பதிவுகள்

Thursday 29 March 2012

விதிவிலக்கு பட்ஜெட்!

தமிழக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் எல்லாமும் கருத்து தெரிவித்தாலும்கூட, தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு சுமை கூட்டும்படியான எந்த வரிவிதிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கை பள்ளிக் கல்வி, மின்சேமிப்பு இரண்டுக்கும் மட்டும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இந்த இரண்டு விஷயங்களுமே அரசுக்கு தொடக்க நாள் முதலாகவே தலைவலியைக் கொடுத்து வருவன என்பதால் இதற்கு அரசு அதிக கவனம் செலுத்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் பல இனங்களுக்கு வரி விலக்கும் வரி குறைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ள இனங்கள் பலவும் சாதாரண மக்களுக்கு அப்பாற்பட்டவையே. வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு 14.5% மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எண்ணெய் உற்பத்திக்காக வரிச்சலுகை அளிக்கப்பட்ட ஆலைகள் வரி ஏய்ப்பு செய்வது கண்டறியப்பட்டதால், ரூ.5 கோடிக்கும் குறைவாக உற்பத்தி இருந்தால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, 5 விழுக்காடு மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படவுள்ளது.
2012-13 நிதியாண்டு முதல் பத்திரப் பதிவுகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள புதிய வழிகாட்டுதல் மதிப்புப்படி தீர்மானிக்கப்படும் என்பதாலும், நிலத்தின் மதிப்பு பல நூறு மடங்கு உயர்ந்துள்ளது என்பதாலும், பத்திரப் பதிவு மூலம்தான் அரசுக்குக் கணிசமான வருவாய் கிடைக்கவுள்ளது. இதனால் ஏழைகள் யாரும் பாதிக்கப்படப்போவதில்லை என்றாலும், மத்திய தர வகுப்பினர் வீடு வாங்குவதற்கு பத்திரப் பதிவுக்கான அதிகரித்த தொகையையும் சேமித்தாக வேண்டுமே என்பது பயமுறுத்துகிறது.
இந்த பட்ஜெட்டில் மின்சேமிப்பைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். ரூ.3,573 கோடி மின்விநியோக திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வழித்தட மின் இழப்பை குறைக்க இது உதவும். மின்சேமிப்புக் கருவிகள், பேட்டரிகளில் செயல்படும் வாகனங்கள், புளோரசண்ட் பல்புகள் ஆகியவற்றுக்கு மதிப்புக்கூட்டு வரி 14.5 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு விளக்குத் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா புளோரசண்ட் பல்புகள் வழங்க அறிவிப்பும் செய்துள்ளனர். இதனால், மின் சேமிப்பு மிகப்பெரிய அளவில் கிடைக்காது என்றாலும் இது ஒரு நல்ல தொடக்கம்.
சர்க்கரை நோயாளிகளுக்காக அவர்களுக்குத் தேவைப்படும் இன்சுலின் மருந்து மீதான மதிப்புக்கூட்டு வரி ரத்தும், கோவை மற்றும் மதுரையில் புற்றுநோய் மையங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியவை.
இந்த நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்கு மிக அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.14,552 கோடியை ஒதுக்கியுள்ளனர். ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சீருடை, காலணி, புத்தகங்கள் என எல்லாவற்றையும் இலவசமாக அளித்துவந்த அரசு, தற்போது மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்களையும் இலவசமாக அளிக்க அறிவிப்பு செய்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை எந்தவிதச் செலவும் கட்டணமும் இல்லாமல் படிக்க முடியும் என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, பட்ஜெட்டுக்கு முன்பாகவே, 1223 அறிவுசார் பள்ளிகளை, கணினி பலகை கொண்ட வகுப்பறை வசதிகளுடன் உருவாக்கவும் அரசு அறிவித்திருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதை உணர முடியும்.
இன்றைய சூழ்நிலையில் பள்ளிக் கல்விச் செலவு ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிக அதிகமாக இருக்கிறது. 10-ம் வகுப்பு வரை ஒரு ரூபாய் செலவு இல்லாமல் கல்வி பெறும் வசதி இருந்தும் மக்கள் ஏன் தனியார் பள்ளிகளைத் தேடிப் போகிறார்கள்? இதற்குக் காரணம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான். அவர்கள் தங்களது குழந்தைகளையே அரசுப் பள்ளியில் சேர்க்கத் தயங்கும்போது, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நன்றாகச் சொல்லித் தருகிறார்கள் என்ற நம்பிக்கையை எப்படி ஏற்படுத்த முடியும்?
அரசு அலுவலர்களும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும் அரசில் பதவி வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டால் மட்டுமே, பொதுமக்கள் தங்கள் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க மனமுவந்து முன்வருவார்கள். அரசுப் பள்ளிகளின் தரமும் அப்போதுதான் அதிகரிக்கும்.
நிதிநிலை அறிக்கை என்பது இலவச அறிவிப்புகளும், வரவு செலவு அறிக்கையும் மட்டுமல்ல. அது அரசின் கொள்கை முடிவுகளையும், செயல்திட்டங்களையும் வெளிப்படுத்தும் ஆவணமும் கூட. அந்த வகையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மாநில அளவிலான கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு, விவசாய உற்பத்தி அதிகரிப்புக்கான செயல்திட்டம் போன்றவைகள் பற்றி தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லையோ என்கிற தோற்றம் வெளிப்படுகிறது. அதற்குக் காரணம், நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடுகள் காணப்பட்டாலும் அந்த ஒதுக்கீடுகள் எப்படி செலவிடப்படும் என்பதில் தெளிவு காணப்படாததுதான்.
அதிமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்திருக்கும் முழுமையான முதல் நிதிநிலை அறிக்கை இதுதான். நிர்வாகம் முழு கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டு அவகாசம் கொடுத்து அதற்குப் பிறகு கருத்துக் கூறுவதுதான் நாகரிகம் என்பதால் விமர்சனங்களை அடக்கி வாசித்திருக்கிறோம். ஆட்சியாளர்கள் நல்ல ஆட்சியை உறுதி செய்ய அவகாசம் அளிப்பதில் தவறில்லை!

