பதிவுகள்

Tuesday 12 July 2016

நம் காலத்தின் சஞ்சய் காந்தி

 நரேந்திர மோடியை, நான் உட்பட, இந்திரா காந்தியுடன் பல அரசியல் விமர்சகர்கள் ஒப்பிட்டிருக்கிறோம். இந்திரா காந்திக்குப் பிறகு, அப்பதவிக்கு வந்தவர்களில் அதிக அதிகாரம் படைத்தவராகக் காட்சிதருவது மோடி மட்டுமே. ஐந்தாண்டுக் காலம் முழுதாகப் பிரதமராக இருந்த வாஜ்பாய், நரசிம்ம ராவ் கூட இந்த அளவுக்கு அதிகாரம் கொண்டிருக்கவில்லை. இந்த அதிகாரமும் செல்வாக்கும் உள்நாட்டில் கட்சி மீதும் அரசு மீதும் செலுத்தப்படுகிறது, வெளியில் நாட்டின் மீதும் உலகம் மீதும் செலுத்தப்படுகிறது.
இந்திராவைப் போலவே மோடியும் தனிமையானவர். அவரைப் போலவே தன்னுடைய கருத்துகளைத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறார். அவருடைய நம்பிக்கைக்குரியவரும் அவருக்குச் சமமானவராகக் கருதப்படுபவரும் அமித் ஷா மட்டுமே. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அமைச்சர் அமித் ஷாவிடம் 12 துறைகளைக் கொடுத்திருந்தார்!
2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பிரச்சாரத்தில் அமித் ஷாவுக்கு முக்கியப் பங்கு தர வலியுறுத்தினார். உத்தரப் பிரதேசத்தில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் ஆகிய இரண்டும் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 2014 ஜூலையில் பிரதமரான மோடியின் அறிவுறுத்தல் அல்லது கட்டளைப்படி அமித் ஷா கட்சியின் தேசியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
சஞ்சய் காந்தியும் அமித் ஷாவும்
அரசியல் ரீதியாக மோடி முழு நம்பிக்கை வைக்கும் ஒரே நபர் அமித் ஷா. 1975 முதல் 1980 வரையில் இந்திரா காந்தி முழுதாக நம்பிக்கை வைத்த ஒரே காங்கிரஸ்காரர் சஞ்சய் காந்தி. இந்திராவும் மோடியும் தங்களுடைய நம்பிக்கைக்குரியவராக, ஆலோசகராக, பொறுப்பாளியாக அவர்களைத் தேர்வுசெய்ததில் ஏதேனும் ஒற்றுமையைப் பார்க்கிறீர்களா?
ஒற்றுமை இருப்பதாகவே நான் கருதுகிறேன். இந்திராவின் மகன் சஞ்சய் என்பதைப் போல மோடிக்கும் ஷாவுக்கும் உறவு ஏதும் இல்லை. ஆனால், வேறு சில அபூர்வமான ஒற்றுமைகள் உள்ளன, அவை வரலாற்றாசிரியர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுபவை, பொதுமக்களுக்கோ கவலையை அளிப்பவை.
பிரதமராக நீண்ட நாள் பதவி வகிக்க இந்திரா ஆசைப் பட்டார். அதே சமயம், இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்து மாற்றிவிட வேண்டும், வரலாற்றில் தடம் பதிக்கச் செய்துவிட வேண்டும் என்றும் விரும்பினார். நரேந்திர மோடியும் அவ்வாறே அதிகாரத்தையும் புகழையும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்கும் மேலாக எதையோ சாதிக்க விரும்புகிறார் என்றே கருதுகிறேன். அவர் கூறும் வளமான, சக்திமிக்க இந்தியா என்பது இந்திராவோ, நேருவோ காண விரும்பியதைவிட நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கக் கூடும். தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதைவிட, மோடிக்கு வேறு எந்த நோக்கமும் இருக்காது என்று கூறுவது நாகரிகமற்ற பேச்சாகவே இருக்கும். ஆனால் அமித் ஷாவோ, சஞ்சய் காந்தியைப் போல அதிகாரம் செலுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்போலத் தெரிகிறார்.
எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை மட்டுமே சிந்திப்பவர் சஞ்சய் காந்தி. அது மட்டுமல்ல, அதை எந்த வகையிலாவது செய்துவிடும் இரக்கமற்ற மனம் கொண்டவர். இவ்விரண்டும் நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டன. அதற்குப் பிறகு, ஜனதா கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி, செல்வாக்குமிக்க சிலரைக் கட்சி மாற வைத்து ஆட்சியைக் கவிழ்க்க வைத்தார். காங்கிரஸ் கட்சி மீண்டும் அரசியல் அரங்கில் முக்கிய இடத்தைப் பிடிக்க உதவினார். 1977 தேர்தலுக்குப் பிறகு, துவண்டுபோன இந்திரா காந்தியைத் தேற்றி துணிச்சலை ஊட்டினார்.
