பதிவுகள்

Showing posts with label Thanks BBC. Show all posts
Showing posts with label Thanks BBC. Show all posts

Wednesday, 27 April 2011

ஐ நா அறிக்கை -முழு விவரம் !

இலங்கையின் இறுதிகட்டப் போர் தொடர்பிலான ஐ நா வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
திங்கட்கிழமை(25.4.11) மாலை நியூயார்க்கில் இந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இறுதிகட்ட யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச தரப்பின் ஷெல் தாக்குதலின் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஐ நா வின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட அந்த மூவர் குழு அளித்துள்ள அறிக்கையில், இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்பட்ட போர் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இலங்கை அரசு இந்த அறிக்கை பாரபட்சமானது என்றும் மோசடியானது என்றும் கூறியுள்ளது 
நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை!
எனினும் இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று தலைமைச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார்.
போர்க் குற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டுமானால், இலங்கை அரசு இணங்கினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அல்லது பாதுகாப்பு சபை அனுமதித்தாலோதான், அது நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த போரில், அரசு வெற்றி பெற்ற நிலையில், அந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை இலங்கை அரசு மறுக்கிறது.
அந்தச் சம்பவங்களுக்கு இலங்கை அரசோ அல்லது இலங்கை இராணுவமோ பொறுப்பல்ல என்று இலங்கை அரசின் பேச்சாளர் லக்ஷமண் ஹுலுகல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அப்பாவி பொதுமக்கள் யாரும் இங்கு குறிவைக்கப்படவில்லை என்றும், அரசு தரப்பு குண்டு வீச்சுக்களையோ அல்லது ஷெல் தாக்குதலையோ நடத்தவில்லை என்றும் கூறும் ஹுலுகல்ல, அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் அதை தம்மால் நிரூபிக்க முடியும் என்றும் கூறுகிறார்.
இந்த அறிக்கை வெளியானால் நாட்டின் நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதகம் ஏற்படும் என்று கூறி இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று அரசு முன்னர் கோரியது. 
மருத்துவமனைகள், ஐ நா அலுவலகம் மீது தாக்குதல்!
ஐ நா வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில், மருத்துவமனைகள் மற்றும் ஐ நா வின் மையங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்கள் ஆகியவற்றின் மீது திட்டமிட்டு ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.
அதே நேரம் சுமார் 330,000 பொதுமக்களை விடுதலைப் புலிகள் கேடையமாக பயன்படுத்தினர் என்றும் தப்பித்துச் செல்ல முயன்றவர்களை சுட்டுக் கொன்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தலையில் சுடப்பட்டார்கள் என்றும், மகளிர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பு மீதும் நம்பகத்தன்மை வாய்ந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை நிரூபிக்கப்பட்டால், பரந்துபட்ட அளவில் சர்வதேச மனித நேய சட்டங்கள், மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டுள்ளதை கோடிட்டு காட்டும் எனவும் அந்த நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக கருதப்படலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 

