பதிவுகள்

Monday 22 August 2011

மறுபரிசீலனை தேவை!


சமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக மாற்றும் அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தவுடனேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் பாராட்டின. சட்டப்பேரவையில் எல்லோரும் பாராட்டிவிட்டார்கள் என்பதற்காகவும், ஒரு சில பத்திரிகைகளும் நடுநிலையாளர்களும்கூட ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்காகவும், நாமும் நமது பங்குக்குத் தமிழக முதல்வரின் இந்த முடிவை முழுமனதுடன் பாராட்டிவிட முடியவில்லை. இந்தக் கட்டடத்தில் சட்டப்பேரவை நடத்தப் போதுமான வசதி இல்லை என்பதும், தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் 36 துறைகளையும் மாற்றுவதற்கான இடவசதி இல்லை என்பதும் எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு இந்தக் கட்டடம் மருத்துவமனைக்காகக் கட்டப்படவில்லை என்பதும்கூட உண்மைதானே?   தமிழ்நாட்டில் திரைப்படம் பார்ப்போர் எண்ணிக்கை குறையத் தொடங்கிய நேரத்தில் பல ஊர்களிலும் திரையரங்குகளைத் திருமண மண்டபங்களாக மாற்ற முனைந்தார்கள். ஆனால் மணமகன், மணமகள் அறை, உணவுக் கூடம், தங்கும் அறைகள், சமையல்கூடம் என மற்ற தேவைகள் விரிந்தபோது, இடித்து இடித்து ஒவ்வொன்றாகக் கட்டி மாளாமல், மொத்தமாக இடித்துவிட்டு திருமண மண்டபத்தைப் புதிதாகக் கட்டியவர்கள்தான் தமிழ்நாட்டில் நிறையப் பேர். ஒவ்வொரு தொழிலுக்கும், அத்தொழிலுக்கே உரித்தான நடைமுறைத் தேவைகளையும், வசதிகளையும் கருத்தில் கொண்டுதான் கட்டடங்கள் வடிவமைக்கப்படுகின்றன. நூலகம் என்றாலும் சரி, திருமண மண்டபம், குடியிருப்பு, ஷாப்பிங் மால் அல்லது பள்ளி, கல்லூரி என எதுவாக இருந்தாலும் அதற்கென தனி வடிவமைப்புத் தேவையாக இருக்கிறது. இதில் மருத்துவமனை விதிவிலக்கல்ல. ஆபரேஷன் தியேட்டர், பொது நோயாளிகளுக்கான படுக்கைகள் கொண்ட வார்டுகள், அந்த வார்டுகள் அருகே அந்தந்தத் துறை மருத்துவர்களுக்கான அறைகள், சிறப்பு நோயாளிகளுக்கான தனியறைகள், இவர்களுக்கான பிரத்யேக மின்தூக்கிகள், பிரத்யேக தண்ணீர்க் குழாய்கள், மருத்துவக் கழிவுகளை எரிக்கும் இன்சினேட்டர், பல ஆயிரம்பேர் வந்துசெல்லும் நிலையில் அவர்களது வாகன நிறுத்துமிடங்கள், இவர்களுக்கான உணவகங்கள், இருப்பிட மருத்துவருக்கான வீட்டு வசதிகள், ஸ்ரெட்சரைத் தள்ளிச் செல்லும் சாய்தளங்கள் என எத்தனையோ தேவைகள் மருத்துவமனைக்குத் தேவைப்படுகின்றன. இதற்காக தனியாக வரைபடம் தயாரித்து, கட்டடம் கட்டுவதுதான் மருத்துவமனையின் தேவையைப் பூர்த்தி செய்யும். மருத்துவமனைக் கட்டட வடிவமைப்பு, மருத்துவமனை நிர்வாக இயல் இவற்றுக்கான சிறப்புப் பாடத்திட்டங்களும், பொறியியல், நிர்வாக இயல் பட்டப் படிப்புகளும் ஏற்பட்டுவிட்ட காலம் இது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவமனைகளை விடுங்கள், சாதாரண மருத்துவமனைகளை வடிவமைப்பதற்கேகூடத் தேர்ந்த பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்குப் போய் படித்துவிட்டு வருகிறார்கள். ÷செயல்படாத நிலையில் இருக்கும் புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றிவிட முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது திரையரங்கைத் திருமண மண்டபமாக மாற்றிய கதையாகத்தான் முடியும். அதைவிட இப்போதுள்ள கட்டடத்தை முற்றிலுமாக இடித்துவிட்டுப் புதிதாக மருத்துவமனைக் கட்டடம் கட்டுவதுதான் புத்திசாலித்தனம். அப்படிச் செய்தால், அண்ணா சாலையில் ஒரு மருத்துவமனை இருப்பதைப் போன்று நோயாளிக்கு வேறு தொல்லை எதுவுமே இருக்க முடியாது. அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்போவதாக முந்தைய திமுக அரசு அறிவித்தபோது, அண்ணா சாலையில், சென்னையின் மத்திய பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி தீர்க்கதரிசனத்துடன் கவலை தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, இப்போதும் அதே காரணங்கள் மருத்துவமனைக்கும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளாதது வியப்பை ஏற்படுத்துகிறது. மத்திய சிறைச்சாலையைப் புழலுக்கு மாற்றியதைப் போல, ராஜீவ் காந்தி தலைமை மருத்துவமனையின் விரிவாக்கத்தையும் ஊருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனை கட்டப்பட்ட நேரத்தில் இருந்த சுற்றுச்சூழலும் போக்குவரத்தும் மக்கள் தொகையும் முற்றிலும் மாறானவை. அன்றைய தினம் கூவம் ஒரு நதியாக இருந்தது. இன்றோ கூவம் என்பது சென்னைப் பெருநகரின் பெரிய சாக்கடையாகத் திகழும் காலம். ராஜீவ் காந்தி தலைமை மருத்துவமனையிலிருந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் போதாதென்று, புதிதாகக் கட்டப்பட இருக்கும் அல்லது சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட இருக்கும் அரசினர் தோட்டத்து மருத்துவமனையின் கழிவுகளும் கூவத்தில் கொட்டப்பட்டால், சென்னைப் பெருநகரின் நிலைமைதான் என்ன என்பதை ஏன் அரசு யோசித்துப் பார்க்கவில்லை? எல்லோரும் ஊருக்குள் வந்தாக வேண்டும் என்று தெரிந்திருந்தும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாக, பொய்க் காரணங்களுடன், பேருந்து நிலையங்களை ஊருக்கு வெளியே கொண்டு செல்கிறோம். நோயாளிகள் அமைதியான, மாசற்ற சூழலில் இருக்க வேண்டியவர்கள் என்று தெரிந்தும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நகரத்தில் இரைச்சலுக்கு நடுவே கொண்டு வருகிறோம். ஏன் இந்த முரண்? அரசினர் தோட்டத்தில் முந்தைய திமுக அரசால் கட்டப்பட்ட தலைமைச் செயலக வளாகம், அரசு அலுவலகங்கள் செயல்படுவதை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்ட கட்டடம். அதில் தலைமைச் செயலகம் செயல்படுவதில் சிரமம் இருக்கலாம். ஆனால், அது அலுவலக வளாகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் அத்தனை அரசு அலுவலகங்களையும் அங்கே மாற்றி, அது ஏன் ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகமாக மாற்றப்படக் கூடாது?

