பதிவுகள்

Thursday 30 June 2011

பொருளாதாரப் பேதைகள்!



விண்ணை முட்டும் விலைவாசி காரணமாக நாட்டு மக்கள் தாங்கொணாத தவிப்புக்கு ஆளாகிவருகிறார்கள். ஆட்சியாளர்களோ சதவீதக் கணக்கைப் போட்டுக்கொண்டு ""ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிட்டது, வந்து கொண்டிருக்கிறது, வருவது உறுதி'' என்று கட்டியங்கூறிக் கொண்டே காலத்தைக் கடத்துகிறார்கள். விலைவாசி உயர்வுக்கு காரணம் கேட்டால் ""இது சர்வதேசச் சந்தையின் பாதிப்பு, எங்களுடைய சாமர்த்தியத்தால்தான் இது தீவிரமாக உங்களைத் தாக்கவில்லை'' என்று கூறுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு நடைபாவாடை விரிக்க எங்கே சந்தர்ப்பம் என்று அலைபாயும் நம்முடைய ஆட்சியாளர்கள், ""சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துவிட்டால் இந்த விலைவாசி குறைந்துவிடும்'' என்று புதிதாக ஓத ஆரம்பித்திருக்கிறார்கள். ""விலைவாசி ஒன்றும் அப்படி ஒரேயடியாக உயர்ந்துவிடவில்லை, நம் நாட்டு மக்கள் தாங்கும் அளவுக்குத்தான் இருக்கிறது, நம் நாட்டின் எந்தப் பகுதியிலும் பட்டினிச் சாவு நிகழவில்லை, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு மலிவு விலையிலோ இலவசமாகவோ கோதுமையும் அரிசியும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், நம்முடைய களஞ்சியங்களில் அடுக்க இடம் இல்லாமல் வெட்ட வெளியில் தானியங்களை மழைக்கும் வெயிலுக்கும் தீனியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றெல்லாம் இறுமாப்புடன் பதில் சொல்கிறார்கள். ஆனால் இந்தப் பணவீக்கம் என்ற பகாசுரன் பாமர மக்களின் வாழ்க்கையைச் சூறையாடி வருவதை ""கிரைசில்'' என்ற தர மதிப்பீட்டு அமைப்பின் சமீபத்திய ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது. கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் 5.8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது. ஏழைகள், நடுத்தர மக்களை இந்த விலை உயர்வு கடுமையாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது. சாப்பாட்டுச் செலவை மட்டுமே சமாளிக்க முடியாமல் குடும்பங்கள் அரை வயிறு, கால் வயிறு என்று சாப்பிடத் தொடங்கிவிட்டன. ஏழை, நடுத்தர மக்களுடைய வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது. சாப்பாட்டுச்செலவு அதிகமாகிவிட்டதால் மருத்துவச் செலவு, கல்விச் செலவு போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். நோய் முற்றி பாயில் விழுந்தால்தான் இனி சிகிச்சை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். 