பதிவுகள்

Wednesday 8 August 2012

எங்கெங்கு காணினும் ஊழலடா!

நாமக்கல் மாவட்டத்தில், துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகளுக்காக ஆதி திராவிடர் நலத்துறை வழங்கிய கல்வி உதவித்தொகை ரூ.81 லட்சத்தில், சுமார் ரூ.68 லட்சத்தை கையாடல் செய்துள்ளதாக 77 பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது ஏதோ நாமக்கல் மாவட்டத்தில், தொடக்கப்பள்ளிகளில் மட்டுமே நடந்ததாகக் கருதத் தேவையில்லை. தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி அனைத்திலும் இதுதான் நிலைமை!
இது ஏதோ இந்த ஆண்டு மட்டும்தான் இப்படியாகிவிட்டது என்றும் கருதிவிட வேண்டாம். இது தமிழகத்தில் பல ஆண்டுகளாய் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுதான்.
துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகக் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் மட்டும்தான் இந்தக் கையாடல் என்று நினைத்தால் அதுவும் தவறு. எல்லா உதவித்தொகைகளிலும் இதுபோல் கையாடல் நடக்கிறது.
கையாடல் செய்த பணத்தைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார்கள் என்று கருதுவது மடமை. இதில் கல்வித்துறை அலுவலர்கள் அதிகாரிகளுக்கும் உரிய பங்கு முறையாகப் போய்ச் சேருகிறது என்பது விஷயம் தெரிந்தவர்களுக்கு எல்லாம் புரியும். சில இடங்களில், பள்ளி அமைந்துள்ள கிராமம், புறநகர் பகுதிகளில் உள்ள ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கும் முறையாகக் கிஸ்தி செலுத்தப்பட்டு வருகிறது. நடக்கும் முறைகேடுகள் பற்றி யாருமே பேசத் தயாராக இல்லை, அவ்வளவே!
2012-13 நிதிநிலை அறிக்கைப்படி பள்ளிக் கல்விக்காக ரூ. 14,555 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது ஆசிரியர்களின் சம்பளம் நீங்கலாக சுமார் 40% தொகை மாணவர்களின் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது. இதில் மேலிடம் மட்டுமே ஊழல் செய்ய முடியும். ஆனால், கல்வி உதவித்தொகை, சீருடை வழங்குதல், காலணி வழங்குதல், பாடப்புத்தகங்கள் வழங்குதல், உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர்படை, விளையாட்டுப் போட்டிகள் இத்யாதி சில்லறை விவகாரங்களில்தான் பள்ளி அளவில் ஊழல் நடைபெறுகிறது. இந்த ஊழலுக்கு பச்சைக்கொடி காட்டும் கல்வித் துறை அதிகாரிகள்தான் இந்த ஊழலுக்கு அச்சாணி.
2011-12-ல் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.1,891 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2012-13-ல் 2,000 கோடி செலவிடவுள்ளனர். இதில் ரூ.700 கோடி மாநில அரசின் பங்குத்தொகை. மீதித்தொகை மத்திய அரசின் பங்கு. தரமான கல்வி, தொடக்கப்பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றுக்காக அளிக்கப்படும் இந்த நிதி, அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மூலம் செலவிடப்படுகிறது.
அனைவருக்கும் கல்வித் திட்டம் அமலுக்கு வந்தபிறகு, தலைமையாசிரியர் பதவிக்கு அடிதடி, பேரம் அமலுக்கு வந்தன. இதுபோக, இப்போது தொடர் கல்வித் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில்தான் அதிகமான ஊழல் நடந்துள்ளது என்பது கல்வித் துறையுடன் தொடர்பு கொண்ட அனைவருக்குமே தெரியும்.
இடைநில்லாமல் படிக்க பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே ரூ.1,500, ரூ.2,000 வைப்புநிதியாக அளிக்கப்படுகிறது. 21 லட்சம் மாணவர்களுக்கு ரூ.313 கோடியை அரசு ஒதுக்குகிறது. முதலில் "வைக்க வேண்டியதை வைக்காமல்', இவர்களுக்கு வைப்புநிதி கடிதங்கள் கிடைப்பதில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
கல்வி உதவித்தொகையைப் பள்ளி அளவில்தான் வழங்க முடியும். ஆனால், அந்த உதவித்தொகை இன்னும் வந்து சேரவில்லை என்று சொல்லி, இழுத்தடித்து, மறக்கச்செய்துவிடுவதுதான் வழக்கமான மோசடி முறை. பள்ளிக் கல்வி உதவித்தொகை சில நூறு ரூபாய்கள்தான். ஆகவே இந்த சிறுதொகையை ஒரு குடும்பத் தந்தை மறப்பது எளிது. இருப்பினும் 200 மாணவர் உள்ள பள்ளியில் குறைந்தது ரூ.50,000/-கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, பசுமை மன்றம், பள்ளி விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாணவர்களுக்கு வந்து சேருவது இல்லை. எத்தனை என்சிசி மாணவர்களுக்கு உடை, உணவுப்படி கிடைக்கிறது. பள்ளி விளையாட்டுப் பொருள்கள் தரமானவையா? போட்டிகளில் வழங்கப்படும் பரிசுப்பொருள் எத்தனை மதிப்புக்கு வழங்கப்பட வேண்டும்? வழங்கப்படும் பரிசுப்பொருளின் மதிப்பு என்ன? யாராவது கேள்வி கேட்டதுண்டா?
தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டவை, சரியாக கொடுக்கப்பட்டதா என மாணவர்களிடமும் பெற்றோரிடமும் விசாரித்தால், இந்த ஊழலின் விரிவையும் ஆழத்தையும் அரசு கண்டறிவது மிக எளிது.
எந்தக் கட்டுப்பாடும், எந்தக் கேள்வியும் இல்லாமல் காசு கொடுத்தால் மாணவர்கள் மட்டும்தான் கெட்டுப்போவார்கள் என்றில்லை, ஆசிரியர்களும் கெட்டுப்போவார்கள்.
இந்தியாவுக்கு சுதந்திரம் ஏன் கிடைத்தது என்பதற்கான காரணம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதல்லவா புரிகிறது! மக்கள் வரிப் பணத்தையும், அரசு கஜானாவையும் அவரவர் திறமைக்கும் வாய்ப்புக்கும் தகுந்தபடி கொள்ளை அடித்துக் கொழித்துக் கொள்வதற்காகத்தான் நமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்றும்; அவரவர்களுக்குத் தர வேண்டிய பங்கைத் தந்து விட்டால் தப்பித்துவிடலாம் என்றும்!
இருப்பினும் இத்தகைய அவநம்பிக்கையான சூழலிலும் ஊழலுக்கு எதிரான சில நல்ல நடவடிக்கைகள், புதிய நம்பிக்கைகளைத் தருகின்றன.