போர்க்குற்றம் !
குற்றங்கள்
பாரதூரமான ஷெல் தாக்குதல்களில் பொது மக்களைக் கொன்றது.
மருத்துவமனை மற்றும் மனித நேயப் பணிகளுக்குப் பயன்படும் இடங்களை தாக்கியது.
மனிதாபிமான உதவிகளை செய்யவிடாமல் தடுத்தது.
போரால் பாதிக்கப்பட்டோர் மற்றும் போரில் தப்பிப் பிழைத்தோர் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள். அதாவது இடம்பெயர்ந்தோர் மற்றும் புலிகள் என்ற சந்தேகத்துக்குள்ளானோர் நிலை.
போர் பகுதிக்கு வெளியே நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் - குறிப்பாக ஊடகங்கள் மீதும் அரசை விமர்சிப்போருக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் என நடந்த குற்றங்களை ஐ நா வரிசைப்படுத்தி பட்டியலிட்டுள்ளது.
இலங்கைக்குள் மனித நேய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் - சிவிலியன்களின் உயிரிழப்பை சிறிதும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் இலங்கை அரசு அந்த கால கட்டத்தில் சூளுரைத்து வந்தாலும் - ஐ நா குழுவிடம் இதற்கு முற்றிலும் மாறான நம்பத்தகுந்த புகார்கள் கிடைத்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படும் பட்சத்தில் அவை சர்வதேச மனிதநேய சட்டங்களையும் மனித உரிமை சட்டங்களையும் மீறுவதாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் தாக்குதல்கள்!
அதிலும் குறிப்பாக இறுதி கட்டப் போர் நடந்த காலப் பகுதியில் அதாவது செப்டம்பர் 2008 க்கும் 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதிக்கும் இடையேயான காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் தமக்கு கிடைத்துள்ளதாக கூறியுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை.. இலங்கை அரசு மோதல்களற்ற பகுதி என்று தான் அறிவித்த பகுதி மீது மூன்று தினங்களுக்கு தொடர்ந்து ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு வாக்குறுதி அளித்த பிறகு இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
அதே போல ஐநா வேலைகளை ஒருங்கிணைக்கும் மையம், உணவு வினியோகத்துக்குப் பயன்படுத்தப்படும் பாதைகள் மற்றும் போரில் காயமடைந்தவர்களை மீட்டுச் செல்ல வந்த செஞ்சிலுவைச் சங்க கப்பல் போன்றவற்றின் மீது அரசு ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஐ நா கூறியுள்ளது. மேலும் இது போன்ற தாக்குதல்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து தமது உளவுப் பிரிவு மூலமும், ஐ நா முனகூட்டியே தெரிவித்திருந்த தகவல்கள் மூலமும் விபரங்கள் தெரிந்த நிலையிலும் அரசு இதைச் செய்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகள்
வன்னிப் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனைகள் மீது தொடர்ந்து திட்டமிட்ட வகையில் ஷெல் தாக்குதல்களை அரச படையினர் நடத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு மருந்து அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்வதற்கான உபகரணங்கள் போர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவது தடுக்கப்பட்டதன் காரணமாக மக்களின் பிரச்சனைகள் அதிகரித்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
போர் பகுதியில் சிக்கியிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் கூறியதாகவும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போரில் இறந்து போனதாகவும் கூறும் ஐ நா அதிலும் குறிப்பாக போரின் இறுதி நாட்களில் ஏராளமானோர் யாரென்று தெரியாத நிலையில் - அடையாளம் காணப்படாத நிலையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வல்லுறவு
போர்ப் பகுதியில் இருந்து வெளியே வந்தும் மக்களின் துயர்கள் நீங்கவில்லை
விடுதலைப் புலி உறுப்பினர்களை கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோதனைகள் 
ஒளிவு மறைவற்ற  முறையிலும் -மூன்றவது தரப்பின் 
பாதுகாப்பின் கீழும் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ள ஐ நா, 
சோதனையின் போது பிடித்துச் செல்லப்பட்ட சிலர் விசாரணையின்றி 
உடனடியாக கொல்லப்பபட்டதாகவும், பெண்கள் பலர் பாலியல் 
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 
போரில் இடம்பெயர்ந்தோர் மிகவும் நெருக்கடியான இடத்தில் 
குடியமர்த்தப்பட்டதால் 
அங்கு மிக மோசமான நிலைமை ஏற்பட்டதுடன்
முகாம்வாசிகள் சிலர் சித்ரவதைக்குட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்
என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் முகாமில்
இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டோருடன் வெளி
உலகத்துக்கான தொடர்பு அறுந்து விட்டது என்றும், அப்படி கொண்டு
செல்லப்பட்டோர்கள் மேலும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகலாம் என்றும்
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
அறிக்கைக்கு வரவேற்பு!
ஐ நா வின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட அந்த குழுவின் அறிக்கையை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த போரின் இறுதி நாட்களில் என்ன நடைபெற்றது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள இந்த அறிக்கை வழி செய்கிறது என்றும் ஐ நா வின் மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
தமது அறிக்கையை இலங்கை அரசு வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஐ நா வின் மூவர் குழு கோரியுள்ளது. இறுதிகட்ட போரின் போது ஏற்பட்ட பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச அளவுகோலுக்கு அமைய இலங்கை அரசு போரின் இறுதி நாட்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த நியாயமான ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மூவர் குழு தமது அறிக்கையில் கூறியுள்ளது.