2008-09-ம் நிதியாண்டு முதல் 2010-11-ம் நிதியாண்டு வரை பணவீக்க விகிதம் 8% ஆக அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இது வெறும் 5% ஆகத்தான் இருந்தது. அரிசி, கோதுமை, பருப்பு, இதர தானியங்கள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வு மட்டும் 11.6% ஆக இந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. உணவுப் பொருள் அல்லாத பண்டங்களின் விலை உயர்வோ 5.7% ஆகத்தான் இருந்திருக்கிறது. இதில் இரட்டை ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதாவது சாமான்யர்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களுக்குத் தேவை குறைந்து அவற்றை வாங்குவோர் குறைந்ததால் அவற்றின் விலையை உயர்த்த முடியாமல் குறைத்துவிட்டனர். இதனால் அந்தத் துறையில் வேலை இழப்பும் ஆள் குறைப்பும் ஏற்பட்டிருக்கிறது. விலைவாசியைக் குறைக்க அரசு எடுத்த ஒரே நடவடிக்கை ரிசர்வ் வங்கி மூலம் வட்டி வீதத்தை கால், கால் (0.25) சதவீதமாக பத்து முறை உயர்த்தியதுதான். வீடு கட்டக் கடன் வாங்கியவர்களும் வாகனக்கடன் வாங்கியவர்களும் மேலும் தங்களுடைய பொருளாதாரச் சக்தியை இழந்ததுதான் மிச்சம். அதனால், வங்கிகளின் புத்தக மதிப்பு லாபம் பல மடங்கு கூடியது; எனவே ஆட்சியாளர்கள் ""தங்களுடைய திறமையால் வங்கிகள் லாபம் ஈட்டி வருவதாக'' தம்பட்டம் அடித்து வருகின்றனர். ""சர்வதேச பண்டச் சந்தையில் விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதால், அதிலும் குறிப்பாக கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் விலைவாசி குறையாது, உயர்ந்துகொண்டே போகும்'' என்று ஆரூடம் கூறுகிறது ரிசர்வ் வங்கியின் அறிக்கை. சமீபத்திய டீசல், சமையல் கேஸ், கெரசின் விலை உயர்வால் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கை ஜூலையிலேயே தாண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் தன் வருவாயில் வெறும் 14 சதவீதத்தைத்தான் தன்னுடைய செலவுகளுக்காக ஒதுக்கினார். இப்போது அந்தத் தேவைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டாலும்கூட 17% அளவுக்கு அவருக்குப் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலைமை இப்படியே போனால் நடுத்தர மக்களிடம் சேமிப்பே இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும்கூட இந்தியாவில் பொருளாதாரச் சக்கரம் சுழல்வதற்கு நடுத்தர மக்களின் சேமிப்புதான் அச்சாணியாக இருந்தது. இப்போது அந்த அச்சாணியும் முறியத் தொடங்கியிருக்கிறது. தாங்க முடியாத விலைவாசி உயர்வுதான் தீவிரவாதத்துக்கு அடிப்படைக் காரணமாக அமையும். சராசரி மனிதனின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு விலைவாசி உயரும்போது அது சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாறிவிடுகிறது. இதுகூடப் புரியாமல் ஆட்சி செய்த பிரெஞ்சு மன்னன் 16}ம் லூயியின் சரித்திரத்தை இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் படித்துத் தெரிந்து கொள்வது நல்லது. மக்களவை பொதுத் தேர்தலுக்குத்தான் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறதே என்று மெத்தனமாக இராமல் விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க முழு முனைப்புடன் அரசு செயல்பட வேண்டும். பொருளாதாரம் வளருவது இருக்கட்டும். முதலில் விலைவாசியைக் குறைப்பது பற்றிக் கவலைப்படுவோம். பொருளாதாரம் படித்தால் மட்டும் போதாது. மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

