பதிவுகள்

Wednesday 18 July 2012

எது நாகரிகம்?

அசாம் மாநிலத்தில், குவாஹாட்டி நகரின் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஒரு பெண்ணை பல இளைஞர்கள் சூழ்ந்து அடித்து, உதைத்து மானபங்கம் செய்தது இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் காலிதா என்பவர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த வன்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் மகளிர் அமைப்புகள் பேரணிகள் நடத்தினர். வன்செயலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று கோரினர். நாமும் வலியுறுத்துவது அதைத்தான்.
 அந்த இளைஞர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களது தோற்றம், அந்த காட்சித்தொகுப்பில் தெளிவாக இருப்பதால் அவர்களைக் கைது செய்வது காவல்துறைக்குக் கடினமல்ல. ஆனால், இந்த நேரத்தில் சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.
 இந்தக் காட்சியை உலகம் முழுவதும் இணையதளத்தில் மேலூட்டம் தந்து அனைவரையும் பார்க்கச் செய்தது சரியா? இதைச் செய்த நபரை "சைபர் கிரைம்' குற்றத்தில் கைது செய்ய வேண்டாமா? இந்த வன்செயலை மீண்டும் மீண்டும் தொடர்ந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது சரியா? ஒரு சிறுமி தொடர்பான ஒரு செய்தியை, அதிலும் அதிர்ச்சிதரும் இத்தகைய காட்சிகளை எவ்வாறு வெளியிட வேண்டும் என்ற வரன்முறையை இந்திய அரசு இன்னமும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறதே தவிர ஏன் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை?
 அந்த ஒளிப்பதிவுக் காட்சியில், ஏன் அந்தச் சிறுமியை அத்தனை ஆத்திரத்துடன் ஒரு கும்பல் சேர்ந்துகொண்டு அடித்தது? "ஒரு தொலைக்காட்சி நிருபர்தான் அந்தப் பெண்ணை அடிக்கும்படி தூண்டினார்' என்று குற்றம் சாட்டியுள்ள, தகவல் அறியும் சட்ட விழிப்புணர்வு ஆர்வலர், பத்திரிகையாளர்களிடம் முழு விடியோவையும் போட்டுக் காண்பித்துள்ளார். அந்த விடியோ, காவல்துறைக்கும் அளிக்கப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்படாத இக்காட்சிகளின் மூலம் காவல்துறைக்கு இந்தச் சம்பவத்துக்கான தொடக்கக் காரணம் தெரியவந்திருக்கும். காவல்துறை அதுபற்றிப் பேசாமல் மறைக்கிறது. அந்தப் பெண்ணை யாரும் சந்திக்கவிடாமல் காவல்துறையே எங்கேயோ கடத்தி வைத்திருக்கிறது. காவல்துறை ஏன் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்?
 இந்தச் சம்பவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விகளை ஏன் கேட்பதில்லை அல்லது மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே பேசிக்கொள்கிறார்கள்? இந்தக் காட்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனங்கள், "இந்தியாவில் பெண்கள் நடமாட முடியவில்லை' என்றும், "இதுதான் நாம் விருப்பும் இந்தியாவா?' என்றும் நியாயமான கேள்விகளைத்தான் எழுப்பின. ஆனால், அந்த 17 வயதுச் சிறுமி- 11ம் வகுப்பு படிக்கும் சிறுமி- தனது நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாட ஒரு மதுக்கூடத்துக்குச் (பப்) சென்றது பாதுகாப்பான செயல்தானா? என்பது குறித்து எந்த ஊடகமும் எந்த விவாதத்தையும் முன்வைக்கவில்லையே, ஏன்?