சஞ்சய் வெற்றிகரமான அரசியல்வாதி
நன்கு படித்த, நாகரிகமுள்ள அரசியல் விமர்சகர்கள்கூட சஞ்சய் காந்தியை பிஞ்சிலேயே பழுத்தவர், மனம்போன போக்கில் செயல்பட்டவராகப் பார்த்தனர். ஆனால் உண்மையில், அவர் வெற்றிகரமான அரசியல்வாதி. இந்திரா மட்டும் மனசாட்சியின் குரலைக் கேட்டு, நெருக்கடிநிலையை முடிவுக்குக் கொண்டுவராமல் இருந்திருந்தால், சர்வாதிகார காலம் மேலும் நீண்டிருக்கும். காரணம் எதிர்க்கட்சிகள், பத்திரிகைகளின் வாய்கள் மூடப்பட்டிருந்தன. சஞ்சய் காந்தி நேரடியாக மேற்பார்வை செய்த 1980 மக்களவைப் பொதுத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்குத் திட்டவட்டமான வெற்றியைத் தந்தது.
ஒற்றைச் சிந்தனை கொண்டவர், இரக்கமற்ற செயல்பாட்டாளர் என்ற அடைமொழிகள் அமித் ஷாவுக்கும் சூட்டப்படுகின்றன. நீதியை அவமதித்தார், சட்டப்படியான ஆட்சி என்ற கொள்கையை குஜராத்தில் அலட்சியப்படுத்தியதில் சர்ச்சைக்குரிய பங்காற்றினார் அமித் ஷா. இது தொடர்பாக மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் ராணா அயூப் எழுதிய துணிச்சல் மிக்க நூலான ‘தி குஜராத் ஃபைல்ஸ்’ படிக்கலாம்.
குஜராத்திலிருந்து தேசிய அரங்குக்கு இடம்பெயர்ந்த பிறகு, அமித் ஷா செய்ததை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம். 2014 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள மக்களை அவர் மதரீதியாகத் திரளவைத்தார்.
வாக்குச்சீட்டின் மூலம் இந்துக்கள் பழிதீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். ஷாவின் மேற்பார்வையில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத், சாக்ஷி மகராஜ், சஞ்சீவ் பலியான் ஆகியோர் வெறுப்பைத் தூண்டும் வகையிலும் மதரீதியாக விரோதத்தை மூட்டும் வகையிலும் பேசுவது, பேட்டியளிப்பது, அறிக்கை வெளியிடுவது ஆகியவற்றை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அவற்றைக் கட்சித் தலைவர் (ஏன், பிரதமரே கூட) வேடிக்கை பார்க்கின்றனர்.
எப்படியாவது வெற்றி
இப்போது மீண்டும் உத்தரப் பிரதேசத்தையும் இந்தியாவையும் மதரீதியாகத் திரளவைப்பதில் முனைப்பாக இருக்கிறார் அமித் ஷா. ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சைக் கேட்டு, கைரானா நகரிலிருந்து ஏராளமான இந்துக்கள் வெளியேறிவிட்டார்கள் என்று பொதுக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார். அந்தக் கூற்று மிகைப்படுத்தப்பட்டது என்று ஒரு ஆங்கில நாளிதழ் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது. அந்த உறுப்பினரே தான் கூறியதைத் திரும்பப் பெற்றார்.
ஆனால், ஷா அப்படிச் செய்யவில்லை. அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தான் திரும்பப் பெற்றதையே வேறு வகையில் வலியுறுத்தும்படி நெருக்கப்பட்டார். கைரானாவிலும் சுற்றுவட்டாரத்திலும் வகுப்புவாதத் தீயை விசிறிவிடுவதற்காக உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் சங்கீத் சோம் அனுப்பிவைக்கப்பட்டார்.
மானுடவியல் ஆய்வாளர்களும் வரலாற்றாசிரியர்களும் பல்வேறு தருணங்களில் நிரூபித்திருப்பதைப் போல வகுப்புக் கலவரங்கள் பெரும்பாலும் வதந்தி காரணமாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலுமே பரவுகின்றன. பொறுப்புள்ள தலைவர் வதந்திகள் பரவாமல் தடுக்கும் செயலில் ஈடுபடுவார். அக்கறையுள்ள தலைவராக இருந்தால் 2013 முசாஃபர்பூர் கலவரத்துக்குப் பிறகு, வீடுகளிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உதவியிருப்பார்.
