாரண மக்கள்தான் பெருவாரியான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர். அவர்கள் தங்களது சக்தியை மீறித்தான் இந்தச் செலவைச் செய்கிறார்கள். அவர்களிடம் ஆசை இருக்கிறது. காசு இல்லை. கவிஞர் மு. மேத்தா வரிகளில் சொல்வதானால், "விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்'.  உங்களை எந்தக் குழுவும் கட்டிப்போட முடியாது. நீதிமன்றத்தின் கதவு எப்போதும் உங்களுக்குத் திறந்தே இருக்கும். அரசியல்வாதிகள் உங்கள் அன்பான குரலுக்காக ஏங்கிக் கிடப்பார்கள். கல்வித்துறை அதிகாரிகளோ, உங்கள் முற்றத்தில்! எத்தனை செய்திகள், எத்தனை வழக்குகள், எத்தனை போராட்டங்கள் எதுவும் உங்களை ஒன்றும் செய்யப்போவதில்லை. நடுத்தர மக்களுக்கு உங்களைவிட்டால் வேறு வழியும் இல்லை. நடுத்தர மக்களின் சக்திக்கு ஏற்பக் கட்டணத்தைக் கேளுங்கள். மனம் வாழ்த்திடக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.  "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்று சொன்ன அதிவீரராம பாண்டியன் ஒருவேளை நடுத்தர வருவாய்ப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்திருப்பாரோ என்னவோ? மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 25 சதவிகித இடங்களைக் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்காக தருமத்துக்காகவும், 25 சதவிகிதம் இடங்களை உயர் வருவாய்ப் பிரிவினருக்காக மிக அதிகமான கட்டணத்துக்காகவும், மீதமுள்ள 50 சதவிகிதம் இடங்களை மத்தியதர வகுப்பினருக்காக சராசரி கட்டணத்துக்காகவும் ஒதுக்கி, ஏன் கல்விக்கூடங்களை வியாபாரக் கேந்திரங்களாக்காமல், உண்மையான சமதர்மக் கல்விச்சேவை ஆக்கக்கூடாது? கொஞ்சம் யோசியுங்களேன், நியாயம் புரியும்!

Monday, 9 May 2011

அயோத்தி வழக்கு: அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை: உச்சநிதிமன்றம் !

அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநிதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. 
இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் அப்தாப் ஆலம்,ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. நிர்மோகி அகாரா, அகில பாரத இந்து மகா சபா,ஜமாத் உல் அமாஹி ஹிந்த், சன்னி சென்ட்ரல் வஃக் போர்டு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் மேல் முறையிடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநிதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. 
மேலும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு "புதிரானது" என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

Thursday, 5 May 2011

கைதாகிறார் கனிமொழி?

2 ஜி அலைகற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, வெள்ளிக்கிழமை (மே 6) கைது செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி ஆகியோர் தவிர மற்றவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மே 6 ஆம் தேதி ஆஜராவதற்காக கனிமொழி, சென்னையிலிருந்து புதன்கிழமை காலையில் தில்லி வந்தார். அவருடன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் தில்லி வந்தனர். ஆலோசனை: தில்லி சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு கனிமொழி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடனும், தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய வண்ணம் இருந்தார். பிரபல சட்ட நிபுணர்களான ராம் ஜேட்மலானி, முகுல் ரோத்தகி ஆகியோருடனும் தொலைபேசி மூலம் கனிமொழி ஆலோசனை நடத்தியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் சார்பாக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் பிரபல சட்ட நிபுணர் பராசரனின் ஆலோசனையையும் பெற்றதாகத் தெரியவந்துள்ளது. ஜாமீன் மனு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிறையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. இந்த மனுமீது கடந்த இரு தினங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை புதன்கிழமையும் நடைபெற்றது. மேலும் இரண்டு நாள்களுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 6 ஆம் தேதிக்குள் 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை முடிந்து, தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் கனிமொழியும் அதே நடவடிக்கையைப் பின்பற்றலாம் என்ற நிலை மாறிவிட்டது. இந்த நிலை கனிமொழி தரப்புக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிகிறது. செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழிக்கான விருது வழங்கும் விழாவுக்கு மே 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டை மிக சிறப்பாக நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விழாவில் கலந்து கொள்வார் என தமிழ் ஆர்வலர்கள் மிக ஆவலுடன் உள்ளனர். ஆனால் அதே நாளில் முதல்வரின் மகள் கனிமொழி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தில்லி வரும் முதல்வரின் கவனம் முழுவதும் அரசியல் ரீதியாக கனிமொழிக்கு ஆதரவாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தே இருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இந்த முறைகேடு விவகாரத்தில், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட வருமான வரி, அவர்கள் சார்ந்த நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வருமான வரி தொடர்பான விவரங்களை சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறது. இதன் அடிப்படையில் 5-ஆம் தேதிக்குப் பதில் மே 12 ஆம் தேதி கனிமொழி உள்ளிட்ட நான்கு பேரும் அமலாக்கப் பிரிவு முன் ஆஜர் ஆகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படலாம் எனவும் தெரிகிறது.

