பதிவுகள்

Sunday 14 November 2010

ஒபாமாவின் வருகை: சாதித்தது என்ன ?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 3 நாட்கள் மேற்கொண்ட இந்தியப் பயணத்தால் இரு நாடுகளுக்கும் கிடைத்த பலன் என்ன? என்பதை சீர்தூக்கிப் பார்த்து மதிப்பீடு செய்வது அவசியமாகும்.

திங்கட்கிழமை இந்தியாவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ஒபாமா உரையாற்றினார். வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை என்று ஊடகங்களால் புகழப்படுகிறது. ஆனால் உரைகளால் வரலாறோ அல்லது எதிர்காலமோ படைக்கப்பட்டதாக வரலாறு ஏதுமில்லை. அந்த உரையில் இந்தியாவின் வரலாறும், தலைவர்களும், மக்களும் புகழப்பட்டனர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன்றைய உலக சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது, உலகில் இந்தியா அதற்குரிய இடத்தைப் பெற்றுவிட்டது என்றெல்லாம் பலத்த கரவொலிக்கு இடையே ஒபாமா பேசினார்.

ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் இந்தியா இடம்பெற, ‘அதற்குரிய காலம் வரும்போது’ என்ற பொடியுடன், அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றார். இந்த ‘உத்தரவாதம்’ கூட்டறிக்கையிலும் பிரதிபலித்தது. அமெரிக்காவின் புதைசேறாகிவரும் ஆ்ப்கானிஸ்தான், சீன பிரச்சனைகளில் இந்தியாவிற்கு கூடுதல் இடமளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் என்னவென்று விளக்கப்படவில்லை.

இந்தியாவின் எரிசக்தித் தேவையை கருத்தில் கொண்டு, அணு சக்தி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப உதவிகள் செய்யப்படும் என்று மற்றொரு உறுதிமொழி. ஆனால், உயர் தொழில்நுட்ப உதவியளித்தால் மட்டுமே அணு சக்தி ஒத்துழைப்பு என்பது அந்தப் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவால் நிபந்தனையாக்கப்பட்டது. மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் செயல்ப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும என்றார். இது பல முறை அந்நாட்டு அயலுறவு அமைச்சக பேச்சாளர்களால் சொல்லப்பட்ட இராஜ தந்திர வார்த்தைகளே, ஒன்றும் புதிதல்ல.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் ஒப்பந்தங்கள்!

எனவே, இந்தியாவில் ஒபாமா மேற்கொண்ட 3 நாள் பயணத்தில் அமெரிக்காவிற்கு கிடைத்ததென்ன, இந்தியா பெற்றதென்ன? என்பதை மதிப்பீடு செய்துப் பார்த்தால், அவரது பயணம் அமெரிக்காவிற்கும், அதன் பொருளாதாரத்திற்கும், அந்நாட்டு பெரு நிறுவனங்களுக்கும் போதுமான பயனளித்துள்ளது.

1. இந்திய விமானப் படைக்கு நீண்ட தூரம் டாங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைக் கொண்டு செல்லக் கூடிய அமெரிக்காவின் போயிங் நிறுவனத் தயாரிப்பான சி-17 விமானங்கள் 10ஐ வாங்குவதென்ற 4.1 பில்லியன் ஒப்பந்தம். இதன் மூலம் அமெரிக்காவில் 22,000 பேருக்கு வேலை கிடைக்கும். மேலும் 6 பிறகு வாங்குவோம் என்று இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி கூறியுள்ளார்.

2. போயிங் நிறுவனத்தின் பயணிகள் போக்குவரத்து விமானமான பி 737-800 வகை விமானங்கள் 30ஐ வாங்க இந்திய தனியார் விமான .நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் ஒப்பந்தம்.

3. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடமிருந்து நமது நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் இலகு ரக விமானத்திற்கு 107 எஃப்-414 இயந்திரங்கள் வாங்க ஒப்பந்தம். மதிப்பு 1 பில்லியன் டாலர்.

4. ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ள அனல் மின் நிலையங்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து 6 எரிவாயு டர்பைன்கள் வாங்க ஒப்பந்தம். இதுமட்டுமின்றி, 5 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அமெரிக்காவின் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற ரிலையன்ஸ் ஒப்பந்தம்.

5. இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் வெஸ்டிங் ஹெவுஸ், ஜெனரல் எலக்டிரிக் ஆகிய நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளைப் பெற ‘தடையாகவுள்ள’ அணு விபத்து இழப்பீடு சட்டத்திலுள்ள விதிமுறைகளை முறைபடுத்த ஒப்புதல்.

இதுமட்டுமின்றி, அமெரிக்க நிறுவனங்கள் எதிர்பார்த்த மேலும் பல சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. அதனை அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் பி.ஜே. கிராவ்லி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெளிவாகவே விளக்கியுள்ளார்.

“அதிபர் ஒபாமாவின் 3 நாள் இந்தியப் பயணம் அமெரிக்கா எதிர்பார்த்த அனைத்தையும் சாதித்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

இந்தியா பெற்றதென்ன?

இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து தனியார் பங்கேற்புடன் 10 பில்லியன் டாலர் தொகையுடன் உருவாக்க ஒப்புக்கொண்டுள்ள உள்கட்டமைப்பு நிதித் தொகுப்பு (Infrastructure Debt Fund), இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய ‘நீடித்த பசுமைப் புரட்சி’ (இது நமது விவசாயத்தை எந்த அளவிற்கு நோகடிக்கப் போகிறது என்பது போகப் போகத் தெரியும்), டெல்லியில் நோய் கண்டுபிடிப்பு மையம், எரிசக்தி (அணு சக்தி என்று புரிந்துகொள்க) ஒத்துழைப்பு ஆகியன.

