பதிவுகள்

Saturday 30 July 2011

அந்த நாள் முதல் இந்த நாள் வரை -திமுக தலைவர்


பொய் வழக்கு போடுவதில் ஜெயலலிதாவை மிஞ்சுவதற்கு யாருமே இல்லை. காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு தேவையற்ற ஆர்வத்தைக் காட்டுவது மற்றுமின்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் எந்த அளவிற்கும் செல்லத் தயாராக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

எம்ஜிஆர் நினைவக காப்பாளர் முத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன், மதுரை இளம்பெண் செரீனா மீது கஞ்சா வழக்கு ஆகியவற்றை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 2001ல் ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்திலிலேயே நள்ளிரவில் படுக்கை அறைக்குள் நுழைந்து காவல் துறையினரால் தான் கைது செய்யப்பட்டதையும், அந்த வழக்கில் குற்றப்பத்திரிகையாவது தாக்கல் செய்ய முடிந்ததா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த வழக்கில் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மு.க.அழகிரி ஆகியோர் கைது செய்யப்பட்டது பழிவாங்கும் போக்கின் பிரதிபலிப்புகள் என்று கலைஞர் கூறியுள்ளார்.

1995ல் டான்சி ஊழல் வழக்கில், ஜெயலலிதா மீது வழக்கு தொடர அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்தார் என்பதற்காக அவரை பழிவாங்கும் நோக்கில் சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சட்டப்பேரவையிலேயே குற்றம் சாட்டியது கடைந்து எடுத்த பொய் என்று அனைவரும் உணர்ந்துகொள்ளவில்லையா என்றும் கலைஞர் கூறியுள்ளார்.


ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனுக்கு 100 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்துவைத்து, பின்னர் ஹெராயின் வழக்கு போட்ட பழைய கதையை எவரும் மறந்து விடவில்லை.

எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போட்டு கொடுமைப்படுத்துவது ஜெயலலிதாவிடம் ஆழமாக ஊன்றிவிட்ட பழக்கம். அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோதும், நிலஅபகரிப்பு என்ற கற்பனையான காரணத்தைக் காட்டி எதிர்க்கட்சியினரை மட்டும் பழிவாங்கி, குற்றம் சுமத்திடும் பாதகச் செயலை தொடங்கியிருக்கிறார்.


இந்த வகையில்தான் அமைச்சர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மதுரை மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோர் மீது பொய் வழக்கு போட்டு இழத்தடிக்கின்றனர்.


திமுகவை பழிவாங்குவதற்கு தவறான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா என்றும், பழிவாங்குவதற்காக பொய் வழக்குகள் புனைவதிலே ஜெயலலிதா கைதேர்ந்தவர், பொய் வழக்குகளில் பழகிப்போனவர், அதில் ஒருவகை சுகம் காண்பவர் என்று திமுக தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளா
ர். 

Saturday 23 July 2011

வெட்கமில்லாப் பேரணி

கனடா நாட்டிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர் மத்தியில், தனிநபர் பாதுகாப்பு குறித்து பேசியபோது டோரண்டோ நகரத்தின் காவல்துறை அதிகாரி மிச்சேல் சாங்குயினிட் சொன்ன கருத்து, உலகம் முழுவதும் பெண்களைப் போர்க்கொடி தூக்க வைத்திருக்கிறது. அவர் வெளியிட்ட கருத்து இதுதான்: "இதையெல்லாம் நான் பேசக்கூடாதுதான். இருந்தாலும் சொல்கிறேன். பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நடத்தைகெட்ட பெண்போல உடை அணியக்கூடாது'.   இது இந்தியாவில் எல்லா வீடுகளிலும் அப்பா அம்மா சொல்வதுதான். இதற்கெல்லாம் கோபப்பட்டு தெருவில் இறங்கிப் போராடுவார்களா என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக உலகத்தின் பல நாடுகளில் ஊர்ஊராக "ஸ்லட் வாக்' என்ற பெயரில் பெண்கள் தத்தம் விருப்பம்போல உடைகளை அணிந்தும், அணியாமலும் நடந்து உலகத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றனர். அந்தக் காவல்துறை அதிகாரி வெளியிட்ட கருத்து ஒரு ஆணாதிக்கவாதியின் கருத்து என்பது அவர்களது வாதம்.   ""நாங்கள் எங்கள் விருப்பம்போல உடையணிந்து கொள்ளும் தனிநபர் உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. அவரவர் உணர்வுகளை ஆண்கள் கட்டுப்படுத்திக்கொள்வதுதான் நாகரிகமே தவிர, நாங்கள் அதற்காக இப்படித்தான் உடையணிய வேண்டும் என்றோ அவர்களது உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் உடை அணிகிறோம் என்றோ விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது'' என்பதுதான் அவர்கள் முன்வைக்கும் வாதம்.