Tuesday 28 June 2011

சட்டத்தின் ஓட்டைகள்!


நமது நாட்டில் சட்டம் இயற்றுவதில் நாம் காட்டும் சுறுசுறுப்பையும் வேகத்தையும் அந்தச் சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்துவதில் காட்டுவதில்லை என்பதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உணவு என்று கடந்த ஐந்து ஆறு வருடங்களில் மெய்சிலிர்க்க வைக்கும் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இதனாலெல்லாம் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கையோ, பள்ளிக்குப் போகாத குழந்தைகளின் எண்ணிக்கையோ குறைந்திருக்கிறதா என்பது உலகறிந்த ரகசியம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இயற்றிய சட்டங்களிலேயே அதிகமான பயனளித்திருக்கும் சட்டம் ஒன்று இருக்குமானால் அது தகவல் பெறும் உரிமைச் சட்டம்தான். எந்தத் துறையிலிருந்தும், எந்தத் தகவலை வேண்டுமானாலும் பெறுவதற்கு உதவும் இந்தச் சட்டத்தின் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்கிற குறிக்கோளுடன் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. தகவல் ஆணையமும் சரி, தகவல் பெறும் உரிமைச் சட்டமும் சரி, ஓரளவுக்கு பயனளித்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியேகூட இந்தச் சட்டத்துக்குப் புறம்பானவராக இருக்க முடியாது என்று ஒரு சாதாரணக் குடிமகன் கோருமளவுக்கு, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டமாக இது அமைந்திருக்கிறது. அகில இந்திய அளவில் பல தகவல்களை இந்தச் சட்டத்தின் உதவியுடன் கோரிப் பெற முடிந்திருக்கிறது. அதன் விளைவாகப் பல முறைகேடுகளும், அரசில் உயர் பதவி வகிப்பவர்கள் தொடர்புடைய ஊழல்களும்கூட வெளி வந்திருக்கின்றன. யாரையும் தட்டிக் கேட்கவும், தவறு நடந்திருந்திருந்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டவும் இந்தச் சட்டம் ஊடகங்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்கிற நிலைமைதான் தொடர்கிறது. மாநிலத் தகவல் ஆணையத்தின் செயல்பாடு என்பது கையையும், காலையும் கட்டிப் போட்ட நிலையில்தான் தொடர்கிறதோ என்று தோன்றுகிறது. குறிப்பாக, தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்படுபவர்கள், அரசு நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் என்பதால், தங்களுடன் பணியாற்றிய சக அதிகாரிகளைக் காப்பாற்றுவதில் காட்டும் முனைப்பை, தகவல் கோரும் குடிமகனின் கேள்விக்குப் பதிலளிப்பதில் காட்டுவதாகத் தெரியவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சில தகவல்களை ஒருவர் கோருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, சம்பந்தப்பட்ட துறையில் உள்ள தகவல் அதிகாரி கடமைப்பட்டவர். அவர் தவறான தகவல்களை அளித்தாலோ, அரைகுறைத் தகவல்களை அளித்தாலோ அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு உண்டு. இது போன்ற பிரச்னைகளில், ஆணையம் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் வழி இருக்கிறது. இதுவரை அப்படி தகவல் ஆணையத்தால் அபராதம் விதிக்கப்பட்டு, அபராதம் கட்டிய அதிகாரிகள் எத்தனை பேர் என்கிற புள்ளிவிவரம் கிடைக்காது. காரணம், மிகச் சிலர் மட்டும்தான் தகவல் ஆணையத்தின் உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறார்கள். பெருவாரியான அதிகாரிகள், தகவல் ஆணையத்தின் ஆணைக்கு உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிவிடுகிறார்கள். சாதாரணமாகத் தடை உத்தரவு வாங்கினால் கூடப் பரவாயில்லை. தங்களது தடை உத்தரவு மனுவில் தகவல் பெற விண்ணப்பம் கொடுத்தவரையும், தகவல் ஆணையத்தையும் எதிர்தரப்பினராகச் சேர்த்து விடுகிறார்கள். நல்லெண்ணத்துடன் தகவல் பெற முயன்றவர் நீதிமன்றம், நோட்டீஸ் என்பதை எல்லாம் பார்த்து பயந்து, விட்டால் போதும் என்று ஒதுங்கி விடுகிறார். தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் விசாரித்தால், ஆணையமே ஒரு நீதித் துறை போன்ற அரசியல் சட்ட அமைப்பு என்பதால் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது என்று கூறித் தப்பித்துக் கொள்கிறது. இதை உயர்நீதிமன்றமே ஒரு வழக்கில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தகவல் ஆணையமும் தனது தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவை விலக்கத் தயாராகாமல், தகவல் கோரியவரும் சலித்துப் போய் வேண்டாம் விவகாரம் என்று ஒதுங்க, முறையாகத் தகவல் தராமல், அல்லது பொய்யான தகவலைத் தந்த அதிகாரி சாதுர்யமாகத் தப்பித்துக் கொள்கிறார். இதுவரை ஏறத்தாழ 50க்கும் அதிகமான தகவல் அதிகாரிகள் தவறான தகவல் தந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தும், உயர் நீதிமன்றத் தடை உத்தரவு பெற்று சட்டத்தின் ஓட்டை வழியாகத் தப்பி இருக்கின்றனர். தகவல் ஆணையத்தின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பிப்பதில்லை என்று நீதித்துறை முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால், தவறான தகவல் அளித்த அதிகாரிகளை இடைக்காலப் பணிநீக்கம் செய்ய அரசாவது முன்வர வேண்டும். இரண்டும் இல்லாத நிலையில், சட்டம் பிரேம் போட்டு சுவற்றில் மாட்டிய சட்டமாகத் தொங்குமே தவிரத் தனது கடமையைச் செய்யாது. சட்டம் போட்டாகிவிட்டது என்றாலே எல்லாம் ஆயிற்றா என்ன?