இந்தியப் பயணத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களால் அமெரிக்காவில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்று வந்துள்ளேன் என்று அமெரிக்கா திரும்பியதும் கூறப்போகிறேன் என்று ஒபாமா பேசியுள்ளார்.
ஆனால், கடந்த சில மாதங்களாக இந்திய தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட பல தொழில் நெறிஞர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றிட அளிக்கப்படும் ஹெச் 1 பி, எல் 1, எல் 2 ஆகிய விசா கட்டணங்களை 2,000 முதல் 2,500 டாலர்கள் வரை உயர்த்தியது குறித்து பேச்சு மூச்சில்லை.

வணிக அயல் பணிகளுக்கு (Business Process Out-sourcing - BPO) ஒஹையோ மாகாணம் விதித்துள்ள தடை, அதனை ஆதரித்து அமெரிக்க காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் தான் பேசியது, அப்படிப்பட்ட தடையால் (தற்காப்புக் கொள்கையால்) இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியன பற்றி ஒபாமாவும் பேசவில்லை, இந்தியப் பிரதமர் பேசியதாகவும் தெரியவில்லை.

“வணிக அயல் பணிகளைப் பெற்றதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள்தான் பலன் பெற்றன என்றும், அமெரிக்கர்களுக்குரிய வேலை வாய்ப்புகளை நாங்கள் திருடவில்லை” என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். ஆனால் அதற்கான பதில் ஒபாமாவிடமிருந்து வரவில்லை.
ஹெச் 1 பி விசா பெற்றுச் சென்றவர்கள், அங்கு பெறும் ஊதியத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக செய்யப்படும் பிடித்தத்தைத் திரும்பப் பெற அமெரிக்காவுடன் ஊதியப் பிடித்தம் தவிர்ப்பு ஒப்பந்தம் (Totalisation Agreement) போடப்படும் என்று கடந்த செப்டம்பரில் வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா பேசினார். ஆனால் அதுபற்றி ஒபாமா பயணத்தில் ஏதும் பேசப்பட்டதாக ஒரு குறிப்பும் இல்லை. இதற்குமேல் பேச வேண்டும் என்று மட்டும் நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல் வற்புறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்ல, மிகச் சமீபமாக அமெரிக்காவிற்கு பணி நிமித்தம் விசா பெறச் செல்லும் இந்தியா தொழில் நெறிஞர்களிடம், அமெரிக்க தூதரகத்தின் விசா அதிகாரிகள் மிகக் கடுமையாக (கொடுமையாக) நடந்துகொள்கிறார்கள் என்று புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிருந்து அமெரிக்காவிற்கு சென்ற பலர், கடுமையான விசாரணைக்குப் பிறகு, அடுத்த விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதுபற்றியெல்லாம் ஏதும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.ஆனால் பராக் ஒபாமா, அரசுகளைத் தாண்டி, மக்களுக்கு இடையிலான உறவு பற்றி இங்கு பேசுகிறார்.
எனவே ஆழமாக நோக்கின், ஒபாமாவின் இந்தப் பயணம் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளைப் பற்றுவதாகவே இருந்ததே தவிர, அது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு சமமான பொருளாதார ஒத்துழைப்பை மையப்படுத்தியதாகத் தெரியவில்லை.
இன்று புதுடெல்லியில் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய இந்திய தொழில் வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா, “பராக் ஒபாமா பயணம் அளித்த துவக்கத்தை கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, சேவைகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை (Comprehensive Economic Partnership Agreement) உருவாக்குவது குறித்து விவாதிக்க வேண்டும்” என்று உற்சாகமாக பேசியுள்ளார்.

ஆனால் அந்த மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தின் செயலர் காரி லோக், “நாம் பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து செயலாற்றி வருகிறோம். ஒவ்வொரு படியாகத்தான் செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அவைகளின் மீது வணிக சமூகங்கள் (பெரு நிறுவனங்கள்) கவனம் செலுத்தி வருகின்றன. எனவே, ஒவ்வொரு அடியாக முன்னெடுக்கலாம்” என்று உற்சாகமின்றி பேசியதாக செய்திகள் கூறுகின்றன.
இவை யாவும் இந்தியாவை அமெரிக்க அரசும், அதன் பெரு நிறுவனங்களும் எவ்வாறு பார்க்கின்றன என்பதையே தெளிவுபடுத்துகின்றன. அவைகளுக்கு இந்தியா ஒரு பெரும் சந்தை. அந்த சந்தையில் அமெரிக்காவின் உற்பத்திகளுக்கு தடையேதும் இருக்கக் கூடாது. குறிப்பாக அமெரிகாவின் விவசாய விளைபொருட்களுக்கு பெரும் சந்தையாக இந்தியாவை அந்நாடு பார்க்கிறது. அதனால்தான் தோஹா சுற்றுப் பேச்சு குறித்து கூட ஒபாமா நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டார். அது அவர்களின் பொருட்களுக்கு பெரும் தடையை ஏற்படுத்துகிறது.

தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை அமெரிக்கா, ஐரோப்பா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளுக்கும், இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்க உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பிரச்சனை தொடர்பானதாகும். தங்களுடைய உற்பத்திகளுக்கு வளரும் நாடுகள் சந்தையை திறக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகள் எதிர்பார்க்கி்ன்றன. அதில் சம அளவிலான போட்டியிருக்க வேண்டும், எனவே உங்கள் நாட்டு விளைபொருட்களுக்கு நீங்கள் அளிக்கிற மானியங்களை குறையுங்கள் என்கின்றன இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள். இதுதான் அமெரிக்காவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நெருக்கடியில் இருந்து விடுபட உலக வர்த்தக அமைப்பில் தீர்வு காண்பதற்கு பதிலாக, இந்தியாவுடன் தனித்த பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது அமெரிக்கா.
ஆக, அமெரிக்காவின் (தங்கள் நாட்டின் உற்பத்திகளுக்கு) சந்தை தேடும் வணிகப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏதுமில்லை. அதிபர்தான் மாறினாரே தவிர, அந்நாட்டின் அணுகுமுறை மாறவில்லை. இந்த ஒருபக்க ஆதாய அணுகுமறை மாறாதவரை, இந்தியா போன்றதொரு வளரும் நாட்டுடன் அந்நாடு நீடித்த பொருளாதார உறவு கொள்ள முடியாது.