Tuesday, 3 May 2011

அமெரிக்காவின் வெற்றி!

பாகிஸ்தானில் மறைவிடத்தில் வசித்துவந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க தனிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டது, அமெரிக்க அரசையும் அமெரிக்கர்களையும் மிகப்பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவிக் கிடப்பதால், இந்த வெற்றியை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டியிருக்கின்றன. தீவிரவாத அமைப்பான அல்காய்தா மீதான இந்த பலத்த அடி உலக அளவில் பரவிக் கிடக்கும் வெவ்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும், பாண்டியன் பிரம்படிபோல, வலியை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்புதான் காரணம்.  மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகளைக் கொன்று குவித்த ஒரு தீவிரவாதியை இன்று கொன்றுவிட்டோம் என்று உலகுக்குச் செய்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தப் போர் முந்தைய அதிபர் கூறியதைப் போல இஸ்லாமியருக்கு எதிரான போர் அல்ல. இது இஸ்லாமியர்களையும் கொன்று தீர்த்தவனும் இஸ்லாமியர்களில் ஒருவனுமான தீவிரவாதிக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார்.  ஆனால், பின்லேடன் போன்ற ஒரு தீவிரவாதியை உருவாக்கியது அமெரிக்காவின் பணமும், அமெரிக்காவின் பேராசையும், ஆப்கனிஸ்தானில் அமெரிக்காவின் அத்துமீறலும்தான் என்பதையும் அவர் நினைவுகூர்ந்திருக்க வேண்டிய தருணம் இது. அமெரிக்காவால் உருவான தீவிரவாதம், அமெரிக்காவை மட்டுமல்ல, வளரும் நாடாகிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் பாதித்துள்ளது. புதிய தீவிரவாதிகளை அல்காய்தா வளர்த்தெடுக்கும் நிலையையும் உருவாக்கியது.  இன்று தங்களால் வளர்க்கப்பட்ட முன்னாள் நண்பனான இந்நாள் எதிரியை அமெரிக்கா வீழ்த்தி இருக்கிறது. அவர்கள் கொண்டாடுகிறார்கள். இதில் ஒன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசுக்கே பின்லேடனைக் கொன்று பழிதீர்க்க பத்து ஆண்டுகள் ஆனது என்றால், இந்தியா போன்ற வளரும் நாடுகளால் இந்தத் தீவிரவாதிகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பது நினைக்கவே வேதனை தருவதாக இருக்கிறது.  அமெரிக்காவுக்கு வலிமை இருக்கிறது, பணம் இருக்கிறது, ஆகையால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டவுடன் ஆப்கன் தேசத்துள் புகுந்து ஆட்சியை மாற்றிவிட்டு, தேடுதல் வேட்டையை நடத்த முடிகிறது. பாகிஸ்தானுக்கு ஆயிரமாயிரம் கோடி பணத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டு, அவர்கள் பின் லேடனை தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தும், புன்னகையுடன் உறவாடவும், மிரட்டவும் முடிகிறது. இல்லையென்றால், பாகிஸ்தானுக்குள், அமெரிக்கா ஒரு தனிப்படையுடன் நுழைந்து, பின்லேடனைச் சுட்டுக் கொன்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்ப முடியுமா?  மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நபர்களைப் பெயரைக் குறிப்பிட்டு பிடித்துக் கொடுங்கள் என்று கேட்டாலே, இந்தியாவை உதாசீனப்படுத்தும் பாகிஸ்தான், இதுவரை தனது நாட்டுக்குள் அமெரிக்காவின் ஒரு சிறிய தனிப்படை உள்ளே வந்து பின்லேடனைச் சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றது பற்றி வாய்மூடி ஒரு வார்த்தை பேசாமல் மவுனியாக இருக்கிறதே, அதை என்னவென்று சொல்வது?  இதுகுறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தபோது, அந்த சிறிய தனிப்படை குறித்த கேள்விக்கு அவர்கள் அளித்த ஒரே பதில், இந்த நேரத்தில் அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்பதுதான். உங்கள் தாக்குதல் திட்டத்தை பாகிஸ்தானுக்குச் சொல்லிவிட்டு அங்கே போனால், பின்லேடனைத் தப்பிச்செல்ல விட்டுவிடுவார்கள் என்று கருதித்தான் நீங்கள் அவர்களிடம் சொல்லவில்லையா என்ற கேள்விக்கும் இந்த நேரத்தில் இதுபற்றி பேச வேண்டாம் என்பதுதான் அவர்களது பதில்.  பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் முகம் கிழிந்து அம்பலப்பட்டிருப்பது பாகிஸ்தான். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது என்ற குற்றச் சாட்டை ஆயிரம் முறை மறுத்த பாகிஸ்தான் இனி எந்த முகத்தோடு மற்ற நாடுகளுடன் பேசும்? எத்தனை பொய்கள், என்னென்ன கதைகள்! அத்தனையும் இன்று அம்பலமாகிவிட்டது.  ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, மிகப் பெரிய மாளிகையில் சகோதரர் மற்றும் தனது இளம்மனைவி உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர்களுடன் இருப்பதை இத்தனை காலமும் கண்காணித்து, அது பின்லேடன்தான் என்பதை உறுதி செய்து 40 நிமிடத்தில் கதையை முடித்த அமெரிக்காவின் சாதனை பாராட்டுக்குரியதுதான்.  சுட்டுக்கொல்லப்பட்ட அடுத்த நிமிடம் இந்தத் தகவலை, அமெரிக்க அதிபர் தனது முந்தைய அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரிடம்தான் சொல்கிறார். அவர்கள் தேசத்தை ஒன்றாகப் பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் அமெரிக்கா அயோக்கியத்தனம் செய்கிறது என்று சொன்னாலும், இந்த அரசியல் பலம்தான் அவர்களது வெற்றிக்கு அடிப்படையாக இருக்கிறது.  பாகிஸ்தான் சும்மா இருக்குமேயானால், இந்தியாவின் சிறியதொரு தனிப்படை அங்கே சென்று, மும்பைத் தாக்குதலில் 200 பேரைக் கொன்று குவித்தவர்களைப் பிடித்து, இந்தியாவுக்கு கொண்டுவரவும் முடியும். இந்திய ராணுவத்திடமும் புலனாய்வுப் பிரிவிடமும் அதற்கான திறமையும் இருக்கிறது. இந்தியாவுக்கு அரசியல் பலம்தான் இல்லை.  உள்ளவன் சொல்வதெல்லாம் உண்மையல்லாமல் என்ன, வென்றவன் சொல்வதெல்லாம் வேதமல்லாமல் என்ன, என்பார் கவியரசு கண்ணதாசன். உண்மை. அமெரிக்கா செய்தால் அது சாதுர்யம், சாகசம், நியாயம். இந்தியாவோ, வேறொரு நாடோ செய்தால், அது அந்நிய நாட்டுக்குள் நடத்தப்பட்ட அத்துமீறல். ஒரு பயங்கரத் தீவிரவாதி கொல்லப்பட்டான் என்று மகிழ்ச்சியும் அடையலாம். வல்லரசுகளின் அதிகாரபூர்வமான தீவிரவாதம் அங்கீகரிக்கப்படுகிறதே என்று வருத்தமும் படலாம். அது, அவரவர் பார்வையைப் பொருத்தது!