பதிவுகள்

Sunday 26 May 2013

மதுவுக்கு ஏன் விலக்கு?

மக்கள் ஆரோக்கியத்துக்காக குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழ்நாடு தடை செய்திருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளவும் தமிழக அரசைப் பாராட்டவும் விழையும் அதே வேளையில், "டாஸ்மாக்' விற்பனையின் வளர்ச்சி குறித்து கவலை கொள்ளவும் வேண்டியிருக்கிறது.
 தமிழ்நாட்டில் மது விற்பனை மூலம் 2012-13-ஆம் ஆண்டில் ரூ.21,680 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2003-04-ஆம் ஆண்டில் ரூ. 3,639 கோடியாக இருந்த மது விற்பனை பத்து ஆண்டுகளில் சுமார் 7 மடங்கு உயர்ந்துள்ளது. இதற்காக மகிழ்ச்சி அடைவதா, இல்லை வருத்தப்படுவதா?
 பான்பராக், குட்கா போன்ற போதைப் பாக்குகள் வாய், தொண்டைப் புற்றுநோய்க்குக்  காரணமாக இருக்கின்றன. பாக்குடன் பல்வேறு போதைப் பொருள்களையும் கலந்து விற்பதால், 2001-ஆம் ஆண்டிலேயே இவற்றின் விற்பனைக்குத் தமிழக அரசு, "உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தின்' கீழ் தடை விதித்தது. ஆனால் அந்தச் சட்டத்தை மாநில அரசு பயன்படுத்த முடியாது என்கிற சட்டத்தின் ஓட்டையின் வழியாக மீண்டும் தமிழ்நாட்டில் பான்பராக், குட்கா விற்பனை தொடங்கியது. தற்போது  "உணவுப்பொருள் தரம் மற்றும் கேடு விளைவிக்காமை சட்டத்தின்' கீழ் இவற்றின் தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இந்த நேரத்தில் இன்னொரு கேள்வியைச் சேர்த்து கேட்கலாம்: மக்கள் ஆரோக்கியம் முக்கியம் என்றால் ஏன் மதுவிலக்கை அமல்படுத்தக்கூடாது?
 உணவுப்பொருள் தரம் மற்றும் கேடுவிளைவிக்காமை சட்டத்தின்படி, தற்போது தமிழகத்தில் விற்பனையாகும் மது தரமானதா? 
 மது புளிப்பேறுவதற்கான காலஅவகாசம் இல்லாமலேயே, எரிசாராயத்துடன் தண்ணீர் கலந்தவுடனேயே பாட்டிலில் அடைக்கப்பட்டு சந்தைக்கு வந்துவிடுவதால், அத்தகைய மதுபானம் எப்படி தரமானதாக இருக்க முடியும். இதில் மதுபான விற்பனையாளர்களும் "போலி சரக்குகளை' உள்ளே தள்ளிவிடுகிறார்கள். நிறைய இடங்களில் திடீர் ஆய்வுகளில் இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 தமிழகம் மதுவினால் பெற்றுவரும் தீமைகளில் மிக முக்கியமான மூன்று:
 1. பதினெட்டு வயது நிரம்பாத, "பிளஸ்-2' மாணவர்களும் மது அருந்தத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் அடுத்த தொடர் நிகழ்வாக பாலியல் வல்லுறவு, பெண்கள் மீதான வன்முறைகள் தமிழகத்தில் அதிகரிக்கும். இவர்களைச் சிறார் நீதிமன்றத்தில்தான் விசாரிக்க முடியும்.
 2. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் குடித்துவிட்டு வேலைக்கு வருவது அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக, மாலை 5 மணிக்கு மேல் பணியாற்ற நேரும் ஊழியர்கள் இவ்வாறு குடித்துவிட்டு வேலைக்கு வருவது மிகமிக அதிகமாகிவிட்டது. மது போதையுடன் வேலைக்கு வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தொழிலாளர் அமைப்புகள் எதிர்க்கின்றன. நடவடிக்கை எடுக்க முடிவதே இல்லை. இதில் கடைநிலை ஊழியர் அல்லது உயர் அதிகாரி என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
 3. மதுக் கூடங்கள் (பார்) தமிழகத்துக்கு ஏற்படுத்திவரும் கேடுகள், மதுவைவிட அதிகம். மதுவினால் சாவதைக் காட்டிலும் இந்த மதுக்கூடத்தின் தரமற்ற கலப்பட உணவினால் செத்துக்கொண்டிருப்போரே அதிகம். சாகாதவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் போடும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றொரு கேடு. காவல்துறைக்கும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் மாமூல் கொடுத்து வளர்ப்பது இதனுடன் தொடர்புடைய இன்னொரு சமூகக்கேடு.
 அடுத்ததாக,அப்பகுதி வாழ் மக்களுக்கு இந்தக் குடிமகன்களால் ஏற்படும் தொல்லைகள் மிக அதிகம். இந்தக் குடிமகன்கள் மதுக்கூடத்திலிருந்து (பார்) வீடு செல்லும்போதுதான் பெரும்பாலான தகராறுகளும் சாலை விபத்துகளும் நிகழ்கின்றன.
 இருபதாயிரம் கோடி ரூபாய் வருவாயை இழக்க எந்த அரசுக்கும் மனம் இருக்காதுதான். மாநில அரசுக்கு மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும் நிதி, அரசியல் காரணங்களால், மாநில அரசு கேட்பதைவிடக் குறைவாக தரப்படும்போது, மது  விற்பனையால் கிடைக்கும் மிகப்பெரும் வருவாய்தான் பொருளாதார பலத்தைத் தருகிறது என்பது உண்மை. நாம் அதை மறுக்கவில்லை.
 அப்படி ஒரு கட்டாயம் இருந்தால், குறைந்தபட்சம் மது விற்பனை, மது அருந்துதல் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதும்கூட கடினமான செயலா? இப்படித் தெருவுக்குத் தெரு பார்களை அனுமதித்து சாமான்ய மக்களுக்குத் தொந்தரவும், சமூக விரோதிகளுக்கு சந்திப்பு மையமும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
 அரசிடம் கட்டணம் செலுத்தி, குடிப்பதற்கு உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்வதும்; மதுஅருந்தி, போதையுடன் பணிக்கு வந்தால் உடனே பணியிடை நீக்கம் செய்வதும்; சாலையோரம் மட்டுமின்றி ஸ்டார் ஓட்டல்களிலும்கூட "பார்' உரிமம் ரத்து செய்யப்பட்டு, மது அருந்துவது அவரவர் வீட்டுக்குள் அல்லது அறைக்குள் நடைபெற வேண்டிய தனிப்பட்ட விவகாரமாக மாற்றப்படுவதும்; போதையுடன் சாலையில் நடமாடுவோர், வாகனம் ஓட்டுவோர் பிடிக்கப்பட்டு, போதை தெளியும்வரை காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, அபராதம் விதிக்கும் நடைமுறையும் இன்றைய குறைந்தபட்ச தேவைகள்.
கண்களை விற்று சித்திரம் வாங்குவது போன்ற முட்டாள்தனம்தான் மதுக் கடைகளைத் தெருத் தெருவாய்த் திறந்து வைத்துக் கொண்டு, இலவச அரிசியும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும், விலையில்லாப் பொருள்கள் விநியோகமும் நடத்துவது. பான்பராக், குட்கா தடைக்கு நன்றி. மதுவிலக்கும் கொண்டு வந்தால்தான் பாராட்டத் தோன்றும்!