Sunday 24 October 2010

நாகரிகத்தின் கோரமுகம்!

இரண்டாவது உலகப்போரில் அடால்ப் ஹிட்லரின் நாஜிப்படைகள் நடத்திய ஈவுஇரக்கமே இல்லாத படுகொலைகளும், சித்திரவதைகளும் மீண்டும் ஒருமுறை மனித இனத்துக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மனித நாகரிகம் இனி நடைபோட வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுவதுதான் ஐக்கிய நாடுகள் சபை!'
சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமென் ஆகியோரின் முத்தரப்பு சந்திப்புக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இப்படிக் கூறியவர் அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென். தங்களது சரும நிறம் வெள்ளை என்பதால் உலகத்துக்கு நாகரிகம் கற்றுக் கொடுப்பவர்கள் தாங்கள்தான் என்கிற இறுமாப்பில் மிதக்கும் மேற்கு நாடுகளின் உயர்வு மனப்பான்மை, உலக அமைதிக்கு உத்தரவாதம் அளிக்க வல்லவர்கள் தாங்கள்தான் என்று கருத வைத்ததில் வியப்பென்ன இருக்கிறது?
நாகரிகம் கற்றுக்கொடுத்து உலக சமாதானத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் இராக்கில் அரங்கேற்றியிருக்கும் படுகொலைகளும் போர்க்குற்றங்களும் அடால்ப் ஹிட்லரையும், பெனிட்டோ முசோலினியையும் உத்தமர்களாக்கிவிடும் போலிருக்கிறது. ஹிட்லராவது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிப்பதில்தான் கவனம் செலுத்தினார். ஆனால், இவர்களோ தங்களது சுயலாபத்துக்காகவும் எண்ணெய் வளங்களை அபகரிக்கும் வியாபார எண்ணத்துடனும் கொன்று குவித்திருக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை ஒன்றோ, இரண்டோ அல்ல. 1 லட்சத்து 9 ஆயிரத்து 32 உயிர்கள்.
கடந்த ஜூலை மாதம் "ஆப்கன் போர் டைரி' என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அல்-கொய்தாவுக்கு எதிராக நடத்திய தாக்குதல் தொடர்பான ரகசியக் குறிப்புகளை வெளியிட்ட அதே "Wikileaks' இணையதளம் இப்போது இராக்கில் ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்பான பல ரகசியக் குறிப்புகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. முன்பு இந்த இணையதளத்துக்கு ஆப்கானிஸ்தான் தொடர்பான கோப்புகளைத் தந்து உதவிய அதே "பென்டகன்' நபர்தான் இப்போது இராக் தொடர்பான தகவல்களையும் அம்பலப்படுத்த உதவியிருக்கிறார்.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான "பென்டகனி'ல் பாதுகாக்கப்பட்டு வரும் ஏறத்தாழ 4 லட்சம் ரகசிய ஆவணங்கள் "Wikileaks' இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன. நாகரிக சமுதாயம் அரங்கேற்றியிருக்கும் காட்டுமிராண்டித்தனம் மனித இனத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது.
இராக் நாட்டில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 32. இதில் 66 ஆயிரத்து 81 பேர் அப்பாவிப் பொதுமக்கள். 23 ஆயிரத்து 984 பேர் "எதிரிகள்' என்று அமெரிக்கப் படைகளால் முத்திரை குத்தப்பட்டவர்கள். 15,196 பேர் சதாம் ஹுசைனின் ராணுவத்தினர். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் மொத்த உயிரிழப்பு வெறும் 3,771 மட்டுமே.
ஜனவரி 1, 2004 முதல் டிசம்பர் 31, 2009 வரை நடந்த ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 60 சதவிகிதம் பேர் அப்பாவிப் பொதுமக்கள். அதாவது, 6 ஆண்டுகள் தினந்தோறும் சராசரியாக 31 அப்பாவி பொதுஜனம் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமா? பல கைதிகள் இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டனர் என்றும், கண்கள் கட்டப்பட்டு சவுக்கால் அடிக்கப்பட்டனர் என்றும், கைகள் அல்லது கால்கள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டனர் என்றும், பலர் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் பல செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் இராக்கைத் தங்கள் வசப்படுத்திக்கொண்ட பிறகு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேரைத் தயவுதாட்சண்யமே இல்லாமல் அந்த ராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
சரணடைய வந்தவர்களைக்கூட சுட்டுக்கொன்று தங்களது ரத்தவெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது ஆக்கிரமிப்பு ராணுவம். ரசாயன ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறார் என்றும் அபாண்டமாகப் பழி சுமத்தி சதாம் ஹுசைனை ஒரு கொடுமைக்கார சர்வாதிகாரியாகச் சித்திரித்து, அதையே காரணம் காட்டி ஒரு சுதந்திர நாட்டின் மீது அடாவடி ஆக்கிரமிப்பு நடத்தியவர்கள் அரங்கேற்றியிருக்கும் மனித உரிமை மீறல்கள் மன்னிக்கப்படும். காரணம், இந்த அராஜகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தியிருப்பது உலக வல்லரசான அமெரிக்கா அல்லவா!
உலகுக்கு நாகரிகம் கற்றுத்தர முயலும் வெள்ளை சருமத்தின் கருப்பு முகம் "Wikileaks' இணையதளத்தின் மூலம் இப்போது வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த தவறான தகவல்களின் அடிப்படையில் இராக்கில் ஆக்கிரமிப்பு நடத்தியதாக சுயவாக்குமூலம் அளித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும், அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கும் லட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களுக்குப் பொறுப்பேற்பதுதானே நியாயம்? உலகம் இவர்களை போர்க்குற்றவாளிகளாக நிறுத்தி விசாரித்துத் தண்டனை கொடுப்பதுதானே தர்மம்? சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டுக் கொன்ற குற்றத்துக்கும் - இவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?
இனிமேல் நாகரிகம் பற்றிப் பேசும் அருகதை அமெரிக்கர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் கிடையாதுதான். ஆனால், நியாயத்துக்குக் குரல் கொடுக்க யாருமே இல்லையே, என் செய்ய?