Saturday, 23 April 2011

'குஜராத் கலவரமும் மோடியும்'

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்துக்கு முதலமைச்சர் நரேந்திர மோடி துணை நின்றதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், முதலமைச்சர் இல்லத்தில் நடந்த உயரதிகாரிகள் கூட்டத்தில் அந்த அதிகாரி கலந்துகொள்ளவே இல்லை என்று மாநில காவல்துறையின் முன்னாள் தலைவர் கே. சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சஞ்சீவ் பட் என்ற அந்த போலீஸ் அதிகாரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி இரவு முதலைமைச்சர் மோடியின் இல்லத்தில் நடந்த உயரதிகாரிகள் கூட்டத்தில் தானும் கலந்துகொண்டதாகக் கூறியுள்ளார். 
குற்றச்சாட்டு



அந்தக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் பேசிய நரேந்திர மோடி, கோத்ராவில் இந்துக்கள் வந்த ரயில் எரிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும், இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை யாரும் தடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் தனது மனுவில் கூறியுள்ளார்.
அவர் அப்போது உளவுத்துறைக்குப் பொறுப்பாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
மறுப்பு
ஆனால், அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்துகொள்ளவில்லை என்று முன்னாள் காவல்துறைத் தலைவர் கே. சக்ரவர்த்தி, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, நானாவதி கமிஷன் முன்பும், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பும் தான் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும், சிறப்புப் புலனாய்வுக்குழு தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதாரம்!
அதே நேரத்தில், சஞ்சீவ் பட் அந்தக் குறிப்பிட்ட கூட்டத்தில் பங்கேற்றதாக அப்போது அவருக்கு வாகன ஓட்டுநராக இருந்த காவல் துறையைச் சேர்ந்த தாராசந்த் யாதவ் கூறியுள்ளார்.



அந்தக் குறிப்பிட்ட தினத்தன்று இரவு சஞ்சீவ் பட்டை முதலில் காவல்துறை தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன்பிறகு மற்ற அதிகாரிகளுடன் அவரையும் முதலமைச்சரின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் யாதவ் கூறியுள்ளார்.
அங்கு கூட்டம் முடிவடையும் வரை தான் அங்கு இருந்ததாகவும், இந்த விவரங்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பு தெரிவித்திருப்பதாகவும் ஓட்டுநர் தாராசந்த் யாதவ் கூறியுள்ளார்.
அரசியல்?
போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புக்களுக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கணை தொடுக்க கை கொடுத்திருக்கிறது.
அந்த மனுவின் விவரங்களை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இனக்கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கு குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை வழங்குவதற்கான நடைமுறைகளைத் துவக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தியுள்ளது. 


Monday, 18 April 2011

'இலங்கை போர்க் குற்றங்கள்'- கசிந்த அறிக்கை !

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த குற்றச்சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறவைக்கும் நோக்குடன் ஐநா தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படாதுள்ள நிலைமையில் அந்த அறிக்கையிலிருந்து கசிந்துள்ள விடயங்கள் என்று கூறி இலங்கையின் செய்தி நாளிதழ் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது. 
  • அரச சார்பு நாளிதழில் வெளியானது
 அரச சார்பு பத்திரிகையான தி ஐலண்ட் ஐநா நிபுணர்குழு, அறிக்கையின் சுருக்கங்கள் என்று இதனை வெளியிட்டிருக்கின்றது.
ஐநா தலைமைச் செயலரின் ஆலோசனைக்கான நிபுணர்குழு ஆரம்பம் முதலே பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு உரிய விடயமாகவே இருந்து வருகின்றது.
விடுதலைப் புலிகள் நீண்டகாலம் மேற்கொண்ட சிவில் யுத்தத்தின் போது அவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இறுதி யுத்தத்தின் கடைசிக் காலப்பகுதியில் பெரும் போர்க்குற்றங்களும் மற்றும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐநா தலைமைச் செயலர் பான்கீ மூன் இந்த நிபுணர் குழுவை அமைத்திருந்தார்.
இந்த நிபுணர் குழு அமைக்கப்படுவதை இலங்கை அரசும் கடுமையாக எதிர்த்திருந்தது.
இப்போது, அரச ஊடகமான தி ஐலண்ட் நாளிதழே, ஐநா நிபுணர்குழு இறுதி அறிக்கையின் சுருக்கங்கள் என்று கூறி அவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
கடுமையான குற்றச்சாட்டுக்கள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