மேலைநாடுகளில் நடப்பது இருக்கட்டும். இந்தியாவிலும் இந்த "ஸ்லட் வாக்', ஜூலை 17-ம் தேதி போபால் நகரில் நடந்தது. இந்தப் போராட்டத்துக்கு வரவேற்பும் பாராட்டும் தெரிவித்து "ஃபேஸ்புக்'கில் பதிவு செய்தவர்கள் 5,000 பேர் என்றால், ஊர்வலத்துக்கு வந்தவர்கள் 50 பேருக்கும் குறைவு. இதில் பாதிப் பேர் இளைஞர்கள். ஒரு சிறிய வித்தியாசம். மேலைநாடுகளில் நடந்ததுபோல அல்லாமல், போபாலில் பெண்கள் ஜீன்ஸýம், டி-ஷர்ட்டும் அணிந்திருந்தனர்.    அடுத்து தில்லியில் ஜூலை 31-ம் தேதியும், மும்பையில் செப்டம்பர் மாதத்திலும் இந்த "ஸ்லட் வாக்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலும் இப்படியொரு பேரணி நடந்தாலும் நடக்கலாம். (இந்தியாவில் ஊர்வலத்துக்கு வெட்கமில்லாப் பேரணி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்).   இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் மாநிலம் மத்தியப் பிரதேசம் என்பதால் இந்த ஊர்வலத்தை இந்தியாவில் முதலில் போபாலில் தொடங்கப்பட்டது என்று கூறும் அமைப்பாளர் உமாங் சபர்வால், "இந்த ஊர்வலத்தில் இந்தியப் பண்பாட்டுக்கு எதிராக, உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் ஆடைக் குறைப்பு செய்யாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்' என்று கூறியிருக்கிறார். அட, ஏறக்குறைய இதையேதானே அந்த டோரண்டோ நகர காவல்துறை அதிகாரியும் கூறினார்.   இந்தியாவில் ஆடைக் குறைப்பு பண்பாட்டுக்கு எதிரானது என்றால் மேலைநாடுகளில் சொந்தப் பாதுகாப்புக்கே எதிரானது இப்படிப்பட்ட ஆடைக்குறைப்பு. மிக அதிகமான அளவு பாலியல் பலாத்காரம் சர்வசாதாரணமாக மேலைநாடுகளில் நடந்தேறி வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரம் என்கின்ற பெயரில் இளைஞர்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் இயங்கி வருவதால் ஆண் பெண் இருபாலாரும் சர்வசாதாரணமாக மது அருந்தும் நாகரிகமும் நிலவில் உள்ளதால் அங்கே பாலியல் பலாத்காரங்களுக்கான வாய்ப்பு மிக மிக அதிகம். இந்தியாவின் நிலை முற்றிலும் வேறானது.   பெண்களுக்குத்தான் விபச்சாரி, விதவை என்ற சொல் இருக்கிறது, ஆண்களுக்கு இல்லை என்கிற வாதமும், "பெண்கள் ஒழுங்காக உடுத்தவில்லை என்றால் பிரச்னைகளைத் தேடிக்கொள்வார்கள்' என்று சொல்வது, ஒரு சமூகத்தில் நடைபெறும் ஒழுங்கீனத்தை நியாயப்படுத்த பெண் மீது போடப்படும் பழி என்றும் பெண்ணியவாதிகள் சொல்லும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.   ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், சொந்த வாழ்வில் ஒழுக்கமில்லாத பெண் என்பது தெரியவந்ததால், அந்த வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்துவிட்டது. பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கும், அவர் ஒழுக்கமற்ற பெண் என்பதையும் முடிச்சுப்போடும் தீர்ப்பை ஆணாதிக்கத் தீர்ப்பு என்று அவர்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை.   கடந்த வாரம், தில்லி போலீஸ் துறையின் புலனாய்வுப் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்ட பெண்ணின் பணியாணை ரத்து செய்யப்பட்டது. ஏனென்றால், அவரது பழைய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் "ஃபேஸ்புக்' மூலம் பரவி பிரச்னையானது என்பதுதான். அவர் மீது கோபம் கொண்டு அந்தரங்கக் காட்சிகளை இணையதளத்தில் கசியவிட்டார் தன் முன்னாள் காதலன் என்ற வாதம் ஏற்கப்படவில்லை. வேலை பறிபோனதுதான் மிச்சம். ஆணாதிக்க உலகில் பெண் எப்போதும் பாதிக்கப்பட்டவளாகவே இருப்பதா என்கிற கோபத்தில் நியாயமிருக்கிறது.   "ஸ்லட் வாக்' போன்ற போராட்டங்கள் இந்திய மண்ணுக்கே உரித்தான பிரச்னைகளிலிருந்து கிளம்பினால், அந்தப் போராட்டங்களில் மண்வாசம் இருக்குமென்பது மட்டுமல்ல, அதற்கு நிச்சயம் ஆதரவும் கிடைக்கும். "ஸ்லட் வாக்' பற்றி அறிந்திருக்கும் இன்றையத் தமிழக இளம்பெண்களில் எத்தனை பேருக்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மாராப்பு அணிய உரிமையுண்டு என்று போராடிய ""தோள்சீலைப் போராட்ட'' வரலாறு தெரியும்?   ஆணாதிக்கம் வடிவமைக்கும் அரைகுறை ஆடைகளை இன்றைய திரைப்படங்களில் கதாநாயகிகளை அணியச்செய்து பிறகு அவை சந்தையில் பிரபலமாக்கப்படுகின்றன. ஆண்களின் திணிப்பு எது என்பதைத் தெரிந்து, தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பெண்களின் உரிமை மறுபேச்சுக்கு இடமின்றி பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் பெண்ணுரிமை என்கின்ற பெயரில் அரைகுறை ஆடை அசிங்கங்கள் அரங்கேற்றப்படுவது பெண்மைக்கே இழுக்கு என்பதை பெண்ணாதிக்கவாதிகள் உணர வேண்டும்