Friday 1 October 2010

நடுநிலை தவறும் நீதியரசர்கள்

பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

பாபர் மஸ்ஜித் நிலத்தை மூன்றாகப் பிரித்து பாபர் மசூதி கமிட்டியிடம், ராமர் கோவில் கமிட்டியிடமும், அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் வழங்க வேண்டும் என்றும்,

ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும்,

நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஆனால், ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்பை வழங்கியுள்ளனர். மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து இந்து மகா சபா, நிர்மோலி அகரா மற்றும் பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளனர்.

பாபர் மஸ்ஜித் இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளர்

Friday 10 September 2010

திரும்பி விடும் தூரம்தான்....

வண்ணமயமான வாழ்க்கை கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு இந்த பாலைமண்ணிலே வந்திறங்கிய என்னருமை சகோதர, சகோதரிகளே!

உங்களின் கணவுகள் எந்த இடத்தில் இருக்கின்றது. நனவாகிவிட்டதா? இல்லை அது இந்த பாலைவெளியின் கானலை போன்ற கணவுகள் தானா?

அமுதுடன் அன்பையும் ஊட்டி வளர்த்த உன் அன்னை,

நீ படிக்கவேண்டும் என்று தன் ஆசைகளை சுருக்கிக் கொண்ட உன் தந்தை,

நீ மேற்படிப்பு படிக்க தன் படிப்பை விட்ட உன் சகோதரன்,

உன் கல்லூரி செலவுகளுக்காக நான் காட்டன் மில் வேலைக்கு செல்கிறேன் என்று சென்ற உன் சகோதரி.

கப்பலுக்கு போன மச்சான் கண்ணிறைந்த ஆசை மச்சான் எப்பத்தான் வருவீங்களோ எனக் காத்திருந்து காத்திருந்தே தலை முடி நரைத்துப் போகும் உன் ஆசை மனைவி.

உன்னை கண்டு அஞ்சி தாயிடம் ஒடி ஒளியும் உன் குழந்தை இப்படி பல உறவுகளையும் மொத்தமாக விட்டு விட்டு பணம் ஒன்றே குறிக்கோளாக வந்திருக்கின்றாய்.

வந்திறங்கிய நாள் முதலே நீயோ உன்னுடைய ஆசைகளையும் அவசியங்களையும் பின்னால் எடுத்துக் கொள்ளலாம் என்று இந்த மண்ணிலே ஏதோ பெரும் புதையல் போன்று புதைத்து வைத்து விட்டு உழைத்து உழைத்து ஓடாக தொடங்கிவிட்டாய். உன் மனதுடன் என்றாவது பேசிப் பார்த்திருக்கின்றாயா? அது தினசரி அழுகின்றதே. என்றேனும் அதை சமாதானப்படுத்த மாற்று வழியை தேடியிருக்கின்றாயா? இந்த பாலை மண்ணிலாகட்டும் அல்லது தாய் மண்ணிலாகட்டும் பெரு மழையே பெய்தாலும் ஒரு சில நாட்களில் அதன் ஈரம் காய்ந்து விடுகின்றது.

ஆனால் உன் நெஞ்சுக்குள் உள்ள ஈரம் மாத்திரம் எப்படி 48 டிகிரி செல்சியஸில் சுட்டெரிக்கும் சூட்டிலும் ஈரமாகவே இருக்கின்றது. உன் குடும்பத்தின்

சூழ்நிலை உன்னை அந்த சூரியனையே திருப்பிச் சுட்டெரிக்க வைக்கின்றதோ?

ஒண்ட இடமில்லாமல் ஒலை குடிசையிலே உன் பெற்றோரையும், உன்னுடன் நாள்கணக்கில் மாத்திரம் இல்லற ரேஷன் அனுபவித்த உன் மனைவியையும் அதன் மூலம் நீ பெற்ற உன் வாரிசு பள்ளிக்கு படிக்க போயும் அதன் முகமறியாதிருக்கும் நீ அவர்களை விட்டு விட்டு வந்து உழைத்துக் கட்டிய வீட்டின் கடன் உன்னை இங்கிருக்கச் செய்கிறதோ!

வீட்டை கட்டிய நீ அதில் வசிக்கும் உன் பெற்றோர் கொண்ட நோய்களுக்கு செய்த செலவுகள் உன் நெஞ்சின் ஈரத்தை காயவிடாமல் உன் பயணத்தை தடை செய்கின்றதோ!

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் என்று இறைவன் நம் மீது மஹரை கடமையாக்கியிருக்க உன் சகோதரியை பெண் கேட்டு வந்தவன் கேட்ட வரதட்சணையை கொடுத்து உன் இறைவனின் வாக்கை விட உன் சகோதரியின் வாழ்வே முக்கியம் என்று செய்வித்த திருமணக் கடன் இன்னும் உன்னை இங்கேயே தங்கிடச் செய்துவிட்டதோ!