Monday 27 June 2011

சிறையில் மகனை நினைத்து கனிமொழி ஏக்கம்!


 
 
 
2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் 15x10 தனிமைச் அறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி தனது மகனை நினைத்து ஏக்கத்தில் இருப்பதாகவும், சிலசமயம் கதறி அழுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறையில் இருந்தாலும் கனிமொழி முன்பு புன்னகையுடன் காணப்பட்டதாகவும், அவரது ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததில் இருந்து அந்த புன்னகையைக் காணவில்லை என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போதெல்லாம் அவர் விரக்தி. சோகத்துடன் காணப்படுகிறார் என்றும் சில சமயம் கதறி அழுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கனிமொழி 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு மே 20-ம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் ஒருவாரம் நன்றாக இருந்தார். பின்னர் அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதும் மிகுந்த வருத்தம் அடைந்தார். சிறையில் எழுதுவது, புத்தகங்கள் படிப்பதைத் தவிர தொலைக்காட்சியையும் அவர் பார்க்கிறார். அவரது அறையில் 28 சானல்களுடன் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களை வருத்தமடையச் செய்தது எது என்று அவரிடம் கேட்டால் மகனைப் பிரிந்து இருப்பதுதான் என்று கூறுவார். எப்போதும் குறைவாகவே பேசும் அவர், அப்படியே பேசினாலும் தனது மகனைப் பற்றித்தான் பேசுவார் என்று சிறை வட்டாரங்கள் கூறின.

மத்திய அரசின் மோசடி !


ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், இந்த ஆட்சியைத் தூக்கி எறியலாம் என்கிற நம்பிக்கையை மக்களாட்சி முறை அளிப்பதால், மக்கள் மனதிற்குள் கொதித்தபடி விலைவாசி ஏற்றத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சும் விதமாக இப்போது சமையல் எரிவாயுவின் விலையையும், டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலையையும் உயர்த்தி ஒட்டுமொத்த நடுத்தர வர்க்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரோல் விலையை அதிகரித்த போதே, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்கிற கதையாய் விரைவிலேயே பெட்ரோலியப் பொருள்களின் அடுத்த கட்ட உயர்வை எதிர்பார்த்தோம். அப்போதே நமது தலையங்கத்தில் இந்த விலைவாசி உயர்வு என்பது தனியார் பெட்ரோலிய நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்கள் லாபம் சம்பாதித்துக் கொழிப்பதற்கும் மத்திய அரசால் நடத்தப்படும் நாடகம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். மே மாதம் பெட்ரோல் விலை உயர்வால் விற்பனை சற்றும் பாதிக்கப்படவில்லை என்கிற புள்ளிவிவரம் தந்த தைரியத்தில் இப்போது சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தி இருக்கிறார்கள். இதனாலும் விற்பனை நிச்சயமாகக் குறையாது என்று நம்பலாம். ஆனால், இந்த உயர்வுகளால் ஏற்படும் அதிகப்படி செலவை ஈடுகட்ட மாதச் சம்பளம் பெறும் சராசரி நடுத்தரவர்க்கத்தினர் அனுபவிக்க இருக்கும் கஷ்டங்களைப் பற்றி ஏ.சி. அறைகளில் இருந்தபடி திட்டமிடும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன தெரியும்? குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்தை உறுதி செய்துவிட்டு, இவர்கள் பெட்ரோல் கட்டணத்தை பத்து மடங்கு அதிகரித்தாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமானாலும் பஸ் வசதியோ, மெட்ரோ ரயில் வசதியோ இருந்தால் சொந்த வாகனம் ஏன் தேவைப்படப் போகிறது? இன்றைய நிலைமை அப்படியா இருக்கிறது? சொந்த வாகனம் இருப்பது என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டிருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதும் குழந்தைகளுக்குக் கைக்கடிகாரம் என்றிருந்தது போய் இப்போது இரு சக்கர வாகனம் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இன்றைய நடுத்தர வருவாய்ப் பிரிவினர் குறைந்தபட்சம் ஒரு 50சிசி வாகனமாவது வைத்திருந்தால்தான் அலுவலகம் சென்று வரவோ, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வரவோ முடிகிறது. இந்த வாகனங்களை வாங்கி அதற்கு மாதா மாதம் தவணை அடைப்பது போதாதென்று, இப்போது அதிகப்படியான பெட்ரோல் செலவும் என்று மனதிற்குள் அழுது கொண்டிருந்த நிலையில் சமையல் எரிவாயு எண்ணெய் விலையையும் கூட்டி, டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய உபயோகப் பொருள்களின் விலையையும் அதிகரித்து மத்திய அரசு தனது மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் பல விடை கிடைக்காத கேள்விகள் எழுகின்றன. கச்சா எண்ணெய் விலை என்பது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் ஒன்றாகத்தானே இருக்கும்? அப்படி இருக்கும்போது, அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.45க்கு விற்கப்படும்போது இந்தியாவில் மட்டும் ரூ.70க்கு விற்கப்படுவானேன்? அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்கின்றனவா? நமது நட்பு நாடுகள் என்று அரபு நாடுகளைக் கூறுகிறோமே, ஆனால், இந்த விஷயத்தில் நாம் வஞ்சிக்கப்படுகிறோமா? அது போகட்டும், தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் உலகச் சந்தை நிலவரத்தில் அவர்களே கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து அவர்களுக்குக் கட்டுப்படும் விலைக்கு விற்றுக் கொள்ளட்டுமே, எதற்காக நமது அரசு அவர்களுக்காகக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொடுக்க வேண்டும்? நமது எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கு உலக மார்க்கெட் விலையைத்தானே நாம் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும்? ஏன், குறைந்த விலைக்குக் கொடுக்கிறோம்? நாம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும், சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் தரும் விலையில் கணிசமான அளவு, ஏறத்தாழ 40%, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி, "செஸ்' எனப்படும் சிறப்புக் கட்டணம் என்று பெறப்படுகிறது. இப்போது மத்திய அரசு தாங்கள் எங்களுக்குக் கிடைக்கும் சுங்க வரி மற்றும் கலால் வரியிலிருந்து சற்று குறைத்துக் கொள்கிறோம், மாநில அரசுகள் தங்களது விற்பனை வரியைக் குறைத்துக் கொள்ளட்டும் என்கிறது. நன்றாக இருக்கிறது இந்த நியாயம்! பெட்ரோலிய நிறுவனங்கள் தாங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்கிற மத்திய அரசின் முடிவே ஒரு மிகப்பெரிய மோசடி. கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயரும், குறைந்தால் விழும் என்கிற ஆசை காட்டி மக்களை ஏமாற்றி விட்டு, தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் லாபம் அடைய மத்திய அரசு செய்யும் சதிதான் இந்த விலை நிர்ணய முறை. முதலில், இப்போதைய விலை நிர்ணய முறைக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும். நமது பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், திட்டக் கமிஷன் உறுப்பினர்களுக்கும் இப்போதெல்லாம் ஒரே ஒரு கவலைதான். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இரண்டு இலக்கத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் அது. விலைவாசி உயர்வு 9.13% இருப்பதைப் பற்றியோ, அது மேலும் அதிகரிக்குமே என்றோ அவர்கள் கவலைப்படவில்லை. இவர்கள் என்ன பொருளாதாரம் படித்துத் தேர்ந்திருக்கிறார்களோ தெரியவில்லை. பொருளாதார வளர்ச்சி உயர்வது கிடக்கட்டும். விலைவாசி குறைவதற்கு வழிகாணுங்கள். மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தலைப்பட்டால், சட்டம் ஒழுங்குப் பிரச்னையை அரசு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்படலாம!

Saturday 25 June 2011

இதயங்களின் தூரமென்னவோ இமைகளின் இடைவெளிதான்...!