Tuesday 19 July 2011

ஏற்பது இகழ்ச்சி அல்ல!

சமச்சீர் கல்வியை இந்தக் கல்வியாண்டு முதலாகவே அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே உயர் நீதிமன்றம் இதைத்தான் சொன்னது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, ஒரு நிபுணர் குழுவை அமைக்க ஆலோசனை வழங்கி, உயர் நீதிமன்றத்திலேயே அந்தக் குழுவின் பரிந்துரைகளைத் தாக்கல் செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததன் பின்னணியில்தான் மீண்டும் இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக இருந்தால் செய்யலாம்தான். ஆனால், அதனால் என்ன பயன் கிடைத்துவிடும் என்பதை மறுபரிசீலனை செய்தாக வேண்டிய மிகமுக்கியமான தருணத்தில் இருக்கிறது தமிழக அரசு.  தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது என்பதை ஏன் தமிழக அரசு உணர்ந்துகொள்ளவில்லை என்பதும், நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு எதிரானதாக ஏன் கருதுகிறது என்பதும் விளங்காத புதிர்.  சமச்சீர் கல்வி கூடாது என்பது தமிழக அரசின் நோக்கமல்ல. சமச்சீர் கல்வித் திட்டத்தில் சில திருத்தங்கள் தேவை என்பதுதான் தமிழக அரசின் விருப்பம். சில பாடங்கள் அடுத்த பாடத்துடன் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும், சில பாடங்கள் தரமானதாக இல்லை என்பதும், ஆகவே பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்பதும் தமிழக அரசின் நியாயமான வாதம். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பாடத்திட்டத்தில் சில பகுதிகளை நீக்குவதும், சேர்ப்பதும் தமிழக அரசின் கல்வித்துறையைப் பொறுத்த விவகாரம் என்று நீதிமன்றம் தெளிவாகவே சொல்லிவிட்டது.  தமிழக அரசின் அடிப்படை நோக்கத்தில் நீதிமன்றம் குறுக்கீடோ தடையோ செய்யவில்லை. நீதிமன்றம் சொல்லும் ஒரே விஷயம், இந்தக் கல்வியாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதுதான். அந்த ஒரு விஷயம்தான் இப்போது தமிழக அரசைச் சங்கடப்படுத்துவதாக இருக்கிறது.  சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதும், தமிழக அரசு எந்தப் பாடங்கள் எல்லாம் திணிப்பு என்று கருதுகிறதோ அவற்றையெல்லாம் நீக்கி, தரமானதாக மாற்றுவதும் தமிழக அரசுக்கு மிகமிகச் சுலபம். இந்தப் பிரச்னையில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை "எதிர்காலம் பாதிக்காமல்' என்ற தலைப்பில் 23.6.2011 அன்று நாம் எழுதிய தலையங்கத்தில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறோம்.  நிச்சயமாக கடந்த அரசால் பரிந்துரைக்கப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்பதையும், திமுக ஆட்சியாளர்கள் சிலவற்றை வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள் என்பதையும் பாடநூல்களில் காண முடிகிறது. ஒரு குழந்தைக்கான பாடப்புத்தகத்தில், சூரியன் உதிப்பது கிழக்கு என்று படம் போடுவதில் தவறில்லை. அதை உதயசூரியன் சின்னத்தைப்போல போடுவது ஆட்சியாளர்களின் குறுகிய மனநிலையைத்தானே காட்டுகிறது. மின்காந்த விசையைச் சித்திரமாக வரையும்போது அது உதயசூரியனின் கதிர்கள்போல விரிய வேண்டிய தேவை இல்லைதான். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தரப்படும் பள்ளிக்கூடப் பாடப்புத்தகம் என்ன கரைவேட்டியா? ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் எழுத்துகளைக் கருப்பு சிவப்பு வண்ணங்களில் பிரசுரித்திருக்கிறார்களே என்று கேட்கலாம். இவை தப்புதான். இதையெல்லாம் நீக்கிவிட்டு முறையாகப் பாடநூல்களை அச்சிடுவதும், பாடங்களை முறைப்படுத்துவதும் மிகவும் அவசியம்தான். அதை நீதிமன்றமும் அங்கீகரிக்கும்போது, ஏன் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தாமல் தள்ளிப்போட வேண்டும்?  இன்று இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வழக்குத் தொடுக்கும் சமூக ஆர்வலர்களும் முன்னாள் ஆசிரியர்களும், கல்வியாளர்களும் முந்தைய அரசு இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்கும்போதே, கல்வியாளர்களுக்கு ஒரு மாதிரிப் புத்தகத்தை அச்சிட்டுக் காட்டி, ஒருமித்த கருத்துக் கிடைத்த பிறகே அச்சிடுவதைத் தொடர வேண்டும் என்று அன்றைய திமுக அரசைக் கேட்டிருந்தால் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தால், இன்று பாடப்புத்தகத்தில் உள்ள தேவையில்லாத சில படங்கள், பகுதிகள் ஆகியவற்றுக்காக இன்று தமிழகப் பள்ளிக் கல்வியே முடங்கிப் போகும் சூழல் ஏற்பட்டிருக்காது. அவர்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை? அவர்கள் ஏன் கருணாநிதியைக் குறை சொல்லாமல் என்னை மட்டுமே குறை சொல்கிறார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டால் அந்தக் கேள்விக்கான நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால், அதற்காக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவைப்பது, கல்விச்சூழலை ஏளனப்படுத்துவதோடு, மாணவர்களின் மனநிலையிலும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஆகவே தமிழக அரசு மேல்முறையீடு செய்வதை விடுத்து, தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு, புதிய பகுதிகளை அடுத்த அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர் சேர்த்து, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதுதான் முறையானது.  சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பொறுத்தவரை நமது கருத்தில் மாற்றமே இல்லை. அகில இந்தியத் தரத்திலான, சிறந்த தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தரத்திலான ஒரே கல்வித்திட்டம்தான் தமிழகத்தில் இருக்க வேண்டும். சமச்சீர் கல்வி என்ற பெயரில் தரம் குறைந்த கல்வித் திட்டமும் ஏற்புடையதல்ல. அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளில் ஒரு கல்வி, தனியார் பள்ளிகளில் வேறொரு பாடத்திட்டம் என்பதும் ஏற்புடையதல்ல.  ஒரு சிக்கலைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதுதான் திறமை. ""சொத்துகள் முழுவதும் தனது அடிமைக்கே சொந்தம், என் உடைமைகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் பெறுவதற்கு என் மகன் உரிமை படைத்தவர்'' என்று ஒரு தந்தை உயில் எழுதியபோது, அவரது மகன் கோபம் கொள்ளவில்லை, "என் அப்பாவின் அடிமை எனக்கும் அடிமையாக வேண்டும்' என்றானாம்.  சமச்சீர் கல்வியைத் தரமானதாக, தவறுகள் இல்லாததாக மாற்றுங்கள். ஆனால், இந்த ஆண்டே அமல்படுத்துங்கள். பள்ளிகளில் பாடம் எதுவும் நடத்தப்படாமல் மாணவ, மாணவியர் வெட்டிப் பொழுது போக்குகிறார்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் குமுறுகிறார்கள். அரசின்மீது வெறுப்பு ஏற்படாவிட்டாலும், பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றிய சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது நல்லதற்கல்ல.  பிச்சைக்கு மட்டுமே ஏற்பது இகழ்ச்சி, தீர்ப்புக்கு அல்ல

Monday 11 July 2011

கூட்டுக்களவாணிகள்!