Friday 2 March 2012

போதை உபாதை!

போதைப்பொருள்களில் ஒன்றான ஹெராயினைப் பயன்படுத்துவோர் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் எனப் புள்ளிவிவரம் தருகிறது "ஐக்கிய நாடுகள் சபை போதைப்பொருள்கள் அறிக்கை-2011'. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, "தெற்கு ஆசியாவில் 40 டன் ஹெராயின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 17 டன் ஹெராயின் இந்தியாவிலுள்ள போதைஅடிமைகளால்தான் நுகரப்படுகிறது என்று தெரிகிறது.
 ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தரும் புள்ளிவிவரத்தின்படி, ஆப்கானிஸ்தானில்தான் மிக அதிகமாக, அதாவது ஆண்டுக்கு 380 டன் ஓபியம் (அபினி) உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 5 டன் அவர்களே சாப்பிட்டதுபோக, மீதமுள்ள 375 டன் அபினியின் பெரும்பகுதி இந்தியா வழியாக உலக நாடுகளுக்குக் கடத்தப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக, தெற்கு ஆசியாவில், குறிப்பாக மியான்மர், லாவோஸ் நாடுகளில், 40 முதல் 50 டன் விளைவிக்கப்படுகிறது. வழக்கமாக உலக சந்தைக்குப் போக வேண்டிய இந்த போதைப் பொருள், தற்போது இந்தியாவிலேயே விற்பனையாகும் போக்கு அதிகரித்துள்ளது என்பதைத்தான் ஐ.நா அறிக்கையிலுள்ள புள்ளிவிவரம் நமக்கு உணர்த்துகிறது.
 2006-ம் ஆண்டு இந்தியாவில் போதைஅடிமைகள் எண்ணிக்கை 7.5 கோடி என்று ஓர் ஆய்வறிக்கை வெளியானது. அதன்படி, மது அடிமைகள் 6.25 கோடி, கஞ்சா போன்ற போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்கள் 90 லட்சம், அபினிக்கு அடிமையானவர்கள் 3 லட்சம், நோயாளிகளை அமைதிப்படுத்த மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளைப் பயன்படுத்தும் போதைஅடிமைகள் 10 லட்சம் என்று தோராயமாகக் கணக்கெடுத்தார்கள்.
 ஐ.நா. புள்ளிவிவரத்தின்படி, ஓபியம் எனப்படும் அபினி பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் தற்போது 30 லட்சம். அதாவது, கடந்த 6 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்பதுதான் கவலை தரும் விஷயமாக உள்ளது.
 இந்தியாவில் அபினி சாகுபடி சுமார் 7,500 எக்டேருக்கு நடைபெறுவதாகவும், இதில் சுமார் 1,000 எக்டேர் பயிரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அழித்ததாகவும் ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் சில மறைவான பகுதிகளில் பரவலாகவே கஞ்சா சாகுபடி செய்யப்படுவதும், பெயரளவில் சிறு பகுதியை மட்டும் காவல்துறையும் போதைப்பொருள் தடுப்புத் துறையும் நடவடிக்கை எடுத்து அழிப்பதும் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் வருடாந்திரச் சடங்காகத்தான் தொடர்கிறது. இதன் பின்னால் ஒரு மிகப்பெரிய மாபியாவே செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. சந்தனக் கடத்தலைவிட இந்தக் கஞ்சா மாபியா சக்தி வாய்ந்தது என்றும் கூறுகிறார்கள்.
