பதிவுகள்

Thursday 13 September 2012

தீர்ப்பு, தீர்வல்ல!

நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை நடவடிக்கைகளை பத்திரிகைகள், ஊடகங்களில் வெளியிடுவது தொடர்பான நெறிமுறைகளை வகுக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால், நீதிமன்றம் இத்துடன் நிற்கவில்லை. சில நேர்வுகளில், குற்றம் சாட்டப்பட்ட நபர் அல்லது நிறுவனம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் ஊடகங்களில் இடம்பெறக்கூடாது என விரும்பினால், நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்திகள் வெளியாவதைத் தள்ளிப்போடலாம் என்றும் கூறியிருக்கிறது. அந்தந்த வழக்குக்கு ஏற்ப, நடவடிக்கைகளை வெளியிடுவதைத் தள்ளிப்போடுவது குறித்த உத்தரவை அந்தந்த நீதிமன்றங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
"விசாரணையும், தீர்ப்பும் செய்திகள் மூலம் பாரபட்சமானதாக அமைந்துவிடும் ஆபத்துள்ளதாகக் கருதப்படும் வழக்குகளில், செய்திகளைத் தள்ளிப்போடுவது தேவையாக இருக்கிறது' என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஊடகங்கள் மற்றும் எதிர்தரப்பினர் ஆகிய இருவரையும் சமாளிக்கும் விதத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இது என்று சொல்லப்பட்டாலும், இந்தத் தீர்ப்பு ஊடகங்களுக்கு சாதகமான தீர்ப்பாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பெரிய இடத்து விவகாரங்களைப் பொருத்தவரை, அவர்கள் தங்கள் வழக்கு விசாரணை செய்திகளைத் தள்ளிப்போட நீதிமன்ற உத்தரவுகளை நிச்சயமாகக் கோரிப் பெறவே முயல்வர். அப்போது, பல வழக்குகளில் செய்திகளை சில நாள்கள், சில மாதங்கள் தள்ளித்தான் பிரசுரிக்க அல்லது ஒளிபரப்ப நேரிடும். ஆறின கஞ்சி பழங்கஞ்சி!
விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, ஒரு நபரை அல்லது நிறுவனத்தைக் குற்றவாளிபோல சித்திரிக்கும் நடவடிக்கை, அண்மைக்காலமாக ஊடகங்களில் பத்திரிகைகளில் அதிகரித்துவிட்டது என்பது உண்மைதான். அதற்காக எல்லாச் செய்திகளையும் தள்ளிப்போடலாமா? அது சரியாக இருக்குமா?
இத்தகைய நேர்வுகளில் மந்தணம் (ரகசியம்) என்பதன் பொருளை எவ்வாறு தீர்மானிப்பது? விசாரணை நடவடிக்கை வெளியாவதைத் தள்ளிப்போடக் காலஅவகாசம் என்ன? அதையும் உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியிருந்தால், பல்வேறு சிக்கல்களைத் தவிர்க்க உதவியாக இருந்திருக்கும்.
தனிநபர்களின் அந்தரங்கம் குறித்த வழக்கு விசாரணை நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளைத் தள்ளிப்போட உத்தரவிடுவது சரியாக இருக்கும். ஆனால், ஊழல் வழக்குகள், நிறுவனங்கள் மீதான புகார்களில், "ரகசியம்' என்ற பெயரில் வழக்கு விசாரணை நடவடிக்கைகளைப் பிரசுரிக்காமலோ, ஒளிபரப்பாமலோ தள்ளிப்போடுவது சரியாக இருக்குமா?
ஊடக நெறிமுறை வேண்டும் எனும் இந்த வழக்கிற்கு காரணமான சஹாரா நிறுவனத்தையே எடுத்துக்கொள்வோம். சஹாரா நிறுவனம் பொதுமக்களிடம் பெற்ற பங்குத்தொகை ரூ.14,000 கோடியை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று கண்காணிப்பு அமைப்பான "செபி' கூறியது. அதை ஏற்க சஹாரா மறுத்தது. இந்த வழக்குத் தொடர்பாக சஹாரா நிறுவனம் நீதிமன்றத்தில் முன்வைத்த சில ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகி, விமர்சனங்கள் எழுந்தன. ஆகவே, ரகசிய ஆவணங்களை விசாரணையின் முடிவு தெரியும் முன்பாகவே ஊடகங்கள் வெளியிட்டதற்கு சஹாரா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த வழக்கைப் பொருத்தவரை, சஹாரா நிறுவனத்தின் ஆவணங்கள் அனைத்து மக்களிடம் வசூலித்த பங்குத்தொகை பற்றியது. இதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?
ஒவ்வொரு பங்குதாரரும் இந்த வழக்கில் சஹாரா நிறுவனம் தாக்கல் செய்யும் அனைத்து ஆவணங்களையும் அறிய முழு உரிமை பெற்றவர்தானே? எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், பங்கு வர்த்தக முறைகேடு, லாபம் காட்டுவதில் முறைகேடு என்று பிரச்னைகள் எழுந்தால், அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படையாக சொல்லித்தானே ஆக வேண்டும்?
ஆனால், தனிநபர் சார்ந்த விவகாரங்கள் வேறானவை. இதில், பிங்கி பிரமாணிக் குறித்த வழக்கு ஒரு சான்று. ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற பிங்கி, தன் உடன்வாழ் பெண்ணை வல்லுறவு கொண்டதாக புகார் எழுந்தது. ஒரு வார காலத்துக்கு ஊடகங்களில் முதல் செய்தியாக, பத்திரிகைகளில் முதல்பக்கச் செய்தியாக அது இடம்பெற்றது. இப்போது அந்த வழக்கு மறக்கப்பட்டுவிட்டது.
பணியிடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் ரயில்வே பணியில் சேர்ந்த செய்தி யாருக்காவது தெரியுமா? நாளை அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் சொல்லக்கூடுமேயானால், அந்தச் செய்தியும் பத்து செய்திகளில் ஒன்றாக ஓடி மறையும்.
அதேபோல, தற்போது பல ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகக் கைது செய்யப்பட்டுள்ள சஹானாஸ் குறித்த வழக்கில், அவர் அந்தரங்கம் கருதி, வழக்கு நடவடிக்கைகளை வெளியிடுவதைத் தள்ளிப்போட உத்தரவிடும்படி கோரினால், அதில் யாரும் குறை காண முடியாது.
ஆனால் இதே அளவுகோலை, 2ஜி மற்றும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்குகளிலும் விசாரணை நடவடிக்கைகளை உடனே வெளியிடத் தடை விதிக்கக் கோரினால் அது சரியாகுமா?
"பல்வேறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் ஊடகங்கள் சிக்கிக்கொள்வதை சமநிலைப்படுத்தும் விதமாக இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது' என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். "கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் தங்களுக்கான லட்சுமணக் கோட்டினை ஊடகங்கள் தாங்களே போட்டுக்கொண்டு அதை மீறாமல் இருக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.
"ராவண வதங்களுக்காக' சில "லட்சுமணக் கோடுகள்' தாண்டப்படும் என்றால் அதில் தவறில்லை. இதுபோன்ற தீர்ப்புகள், பல மோசடிகளையும், ஊழல்களையும் மறைக்க பயன்படுத்தப்படும் என்பது கூடவா உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியவில்லை?