தாய்நாட்டிலே கிடைக்கும் வேலைகளெல்லாம் நான் படித்த படிப்புக்கு தக்க சம்பளத்தை தரவில்லை. நான் வெளிநாட்டில் மட்டும் தான் வேலை செய்வேன் என்று வீம்பு பிடித்த உன் சகோதரனுக்கு நீ எடுத்த பயண டிக்கட்டும் விசா செலவினங்களும் உன் தாய்நாட்டை எட்டிப்பார்க்;க விட வில்லையோ!

அடடே! கல்லூரியிலே மெத்த படித்துவிட்டு கக்கூஸ் கழுவும் வேலை மட்டும் தான் கிடைத்தது என்று அலுத்துக்கொள்ளும் உன் சகோதரன் கூடவா உன் பயண டிக்கட்டுக்கு உதவவில்லை!

நாலாயிரம் வாங்கும் அவன் ஊருக்கு போனால் செய்யும் பந்தா ஏதோ இவன் தான் அரபு ஷேக்கின் நேரடி பணியாளன் போல் அங்குள்ளவர்களை நினைக்க வைக்கின்றதே. பின் ஏன் அங்குள்ளவர்கள் இவனிடம் வாசைன திரவியமும் சிகரெட்டும்; கேட்காமல் விடுவார்கள்?

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி, உழைத்தால் பெறுகாதோ சாகுபடி! என்ற கவிஞன் மருதகாசியின் வரிகளை மறந்துவிட்டு இங்கிருந்து தூக்க முடியாமல் லக்கேஜ் தொகை கட்டி தாயக கஸ்டம்ஸில் கஷ்டப்பட்டு உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அள்ளி வழங்கினானே பாரிவள்ளல் உன் சகோதரன் அவன் திரும்பிவர பயண டிக்கட்டுக்கு எந்த உறவும் ஏன் உதவவில்லை!

கட்டிக்கொடுத்த உன் சகோதரி வீட்டில் பத்தாயிரம் சீனி வடை, எட்டாயிரம் பணியாரம் என்று வெட்கமில்லாமல் கேட்டதுதான் நீ கட்டிய புதுவீட்டை உன்னால் எட்டிப்பார்க்க வைக்கவில்லையோ! சீனி வடையும் பனியாரமும் தன் வீட்டில் செய்து திங்க வழியில்லாத வக்கற்றவனுக்கா நீ உன் சகோதரியை திருமணம் செய்து கொடுத்தாய்? அவன் கேட்பதை நிறுத்த விரும்பினாலும் அவன் தாயும் சகோதரிகளும் கேட்பதை விடப்போவதில்லை. நீயும் தாயகம் செல்லப் போவதில்லை.

ரேஷன்? அது அரிசிக்கும் சர்கரைக்கும் மாத்திரமில்லை எங்கள் இல்லறத்துக்கும் தான் என்று கண்கலங்கியிருக்கும் மனைவியை திருப்திபடுத்த வேண்டி பக்கத்து வீட்டுக்காரிக்கு அவளது கணவன் வாங்கியனுப்பிய சேலையின் சிறு துண்டை கிழித்து அனுப்பிய உன் மனைவியின் ஆசைக்கு அடிபணிந்து கடை கடையாய் ஏறி இறங்கி அயர்ந்து போய் கிடைக்கவில்லை என காரணம் சொல்ல பயந்து, ஊருக்கு செல்வதை தள்ளிப் போடுகின்றாயோ!

நாள் கணக்கில் மட்டும் உன்னை அறிந்த உன் மகனுக்கும் மகளுக்குமான அடுத்த வருட கல்லூரி செலவை நினைத்து உன் அடுத்த வருட பயண தேதியையும் தள்ளி வைப்பாயோ?

நீ கட்டிய புது வீட்டின் ஹாலில் தொங்கிய பல காலண்டர்கள் குப்பைக்கு போய்விட்டது. வெள்ளையாய் அடித்த சுண்ணாம்பும் பாசி பிடித்து ஆங்காங்கே பச்சையாய் மாறி விட்டது. வீட்டு மராமத்து வேலைக்கு நீ என்ன செய்வாய்? உன் வேலை முடிந்தவுடன் இருக்கவே இருக்கிறது பகுதி நேர வேலைகள். லேபர் செக்கிங் வந்தால் சாமான் வாங்க வந்தேன் என்று சொல்லிக் கொண்டால் ஜெயிலில் இருந்து தப்பி விடலாம் ஆனால் நீ உன் பழைய பாசி படிந்த வீட்டை வெள்ளை அடித்து விடலாமே! நீ இப்பொழுது ஊருக்கு போகத்தான் வேண்டுமா?




சோர்ந்துப் போயிருந்த உன்னை வியாழன் தோறும் நடைபெறும் இஸ்லாமிய பயான் நோட்டிஸ் இழுத்ததினால் நீ இன்று தர்காவையும் கொடிமரத்தையும் விட்டுவிட்டு ஒரே இறைவனின் பால் திரும்பி தொழத் தொடங்கியுள்ளாய். இறைவன் உன்னை நரக நெருப்பிலிந்து காப்பாற்றியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும். ஆனால், நீ மாத்திரம் இணைவைப்பிலிருந்து தப்பித்துக் கொண்டு உன் குடும்பத்தினர் தர்கா, கொடிமரம், சந்தனக்கூடு என்று அலைவதை தடுக்காமல் மேலதிகமாக செலவுக்கும் கொடுக்கின்றாயே. அவர்கள் நரகத்திற்கு போகட்டும் நாம் மட்டும் சொர்கத்திற்கு போவோம் என்ற சுயநலம் இதில் மாத்திரம் உனக்கு எப்படி வந்தது?




ஹீட்டர் இல்லாமலே பைப்பை திறந்தால் வரும் சூட்டு நீரில் தோல் நோயையும், சிறிய அறையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிய கட்டிலில் சர்க்கஸ் செய்து உறங்கி ஆஸ்துமாவையும், மெஸ்ஸில் போடும் வேகாத ஆட்டையும், 8மாததுக்கு முன் குளிரூட்டத் தொடங்கிய கோழியையும் தின்று தின்று பெற்ற பிரஷரும், உப்புக் கலந்த நீரில் குளித்து இழந்துவிட்ட உன் தலைமுடியும், 10,000 இந்திய ரூபாய்கள் கேட்கின்றானே!