அன்பிற்கினியவரே!
இரவு நிசப்தத்தில் _ என்
"உச்சரிப்பு" உங்களுக்கு
மட்டும் கேட்கிறதா...?
நானோ.....
ராக்கோழியின் சுருதியில்
முகாரி முடைகிறேன்
நேருக்கு நேர்
முகம் காண ஏங்கி
எதிர் எதிர் திசையில்
வலம் வந்த
நம் வீட்டு வாசற்படி
இன்று என் தனித்த
காலடி ஓசை கேட்டு
தகவல் விசாரிக்கின்றது?
நகப் பூச்சுகளின் நடுவில்
என் மருதாணி விரல்
நினைவிற்கு வருவது
உனக்கு கடினம் தான்
ஆயினும்.......
கலைந்த முடியை
நீ
கோதும் போதெல்லாம்
சிக்கெடுத்த என்
சின்ன விரல்களை
சிந்திக்காதிருக்க முடியாது
என்ன செய்கிறாய் அங்கே?
நம் காதல் வரிகளை
கணிணிகளுக்கிடையே
காயப்படுத்திவிடாதே...
மைல் கற்களால்
நாம் பிரிந்திருந்தாலும்
இதயங்களின் தூரமென்னவோ
இமைகளின் இடைவெளிதான்
இருந்தாலும்....
காத்திருத்தலின் கனத்தை
சுமந்து சுமந்து
மடிக்கல்லுக்கே
மடி வலிக்கிறது..
பிரிந்து தவித்தது போதும்...
நீ .... இனியாயினும்
சின்ன சிரிப்பாய்
சிறகை விரித்து என்னருகில்
வர தடையேதும் இருக்கிறதோ!
அழுதாலும் ... சிரித்தாலும்
அன்பே நீதானடா ...
என் சுவாசம்........

Tuesday 21 June 2011

கனிமொழி என் மகளே இல்லை - கருணாநிதி !

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! இது

இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.

ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.

முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..? ‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடாது...என்று நீதிமன்றத்துக்கும் போனார்...பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்.. பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..


.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்..... எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ...,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய!

Sunday 12 June 2011

தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது !

கலவரம் வேண்டாம். களிஉவகை கொள்வோம்!! - "நிடாகத்"... வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு..



சவூதி அரேபியாவின் நாளிதழில் வந்துள்ள செய்தி இந்நாட்டில் மட்டுமல்ல பெரும்பான்மையான நடுத்தர வர்க்க  வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு "இடி" விழுந்ததுப் போல இருந்தது. ஆம். பணி / தொழில் நிமித்தம் சவூதியினில் தங்கியுள்ள அனைத்து அயல் நாட்டினருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் சவூதியில் வசிக்க நீட்டிப்பு தர இயலாது என்ற அமைச்சரின் பேட்டி வெளியானது. நம் மக்களுக்கு அவர்களை அறியாமலேயே, தாம் பீதியடைந்தோ அல்லது மற்றவர்களை பீதியூட்டியோ மகிழ்வதில் அலாதி ஆனந்தம் தான்!  தேவையற்ற குழப்பங்களுடனும், மன உளைச்சல்களுடனும் மின் அஞ்சல் வாயிலாக பரபரத்த நெஞ்சங்களை அமைதிப்படுத்தவே இப்பதிவு.
Ref:http://arabnews.com/saudiarabia/article442386.ece
      http://arabnews.com/saudiarabia/article442386.ece

(சவூதி) உள்நாட்டு மக்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தினை நீக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முனைகின்றது. முன்னர், அரசு நிறுவங்களில் "சவூதிமயமாக்கல்" திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட சதவீத மக்கள் அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாக இருக்கவேண்டும் என சட்டம் இயற்றி செயற்படுத்தியது. அதோடின்றி, சில துறைகளையும், பதவிகளையும் கட்டாயமாக சவூதியினரே இருக்கவேண்டுமெனவும் வற்புறுத்தியது. இதனை தனியார் துறையினிலும் பின்பற்றக் கோரி நீண்ட காலமாக அறிவுறுத்தியது. அவர்களும் முன்னரெல்லாம் பெயரளவில், உரிமையாளரின் உறவினர்களோ அல்லது உயர்பதவியிலுள்ளவர்களின் பரிந்துரையினிலோ மண்ணின் மைந்தர்கள் சிலரை பணிநியமனம் செய்துக் கொள்வர். அப் பணியாளர்களில் பலர் சம்பளத்தேதியன்று மட்டும் வந்து கையெழுத்திட்டு, பணக் கவரைப் பெற்றுக்கொண்டு காணமல் போகின்ற வரலாறும் உண்டு என எனக்கு முன்பிலிருந்தே இருப்பவர்கள் அடிக்கடி நினைவுக் கூர்வதும் உண்டு..