Tuesday 9 August 2011

வேஷம் கலைகிறது!




தனது கடன்வரம்பை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்ட இரு தினங்களில், கடன்பெறும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், மிக உயர்ந்த இடத்தில் (ஏஏஏ) இருந்த அமெரிக்கா, தற்போது ஏஏ+ என்று சற்று தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டது.  உலகுக்குச் சந்தைப் பொருளாதாரம்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் என்றும் மக்கள் சேமிப்பதைவிட செலவழிப்பதை ஊக்குவிப்பது தான் ஒரு பொருளாதாரத்தின் உயிர்த்துடிப்பு என்றும் பாடம் சொல்லித்தந்த அமெரிக்கா இப்போது தள்ளாடுகிறது. பெரியண்ணன் பாதையில் வீரநடை போட்ட நாடுகள் - இந்தியா உள்பட - இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றன. வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தடுமாறுகின்றன.  தடுமாற இருந்த பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்க அமெரிக்காவில் மிகப் பெருமளவில் வீட்டுக் கடன் அளிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கடனை மீட்கவும் முடியாமல், பறிமுதல் செய்த வீடுகளை விற்கவும் முடியாமல் வங்கிகள் தடுமாறியதால், அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதை ஒருவழியாகச் சமாளித்து, வீட்டுக்கடன் வாங்கி அவதிப்படுபவர்களை மீட்கும் நடவடிக்கைகளையும் அதற்கான மானியங்களையும் மேற்கொண்டு வந்தநேரத்தில், அமெரிக்காவின் கடன் வரம்பை உயர்த்தி, மேலும் கடன் வாங்குவதன் மூலம்தான் இந்தச் சரிவை சமாளிக்க முடியும் என்று அந்நாட்டு வல்லுநர்கள் அறிவுரை கூறியதால், வேறுவழியின்றி அமெரிக்க அதிபர் ஒபாமா மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.  தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, கடன்பெறும் வரம்பை 2 லட்சம் கோடி டாலராக அதிகரிப்பதும், செலவுகளை  3 லட்சம் கோடி டாலராகக் குறைப்பதும்தான்.  இந்தப் பிரச்னையைச் சமாளித்துவிட்டதாக அமெரிக்க அரசுத் தரப்பில் கூறிக்கொண்டாலும், பொருளாதார நிபுணர்கள் இந்த நிலை அமெரிக்காவை மேலும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குக் கொண்டு செல்லும் என்று எச்சரிக்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணம் இதுதான்: ஒரு நாட்டின் நிதிப் பற்றாக்குறையை இரு வழிகளில் மட்டுமே சமாளிக்க முடியும். ஒன்று - வரியை உயர்த்தி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டுவது. இரண்டாவதாக - மக்களுக்காகச் செலவிடப்படும் தொகையைக் கட்டுப்படுத்துதல்.  இந்த இரண்டில், வரிகளை உயர்த்தினால் பாதிக்கப்படுவது அமெரிக்காவின் செல்வந்தர்களும், பெரும் தொழில்நிறுவனங்களும்தான். ஏனென்றால் அவர்கள்தான் வரியைச் செலுத்தியாக வேண்டும். ஆனால், அவர்கள் கூட்டணி அமெரிக்காவில் மிக உறுதியாக உள்ளது என்பது மட்டுமல்ல, அமெரிக்கா போன்று சந்தைப் பொருளாதாரத்தை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படும் நாடுகளில் அவர்கள்தான் அரசையே வழிநடத்துகிறார்கள். ஆகையால் இரண்டாவது வழியில் அடியெடுத்து வைத்திருக்கிறது அமெரிக்கா.  மக்களுக்காகச் செலவிடப்படும் நிதி என்பது, வெறும் நிர்வாகச் செலவுகள் மட்டுமல்ல. விவசாய உற்பத்திக்கான மானியம், மருத்துவச் சிகிச்சைகளுக்கான வசதிகள் மற்றும் மானியம், வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை, வட்டித் தள்ளுபடி என்கிற இத்யாதி செலவுகளைத்தான் தற்போது அமெரிக்கா கட்டுப்படுத்தப்போகிறது. இந்தச் செலவுகளை உடனே அமல்படுத்தாமல் படிப்படியாகக் குறைத்துக்கொள்வோம் என்று அமெரிக்க அரசு சொன்னாலும்கூட, இது சராசரி அமெரிக்கப் பிரஜையை பெருமளவில் பாதித்து, அவர்களது அதிருப்தியைத் தேடித்தரும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.  ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது அமெரிக்க தொழிற்கூடங்களுக்கு அதிகச் சலுகைகள், வரிக் குறைப்பு எல்லாமும் அறிவிக்கப்பட்டது. வரியை மெல்லமெல்ல உயர்த்தியிருந்தால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் அமெரிக்கா கொஞ்சம் மீண்டிருக்கும். ஆனால், செல்வந்தர்கள் கூட்டணி இதைச் செய்யவிடவில்லை.  இப்போது மக்களுக்கான நலஉதவிச் செலவுகளைக் குறைத்தால் அமெரிக்க மக்கள் அதை ஈடுசெய்ய என்ன செய்வார்கள்? ஏதாவது கூடுதலாக வேலை செய்தாக வேண்டும். ஏற்கெனவே வேலையில்லாதவர்கள் நிறையப் பேர் இருக்கும்போது, சலுகைகளை இழந்து குடும்பச்செலவைச் சமாளிக்க விரும்புவோரும் இரண்டாவது வேலைதேடத் தொடங்கினால் என்ன ஆகும்? சம்பளத்தைக் குறைத்து, வேண்டுமானால் வந்து வேலைசெய் என்பார்கள். உழைப்புச் சுரண்டலுக்குத்தான் இப்போதைய முடிவு கொண்டுசெல்லும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.  கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் வருவாய் 18 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆனால் உழைப்பாளர்களின் வருமானம் 12 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த முரண்பாடு சரியல்ல என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.  இன்னொரு புள்ளிவிவரத்தையும் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்புக் குறைந்துகொண்டே போகிறது என்கிறார்கள். 2007-ல் வேலைவாய்ப்புப் பெற்ற இளைஞர்கள் எண்ணிக்கை 63 விழுக்காடு. 2009-ல் 59.4 விழுக்காடு, 2011-ம் ஆண்டில் 58.2 விழுக்காடு. பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டுவிட்டதாகச் சொல்லப்படும் இன்றைய காலக்கட்டத்திலும்கூட வேலைவாய்ப்புக் குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.  இதெல்லாம் அமெரிக்க அரசுக்குத் தெரியாமலா இருக்கும். நிச்சயம் தெரியும். ஆனால், அமெரிக்கத் தேர்தலில் அரசியல்வாதிகளின் பிரசார செலவுக்குப் பணம் கொடுப்போர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். இதற்கு கணக்கு, தணிக்கை எல்லாமும் உண்டு. ஆகையால் அங்கே வல்லான் வகுத்ததே வாய்க்கால்.  இந்தச் சரிவிலிருந்து அமெரிக்கா மீளுமா, சமாளித்து எழுமா என்பது போகப் போகத் தெரியும். இப்போது ஒன்று மட்டும் தெரிகிறது: வேஷம் கலைந்துவிட்டது! 