பிடிங்கிவிடு என்று இழந்த உன் பல்லும் உன் 40 வயது ஆரோக்கியத்தை 60 ஆக காண்பிக்கின்றதே. உன்னால் அடுத்த வருடம் வரை தாக்குப்பிடிக்க இயலுமா?

உன் தந்தையின் அகால மரணத்துக்கு செல்ல முடியாமல் இரண்டு பகல் ஒரு இரவு உன் வரவுக்காக காத்திருந்த உன் தந்தையின் ஜனாஸா நீயில்லாமலே அடக்கம் செய்யப்பட்டதே, அவரை நினைத்து உன் தாய் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது அவளருகிலிருந்து உன் மனைவி செய்ய மறுத்த பணிவிடைகளை உன்னால் செய்ய முடிந்ததா?

உனக்கு சட்டையை தேய்த்துக் கொடுத்தும், மளிகை கடைக்கு ஒடி நீ சவரம் செய்ய பிளேடு வாங்கியும் சம்பளமில்லா ஊழியனாய் உழைத்த உன் சகோதரனின் திருமணத்திற்கு கூட விடுமுறை கிடைக்கவில்லை என்று செல்லாமல் நீ சாதித்தவை என்ன?

பட்ட மேற்படிப்பு படித்த உனக்கு பெங்க@ரிலும் சென்னையிலும் ஏழாயிரம், எட்டாயிரம் என்று கொடுத்ததை வேண்டாம் என்று விட்டு விட்டு விசிட்டில் வந்து மற்றவர்களின் அறிவுத்திறனுடன் போட்டியிட இயலாமல் இந்த இங்கிலீஸை வைத்து கொண்டு நீ அரபுலகில் வேலை வாங்கிவிடுவாயா என்று கேட்டானே இன்டர்விய+ ஆபிஸர் அவனுக்கெதிராக நீ வெறும் 11,250 இந்திய ரூபாய் பெறுவதற்காக காலை 6மணிக்கு ஆரம்பித்து இரவு 10மணி வரை பார்க்கையும் கழிவறையையும் சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றாயே இது தான் உன் வெளிநாட்டு வாழ்க்கை சாதனையா? மிகக் குறைந்த சம்பளம் 4,825 ரூபாய் வாங்கும் சகோதரனை விட நான் பரவாயில்லை என்கிறாயே இந்த அரபுலகில் மற்றொருவர் 1,50,000 ரூபாய் மாத சம்பளமாக பெறுகிறார் என்பதை நீ ஏன் மறந்துவிட்டு முன்னேற மறுக்கின்றாய்.

60 நாள் விடுப்பில் சென்றுவிட்டு 10 நாளில் பெண் தேடித் திருமணம் செய்து 50 நாட்கள் அவளுடன் வாழ்ந்து வந்திருக்கும் உனக்கும் அவளுக்கும் என்ன அந்நியோன்யம் ஏற்பட்டு விட போகிறது. திருமணங்கள் எளிமையாக நடத்தப்படவேண்டும் என்ற நாயகத்தின் வாக்கை மறந்துவிட்டு கோட்டையார் தன் மகள் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தியது போன்று நீயும் உன் திருமண விருந்தை அட்டகாசமாய் நடத்தி அதில் பாதிக்கு மேல் இலையில் வீணாக்கினார்களே அந்த தெண்டச் செலவுகளுக்கு நீ இன்னும் எத்தனை வருடம் உழைக்கப் போகின்றாயோ! நபிகளார் காலத்தில் நபிக்கும் கூட அறிவிக்கப்படாமல் நடந்தேறிய சஹாபாக்களின் திருமணங்களின் எளிமையிலிருந்து நாம் திருந்த வேண்டாமா?

வெள்ளிக்கிழமை வந்தால் ஜூம்மா பாங்கு சொல்லும் வரை ஒர் உறக்கம். தொழுதபின் நல்லதொரு பரியாணி அதன் பின் உறவுகளுக்கும் மனவிக்கும் தொலைபேசியில் ஒரு உரையாடல். மனைவியிடம் போனில் பேசிவிடலாம் என்று போன் செய்து வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒவ்வொருவராக பேசி கடைசியாக அவள் முறை வரும் சமயம் உன் அலைபேசியில் போதுமான தொகையில்லை என்று பதிவுசெய்யப்பட்ட வேறு ஒரு பெண்ணின் குரலைக்கேட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வதை தவிர உனக்கு வேறென்ன சந்தோஷம் இந்த பாலைவெளியில் கிடைத்திருக்கின்றது. தவறிப்போய் உன் மனைவியிடம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்து அவள் மாமியார் மற்றும் நாத்தனாரின் அடக்குமறையை பற்றி பேசும் பொழுது நீ நொறுங்கிப் போயிருப்பாய். அவளுக்கு ஆறுதல் சொல்லும் முன் உன் அலைபேசியில் மனைவியின் குரலுக்கு பதிலாக மீண்டும் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் உன்இயலாமையின் மீது ஓங்கி ஒலிக்கும்.

இந்திய திரு நாட்டில் பி.எஸ்.என்.எல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளிநாட்டு அழைப்புகளின் தொகையை குறைத்திருந்தும் நீ இன்னமும் வெளிநாட்டின் தொலைபேசியிலேயே இருமடங்காக செலவழித்துக்கொண்டு இருக்கின்றாயே. உனக்கென்ன இந்த வாழ்க்கை நிரந்தரம் என்ற எண்ணமோ? நீ மாதா மாதம் அனுப்பும் தொகையில் தாய் நாட்டிலிருந்து உன்னை அழைக்கச் சொல். அவர்கள் உன்மீது வைத்திருக்கும் பாசம், அன்பை அறிய உனக்கு இனி வாய்புகள் அமையலாம்.