ஆனால் இப்பொழுதெல்லாம் நிலவரம் அப்படியில்லை. கடுமையான, உடல் மற்றும் மூளை உழைப்பிற்கும் குறிப்பிடும் படியான தொகையினில் சவூதியினர் இருக்கின்றனர் என்பதே ஆரோக்கியமான உண்மை! இருப்பினும் இவர்களின் சதவிகிதம் குறைவு என  உள்நாட்டு தொழில் முனைவோர்களே கருதுவதாலும், உள்ளூர் மக்கள் என்பதால் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதியமும் சலுகைகளும் அதிகம் என்பதாலும், உற்பத்தி மற்றும் சேவைகளின் தரத்தினில் குறை நேர்ந்திடக் கூடாது என்பதினாலும் தனியார் துறையினர் பெருமளவில் அயல் நாட்டவரினையே நாடுகின்றனர். குறிப்பாக, இந்தியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், சிறீலங்கா.... எனக் குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு வேலையின் தன்மைக்கேற்ப முக்கியத்துவம் தருகின்றனர். (ஒரே பணியினை ஒரு இந்தியரையும், மேற்கத்தியரையும் அமர்த்தினால் நம்மை விட கிட்டதட்ட 3 லிருந்து 6 மடங்கு வரை அதிகமான ஊதியம் அவர்களுக்கு வழங்க வேண்டிவரும். ஏனெனில் அவர்களின் நாணயத்தின் மதிப்பு, சர்வதேசச் சந்தையினில் நம்மை விட அதிகம்.)
  
மலிவான தொகையில் தரமான சேவை கிடைக்கும் போது இங்குள்ளவர்கள் உள்நாட்டு மனித வளத்தைவிட அயல்நாட்டினரையே விரும்புகின்றனர். இங்கு சுமார் 8 1/2 மில்லியன் (85 இலட்சம்) மக்கள் அயல்நாட்டிலிருந்து பணிபுரிபவர்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் எழுகின்றது. இதனைப் போக்கவே "நிடாகத்" எனும் புதிய திட்டத்தினை உருவாக்கி  விரைவில் செயல் வடிவம் கொடுக்க முனைகின்றனர்.
தன் நாட்டில் தனக்கு வேலை இல்லாது மற்ற நாட்டவ்ர்களுக்கு மட்டும் இடமளித்தால் எந்தவொரு குடிமகனும் கொந்தளிக்கத் தானே செய்வர். அதனை தவிர்க்கவும், வருடத்திற்கு 100 பில்லியன் ரியால்கள் (தோராயமாக 1 ரியால் = 12 ரூபாய்) தன் நாட்டைவிட்டு வெளியேறுவதை இயன்ற அளவிற்க்கு தடுக்கவும் "நிடாகத்" எனும் இத்திட்டத்தினை பயன்படுத்த விழைகின்றனர்.

என்ன தான் கூறுகின்றது இந்த "நிடாகத்"?

ஒரு நிறுவனத்தின் மனிதவளங்களில் எத்தனை உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர் என்பதினைக் கணக்கில் கொண்டு மூன்று வகையாக "சிகப்பு, மஞ்சள் & பச்சை"  என அந்நிறுவனங்களை பிரிக்கின்றனர்..

'சிகப்பு' என்பது அரசு கூறும் நெறிமுறைகளை கண்டுக்கொள்ளாத சவூதி மயமாக்கலில் பங்கேற்காத நிறுவனங்கள்.

'மஞ்சள்' என்பது அரசின் நெறிமுறைகளை நிறைவுச் செய்யாது பகுதி அளவு பின்பற்றும் நிறுவனங்கள்.

'பச்சை' என்பது அரசின் நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுபவர்கள்.

