பதிவுகள்

Tuesday 8 January 2013

வேலியே பயிரை மேய்ந்தால்...

பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் கொடுமை வழக்குகள் தொடர்பாக அனைத்து மாநிலங்களும் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?'' என்று உச்ச நீதிமன்றம் கேட்கும் முன்பாகவே, இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாலியல் கொடுமை வழக்குகள் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. இத்தகைய வழக்குகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக 13 உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்குகளில் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்பதும், இந்த வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் பெண்களாகவே இருப்பார்கள் என்பதும் வரவேற்கத்தக்கவை. இத்தகைய ஏற்பாடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பேருதவியாக அமையும்.
வணிக வளாகம், கடைகள், கல்லூரிகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவது பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க உதவும். ஆனால், அது மட்டுமே பிரச்னையைக் குறைத்துவிடாது.
பாலியல் வன்கொடுமையில் மக்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்பதில்லை. பல சம்பவங்களில் காவல்துறையினரே ஈடுபட்டுள்ளனர். அண்மையில் விழுப்புரம் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண், காவல்துறையினர் தன் மீது நடத்திய பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார் கொடுத்து, தொடர்புடையோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்கு அத்துடன் மறக்கப்பட்டுவிட்டது.
வாச்சாத்தி சம்பவத்தில், பல ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைத்தும் மேல்முறையீடு நடந்துகொண்டிருக்கிறது. காவல்நிலையத்தில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகும் பெண்களில் சிலர்தான் அதுபற்றிப் பேசுகிறார்கள். கெட்ட வார்த்தைகள் பேசி பெண்களைக் காவல்துறையினர் கூசிக்குறுகி நிற்க வைப்பது, பாலியல் அத்துமீறலுக்கு சமமான குற்றம். அதன் விளைவாகக் காவல்நிலையத்திலிருந்து திரும்பியதும் பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் உள்ளன.
மகளிர் காவல்நிலையங்கள், காவல்துறையின் உயர் அதிகாரிகளின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, சும்மா இருப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் இருக்கின்றன. அரசியல்வாதிகளும், காவல்துறையும் சேர்ந்து எதையும் செய்ய முடியும் என்ற நிலைமை மாறிவிடவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்வதும் தடய அறிவியல் ஆய்வை முடிப்பதும் வழக்கிற்கு மிகவும் இன்றியமையாதவை. இதனைச்செய்ய வழக்குப் பதிவு அவசியமாகிறது. வல்லுறவு வழக்குகளில், இந்த அரசியல் மற்றும் காவல்துறை கூட்டணியின் முதல் வேலை, காலதாமதம் செய்து தடயங்களை இயற்கையாகவே அழிந்துபோகச் செய்வதுதான். ஆகவே, பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண், தன் உடலில் தங்கிய தடங்கள் அழியும் முன்பாக, ஒரு மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நீதிபதி முன்பாக புகார் கொடுத்து, நேரடியாக மருத்துவப் பரிசோதனை, தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படச் செய்வதும், இதில் அந்தப் பெண்ணுக்கு உதவிட மகளிர் அமைப்புகளை துணைநிற்க ஊக்கப்படுத்துவதும்தான் பெண்களுக்கு நியாயம் கிடைக்க உதவும்.
பாலியல் கொடுமைகள் ஆண்களால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. விழுப்புரம் தனியார் பள்ளியில் ஒரு நர்சரி மாணவிக்கு பாலியல் கொடுமையை நிகழ்த்திய புகாரில் கைதானவர்கள் வகுப்பு ஆசிரியை மற்றும் தலைமையாசிரியைதான். சிறுவர்களும்கூட, ஆண்களாலும் பெண்களாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இத்தகைய நேர்வுகளில் எத்தகைய நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நியாயம் கிடைக்க உதவும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
மேலும், பாலியல் அத்துமீறல், வல்லுறவு ஆகிய குற்றங்களில் ஈடுபடுவோரில் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் அதிகரித்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதைப் பற்றியும் நாம் தீவிரமாகச் சிந்தித்து சட்டத்தில் சேர்த்தாக வேண்டும்.
தில்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவம் இந்தியா முழுவதையும் உணர்வுக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளதால், தற்போது இத்தகைய நடவடிக்கைகளுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், நாளடைவில் இந்த நடவடிக்கைகளுக்கு மெல்ல எதிர்ப்புகள் கிளம்பும். சட்டவிதிகளைத் தளர்த்தவும் மாற்றவும் கோருவார்கள்.
பாலியல் பலாத்காரத்தில் சாதாரண குடிமகன்கள் தண்டனை பெறும்போது பாராட்டும் இதே அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்களும், கட்சிக்காரர்களும் தண்டனை பெறும்போது, பொய்ப் புகார் என்றும், சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றெல்லாம் எதிர்ப்புக்குரல் கொடுக்கத் தொடங்குவர்.
ஒரு தொலைக்காட்சியில், தற்போதைய நடவடிக்கைகள் குறித்த பார்வையாளர்கள் கருத்துகளைக் கேட்கும்போது ஒரு தொகுப்பாளினி கேட்கிறார்: "இந்தச் சட்டம் தவறாகவும் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதல்லவா'? அதற்கு தொலைபேசியில் பேசும் பார்வையாளர், "ஆமாம். நிலப்பறிப்பு வழக்குகள்போல, எந்த அடிப்படையும் இல்லாமல் வழக்குத் தொடுத்திட முடியும். உடனே ஒரு வருஷம் குண்டர் சட்டத்தில் போடலாம்' என்கிறார். பெண்களுக்கு பாதுகாப்பு தரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இப்போதே "விதை தூவ'த் தொடங்கிவிட்டார்கள்!
இத்தனை களேபரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே, எத்தனை காவல்நிலையங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு என்னென்ன உரிமைகளும், உதவிகளும் தரப்படும் என்று கண்ணில் படும்படி ஏதாவது தகவல் பலகை வைக்க முன்வந்திருக்கிறார்களா? இந்தியா முழுவதும் காவல்துறை பெண்களுக்குப் பாதுகாப்பாக இருந்துவிட்டாலே இந்தக் குற்றங்கள் 90% குறைந்துவிடுமே... காக்கிச் சட்டை குற்றவாளிகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யாதவரை, சட்டம் போட்டும் பயனிருக்காது.