கறுப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் தனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது என்று அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களிடம் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், ஆளாளுக்கு ஒவ்வொரு தொகையைச் சொல்கிறார்கள், இந்தத் தொகை அவர்களுக்கு எந்தக் கணக்கீடு மூலம் கிடைத்ததோ என்கிற வியப்பையும் தெரிவித்தார். அதாவது நாங்கள் நீதிமன்றத்துக்கும்கூட எந்தப் பட்டியலையும் தர மறுத்துவரும்போது, இவர்கள் மட்டும் எப்படி இதையெல்லாம் சொல்கிறார்கள் என்ற கருத்தாகவும் இருக்கலாம் அல்லது எல்லா கறுப்புப் பணமும் இந்தியாவுக்கு வந்துகொண்டே இருக்கும்போது, ஏன் இப்படிப் புரியாமல் பேசுகிறார்கள் என்கிற கருத்தாகவும் இது இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், கறுப்புப் பணத்தை இந்தியாவில் கொண்டுவந்து கொட்டுவதற்காகவே மோரீஷஸ் என்கிற நாடு இருக்கிறது. அந்த நாட்டுடன் இந்திய அரசு செய்துகொண்ட இருமுறை வரிபோடுவதைத் தவிர்க்கும் ஒப்பந்தம் (டி.டிடி.ஏ.ஏ), பல ஆண்டுகளாகத் திருத்தப்படாமல் இருக்கிறது. இந்தியாவுக்கு வந்து சேரும் அன்னிய நேரடி முதலீடுகளில் 42 விழுக்காடு மற்றும் அன்னிய நிறுவனங்கள் இந்தியப் பங்குகளில் செய்யும் 40 விழுக்காடு முதலீடு மோரீஷஸ் தீவு மூலம்தான் வந்துகொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் உதவியுடன் "மணி லாண்டரிங்' என்று பரவலாகக் கூறப்படும் பணச்சலவை, அதாவது கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சிகள் வெகுசுலபமாக நடைபெற்று வருகிறது என்பது உலகறிந்த உண்மை. பல்வேறு பொருளாதார நிபுணர்கள் இதுபற்றிய விமர்சனங்களை எழுப்பிய பிறகு, இதற்கான மறுபேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால், 2008-ம் ஆண்டு இந்தப் பேச்சுவார்த்தை தொடராமல் நின்றுபோனதற்கான காரணம் என்ன, யார் என்பது புரியாத புதிர். இப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மோரீஷஸ் தீவில் சிபிஐ நடத்தியிருக்கும் விசாரணையில், 2007-க்குப் பிறகுதான், அதாவது அலைக்கற்றை ஒதுக்கீடு தீவிரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான், இந்த ஒதுக்கீட்டால் பயனடைந்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பணத்தை மோரீஷஸ் நாட்டில் உள்ள சில புதிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. இந்தப் பணத்தை அவர்கள் முதலீடு செய்ததன் அல்லது பங்குகளை விட்டுக் கொடுத்ததன் காரணம் என்ன என்பதுதான் இந்த ஊழலின் ஊற்றுக்கண். தாராளமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்த 1991-க்கு முன்புவரை அரசியல்வாதிகள் பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளிக்கும்போது, ஒரு தொகையை கமிஷனாகப் பெற்றுவிடுவார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி என்று சொன்னாலும் அல்லது நிலக்கரி கொள்முதல் பெட்ரோலியக் கொள்முதல், போபர்ஸ் போன்ற ஆயுதக்கொள்முதல் ஆகியவற்றில் ஈடுபடும்போதும் அதற்கான கமிஷன் வெளிநாட்டு வங்கிகளிலேயே அரசியல்வாதிகள் சொல்லும் கணக்கில் போடப்படும். இந்த நிலைமை 2000-க்குப் பிறகு மாறத் தொடங்கியது. எந்த நிறுவனம் தொடங்கப்பட்டாலும் அதில் அமைச்சர்கள் தங்களுக்குச் சொந்தமான நபர்களின் பெயரில் இயங்கும் நிறுவனங்களையும் பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தொடங்கியது. இதில் தங்களது உறவுக்கார நிறுவனங்களால் கணக்குக் காட்டமுடியாத அளவுக்குத் தொகை பெரியதாக இருந்தால், மோரீஷஸ், சிங்கப்பூர், சைப்ரஸ் போன்று, இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளில் குட்டியாக ஒரு போலி நிறுவனத்தைப் பெயரளவில் தொடங்கி அதில் முதலீடாகப் பணத்தைப் போடச் செய்வது அல்லது அந்தநாட்டில் உள்ள நிறுவனத்தில் பங்கு வைத்திருந்தால் அதை இந்திய நிறுவனத்துக்கு (அரசியல்வாதியின் பினாமி நிறுவனம்) விற்றுவிடச் செய்வது ஆகிய தகிடுதத்தங்களில் ஈடுபடும் போக்கு தலையெடுக்கத் தொடங்கியது. இப்போது மோரீஷஸில் ஐந்து நிறுவனங்களின் முதலீடு விவகாரங்களில் சிபிஐ கவனம் செலுத்தி வருகிறது. பிளாக் லயன் லிட், கேபிடல் குளோபல் லிட், டெக்கான்ஸ் ஏசியன் இன்ப்ராஸ்ட்ரக்சர், எய்டுடெல் ஹோல்டிங், இன்டிடெல் ஹோல்டிங் ஆகிய ஐந்து நிறுவனங்களும் ருயாஸ் ஆர் எஸ்ஸார் குரூப் நிறுவனத்துக்குச் சொந்தமானவை அல்ல என்றும், கெய்த்தான் குடும்பத்துக்குச் சொந்தமானது என்றும் தெரியவந்துள்ளது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் 9.9 விழுக்காடு பங்குகளை வாங்கிய டெல்பி இன்வெஸ்ட்மென்ட், மோரீஷஸ் தீவில் உள்ள மாவி இன்வெஸ்ட்மென்ட் ஃபன்டு என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது என்றும் தெரியவந்துள்ளது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ரூ. 1.07 கோடி பங்குகள் டெல்பி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துக்கு 2007-ல் விற்றது ஏன் என்பதை விசாரிக்கிறது சிபிஐ. எபிசிடி போல, ஆல்பா பீட்டா காமா டெல்டா போல டெல்பி இன்வெஸ்ட்மென்ட் ஏதோ பினாமி நிறுவனமா என்கிற ரீதியில் விசாரணைகள் விரியும். இத்தனை குளறுபடிக்கும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள ஓட்டைகள் காரணம் என்று தெரிந்திருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏன் வேடிக்கை பார்த்தது? இந்த ஒப்பந்தத்தில் சில முக்கிய திருத்தங்கள் தேவையாக இருக்கிறது என்று கடந்த ஜூன் இறுதியில்கூட நிதியமைச்சர் பிரணாப் சொல்லியிருக்கிறார். அத்தனை கறுப்புப் பணமும் இந்திய முதலீடாக வந்து சேரும்வரை ஏன் காத்திருந்தார்கள்? அண்டை நாடுகளுடனான உறவு என்பது நமது பாதுகாப்புக்காக இருக்க வேண்டும். சரித்திர ரீதியிலான பிணைப்பின் காரணமாகவோ, இன ஒற்றுமை காரணமாகவோ இருக்கக்கூடும். பொருளாதார ரீதியிலான பரஸ்பர நன்மையின் அடிப்படையிலும் இருக்கலாம். இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், இடைத்தரகர்கள் போன்றவர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கி முதலீடு செய்வதற்காக ஒரு அண்டை நாட்டுடன் நல்லுறவு வைத்துக்கொண்டிருக்கும் விசித்திரத்தை இப்போதுதான் பார்க்கிறோம். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது இருக்கட்டும். முதலில், கறுப்புப் பணம் சலவை செய்யப்பட்டு வெள்ளைப் பணமாக இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய உதவும் ஓட்டைகளையாவது அடைக்கக்கூடாதா?

Saturday 9 July 2011

ஜனநாயக எழுச்சியா? மேற்கந்திய சதியா?

உலகெங்கிலும் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை நிமிடத்திற்கு நிமிடம் துல்லியமாக கொண்டுவரும் ஊடகங்கள் நிறைந்த இன்றைய உலகிலும் நாம் சிந்தையை எட்டாத பல உண்மைகள் மறைக்கப்படும்போது அது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட செயலா என்பது புரியாமல் தவிக்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு உண்மை இன்றைய தேடலில் கிடைத்தது.

பிச்சைக்காரர்களே இல்லாதது அந்த நாடு.

இங்கு முழுமையான ஒரு ரொட்டியின் விலை 0.15 (அமெரிக்க) செண்ட் மட்டுமே - இந்திய நாணய மதிப்பில் 68 பைசா.

இல்லம் இல்லாத குடும்பமோ, தனி மனிதரோ ஒருவரும் இல்லை.

வங்கிகளில் கடன் பெற்றால் அதற்கு வட்டி இல்லை. கடனை திரும்பச் செலுத்த குறுகிய கால வரையறையும் இல்லை.

இந்நாட்டினர் திருமணம் செய்துகொண்டால் அரசு அளிக்கும் பரிசு 50,000 டாலர்கள் + வாழ வீடு.

எந்த தொழில் கல்வி படிக்கின்றனரோ அதற்குரிய ஊதியம் மாணவர்களுக்கு அளிக்கப்படும்.

வேலை கிடைக்கவில்லையா, வேலை கிடைக்கும் வரை மாதா மாதம் ஊதியம் அளிக்கப்படும்.