மாதா மாதம் சரியாக பணம் அனுப்பி விட்டால் போதும் என்றிருக்கின்றாயே. நீ இல்லாமல் உன் குடும்பத்தார் தினசரி அத்யாவசிய வேலைகளுக்கு எத்தனை சிரமப்படுகிறார்கள் என்பதை நீ ஏன் சிந்திக்க மறுக்கின்றாய். அதுவும் பெண்கள் வெளியுலக வேலைகளை நிறைவேற்ற எத்தனை கஷ்டப்படுகின்றார்கள் என்பதை நீ அறிவாயா?

27 வருடமாக நீ இங்கிருந்து இழந்ததில் உன் குழந்கைகளின் கல்வியும் அடக்கம். நீ ஊரில் இருந்த போது 30 நாட்கள் ஒழுங்காக படித்த உன் கடைக்குட்டிப் பையன் நீ விடுமுறை முடிந்து வந்தவுடன் மீண்டும் நகர்வலம் செல்லத் தொடங்கி விட்டான், அவன் 12வது தேறுவது கடினம் என்று வருந்துவதை விட்டு விடு. வளைகுடா நாட்டின் தெருக்களை சுத்தம் செய்ய உன் மகன் அங்கு தயாராகி வருகின்றான். இனி அவன் முறை வருகின்றது. அவன் வந்து உன்னை தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பான்.

65 வயதாகிவிட்டவர்களுக்கு இனி அக்காமா அடிக்க முடியாது என்று அரசாங்கம் இட்ட ஆணையை தொடர்ந்து 34 வருடமாக இங்கு உழைத்துக் கொட்டிய தெற்குத் தெரு டெய்லர் மாமா நல்ல உடல் நிலையுடன் தாயகம் கேன்ஸலில் திரும்பியவருக்கு உடல் நிலை மோசமாகி படுக்கையில் கிடக்கின்றார். அவருடைய வங்கியில் ஏதுமில்லை. அவருடைய மகன்தான் இன்று வைத்திய செலவுகளை பார்கின்றான். ஏதோ அவன் புத்திசாலியாய் இருந்ததினால் இங்கு ஒரு தொழிலை பலருடன் சேர்ந்து கூட்டாக ஆரம்பித்து அதன் வருவாயில் ஊரில் நலமுடன் இருக்கின்றான். அவனைப் பார்த்தாவது நாம் படிப்பினை பெற வேண்டாமா?

எத்தனை காலம் தான் இந்த பாலைவெளியின் 13டிகிரி குளிரிலும் 48டிகிரி சூட்டிலும் மற்றவர்களுக்காகவே உன்னை நீ அழித்துக்கொள்வாய். நீ உனது வாழ்வையே இழந்து நிற்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

என் உடன் பிறவா சகோதர, சகோதரியே இனி மேலும் நீ இழப்பதற்கு ஏதுமில்லை. எனவே இன்றிலிருந்து வீணான செலவுகளை தவிர்த்துவிடு. உன் வருமானத்தில் ஒரு பகுதியை ஏதேனும் ஒரு வழியில் சேமித்து வை. 3 வருடம் அல்லது 5 வருடம் கழித்து அதனை எடுத்து உன்னைப் போல் ஆர்வமுள்ளவர்களுடன் கூட்டுச் சேர்ந்து இந்த வளைகுடா நாட்டிலோ அல்லது தாயகத்திலே ஒரு தொழிலை ஆரம்பித்து நீ இங்கு மற்றவருக்கு உழைத்ததை விட இன்னும் ஒருபடி மேல் சென்று அதிகமாக உழைத்தால் இறைவன் நாடினால்.. நிச்சயமாக உங்களுடைய தொழிலில் அருள்வள மழை பெய்யத் தொடங்கிவிடும்.

வளைகுடா நாட்டில் வாடகை வாகனங்களிலோ, குரோஸரி என்றழைக்கப்படும் மளிகை கடைகளிலோ, முடி வெட்டும் கடைகளிலோ, ஸ்டேஸனரி கடைகளிலோ முதலீடு செய்யலாம். தாயகத்திலோ கணக்கற்ற தொழில்கள் உள்ளன. மெத்தப் படித்தவர்களிடம் அறிவுரை பெற்றால் நிச்சயமாக உன்னால் ஜெயிக்க முடியும். அல்லாஹ்வும் அவன் தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹ_ அலைஹி வ ஸல்லம்) அவர்களும் காட்டித் தந்த இறைவழியில் மற்றவர்களை நீ ஏமாற்றாமல் தொழில் செய்தால் அதன் பின் இறைவனைத் தவிர வேறு யாராலும் உன்னை வீழ்த்;திவிட முடியாது. தொழிலுக்கான முதலீடு குறைவாகயிருந்தால் நிரந்தர நரக தண்டனை தரக்கூடிய வட்டியின் பால் சென்றுவிடாதே.

மாற்றமாக உன்னைப்போல் இறைவனை மட்டுமே அஞ்சக்கூடியவர்களை மேலும் கூட்டு சேர்த்துக் கொள். அடுத்த வருடம் நிச்சயமாக நீ பொருளாதாரத்தில் வலுப்பெற்றவனாகி விடுவாய்.

இந்த பாலையில் மற்றவர்களுக்காக உழைத்தது போதும்.

இன்று முதல் உனக்காக உழைக்கத் தொடங்கு.

தாயகம்! ! ! நிச்சயமாக அது திரும்பி விடும் தூரம்தான்.

Friday 13 August 2010

புரிய துவங்கியபோது நரைக்கவும் துவங்கியது!

