பதிவுகள்

Wednesday 4 February 2015

இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள்!

 “இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் உள்ள ‘சமத்துவம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற சொற்கள் இனியும் தொடரத்தான் வேண்டுமா?” என்றும் “இதுகுறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம்” என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியிருப்பதை மதச்சார்பின்மை மீது தொடுக்கப்படும் மறைமுகத் தாக்குதலாகவே கருத வேண்டும்.
டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், ஓர் அலங்கார ஊர்தியின் பிரச்சாரப் படத்துக்குக் கீழே, இந்தியக் குடியரசு சட்டத்தின் முகவுரையிலிருந்து ‘இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசு’ என்ற வாசகங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ‘சமத்துவம்’, ‘மதச்சார்பின்மை’ ஆகிய இரண்டு சொற்களும் விடுபட்டிருந்தன. எதிர்க் கட்சிகள் விளக்கம் கேட்டபோது, “அவ்விரு சொற்களும் நீக்கப்படத்தான் வேண்டும்” என்று சிவசேனை கருத்து தெரிவிக்க, இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. நல்லவேளை, இவ்விரு சொற்களையும் நீக்கப்போவதேயில்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா இப்போது கூறியிருக்கிறார்.
1975-ல் நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்குப் பிறகு, இந்திய அரசியல் சட்டத்துக்கு 42-வது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்த இந்திரா காந்தி தலைமையிலான அரசுதான் ‘சமத்துவம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற இரண்டு சொற்களையும் முகவுரையில் சேர்த்தது. நெருக்கடி நிலை நீங்கிய பிறகு, நடந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி, அரசியல் சட்டத்தில் இந்திரா காந்தி அரசின் சில மாற்றங்களைத் திருத்தி, 44-வது திருத்தத்தைக் கொண்டுவந்தது. அந்த அரசுகூட ‘சமத்துவம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற சொற்களை விலக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பாஜகவின் தாய்க் கட்சியான ஜனசங்கமும் அன்றைய ஜனதா கட்சியின் ஒரு அங்கம் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அரசியல் நிர்ணய சட்டசபையிலும் இது தொடர்பாக விவாதம் நடந்தது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையில் சட்டப் பிரிவுகள் இருப்பதால் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லைச் சேர்க்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. சிறுபான்மைச் சமூகத்தவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறத் தொடங்கியதால், பிற்பாடு அந்தச் சொல் சேர்க்கப்பட்டது. அதைப் போலவே, பெருவாரியான மக்கள் தங்களுடைய பொருளாதார எதிர்காலம்குறித்து அச்சப்படத் தொடங்கியதால் ‘சமத்துவம்’ என்ற சொல் சேர்க்கப்பட்டது. இது வரலாறு. எஸ்.ஆர். பொம்மை வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், “மதச்சார்பின்மை என்பது நம்முடைய அரசியல் சட்டத்தின் அடித்தளத்தின் ஒருங்கிணைந்த அம்சம்” என்று வலியுறுத்தியதையும் நாம் மறந்துவிடலாகாது.

இந்தியாவின் உயிர்நாடியே அதன் பன்மைத்தன்மைதான். எத்தனை இனங்கள்! எத்தனை மொழிகள்! எத்தனை மதங்கள்! சமாதான சகவாழ்வின் மூலமாக மட்டுமே இந்தப் பன்மைத்தன்மையை நமது பலமாக ஆக்கிக்கொள்ள முடியும். ‘ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம்’ என்ற கொள்கையோ இந்தியாவை மிகவும் பலவீனமாக ஆக்கிவிடும். பலமான இந்தியா வேண்டுமா, பலவீனமான இந்தியா வேண்டுமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்