அயல் நாடுகளுக்குச் சென்று படிக்க வேண்டியது அவசியமா? உங்களு 2,500 யூரோ செலவிற்கும், வாழ்விடம் + கார் வாங்கிக் கொள்ளவும் பணமளிக்கப்படும்.

இந்த நாட்டில்தான் கார்கள் தயாரிப்பு விலைக்கே உங்களுக்கு விற்கப்படும். வரி, கிரி என்று ஏதுமில்லை.

இந்த நாடு உலக நிதி அமைப்புகள் எதனிடமிருந்தும் கடன் பெற்றிருக்கவில்லை. செலுத்த வேண்டிய கடன் என்று ஒரு பைசாவும் இல்லை.

ஆனால் உலகின் வளர்ந்த பல நாடுகளின் வங்கிகளில் பல நூறு பில்லியன்களில் பணத்தைப் போட்டு வைத்துள்ளது.

தரமான கல்வி எல்லோருக்கும் இலவசம், மருத்துவ வசதியும் இலவசம்.

வியப்பாக உள்ளதா? இந்த நாட்டின் பொருளாதார புள்ளி விவரங்களையெல்லாம் (அதிகாரப்பூர்வமானவை) எடுத்து அலசினால் தலை சுற்றுகிறது. தங்கம் இருப்பு 144 டன்கள். ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருவாய் 45 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் = 100 கோடி) வருவாய் மீதான செலவு 38 பில்லியன் டாலர்கள் மட்டுமே. உபரி பட்ஜெட் வைத்துள்ள உலகின் ஒரே நாடு.

மக்கள் தொகை மிகவும் குறைவு. வெறும் 65 இலட்சம்தான். அயல் நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் நாடு. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என்று அறியப்படாதது, ஆனால் மக்களின் தனி நபர் சராசரி ஆண்டு வருவாய் 13,800 டாலர்கள்! உலக வறுமைக் கோட்டுப் பட்டியலில் இந்நாடு 102ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 82வது இடத்தில் உள்ளது. அதாவது பணக்கார நாடான அமெரிக்கா, இந்நாட்டோடு ஒப்பிடுகையில் வறுமையில் வாடுவோர் அதிகம் உள்ள நாடு. இந்த வறுமைக் கோட்டுப் பட்டியலில் இந்தியா 52வது இடத்தில் ‘முன்னணி’யில் உள்ளது! பக்கத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தான்.

தெரிந்துகொள்வோம்... இந்த நாட்டின் பெயர் லிபியா!

சுதந்திரம் (இண்டிபென்டண்ட்) என்ற சொல்லிற்கு சுயச் சார்பு என்ற பொருளானால் அது 100 விழுக்காடு பெற்றுள்ள கடன் சுமையற்ற, தன் காலில் நிலையாக, இன்று நேற்றல்ல, 40 ஆண்டுகளாக காயமற்று, நொண்டாமல் நலமாக இருந்து வந்துள்ளது லிபியா!


இதன் அதிபராக இருந்துவரும் கர்னல் முவாம்மர் கடாஃபி பதவியை விட்டு இறங்கவேண்டும் என்று கோரி அந்நாட்டில் நடைபெற்றுவரும் ‘ஜனநாயக எழுச்சி’தான் செய்தியாக இதுநாள் வரை வந்துள்ளது. ஆனால் அந்நாட்டின் உள்நாட்டு நிலை இதுதான் என்பது இப்போதுதான் ஊடகங்களில் வரத் தொடங்கியுள்ளது!

உலகின் எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடு அல்ல லிபியா. அது 18வது இடத்தில் உள்ளது, உலகின் மொத்த கச்சா உற்பத்தியில் 2% மட்டுமே லிபியாவின் பங்கு. அது நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 1.8 மில்லியன் பீப்பாய் கச்சாவை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தது. ஆனால் மற்ற நாட்டு கச்சாவை விட லிபியாவின் கச்சா தரமானது என்பதால் ஐரோப்பிய சந்தையில் அதற்கு வரவேற்பும் அதிகம், விலையும் அதிகம்.

எனவே கச்சா ஏற்றுமதியின் மூலம் அதற்கு கிடைக்கும் வருவாயை அது மிகத் தாராளமாக தன் மக்களுக்கு வாரியிறைத்துள்ளது. இதன் நிரூப்பிக்கக் கூடியதாக இருக்கிறது ஐ.நா.வின் புள்ளி விவரங்கள். ஆப்ரிக்க நாடுகளிலேயே லிபியாதான் மனித வள மேம்பாட்டு குறியீட்டில் முதல் நிலையில் உள்ளது. சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள். லிபியாவில் அளிக்கப்படும் கல்வியும், மருத்துவ வசதிகளும் மிகத் தரமானவை.

தனது நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கச்சா உற்பத்தியை அதிகப்படுத்துவது (நாளுக்கு 3 மில்லியன் பீப்பாயாக உற்பத்தியை அதிகரிப்பது) உட்பட பல முன்னேற்றத் திட்டங்களுக்காக எகிப்து, டுனிசியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் திறன் பணியாளர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பு அளித்துள்ளது. உலகின் பெரு நிறுவனங்கள் பலவற்றிற்கு திட்டங்களை முழுமையாகக் கையாளும் சட்ட ரீதியான சுதந்திரத்தை தந்துள்ளது.


லிபியா எனும் நாடு பற்றி மேற்கூறப்பட்ட விவரங்கள் யாவும் சுதந்திரமான பன்னாட்டு ஆய்வுகளின் புள்ளி விவரங்கள் என்பதை கருத்தில்கொள்க.

கர்னல் கடாஃபி அந்நாட்டின் அதிபராக பல பத்தாண்டுகளாக நீடிக்கிறார் என்பதைத் தவிர, அங்கு அரச ஒடுக்குமுறை இருந்ததாக கடந்த மார்ச் மாதம் வரை செய்திகள் கூட ஏதுமில்லை. பிறகு திடீரென ‘ஜனநாயக எழுச்சி’ வெடித்ததன் பின்னணி?
http://tamil.webdunia.com/img/cm/arrow_06.gif
தங்களுடைய எந்தக் கட்டுப்பாட்டிற்கும் உட்படாத நாடாக லிபியா நீடிக்கிறதே என்கிற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட நேச நாட்டு அமைப்பிற்கு (நேட்டோ) இருந்த கோவம், மற்ற பல அரேபிய நாடுகளில் உருவான உண்மையான ஜனநாயக எழுச்சியை காரணமாகக் காட்டி ‘ஐந்தாம் படை’களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த ‘ஜனநாயக எழுச்சி’ என்கின்றனர்.

அமைதியின் உறைவிடமாக இருந்தாலும், அந்த நாடு தனக்கு வசதியான நாடாக இல்லாவிட்டால், அங்கு அரசியல் எழுச்சியை ஏற்படுத்தி வசதியான மாற்று அரசை ஏற்படுத்துவதுதானே உலகின் வலிமையான ஜனநாயக நாட்டின் பணி! அதைத்தான் லிபியாவில் நேட்டோக்கள் செய்கின்றன.