 சாகுபடி செய்யப்படும் கஞ்சாச் செடிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கடத்துவதில் சிக்கல் இருப்பதால், கஞ்சாவை, எண்ணெய் வடிவத்தில் உருமாற்றிக் கடத்தும் போக்கும் உருவாகியிருக்கிறது. தங்க நாற்கரச் சாலையும் கன்டெய்னர் லாரிகளும் வந்துவிட்ட பிறகு கஞ்சா கடத்தல்காரர்களின் பணி மிகவும் சுலபமாகிவிட்டது என்கிறார்கள் போதைப்பொருள் தடுப்புத் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.
 கடத்தப்படும் போதைப்பொருள்களைத் தடுப்பதும் அழிப்பதும் ஒருபுறம் நடந்தாலும், இந்தியாவுக்குள் அதன் விற்பனையைத் தடுப்பது இன்றியமையாதது. போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு பெரும்பாலும் தடுப்பு நடவடிக்கையோடு நின்று விடுகிறது. இந்தியாவில் நகரப் பகுதிகளில் நடைபெறும் விற்பனை குறித்து கவலைப்படுவதில்லை. அந்தந்த மாநிலக் காவல்துறை மட்டுமே விற்பனையைத் தடுத்து நிறுத்த முடியும் என்கிற நிலையில் இந்தியாவின் மாநகரப் பகுதிகளில் இதுபற்றிய முனைப்பு காவல்துறைக்கு இருப்பதில்லை.
 போதைப்பொருள் விற்பனை செய்யக்கூடியவர்கள் யார்? எந்தெந்த இடங்களில், எந்தெந்த மறைமுக வழிகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பது காவல்துறைக்கு அத்துப்படி. காவல்துறை மனது வைத்தால் எந்த வகையான போதைப்பொருள்களும் சந்தையில் கிடைக்காமல் தடுத்துவிட முடியும். சந்தையில் கிடைக்காத நிலையில் இதைப் பயன்படுத்துவோர் அல்லது போதைஅடிமைகள் எண்ணிக்கை தானாகவே குறைந்துவிடும். ஆனால், போதைப்பொருள் விற்பனைக்குப் பின்னால் அரசியல் சக்திகள் இருப்பதுதான் காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 அடித்தட்டு மக்களும் சமூகத்தில் போக்கிரிகளாக அறியப்பட்டவர்களும் மட்டும்தான் போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்ற நிலைமை இன்றில்லை. போதைப்பொருள்களின் விலை உயர உயர, அதைப் பயன்படுத்துவோரும் உயர்குடி மக்களாக இருக்கின்றனர். மிகச் சிறந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தகவல்தொழில்நுட்பத் துறையில் மிகஅதிகமாகச் சம்பாதிக்கும் இளைஞர்கள் ஆகியோரைத்தான் இந்தப் போதைப்பொருள் வியாபாரிகள் குறி வைக்கின்றனர். அதன் விளைவாகத் தகவல் தொழில்நுட்பத் துறையின் கேந்திரங்களாக விளங்கும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற தென்னிந்திய நகரங்களில் போதைப்பொருள் விற்பனை மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது.
 போதைக்கு அடிமையாதல் என்பது வெறும் பொருளாதார இழப்பு மட்டுமல்ல. ஒவ்வொரு போதை அடிமையும் ஒரு குடும்பத்துக்கு நிரந்தரச் சுமையாக மாறிவிடுகிறார். ஆங்கிலேயர்கள் சீனாவை அடிமைப்படுத்தியதே போதைப் பழக்கத்தை அந்த நாட்டில் அறிமுகப்படுத்தியதன் மூலம்தான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான பங்குச் சந்தை, ஜிடிபி வளர்ச்சி, அன்னியச் செலாவணிக் கையிருப்பு, தெருவெல்லாம் மோட்டார் வாகனங்கள், வாழ்க்கை வசதிகள் என்றெல்லாம் இருந்தென்ன பயன்? நமது வருங்காலச் சந்ததியினர் போதைக்கு அடிமையாகி விடாமல் நம்மால் பாதுகாக்க முடியாமல் போனால், இவையெல்லாமே அர்த்தமற்றவை.