ரியாலுக்கு வாழ்க்கையை
அடகு வைத்து பாலையில்
பரிதவிக்கும் பாவி! .
கைபேசியில் ௬ க்குரலிடும்
கையாலாகாதவன்!
கண்ணே! மணியே!
என்றெல்லாம் காதலியை
கொஞ்சி மகிழ நேரமில்லை!
இணையம் வழியே
இத்யத்தை பரிமாறிக்கொண்டதால்
இதயம் கூட ஹெகிங் செய்யப்பட்டது
என்னவள் இதயம்
கூட இறுகிப்போனது!
காதல் கூட எனக்கு
கானல் நீராகிப்போனது!
தொலை தூரக்
காதல் செய்து
தொலைந்து போனவன்!
கணிப்பொறிக்குள்
அகப்பட்டுக்கொண்ட கயவன்! .
திரை கடல்லோடி
திரவியம் தேடும்
திசை மாறியப் பறவை!
இதன் முதலீடு
எனது இளமை.!
இழபபீடு கிடைக்கா
இழப்பு இது என்று !
புரிய துவங்கியபோது
நரைக்கவும் துவங்கியது!

Tuesday 20 July 2010

வழிமேல் விழி வைத்து.....

வழிமேல் விழி வைத்து.....
அறைக்குள் நுழைந்தோமோ...
இல்லையோ காலண்டர்களின்
தேதிகள் வெட்டுபட துவங்கும் ..
குளிரூட்டப்பட்ட அறையினில்
தூக்கமற்று நீளும் இரவுகள் ..
அலார அச்சுறத்தலோடு வேண்டா
வெறுப்புடன் விடியும் நாட்கள் ..
சுக துக்க நிகழ்வுகள் துவங்கி
முடிந்துவிடும் தொலைபேசி
அழைப்புகளினூடே ..
ஒற்றையாய் ஆராரோ பாடும்
அவள் அழுகையின் சப்தம்
இங்கே இவன் தூக்கத்தில்
வெடிக்கும் வார்த்தைகள்
வழியும் கண்ணீரை வந்தடைய
எதைசொல்லி ஆறுதல்படுத்த
ஆளாளுக்கு ஒருயோசனையுடன் .
தாராளமாய் ரணங்கள்....
இங்கே ஒவ்வருக்கும்......

Sunday 13 June 2010

தாராளமாய் ரணங்கள்....

வழிமேல் விழி வைத்து.....
அறைக்குள் நுழைந்தோமோ...
இல்லையோ காலண்டர்களின்
தேதிகள் வெட்டுபட துவங்கும் ..
குளிரூட்டப்பட்ட அறையினில்
தூக்கமற்று நீளும் இரவுகள் ..
அலார அச்சுறத்தலோடு வேண்டா
வெறுப்புடன் விடியும் நாட்கள் ..
சுக துக்க நிகழ்வுகள் துவங்கி
முடிந்துவிடும் தொலைபேசி
அழைப்புகளினூடே ..
ஒற்றையாய் ஆராரோ பாடும்
அவள் அழுகையின் சப்தம்
இங்கே இவன் தூக்கத்தில்
வெடிக்கும் வார்த்தைகள்
வழியும் கண்ணீரை வந்தடைய
எதைசொல்லி ஆறுதல்படுத்த
ஆளாளுக்கு ஒருயோசனையுடன் .
தாராளமாய் ரணங்கள்....
இங்கே ஒவ்வருக்கும்......

Friday 21 May 2010

முடியாத உரையாடலின் முடிவில்.......

முடியாத உரையாடலின் முடிவில்...
விரவிடும் மௌனத்தை போர்த்தியபடி
உறங்க போகிறேன்.....
மெத்தென பதியும் தலையணையில்
உறுத்தியபடி என்னை திரும்பி திரும்பி
படுக்க செய்கிறது என்னுடன் உறங்க வந்த
உரையாடலில் சில நெருடிய வார்த்தைகள்
உரையாடலின் சில வார்த்தைகள் அங்குமிங்கும்
உலாவி ஒளிர்ந்தபடி இருக்கின்றன
உறங்க மறுத்து...

Thursday 4 March 2010

வேரறுந்த வலி வேறென்ன வழி

அழகற்று போகுமோ
ஒற்றையாய் ரோஜா....?
தனியனாய் வாழும்சாபம்
வாங்கிதான் வந்தோமே...
கைநிறைய ரியாலும்,
கண்கள் நிறைய ஏக்கமும்,
திங்க சோறும்,
திணிக்கபட்ட புன்னகையுமாய்,
நீளுதே வாழ்கை .
வேரறுந்த வலி வேறென்ன வழி
வாழ்ந்துதான் ஆகணும்
நானே தேடி கொண்டது

Sunday 14 February 2010

நானும் ஒருவன்...!

நானும் ஒருவன்........
ஜனிக்கும் தருணங்களில்
அனைத்து உறவுகளிருந்தும்
அனாதையாக்கபட்டிருக்கின்றோம் ,
தனியனாய் வாழும்சாபம்
கைநிறைய ரியாலும்,
கண்கள் நிறைய ஏக்கமும்
அன்பெனவும் அரவணைப்பெனவும் அறியாது
ஏக்கத்துடன் மனம் வழியவிட்டு கொண்டிருக்கிறதென
வலிகொண்டு வாழும் அரேபிய அகதிகளில்
நானும் ஒருவன்...

Monday 4 January 2010

சந்தோஷ, சந்தேகங்களுடன்........

இதுதான் முதல்முறையா...? ...இல்லை
இதற்குமுன் வேறுநாடு போயிருக்கியா..?
பராவாயில்லை எல்லாம் பழகிபோகும் ...
கேம்ப்வாசிகளின் ஆறுதலோடு
இனிதே துவங்கியது கேம்ப்வாழ்க்கை...
சந்தோஷ, சந்தேகங்களுடன்
எனக்கும், என்னைபோலுள்ள
வளைகுடா வாலிபர்களுக்கும்......