நேட்டோ அமைப்பு நாடுகள் கூறுவதுபோல் அங்கு மனித உரிமை மீறல்கள் இருந்ததா? “தனக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதில் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டாலும், லிபியாவில் மனித உரிமை நிலை ஒளிமயமாக உள்ளதென்பதை ஐ.நா. மனித உரிமை அலுவலர் ஒப்புக்கொள்கிறார். கல்வியை மேம்படுத்துவதிலும், மனித உரிமைக்கு அரசமைப்பு ரீதியாக முன்னுரிமை அளிக்கிறது லிபியா” என்று ஐ.நா.மனித உரிமை ஆணைய அறிக்கை கூறியுள்ளது.

இன்றைய உலகில் எந்த ஒரு நாட்டு அரசும் தனக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை ஜனநாயக வழியிலோ அல்லது மென்மையான முறையிலோ நடத்துவதில்லை என்பதை இந்தியாவில் இருந்து பிரான்ஸ் வரை தெளிவாகவே பார்க்க முடிகிறது. பிறகு லிபியாவிற்கு மட்டும் என்ன வேறு அளவுகோல்?

லிபியாவிற்கு எதிரான நேட்டோவின் இந்த ‘படையெடுப்பு’ ஒரு முன் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்பதை அமெரிக்காவின் ‘நேஷனர் ஜோர்ன’லில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று எட்மண்ட் எல் ஆண்ட்ரூஸ், கிளிப்ஃபோர்ட் மார்க்ஸ் ஆகியோர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இருந்து புரிந்துகொள்ளலாம். “உலகின் ஒட்டுமொத்த கச்சா உற்பத்தியில் லிபியாவின் பங்கு 2% மட்டுமே. லிபியா ஒரு தொடர்ந்த உள்நாட்டுக் குழப்பத்தில் (Prolonged Chaos) மூழ்கினாலும், அந்த உற்பத்தி இழப்பை செளதி அரேபியாவின் கூடுதல் உற்பத்தித் திறன் மூலம் ஈடுகட்டிவிடலாம்” என்கின்றனர். அதுமட்டுமல்ல, மற்றொரு கட்டுரையையும் கவனிக்க வேண்டும்.

“லிபியாவின் மைய வங்கி (நமது ஆர்பிஐ போன்றது) 100 விழுக்காடு அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை இதுவரை எந்த அரசியல் பண்டிதரும் குறிப்பிடவில்லை. இப்போது அந்நாட்டு மைய வங்கி தனது நாட்டிற்கென தனித்த நாணயத்தை (லிபிய தினார்) உருவாக்கியுள்ளது. தனது பொருளாதார தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யவல்ல ஒரு வளமிக்க, இறையாண்மையுடைய நாடாக லிபியா உள்ளது என்பதை சிலர் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். இதுதான் உலக வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கி அமைப்புகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது. அவர்கள் லிபியாவின் மைய வங்கியின் வழியாகவே, அதுவும் லிபியாவின் நாணயத்தின் வாயிலாகவே வாணிகம் செய்ய வேண்டும். அதன் (லிபியா மைய வங்கி மீது) எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இதனால்தான் ஒபாமாவின் உரையில் லிபிய மைய வங்கியை பின்வாங்கச் செய்யும் திட்டம் சேர்க்கப்படவில்லை. என்றாலும், தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப செயல்படும் நாடுகளில் (subservient countries) ஒன்றாக லிபியாவை கொண்டு வர வேண்டும் என்பது அவர்களின் (ஒபாமா, சர்கோஜி, கேமரூன்) உலகளாவிய திட்டப் பட்டியலில் உள்ளது” என்று பேட்ரிக் ஹெம்மிங்சன் என்பவர் ‘மார்கட் ஒராகிள்’ எனும் இதழில் மார்ச் 28ஆம் தேதி எழுதியுள்ளார்.

இன்றைக்கு லிபியாவின் மீது தாக்குதல் நடத்திவரும் நேட்டோ நாடுகள், தங்கள் நாட்டு வங்கிகளில் லிபியா நாடு போட்டு வைத்துள்ள பல நூறு பில்லியன் டாலர்கள் கொண்ட கணக்குகளை முடக்கியுள்ளன. இதனால் லிபியாவில் நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகத் திகழ்ந்த கச்சா உற்பத்தி 75% சரிந்து வெறும் 75,000 பேரல்கள் அளவிற்கு குறைந்துள்ளது.


லிபிய அதிபர் கர்னல் கடாஃபிக்கு எதிராக போராடும் ‘ஜனநாயகவாதி’களுக்கு மாதச் செலவாக 100 மில்லியன் டாலர்களை (அவர்கள் ஒரு பில்லியன் கேட்கின்றனர்) வாரி வழங்குவதுமின்றி, அவர்களைக் கொண்டு பென்காசி எனும் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரில் (இப்போது அந்நகரம் போராட்டக்காரர்களின்- அதாவது நேச நாட்டு அமைப்பின் ஐந்தாம் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது) புதிய வங்கி ஒன்றைத் தொடங்கி நாட்டின் லிபியாவின் பொருளாதாரத்தை தங்களுக்கு சாதகமாக வளைக்க முற்பட்டுள்ளார்கள்.

இதுதான் லிபியாவிற்கு எதிரான நேட்டோவின் மனிதாபிமான நடவடிக்கை! ஆனால் உலகம் லிபியாவிலும் ஜனநாயக எழுச்சி ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கொண்டிருக்கிறது!

Tuesday 5 July 2011

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

  தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 15 முதல் செயல்படத் தொடங்கிவிட்டன. சுமார் 20 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆர். லில்லி நடத்திய திடீர் ஆய்வின்போது தெரியவந்த அதிர்ச்சியான தகவல்: பள்ளிகளின் குடிநீர்த் தொட்டிகள் ஒன்றுகூட கழுவப்படவில்லை, பள்ளியின் கழிப்பறைகள் தண்ணீரே இல்லாமல் மோசமான நிலையில் காணப்பட்டன.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இதுதான் நிலைமை என்பதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

பள்ளி இறுதித் தேர்வு முடிந்தவுடன் விடுமுறையில் செல்லும் ஆசிரியர்கள், பள்ளி திறக்கப்பட்ட பிறகுதான் வருகிறார்கள். மிகச் சில நாள்களில் பள்ளிக்கு வர நேர்ந்தாலும் தலைமையாசிரியர் அறை மட்டுமே சுத்தப்படுத்தப்படுகிறது. பல பள்ளிகளுக்கு இரவுக் காவலர் பெயரளவுக்கு இருக்கிறார்கள். சில இடங்களில் அதற்கும்கூட ஆள் கிடையாது. விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் மது அருந்திப் பொழுதுபோக்கும் இடமாகக்கூடப் பல அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன என்பது விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு பள்ளி திறக்கப்படும்போது, வகுப்பறைகள் மட்டும் பெருக்கி தூய்மை செய்யப்படுகின்றன. ஆனால், குடிநீர்த் தொட்டிகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கழிப்பறைகளைப் பற்றியும் யாரும் கவலைப்படுவதில்லை.