Thursday 4 August 2011

தமிழக பட்ஜெட் 2011 முக்கிய அம்சங்கள் :




  • சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும்.
  • ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும்.  
  • சூரிய சக்தி தெருவிளக்கு திட்டத்துக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு. ஆண்டுக்கு 20 ஆயிரம் கிராமங்கள் வீதம் அமல்படுத்தப்படும் 
  • போடிநாயக்கனூரில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்க ஏற்பாடு. 
  • நடப்பு நிதியாண்டில் கலப்பின மாடுகள் வழங்க ரூ.56 கோடி ஒதுக்கீடு.  
  • தீயணப்புத்துறை புதிய கருவிகள் வாங்க நவீனப்படுத்த புதிதாக 10 கட்டடங்கள் கட்டத் திட்டம். இதற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு. 
  • 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்படும் 
  • ஏழை குடும்பங்களுக்காக தலா 4 ஆடுகள் வீதம் வழங்க ரூ.135 கோடி ஒதுக்கீடு. 
  • நடப்பு நிதி ஆண்டில் 111 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி. 
  •   ஸ்ரீர‌ங்க‌ம் தொகு‌தி‌யி‌ல் தே‌சிய ச‌ட்ட‌ப்ப‌ள்‌ளி அமை‌க்க‌ வழி வகை செய்யப்படும்.
  • ரூ.130 கோடியில் நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டடம் கட்டித் தரப்படும். 
  • காவிரி ஆற்றின் குறுக்கே முத்தரச நல்லூரில் தடுப்பணை கட்டப்படும். இதற்கான ஒதுக்கீடு ரூ.32 கோடி. 
  • சென்னை அருகே கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வு மேற்கொள்ளப்படும். 
  • ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு. 
  •   சிறைச்சாலை மேம்பாட்டுக்காக ரு.117 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை மாநகர காவல்துறையுடன் புறநகர் காவல்துறை இணைக்கப்படும். 
  • காவ‌ல்துறையை ந‌வீன‌ப்படு‌த்த ரூ.51 கோடி ஒது‌க்‌கீடு. 
  • 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைக்கப்படும். 
  • கூட்டுறவு விற்பனை இணையத்துக்கான வட்டியில்லா முன்பணம் ரூ.150 கோடியாக உயர்வு.
  • காய்கறி, தோட்டக்கலைப் பயிர் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை. 
  • வட்டியில்லா பயிர்க்கடனாக ரூ.3 ஆயிரம் கோடி வழங்க இலக்கு. 
  • கூட்டுறவுத் துறை மூலம் கடன்பெற்று உரிய முறையில் திருப்பி செலுத்துவோருக்கு சலுகை. 
  • நெல்லை, ஒரத்தநாடு பகுதிகளில் புதிதாக கால்நடை மருத்துவ கல்லூரிகள். 
  • ஏரி, அணை, கால்வாய்கள் ரூ.367 கோடி செலவில் சிரமைக்கப்படும். 
  • நாகை, பழையாறில் நவீன மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும். 
  • ரூ.74 கோடியில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும். 
  • 13 மீன் பிடி நகரங்களில் மீன் பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும். 
  • விசைப்படகுகள் எண்ணிக்கை உயர்த்த திட்டம். அதன்படி, நடப்பு ஆண்டில் புதிதாக 500 விசைப் படகுகள் வழங்க மானிய விலையில் கடன் ஏற்பாடு செய்யப்படும். 
  • ஆழ்கடல் மீன் பிடிப்பு ஊக்குவிக்க நடவடிக்கை. 
  • சேலம் மற்றும் திருநெல்வேலியில் சைபர் க்ரைம் குற்றப்பிரிவு நிறுவப்படும். 
  • மானிய விலையில் 5 ஆயிரம் புல்வெட்டிகள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். 
  • உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளுக்கு ரூ.237 கோடியில் திட்டம் அமல்படுத்தப்படும். 
  •   நுண்ணுயிர் பாசன திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு நூறு சதவீத முன்னுரிமை அளிக்கப்படும்.