அமித் ஷாவுக்கு அத்தகைய அக்கறையோ பொறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை. உத்தரப் பிரதேச மாநில இந்துக்களுடைய மனங்களில் அச்சத்தையும் பீதியையும் விதைத்தால், அவர்கள் மதரீதியில் ஓரணியில் திரண்டு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதே அவருடைய இரக்கமற்ற, ஒற்றைச் சிந்தனையாக இருக்கிறது.
மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்த அவர் இரண்டு விதமான தோழமைகளை நம்பியிருக்கிறார். இதில் முதலாவது பிரிவினர், அவருடைய கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களுடைய அரசியல் கண்ணோட்டமும் ஷாவினுடையதைப் போன்றதே. சமூகப் பிணைப்புகள் அறுந்துபோனாலும்கூடச் சரி, தங்களுக்கு எப்படியாவது தேர்தலில் வெற்றி கிடைத்துவிட வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
மரியாதை, அச்ச உணர்வு
இன்னொரு தோழமைப் பிரிவினர், உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்தவர்கள். முஸ்லிம்கள் முன்பைவிடத் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று அஞ்ச வேண்டும். அப்படி அஞ்சி தங்களுடைய வாக்குகளை நமக்கே அளிக்க வேண்டும் என்று சமாஜவாதித் தலைவர்கள் விரும்புகின்றனர். இல்லையென்றால், தேர்தல் காலத்தில் அவர்கள் வேறு கட்சிகளுக்கு ஆதரவளித்துவிடக் கூடும் என்று நினைக்கின்றனர்.
தனது செயல்கள் மூலம் காங்கிரஸ்காரர்கள் தன் மீது அச்சப்படவும் மரியாதை செலுத்தவும் செய்தார் சஞ்சய் காந்தி. அமித் ஷாவும் அப்படியே கட்சிக்காரர்களிடம் அச்சத்தையும் மரியாதையையும் தன் மீது ஏற்படுத்தியிருக்கிறார். சில வேளைகளில் அச்சம் காரணமாகக்கூட அவருக்கு மரியாதை செலுத்திவிடுகின்றனர். பாஜக தலைவர் மீதான அச்சம் அவருடைய கட்சியைத் தாண்டி மற்றவர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகைகளை ஒடுக்கவும் அடக்கவும் சஞ்சய் காந்திக்கு அவருடைய அன்னை நெருக்கடிநிலையை அமல்படுத்த வேண்டியிருந்தது.
அமித் ஷாவுக்கோ தன்னுடைய அரசியல் செல்வாக்கால் நெருக்கடிநிலை அமலில் இல்லாதபோதுகூட அதைச் சாதிக்க முடிகிறது. அமித் ஷாவை விமர்சனம் செய்ததற்காக ஒரு பத்திரிகையாளரை மும்பை பத்திரிகை நிறுவனம் வேலையைவிட்டு நீக்கிவிட்டது. அந்தப் பத்திரிகையின் உரிமையாளர் பாஜக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இது சொல்லும் செய்தி என்ன? எச்சரிக்கை! ஏனைய பத்திரிகையாளர்களுக்கு எச்சரிக்கை!
என்ன நினைக்கிறார் மோடி?
சஞ்சய் காந்தி தன்னுடைய மகன் என்ற பாசத்தால், அவர் செய்த தவறுகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தார் இந்திரா காந்தி. மோடியும் அந்த வகையில் அமித் ஷாவை நடத்தலாம், நடத்தாமலும் போகலாம். ஆனால், அவருடைய அரசியல் வழிமுறைகளைக் கேள்வி கேட்பதே இல்லை. மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு பெருக அவர் செய்வதெல்லாம் அவசியம் என்று கருதுகிறாரா மோடி? அப்படியென்றால், நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தில் மதக் கலவரம் காரணமாக ஏற்படும் காயங்களும் தழும்புகளும் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறாரா? உத்தரப் பிரதேசத்தையோ - ஏன் நாட்டையோ, இந்த வழிமுறைகள் மூலம் தேர்தலில் கைப்பற்றி நாட்டை முன்னேற்றிவிட முடியுமா?
நான் இந்திரா காந்தியின் அபிமானி அல்ல, அதேபோல நரேந்திர மோடியின் அபிமானியும் அல்ல. நெருக்கடிநிலையை நேரில் பார்த்திருக்கிறேன். 2002-க்கு முன்பும் அதற்குப் பிறகும் குஜராத் மாநிலத்துக்குப் பல முறை சென்று வந்ததன் மூலம், கொடூரமான அந்த ஆண்டின் நிகழ்வுகள் எந்த அளவுக்கு மாநிலத்தைச் சேதப்படுத்தியிருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஒரு அரசியல் தலைவரின் பயணம் அவருடைய மொத்த சாதனைகள், வேதனைகள் கொண்டு அளக்கப்பட வேண்டும்.