தேசத் தந்தை காந்தி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்திருப்பார். அவரே ஒரு துடைப்பம், வாளியுடன் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கியிருப்பார். அவருடன் அவரது தொண்டர்களும், மாணவர்களும்கூட இறங்கியிருப்பர். ஆனால், இப்போது மாணவர்களை இதில் ஈடுபடுத்தினால் எதிர்ப்புகள் கிளம்பும். குழந்தைகளைப் படிக்க அனுப்புகிறோமா அல்லது கழிவறையைக் கழுவ அனுப்புகிறோமா என்று பெற்றோர்கள் கூச்சல் எழுப்புவர். அத்தகைய பெற்றோரிடம், இதுவும் ஒரு பாடம்தான் என்று திருப்பிச் சொல்லும் வலிமை இன்றைய ஆசிரியர்களிடமோ, அரசிடமோ இல்லை என்பதுதான் நமது பலவீனம்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் அக்குழந்தைகளுக்குச் சொல்லித் தரும் அடிப்படைப் பயிற்சியே, இயற்கை அழைப்பு நேர்ந்ததும் அவர்களாகக் கழிவறைக்குச் செல்வதும், அவர்களாக முடிந்தவரை தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்திக் கொள்வதும்தான். பள்ளியில் கற்கும் இந்தப் பழக்கத்தை அக் குழந்தைகள் வீட்டில் நடைமுறைப்படுத்தி, பெற்றோருக்குச் சங்கடங்களைக் குறைக்கின்றன.

மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் நாம், பொதுப் பள்ளிகளில் நல்ல திறனுடன் வரும் மாணவர்களிடம் இதைச் சொல்லித் தருவதில்லை. அதனால்தான் பள்ளிக் கழிப்பறைகள் மோசமான நிலைக்கு இலக்காகின்றன. அந்த மாணவர்கள் வீட்டுக் கழிவறைகளையும்கூட, மோசமாகப் பயன்படுத்தும் வழக்கந்தான் நிலைக்கிறது. மனசாட்சியுடன் பெற்றோர்கள் இதை எண்ணிப் பார்த்தால் அவர்களுக்கே புரியும்.

தொடக்கப் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டியதை கல்லூரி வரையிலும்கூட கற்பிக்காததன் விளைவுதான் தெருவோரம் சிறுநீர் கழிக்கும் அநாகரிகம் என்பதைப் பெற்றோருக்குப் புரிய வைத்தால், தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் ஏன் தானே கழிவறையைக் கழுவ முற்பட்டார் என்பதைப் புரிந்துகொள்வது எளிது.

இந்தப் பணிகளுக்காகத் தனியாரை ஈடுபடுத்துவது குறித்து அதிகாரிகள் பரிந்துரை செய்தாலும், அவர்களும் இதே மெத்தனப் போக்கில் செயல்படுவதும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முக்கிய நபர்களுக்கு வேண்டப்பட்ட அமைப்பாக அவை அமைந்துவிடுவதும் பணவிரயத்தை ஏற்படுத்துமேயல்லாமல், பயன் தராது. இதைப் பள்ளியில் உள்ள ஒவ்வொருவரின் பணியாக மாற்றுவதுதான் இதற்கான தீர்வாக இருக்க முடியும்.

இந்தச் செயலை மாணவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதுகூட அவசியமில்லை. எடுப்புக் கழிவறைகள் இன்றில்லை. அனைத்துமே நீர்ஊற்றுக் கழிவறைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உள்ளாட்சியில் உள்ள துப்புரவுப் பணியாளர்களை அழைத்து வந்து அவர்கள் சுத்தம் செய்வதைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றாலே போதுமானது. சுழற்சி அடிப்படையில் மாணவர்கள் இந்தக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும்போது, கழிவறைத் தூய்மையின் இன்றியமையாமையை உணர்வார்கள்.

ஒவ்வொரு பள்ளியிலும் பசுமை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர், தேசிய மாணவர் படை என பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. இவர்களில் சூழல் அக்கறை கொண்ட மாணவர்களை இதற்கான கண்காணிப்பாளர்களாக நியமிக்கலாம்.

கழிவறைத் தூய்மைக்கு மிகவும் முக்கியமானது தண்ணீர். பெரும்பாலும் எல்லாப் பள்ளிகளில் இந்த வசதி இல்லை. தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் உள்ளாட்சிகளின் மிக முக்கியமான பொறுப்பு. இதைக் கண்காணித்து, அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதும், அதன் மீது உடனடி நடவடிக்கையும் மிகமிக முக்கியம்.

இப்போதெல்லாம் 20, 30 குடியிருப்புகள் உள்ள வளாகத்துக்கு ஒரு மினி ஆர்.ஒ. பிளான்ட் (குடிநீர் சுத்திகரிப்பு கருவி) பொருத்தப்படுகிறது என்றால், இதைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செய்வதில் என்ன தடை இருக்க முடியும்?

பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தனக்கென சிறியதாக ஒரு குடிநீர் ஆலை அமைத்து, மாணவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் பாட்டில் குடிநீர் வழங்கியது. அரசு நினைத்தால், ஆயிரம் மாணவர்கள் படிக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறிய அளவில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவி, மாணவர்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்க முடியும்.

இதற்கெல்லாம் பெரிய நிதிஒதுக்கீடு தேவை இல்லை. நேரத்தை ஒதுக்கினால் போதும். கழிப்பறைத் தூய்மையும் கற்றலின் ஒரு பகுதி என்கிற மனம் இருந்தால் போதும்.

பள்ளிகளைச் சுத்தமாக்குங்கள். தேசத்தின் தெருக்கள் சுத்தமாகும். மாணவர்களைப் பண்படுத்துங்கள். பண்பாடு காப்பாற்றப்படும். இதையெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு!

Sunday 3 July 2011

நம்பினால் நம்புங்கள்!


மமகவின் முயற்சியால் 23 மீனவர்கள் விடுதலை

Saturday 2 July 2011

சமுதாய மக்களிடம் வசூல் செய்து வாங்கிய அவசர ஊர்தியின் அவலநிலையைப் பாரீர் !


ஏன் தயங்குகிறீர்கள்?