சவூதில் இப்போது நம்மவர்கள் (அவர்களின் பார்வையின் படி நாம் மட்டுமல்ல... அரேபியர்கள் அல்லாத அனைவருமே அயல்நாட்டவர்கள்) பணிபுரியும் நிறுவனங்களின் வண்ணத்தினைப் பொறுத்தே சவூதியில் தொழிலாளிகளின் 'இகாமா' என்கின்ற "சவூதி வசிப்பிட சான்றுரிமை"யினை 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை மீள் பதிவு செய்ய வரும்போது, அவர்கள் 6 ஆண்டுகளை கடந்தவராக இருப்பின், அதனை அங்கீகரிக்கவா அல்லது வேண்டாமா என முடிவு செய்வர்.  நம்மவர்கள் பணிபுரியும் நிறுவனம் "சிகப்பு" அந்தஸ்து பெற்றிருப்பின், மேற்கொண்டு சவூதியில்  வசிக்க முடியாது. "மஞ்சள்"நிற அந்தஸ்து பெற்றிருப்பின், "நிடாகத்"தின் விதிகளை நிறைவுச் செய்யும் வரை "சவூதி வசிப்பிடச் சான்றுரிமை"யினை அயலகத் தொழிலாளர்களுக்கு வழங்காது.  "பச்சை" நிற அந்தஸ்து கொண்டவ்ர்களுக்கு எவ்வித சிக்கலுமில்லை. 

இது தவிர, அரசின் பரிந்துரைகளுக்கும் அதிகமாக தன் நாட்டு மக்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு "பிளாட்டினம்" அந்தஸ்தினை உருவாக்கி பல சலுகைகளை வழங்குகின்றது.  இத் திட்டம் குறித்து எழும் ஐயங்களுக்கு விளக்கமளிக்க தொழிலாளர்  அமைச்சகம் தயாராக உள்ளது.

'இகாமா' மீள்பதிவு இல்லையெனில் இங்கு சவூதியில் மேற்கொண்டு வசிக்க இயலாது என்பது மட்டுமல்ல மீறி நாம் இருப்பின் சிறைச்சாலை உறுதி தான். 'இகாமா'வினை மையமாகக் கொண்டு தான் வங்கி கணக்கு, மருத்துவம், காப்பீடு  என அனைத்தையும் செயற்படுத்த இயலும்.

இந்த "நிடாகத்" திட்டம், "சிகப்பு மற்றும் மஞ்சள்" நிற அந்தஸ்து கொண்ட நிறுவனங்களில் பணிபுரிபவ்ர்களுக்கே சிக்கல். இருப்பினும் இதில் ஒரு மகிழ்வுக்குரிய செய்தி என்னவெனில், "சிகப்பு அல்லது மஞ்சள்"  நிற அந்தஸ்து நிறுவனங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் "பச்சை" நிற அந்தஸ்துக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புக் கிட்டினால், முன்னாள் நிறுவனத்தின் "பணிக்கான தடையில்லாச் சான்றிதழ்" NOC (No Object Certificate) இன்றியே நேரடியாக அந்நிறுவனத்தில்  சேர இயலும்.  இது வளைகுடாவிலேயே பணி புரிய விழைபவர்களுக்கு ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம். 


ஒன்றை நாம் நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். என்றிருந்தாலும் நாம் வளைகுடாவிற்கு அந்நியர்கள்! எதுவும் நடக்கலாம்!! எப்போதும் நடக்கலாம்!! "சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா?" எனும் உண்மையினை உணர்ந்து மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டால் இது போன்ற அறிவிப்புகள் நம் மனதினைப் பாதிக்க வாய்ப்பில்லை.  மனதளவில் ஊர்ப்பக்கம் செல்ல நினைத்தாலும், பல்வேறு பிணைப்புகளிலும், நிர்ப்பந்தங்களிலும் சிக்குண்டுள்ள நம்மை, இயற்கையே இந்நாட்டின் விதிமுறைகள் மாற்றம் வாயிலாக தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது என மகிழ்வோம்! கலவரம் வேண்டாம். களிஉவகை கொள்வோம்!! பக்ரைனிலும், ஏமனிலும் புரட்சி வெடித்திருப்பதால், சவூதியில் எழுந்துள்ள இப் பொறி விரைவில் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் பரவும் வாய்ப்பு மிகவும் அதிகம்!

குறிப்பு: இவர்கள் நினைப்பது போல் அந்நிய நாட்டினரின் மூளை மற்றும் உடல் உழைப்பினை அவ்வளவு எளிதினில் புறக்கணிக்க இயலாது. அவ்வாறு முனைந்திடின் தற்போதுள்ள இயல்பு வாழ்க்கை தடம்புரண்டுவிடும் எனும் உண்மை இவர்களுக்கும் தெரியும்!