நெருக்கடி நிலையை அமல்படுத்தினார் என்பதைத் தவிர, இந்திராவின் சாதனைகள் அநேகம். வங்கதேசத்தை பாகிஸ்தானின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வைத்தார். உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுத்தினார். வனம், சுற்றுச்சூழல் காப்புக்காகவே தனித் துறையை உருவாக்கினார். நரேந்திர மோடி தனது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் கலவரங்களைச் சந்தித்தார். பிறகு, மாநிலத்தின் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பதிலும் தொழில் முதலீட்டை ஈர்ப்பதிலும் அக்கறை செலுத்தினார். டெல்லியில் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக அந்தப் பதவி இழந்திருந்த மரியாதையைத் திரும்ப ஏற்படுத்தியிருக்கிறார்.
மன்மோகன் சிங் செல்வாக்கில்லாமல் இருந்தார் என்பதற்காக, நரேந்திர மோடி அதிகாரத்தைச் செலுத்தும் விதம் ஆர்ப்பாட்டமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கிறது என்றாலும், அதைப் புறக்கணித்துவிடப் பலர் தயாராக இருக்கின்றனர். சாதுவாக ஒருவர் இருந்தார் என்பதற்காக, அவருக்கு நேர் எதிராக இருப்பது சரிதான் என்று ஏற்றுக்கொண்டுவிட்டோமோ என்ற அச்சம் வரலாற்று மாணவன் என்ற வகையில் என்னுடைய மனத்தில் ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் முழு நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு நபர், அச்சத்தையும் சந்தேகத்தையும் பிளவையும் வெறுப்பையும் மூட்டி தேர்தலில் வெற்றிபெறப் பார்க்கிறவர் என்பது எனக்கு உண்மையிலேயே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பணம் கொடுத்துப் பதவி
ஒரு நல்ல முடிவுக்காக மோசமான வழிமுறையைக் கையாளக் கூடாது என்று காந்திஜி அடிக்கடி கூறுவார். இன்றைய அரசியல்வாதிகளோ ஆதாயத்தை மட்டும் தரவல்ல, லட்சியமற்ற வழிமுறைகளைக் கையாள்கின்றனர். மக்களின் நன்மைக்காக எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்று நினைக்கின்றனர். நேருவோ, படேலோ நினைத்துக்கூடப் பார்க்க விரும்பாத வழிமுறைகளை இந்திரா கையாண்டார், மோடி கையாள்கிறார். இதர கட்சிகளின் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது,
தங்களுடைய அமைச்சரவையில் உள்ளவர்களையே அலட்சியப்படுத்துவது, அதிகாரத்தில் இருக்கும்போது தான் தான் முக்கியமானவர் என்று ஆதிக்கம் செலுத்துவது போன்றவற்றை நேரு, படேல் போன்றவர்கள் செய்ய நினைக்க மாட்டார்கள். தேசிய நலனுக்காகவே அதிக அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம் என்று இவர்கள் நியாயப்படுத்தக் கூடும்.
இவர்களைத் தவிர, மூன்றாவது ரக அரசியல் தலைவர்களும் உண்டு. நேர்மையற்ற வழியில் செயல்பட்டுத் தீமையான செயல்களையே தங்களுடைய வாழ்நாளில் மேற்கொள்கிறவர்கள் அவர்கள். மாநில அளவிலான அரசியல்வாதிகள் குறுமதியாளர்களாகவும் கும்பல்களின் தலைவர்களாகவும் குற்றச் செயல்களில் கூசாமல் ஈடுபடுகிறவர்களாகவும் இருந்து, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களாவதுடன் அமைச்சர் பதவிகளையும் வகித்து சொந்த நலனை வளர்த்துக்கொள்கின்றனர். ஊழல் தொழிலதிபர்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இதற்காகவே பணம் கொடுத்துப் பெறுகின்றனர்.
எந்த வழியைக் கடைப்பிடித்தாவது அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அந்த அதிகாரத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்வது என்று தேசிய அளவில் செயல்பட்டவர் சஞ்சய் காந்தி, இப்போது செயல்படுகிறவர் அமித் ஷா. எனவேதான், அமித் ஷாவை நவீன காலத்துச் சாணக்கியர் என்று எவராவது புகழும்போது முதுகுத்தண்டு சில்லிடுகிறது. சஞ்சய் காந்தியின் மறைவுக்குப் பிறகு - அமித் ஷாவுக்கு முன்னால் - இதுவரை எந்த தேசியத் தலைவரும் இப்படிச் செயல்பட்டதே இல்லை என்பதே உண்மை.

தமிழில்: சாரி