பதிவுகள்

Sunday 3 March 2013

திருத்துங்கள் சட்டத்தை!

சிறார் நிர்ணய வயதை 18-லிருந்து குறைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் இரு நாள்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 அதேவேளையில், புதுதில்லியில், பேருந்தில் பயணம் செய்த 23 வயதான துணை மருத்துவ மாணவி மீது பாலியல் தாக்குதல், வல்லுறவு, கொலை, குழுவாகச் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது, தடயங்களை அழித்தது ஆகிய குற்றங்களுக்காக 17 வயது வளர்இளம் பருவச் "சிறுவன்' மீது சிறார் நீதிமன்றத்தில் குற்றப்பதிவு தாக்கல் செய்யப்பட்டது. இத்தகைய குற்றங்களைச் செய்திருப்பவரை ஒரு சிறுவனாகக் கருத முடியுமா? இவை சிறுவன் செய்யக்கூடிய செயல்கள்தானா? என்கிற நியாயமான கேள்வி எழுகிறது.
 அண்மையில் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தில் சிறுவன் என்பதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது 18. இதை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. தில்லி வழக்கில் 17 வயது உள்ளவரை சிறுவனாகக் கருதுவது, அரசியல் சட்டத்தின் பிரிவு 14 வழங்கும் சம உரிமை, பிரிவு 21 வழங்கும் வாழ்வுரிமை மற்றும் தனியுரிமை ஆகியவற்றைப் பாதிப்பதாக இருக்கிறது என்பது இந்த பொதுநல வழக்கைத் தொடுத்தவரின் கருத்து. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும்கூட அறிவுறுத்தியிருந்தது.
 இந்நிலையில், மாநிலங்களவையில் எழுத்துமூலமாக அமைச்சர் அளித்த பதிலில்,  சிறார் வயதைக் குறைக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
 துணை மருத்துவ மாணவி தில்லியில் டிசம்பர் 16-ஆம் தேதி அடைந்த துயரகதிக்கு, இந்தச் சிறுவன் மீது எத்தனை பிரிவுகளில் வழக்குகள் போட்டாலும், இதனால் அவருக்குக் கிடைக்கப்போகும் தண்டனை என்னவாக இருக்க முடியும்? இந்தக் கும்பலில், அந்தப் பெண்ணுக்கு மிகஅதிகமான  கொடுமைகளை இழைத்தது இந்த 17 வயது சிறுவன்தான். ஆனாலும், தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவசர சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள தண்டனைகள் எதுவுமே இந்த சிறுவனுக்குப் பொருந்தாது. இது நன்றாகத் தெரிந்தும் சிறார் வயதைக் குறைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றால் எப்படி?
 மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில், சிறார் நிர்ணய வயதைக் குறைக்க பரிந்துரைக்கப்பட்டது. இருந்தாலும், வர்மா கமிஷன் அறிக்கையில், இவ்வாறு சிறார் வயதைக் குறைப்பதை ஆட்சேபித்துள்ளதைச் சுட்டிக்காட்டி சிறார் நிர்ணய வயதைக் குறைக்கும் திட்டம் இப்போது அரசிடம் இல்லை என்று விவகாரத்தைக் கிடப்பில் போடுவது சரியல்ல.
 திருடுதல், வழிப்பறி, கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவரைச் சிறார் சட்டத்தில் தண்டிப்பது சரியானதுதான். சில தருணங்களில் கொலையும்கூட சிறார் தண்டனைச் சட்டத்திற்குப் பொருந்தும். ஆனால், வல்லுறவு மற்றும் பெண்கடத்தல், பெண்ணைத் தூக்கிச்செல்லுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் ஆண், 18 வயது நிரம்பாதவர் என்பதால், அவரை சிறார் என்று சொல்லிவிட முடியுமா?
 இன்றைய சமூகச் சூழலும், ஊடகங்களும், தகவல் தொழில்நுட்பத்தால் காணக் கிடைக்கும் தடையற்ற ஆபாசங்களும் இளைஞர்களை சுமார் 15 வயதிலேயே பாலியல் வேட்கை அதிகம் உள்ளவர்களாக மாற்றிவிடுகின்றன. இதன் விளைவாக காதல் சார்ந்த தகராறுகள் அதிகரித்துள்ளன. வல்லுறவு, பெண்கடத்தல், பெண்ணைத்தூக்கிச் செல்லுதல் ஆகிய குற்றங்களில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
 நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அளித்த, தேசிய குற்ற வழக்குகள் பதிவகத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் தில்லி பெருநகரில் மட்டும், கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட சிறார் எண்ணிக்கை முறையே 57, 35, 37. அதாவது குறைகிறது. ஆனால் அதே தில்லியில், வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்ட சிறார் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் முறையே 26, 37, 47. ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. பெண்கடத்துதல், தூக்கிச்செல்லுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட சிறார் முறையே 8, 11, 30. ஆண்டுதோறும் கூடுகிறது.
 இந்தப் புள்ளிவிவரம் தில்லி மாநகருக்கு மட்டுமானது என்றாலும், ஏறக்குறைய இதே நிலைமைதான் இந்தியா முழுவதிலும் என்று உணரலாம்.
 தற்போது தில்லி மாணவி வழக்கில், 17 வயது என்கின்ற ஒரே காரணத்துக்காக கடுமையான தண்டனையிலிருந்து அந்தக் குற்றவாளி தப்பிவிடுவார் என்றால், இது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். வல்லுறவுக் குற்றத்தில் ஈடுபடுபவரை நிச்சயமாக சிறுவனாகக் கருத முடியாது. ஆகவே, குற்றத்தின் அடிப்படையில் அவரை "வளர்ந்த மனிதன்' என்றே பார்க்க வேண்டும்.
 சிறார் நிர்ணய வயதை 16 ஆகக் குறைக்கும்போது, அது சிறுமிகளுக்கும் பொருந்தும் என்பதாலும், அத்தகைய நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மகளிர் அநீதிக்கு ஆளாக நேரிடலாம், வேறு சட்ட சிக்கல்கள் எழக்கூடும் என்கின்ற அச்சம் அரசுக்கு இருந்தால் அது நியாயமானதுதான்.
 இருப்பினும், "16 வயது முதல் 18 வயது வரையிலான ஒரு ஆண், வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டால், குற்றத்தின் தன்மையைக்கொண்டு அவரைச்  சிறுவனாகக் கருத வேண்டியதில்லை' என்று சட்டத்திருத்தம் செய்து, குற்றத்தின் அடிப்படையில் அவரைத் தனிமைப்படுத்துவது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.
 பெரிய வீட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் சட்டத்திருத்தம் கொண்டுவர அரசு தயங்குகிறதோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. இந்திய நாடாளுமன்றம் ஆணாதிக்கவாதிகளின் கூடாரமாகிவிடக் கூடாது. பெண்களைத் தெய்வமாக மதிக்கும் இந்தியாவில் சட்டங்கள் பெண்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களுக்கு சாதகமாகவும் இருத்தலும் கூடாது!