இந்த அரசு ஸ்தம்பித்துக் கிடப்பதாகவும், எங்களால் திட்டங்களைச் செயல்படுத்த இயலவில்லை என்பதாகவும் ஒரு கருத்து அதிகரித்துக் கொண்டிருப்பதாகக் கருதுகிறேன். இப்படி ஒரு சூழலை நமது ஊடகங்கள் உருவாக்க முற்பட்டிருக்கின்றன. பல்வேறு வழிகளில் ஊடகங்கள் மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு குற்றம்சாட்டுபவராக, வழக்காடுபவராக, நீதிபதியாகத் தன்னை மாற்றிக் கொள்வதாக அமைகிறது''. பிரதமர் இல்லத்துக்கு அழைக்கப்பட்ட, சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களிடம் பேசியபோது பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட கருத்து இது. நல்லவேளை, குற்றம் செய்பவராக என்று சொல்லாமல் விட்டாரே, அதுவே மகிழ்ச்சி. ஒரு பத்திரிகை வேறு என்னதான் செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர். நாடு முழுவதும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள் அதற்குத் துணை போகின்றனர். அரசியல்வாதிகள் மீது சொல்லப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், அத்துமீறல்கள் தண்டிக்கப்படாமலேயே அமுங்கிப் போகின்றன. அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் நன்கு சம்பாதித்து, செல்வச் செழிப்புடன் ஓய்வு பெறுகின்றனர். இந்தச் செல்வம் முறையானதா அல்லது முறைதவிர் உடைமையா என்பது கடவுளுக்கே வெளிச்சம். அமைச்சர்கள் மீது பத்திரிகைகளில் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. விசாரணை நடைபெற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் தொடரப்படுகிறது. ஆனால், அவர்கள் தங்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அப்படியானால், அவர் வருமானத்துக்கு அதிகமாகச் சம்பாதித்திருக்கும் சொத்து வானத்திலிருந்து கொட்டியதாக இருக்குமோ என்று வானத்தை அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு மக்களை மூளைச்சலவை செய்யும் நிலைமை உருவாகிக் கிடக்கிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டினால் பிரதமர் சொல்கிறார்- "குற்றம் சாட்டுபவராக...' நீங்கள் மாறிவிட்டீர்கள் என்று. சொல்லியும் நிலைமை மாறாதபோது அதற்கான ஆவணங்களை முன்வைத்து பத்திரிகைகள் மக்கள் மன்றத்தில் கருத்து உருவாக்கம் செய்ய முற்பட்டால், பிரதமர் சொல்கிறார் - "வழக்காடுபவராக...' மாறுகிறீர்கள் என்று. அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால், இந்த அரசைத் தோற்கடியுங்கள், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துங்கள் என்கிற பிரசாரம் செய்து, எழுதித் தள்ளி, மக்கள் கருத்தை உருவாக்கி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் பிரதமர் சொல்கிறார்- "நீதிபதியாக...' மாறித் தண்டிக்கிறீர்கள் என்று. ஊடகங்களின் வலிமை ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது ஒரு தண்டனை மட்டுமே. அதை மீறி அவர்களின் அபரிமிதமான சொத்துகளைப் பறிமுதல் செய்வதோ அல்லது அவர்களைச் சிறைக்கு அனுப்புவதோ இயலாது. பத்திரிகைகள் நியாயத் தீர்ப்பு சொல்லும் - சட்டத்தின் வலிமை பெறாத - பல்வேறு அரசு அமைப்புகளைப் போன்றதுதான். தேசத்தின் மிகப்பெரும் ஊழலாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிப் பேசினால், இஸ்ரோ செயற்கைக்கோளைத் தனியாருக்காகத் தாரைவார்த்தது குறித்துப் பேசினால், அரசுக்கு குறைந்த லாபமும் ரிலையன்ஸýக்கு அதிக லாபமும் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போட்டது குறித்துப் பேசினால், - பொதுக் கணக்குக் குழு இதைப் பற்றி பேட்டியளித்திருக்கக்கூடாது என்கிறார் பிரதமர். 2ஜி விவகாரம் அறிக்கையாக நாடாளுமன்றத்தின் முன்பாக வைக்கப்பட்ட பிறகுதான், பத்திரிகையாளர்களின் வேண்டுகோளுக்காக அதுபற்றி விரிவாக சிஏஜி விளக்கம் அளித்தது என்பது பிரதமருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், சங்கடம் ஏற்படுத்தும் எதுவுமே அவருக்கு வேண்டாதவையாக இருக்கின்றன. "ஆகவே, இந்த நாட்டில், அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் முடிவுகள் மேற்கொள்வதில் அச்சப்படாத ஒரு சூழலை உருவாக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்துகிறார் பிரதமர். அதற்கும் ஒரு படி மேலேபோய், "நிலையற்ற உலகில் நாங்கள் முடிவுகள் மேற்கொள்கிறோம். நாடாளுமன்றமும், நமது சிஏஜி-யும், நமது ஊடகங்களும் இந்த உணர்வோடு தகவமைத்துக் கொள்ள வேண்டும்' என்கிற பரிந்துரையையும் முன்வைக்கிறார். முடிவுகள் மேற்கொள்வதில் அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளை அதைரியப்படுத்தாத, அச்சப்படுத்தாத சூழல் என்பதன் பொருள் - ஊடகங்கள் இவர்களது முடிவுகளை விமர்சனம் செய்யக்கூடாது என்பதுதானே! ராமராஜ்யமாக ஆட்சி நடந்தால் யார் விமர்சிக்கப் போகிறார்கள்? ஊழல் மிகப்பெரிய பிரச்னையா? அது நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். கறுப்புப் பணமா? அது ஐரோப்பிய நாடுகளில்கூட 25 விழுக்காடு இருக்கிறது. அதையும் ஒழிக்கத்தான் வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்ற திட்டங்களுக்கான மானியம் பலவழிகளில் கசியத்தான் செய்கிறது. இதன் ஓட்டைகளை அடைக்கவேண்டும். அவருக்கு எல்லா நியாயங்களும் தெரியும், எல்லோருடைய போக்குகளும் தெரியும். ஆனால் இவற்றை எத்தனை காலம்தான் இப்படியே விட்டுவைப்பது என்று கேட்டால், "நான் செயல்படாத பிரதமர் அல்ல' என்று சொல்லவும் தெரியும். அவரிடம் எல்லாவற்றுக்கும் ஒரு பதில் இருக்கிறது. அந்தப் பதில்கள் நமக்கும் தெரிந்திருக்கிறது. அவரிடம் மக்கள் எதிர்பார்ப்பது பதில்கள் அல்ல, தீர்வுகள். நிலையற்ற உலகில் அவர் முடிவுகள் மேற்கொள்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எல்லா முடிவுகளும் வெற்றிபெறும் முடிவுகளாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. சில முடிவுகளாவது நிலையற்ற உலகில் நிலையான தீர்வு தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். பிரதமர் மன்மோகன் சிங்கை செயல்படாத பிரதமர் எனச் சித்திரிப்பது யாருடைய விருப்பமும் அல்ல. அந்தச் சூழல் அவரே உருவாக்கிக் கொண்ட ஒன்று. ஊடகங்கள் வரம்பு மீறுகின்றன, நீதித்துறை நிர்வாகத்தில் தலையிடுகிறது என்றெல்லாம் அங்கலாய்ப்பதை நிறுத்திவிட்டு, சற்று செயல்படத் தொடங்குங்களேன். ஏன் தயங்குகிறீர்கள்?