  • போர்க் குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும்

இறுதிப் போரில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கம், அது முன்னர் பொதுமக்கள் எல்லோரையும் செல்லுமாறு வற்புறுத்திய பகுதிகள் மீது, பெரும் எடுப்பில் பாரியளவிலான ஷெல் தாக்குதல்களை நடத்தி, பொதுமக்களைக் கொன்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை ஐநாவின் நிபுணர்குழு நம்பத்தக்க வகையில் கண்டறிந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘யுத்தம் நடந்தபோது, அங்கிருந்த மருத்துவமனைகள் மீது திட்டமிட்டே அரசாங்கப் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளன, யுத்த வலயத்துக்குள் சிக்கிக்கொண்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் விநியோகத்தையும் அரசாங்கம் தடுத்து இல்லாதுசெய்தது’ என்றும், கசிந்துள்ளதாகக்கூறப்படும் ஐநா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிவந்த மக்களையும் அரசாங்கம் எப்படி மூடிய முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தது என்பதையும் விபரித்துள்ள அந்த அறிக்கை, அந்த முகாம்களின் நிலமையை ‘கொடூரமானது’ என்றும் வர்ணித்துள்ளது.
ஐநா குழுவின் படி, இங்கு சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவற்றில் சில குற்றச் சம்பவங்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் என்றளவுக்கு பாரதூரமானவை. 

  • இலங்கை அரசாங்கம் நிராகரித்தது!

ஐநா குழுவுக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது
இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையை அடிப்படை ஆதாரமற்றது எனவும் ஒருபக்கச்சார்பானது எனவும் முன்னரே நிராகரித்துவிட்டது.
ஐநா அறிக்கை, பொதுவான அடிப்படையில் தகவல்களை வெளியிட்டுள்ளதே தவிர, எதனையும் குறிப்பாக சுட்டிக்காட்டவில்லை எனவும் இலங்கை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க பிபிசிக்குத் தெரிவித்தார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் வெளிப்படையான அரசியல் நிகழ்ச்சியே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

  • நிபுணர்குழு சிபார்சுகள்!
 இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்குமான சிபாரிசுகள் சிலவற்றையும் ஐநா நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஐநா நிபுணர் குழு முன்வைக்கக்கூடிய சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் கருத்தில் கொண்டு அவற்றை செயற்படுத்த வேண்டும் என மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்) சங்கத்தை சேர்ந்த கே. சிறிதரன் தெரிவித்தார்

இலங்கை அதிபரின் மே தின அழைப்புக்கு எதிர்ப்பு !

இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மே தின ஊர்வலங்களை பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போதே சனிக்கிழமையன்று அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
ஊடகங்களில் கசிந்த ஐநாவின் அந்த அறிக்கையின்படி இலங்கை அரசாங்கத்தின் மீது போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், அதனை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
தமது அரசாங்கத்துக்கும், செயலுக்கும் பொதுமக்களின் பூரண ஆதரவு இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காகவே, இந்த மே தின கொண்டாட்டங்களை ஐநாவின் அறிக்கைக்கு எதிராக குவிப்பதற்கு அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.
தனது நாட்டுக்காக மின்சார நாற்காலியில் அமரவும் தான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், தொழிலாளர் தினமான மே தினத்தை ஐ நாவின் போர் குற்ற அறிக்கையை எதிர்ப்பதற்கான தினமாக பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் எதிர்த்துள்ளன.
இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிப்பவரும், செங்கொடிச் சங்கம் உட்பட பல மலையக தொழிற்சங்கங்களின் மூத்த தலைவருமான ஓ. இராமையா அவர்கள, தொழிற்சங்கவாதி என்ற ரீதியில் மே தினத்தை இதற்கு பயன்படுத்துவதை தான் ஆதரிக்கவில்லை என கூறினார்.
அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு இடதுசாரி அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கமான லங்கா தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான ரி. எம். ஆர் . ரசூல்டீனும் அதிபரின் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். தமது சங்கங்கள் எல்லாம் அரசாங்கத்தின் தனியார் துறைக்கான பென்சன் திட்டத்தை எதிர்த்து அதனையே மே தின கோசமாகக் கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.