 ஆண்கள் மட்டும்தான் மது அருந்த வேண்டுமா? ஏன் பெண்கள் குடிக்கக்கூடாதா? ஆண்கள் மட்டும்தான் எப்படி வேண்டுமானாலும், எங்கேயும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கட்டுப்பாடு இல்லாமல் திரிய முடியுமா? பெண்களுக்கு அந்த உரிமை இல்லையா? என்று பெண்ணியவாதிகள் கேட்கிறார்கள். மதுக்கூடங்களுக்குச் செல்லும் சமஉரிமை பெண்களுக்கும் நிச்சயமாக உண்டு. ஆனால், சமஉரிமை கோருபவர்கள், ஆணுக்குச் சரிநிகராகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் அங்கே தங்களுக்குப் பாதுகாப்பாக சமூகம் வந்து நிற்க வேண்டும் என்று விரும்பினால் எப்படி?
 கல்லூரி மாணவர்கள், கணினித்துறை இளையோர் "ரேவ்' பார்ட்டிகளில் பங்குகொள்கிறார்கள். பெங்களூர், ஹைதராபாத், தில்லி, சென்னை என எல்லா இடங்களிலும் இதுபோன்ற போதை விருந்துகள் நடைபெறுகிறது. சில நேரங்களில் இவர்களைக் காவல்துறை ஒட்டுமொத்தமாகக் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, காலையில் வெளியே செல்ல அனுமதிக்கும்போது, இவர்கள் தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டுதான் வெளியே வருகிறார்கள். இந்த விருந்தில் தவறு இல்லை என்று அவர்கள் நம்பினால், இது சமூக வழக்கம் என்றால், ஏன் இவர்கள் குறுகிப்போகிறார்கள்?
 இவர்களைக் காவல்நிலையத்தில் வைத்துப் போலீஸ்காரர்கள் நடத்தும்விதம் என்ன என்பதாகிலும் தெரியுமா? இந்த அப்பாவி (?) இளைஞர்கள் மீது காவல்துறை நடத்தும் அத்துமீறலுக்கும் தெருவில் போகிறவன் அடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அப்படியானால் ஏன் இந்த அமைப்புகள் யாரும் போலீûஸக் கண்டித்துப் போராடவில்லை?
 உத்தரப் பிரதேசத்தில் பாரூத் வட்டாட்சிக்கு உள்பட்ட பக்பத் என்ற சிற்றூரைச் சேர்ந்த பெண்கள் 40 வயது வரை கடைகளுக்குத் தனியாகப் போகக்கூடாது, செல்போன் எடுத்துச்செல்லக்கூடாது, காதல்மணம் கூடவே கூடாது என்று தடைகள் இருப்பதாகச் சில பத்திரிகைகளில் செய்தி வந்தன. பெண்அமைப்புகள் ஏன் இந்தக் கிராமத்துக்குச் சென்று போராட்டம் நடத்தத் துணியவில்லை? ஏன் ஊடகங்கள் அந்தக் கிராமத்துக்குப்போய், பேட்டி எடுக்கவில்லை? படிக்காத கிராமப்புற மகளிருக்கு நிஜமாகவே இழைக்கப்படும் அநீதி பற்றிக் குரலெழுப்ப ஏன் யாரும் தயாராக இல்லை?
 உரிமைக்குப் போராடும் குழுக்களும் அமைப்புகளும்கூட, பாதுகாப்பு உணர்வுடன் சில போராட்டங்களைத் தவிர்க்கும்போது, ஒரு பெண் பாதுகாப்பு உணர்வுடன் சிலவற்றைத் தனக்குத்தானே தவிர்ப்பதும்தானே முறை?
 கற்பைவிட இன்பம்தான் பெரிது என்று மகளிரும், ஒழுக்கத்தைவிடப் பணம்தான் பெரிது என்று ஆடவரும் நினைக்கத் தொடங்கினால், சமுதாயம் இதுபோன்ற பல சீர்கேடுகளைச் சந்தித்தே தீரவேண்டும். கட்டுப்பாடே இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு நாம் காடுகளில் திரிந்திருக்கலாமே, சில ஆயிரம் ஆண்டுகளை வீணாக்கி நாகரிக வாழ்க்கை முறையை உருவாக்கி இருக்கவே தேவையில்லையே...
 எதற்கும் துணிந்தவர்கள் எது வந்தாலும் எதிர்கொள்ளவும் துணிய வேண்டும் என்பதுதான் குவாஹாட்டி வழங்கும் பாடம்!