பதிவுகள்

Wednesday 30 March 2011

மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்!

ஆசியா பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளில் மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.ஹாங்காங்கைச் சேர்ந்த வர்த்தக ஆலோசனை நிறுவனமான பிஇஆர்சி நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.இந்த ஆய்வில் ஊழல் நாடுகளுக்கு 0 முதல் 10 வரையிலான புள்ளிகளை அந்த நிறுவனம் வழங்கியிருந்தது. அதில் இந்தியா 8.67 புள்ளியைப் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் 8.9 புள்ளிகளும், இந்தோனேசியா 9.25 புள்ளிகளும், கம்போடியா 9.27 புள்ளிகளும் பெற்று ஊழல் மிகுந்த நாடுகளில் முன்னணி வகிக்கின்றன.சீனா 7.93 புள்ளிகளும் வியட்நாம் 8.3 புள்ளிகளும் பெற்றுள்ளன. தாய்லாந்து 7.55 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது. ஹாங்காங் 1.10 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 1.39 புள்ளிகளும், ஜப்பான் 1.90 புள்ளிகளும், அமெரிக்கா 2.39 புள்ளிகளும் பெற்றுள்ளன.சிங்கப்பூர் 0.37 புள்ளிகள் மட்டும் பெற்று நற்சான்றிதழ் பெற்றுள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய அளவிலான அரசியல் தலைவர்களைவிட இதர சிறு பதவிகளில் உள்ள தலைவர்களிடமே ஊழல் அதிகம் காணப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

Saturday 26 March 2011

ஜோதிடம் பார்த்த தேர்தல் பார்வையாளர்கள்!



காஞ்சிபுரத்தில் நாடி ஜோதிடம் பார்க்கச் சென்ற தேர்தல் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்களைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில், தேர்தல் பணிகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் நேற்று காஞ்சிபுரம் பெரியார் நகரில், நாடி ஜோதிடம் பார்க்கச் சென்றனர். தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் சென்றனர். நாடி ஜோதிடம் அலுவலகம் வெளியே நிறுத்தப்பட்டிருந்த தேர்தல் பார்வையாளர்களின் கார்களை புகைப்படம் எடுத்தனர். தகவல் அறிந்து, வெளியே வந்த தேர்தல் பார்வையாளர்கள் வேகமாக காரில் ஏறி பறந்தனர்.

முதல்வர் கோபப்படுவானேன்?

தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாகக் கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
 இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குப் போலீஸ் டிஜிபி முதல் மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள்வரை பல பேரை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் நேர்மையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதற்காக- தமிழக அரசிடம்கூட கேட்காமல்- இவர்களை மாற்றியிருக்கிறார்கள் என்பது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வருத்தம்.
 தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலும்கூட காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் கூட, தேர்தல் முடியும்வரை வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது எதற்காக அதிகாரிகள் மாற்றத்துக்காக முதல்வர் இவ்வளவு கோபம் கொள்ள வேண்டும்?
 தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறப்பாகவும், பாரபட்சமின்றியும், ஆளும்கட்சியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் நடவடிக்கையை முடுக்கியிருப்பது பொதுமக்களிடம் தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் மதிப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கி வருகிறது.
 வெறுமனே எதிர்க்கட்சிகள் கூறியதால் இந்த நடவடிக்கை என்று முதல்வர் கூறினாலும், தேர்தல் ஆணையம் மிக எச்சரிக்கையாகவும், இது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டால் பதில் சொல்லக்கூடிய ஆதாரங்களுடனும்தான் செயல்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலாக, அரசு இலவச கலர் டி.வி. வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பல இடங்களில் டி.வி. கிடைக்கப்பெறாதவர்களுக்கு டோக்கன் கொடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு டி.வி. கொடுப்போம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையுத்தரவுக்குப் பிறகும் இத்தகைய நடவடிக்கை ஒரு மாவட்டத்தில் நடக்கும் என்றால் அது அந்த மாவட்ட வருவாய்த்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியரின் இணக்கம் இல்லாமல் இயலாது.
 இத்தகைய ஆட்சியாளர்கள் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு எத்தகைய ஒத்துழைப்புத் தர முடியும்? ஆகவே தேர்தல் முடியும் வரை அவர்களை வேறு பணிக்கு மாற்றுவதில் என்ன தவறு?
 இத்தகைய புகார்களை எதிர்க்கட்சிகள் கூறியதால் மட்டுமே தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அவர்கள் பல இடங்களில் ஆய்வு செய்தும், விசாரித்தும், விடியோ பதிவுகள் மூலம் "ஷேடோ ரிஜிஸ்டர்' எனப்படும் நிழல்பதிவு மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் கிடைக்கும் செய்திகளையும் வைத்துத்தான் இந்த இடமாறுதல்களைச் செய்துள்ளனர்.
 நியாயமாகப் பார்த்தால், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆட்சியாளர்கள் மீதும் மற்ற அலுவலர்கள் மீதும் துறைவாரி நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதைச் செய்யாமல் வெறுமனே இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது என்பதை முதல்வர் ஏன் ஏற்க மறுக்கிறார் என்று தெரியவில்லை.
 கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.17 கோடி வரை, கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக இதுபற்றிப் பேசாத முதல்வர், இப்போது சில அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டபோது குரல் கொடுக்கிறார்.
 தேர்தல் ஆணையம் நடத்தும் இத்தகைய வாகனச் சோதனைகள் சாதாரணப் பயணிகளுக்கும்கூட சில நேரங்களில் இடையூறாகவும் காலதாமதப்படுத்துவதாகவும் அமைகிறது என்பது உண்மையே. ஆனால் இந்த நடவடிக்கைகள், கருப்புப் பணத்தைக் கொண்டு செல்வோருக்கு மட்டுமே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நியாயமான கணக்கு உள்ள பணத்தைக் கொண்டு செல்வோர் தினமும் வங்கிகளுக்குக் கொண்டு செல்லவும் பணம் செலுத்தவும் தடை எதுவும் இல்லை.
 அரசுக்குத் தெரியாமல், வருமான வரித்துறைக்குத் தெரியாமல் வியாபாரம் செய்வோர் மட்டுமே, காசோலைகளை, வரைவோலைகளைப் பயன்படுத்தாமல் ரொக்கமாக எடுத்துச் செல்கின்றனர் என்பதுதான் பல சோதனைகள், பணப்பறிமுதல்கள் மூலம் தெரியவந்துள்ள உண்மை. எதற்காக அந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டது என்பதற்குச் சரியான காரணமும் விளக்கமும் அளித்தவர்களுக்கு அந்தப் பணம் திரும்ப வழங்கப்பட்ட செய்திகளும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன.
 தேர்தலுக்காக மட்டும் இது நடத்தப்படாமல், எல்லா நாள்களிலும் நடத்தப்பட்டால் கருப்புப் பணப் புழக்கம் மிகவும் குறையும் என்று அரசுக்கு யோசனை சொல்ல வேண்டிய முதல்வர், இந்த நடைமுறையைக் கண்டிப்பது ஏன் என்று புரியவில்லை.
 தேர்தல் ஆணையம் இப்போது மிகத்தெளிவாக ஒன்றைத் தெரிவித்துள்ளது. வாக்குப் பெறுவதற்காகப் பணம், பொருள் கொடுக்கும் அரசியல் கட்சி மீது வழக்குப் பதிவு செய்வதோடு, அதை வாங்கிக்கொள்ளும் வாக்காளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் பெறுவதும் குற்றம்.
 இந்தக் குற்றத்தை நிரூபிக்க கைப்பேசியில் பதிவு செய்த புகைப்படங்கள்கூடப் போதுமானது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகள் கெடுபிடிகள் என்றே வைத்துக்கொண்டாலும் இது அடுத்துவரும் ஐந்தாண்டு கால ஆட்சிக்கானது என்பதைக் கருதினால் இந்த இரு வார கெடுபிடிகள் பெரிய விஷயமல்ல. சோதனையிடும்போது நேர்மையாளர்கள் சில சிரமங்களை அனுபவிக்கக்கூடும்தான். மக்களாட்சி முறையாக நடைபெறுவதற்காக கொஞ்சம் சிரமம் அனுபவித்தால்தான் என்ன?
 வாக்குக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள்தான் இந்த நடவடிக்கையை எதிர்க்கும், கண்டிக்கும், கூக்குரலிடும். எதிர்க்கட்சிகளின் குரல் கேட்கவில்லை. ஆளும் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் குரலும் கேட்கவில்லை. ஆனால் முதல்வர் குரல் அல்லவா கேட்கிறது, ஏன்?
 

இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்-ஜெயலலிதா

2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள் இடம்பெறாத வகையில் திருத்தியமைக்கப்பட்டது. ஆனால், கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு, 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்தார்; இதையும் முறையாக அமல்படுத்தவில்லை. அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தி அறிவிக்கப்படும். இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்கப்படும்; இஸ்லாமியர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

Thursday 24 March 2011

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை!


திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த  ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
  • மாணவர்களுக்கு லேப்டாப் : பிளஸ்- 1, பிளஸ் - 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும். 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியன தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். கேபிள் டி.வி., அரசுடைமையாக ஆக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.
  • பேன், மிக்சி, கிரைண்டர் : அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்படும். நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மகளிருக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.
  • மும்முனை இணைப்பு மின்சாரம் : கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கெ?ள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரணைக்கப்படும். வீடு, தெ?ழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும்.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நபர்களுக்கு 4 ஆடுகளும், முக்கிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 60 ஆயிரம் மாடுகள் வரை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  •  அரசு ஊழியர் நலனுக்கு பாதுகாப்பு : அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க மீனவர்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்றார். மீன்பிடிக்கு தடை விதிக்கப்படும் 45 நாட்களுக்கு மீனவர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 2000 வழங்கப்படும். பருவகாலத்தில் மீன் பிடிக்கு இடையூறு ஏற்படும் போது ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும். இலவசங்கள் வழங்குவதில் தி.மு.க.,விற்கு அ.தி.மு.க., சளைத்ததல்ல்

Sunday 20 March 2011

வைகோவுக்கு ஜெ., கடிதம்!

அ.தி.மு.க.,வில் தங்களது தலைமையிலான ம.தி.மு.க.,வும் கடந்த 2006 ம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வருகிறது. நடைபெற இருக்கும் 2011 ம் சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியல் சூழ்நிலைகளையும், அ.தி.மு.க,., தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருப்பதையும் முதிர்ந்த அரசியல்வாதியான நீங்கள் நன்கு அறிவீர்கள் . எனவே உங்கள் கட்சிக்கு 21 தொகுதிகள் ஒதுக்க முடியாது. 12 தொகுதிகள் ஒதுக்கி தருகிறோம் என்று பொருளாளர் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் மூலம் உங்களுக்கு சொல்லி அனுப்பினேன். இருப்பினும் தாங்கள் தேர்தலை புறக்கணிக்கும் என்ற அறிவிப்பு மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. தங்களது கட்சியின் முடிவு நிலை குறித்து தாங்கள் முடிவு எடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. இருப்பினும் உங்கள் அன்பு சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் உங்கள் மீது எப்போதும் இருக்கும். -வைகோவுக்கு ஜெ., கடிதம்!

Wednesday 16 March 2011

ஒரு அரசியல் அனாதையின் கதை!

ஒரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம். ம.தி.மு.கவின் தலைமை அலுவலகம். நேற்று முளைத்த காளான் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகளெல்லாம் ஊடகங்களில் ஆரவாரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அந்த தலைவர் மட்டும் அவரது அண்ணா நகர் வீட்டில், தனிமையில் பேச முடியாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டு அடைந்து போயிருக்கிறார். அவர் வைகோ.
தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த வினவின் முதல் கட்டுரையே இப்படி ஒரு சோக சக்கரவர்த்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதில் எங்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் கூர்ந்து கவனித்தால் இது சோகமில்லை, நகைச்சுவை என்பதறியலாம். என்ன, இந்த நகைச்சுவையை பார்த்து யாரும் வாய்விட்டு சிரிக்க முடியாது என்பதுதான் சோகம்.
வரலாற்றில் சோகம் என்பது ஒருவருக்கு ஒரு விடயத்தில் ஒருமுறைதான் வரமுடியும். ஆனால் வைகோவுக்கு மட்டும் அது தொடர்கதையாகி விடுகிறதே? நாளிதழ்களில் தேர்தல் குறித்த நவரசங்களும் விதவிதமாக ஊற்றி எழுதப்படுகின்றன. அரசியலையே மக்கள் நலன் நோக்கு இன்றி ஒரு பரபரப்பு, இரசனை, விறுவிறுப்பு கலந்த நொறுக்குத்தீனியாக கொடுப்பதையே ஊடகங்கள் செய்துவருகின்றன. அதில் கார்த்திக், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்ற நட்சத்திரங்களெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் போது வைகோ மட்டும் பிலாக்கணம் வைத்து அழுது கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த தேர்தலில் ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் நவரசத்தில் வைகோதான் சோகத்தின் நாயகனோ?

சில வருடங்களுக்கு முன்பு அநேகமாக 2007 என்று நினைவு. சென்னை புறநகர் ஒன்றில் ம.தி.மு,க துவங்கி பதிநான்கு ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம். நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரை. கழகத்தின் கண்மணிகளுக்கு முகமன் சொல்லி பேச ஆரம்பித்தார். ” எகிப்து பிரமிடில் இருப்பது 14 படிகள், ரோமாபுரி பந்தய மைதானத்தில் இருப்பது 14 படிகள், தி ஹேக் நகரின் சர்வதேச நீதிமன்றத்தில் இருப்பது 14 படிகள், வெள்ளை மாளிகை, ராஷ்ரிபதி பவன் எல்லாம் 14 படிகள், ராமன் வனவாசம் 14 ஆண்டுகள், பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் 14 ஆண்டுகள்” என்று பிடித்தவர் அது போல வைகோவின் 14 ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது என்றார். இனி அவர்தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்க போகிறவர் என்றும் சொன்னார். ஆனால் அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லவில்லை. அந்த வரைக்கும் கொஞ்சம் அடக்கம் இருந்தது உண்மை.

அப்போதே யோசித்தேன். இந்த வனவாசம் இன்னும் 20,25,50 ஆண்டுகள் என்று போனால் நாஞ்சில் சம்பத் வாயில் உலக வரலாறும், உலக கட்டிடங்களும் என்ன பாடுபடும் என்று நினைத்தேன். அதனால்தான் வைகோவின் விசயத்தில் சோகமல்ல, நகைச்சுவையே மேலோங்கி இருக்கிறது என்று மீண்டும் உறுதிபடுத்துகிறோம்.

வைகோ குறித்து நடுநிலைமையாளர்கள் சிலரிடம் உயர்ந்த மதிப்பீடு இருக்கிறது. “அவர் நல்லவர், இன்னும் ஊழல்கறை படியாதவர், பேச்சாற்றல், தலைமைப் பண்பு உள்ளவர், இறுதி வரை ஈழத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்தவர்” என்று அவரை போற்றுகிறார்கள். வைகோவின் கூட்டணி மாற்றங்கள் குறித்து விமரிசப்பவர்கள்கூட இந்த விடயங்களை ஒத்துக் கொள்கிறார்கள். எனினும் இது மிகவும் பிழையான சென்டிமெண்டான மதிப்பீடு என்கிறோம். ஒருவேளை சென்டிமெண்டாக உணர்ச்சிவசப்பட்டு, படுத்தி பேசும் வைகோ குறித்து இப்படித்தான் எண்ணுவார்களோ தெரியாது.

சென்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களை ம.தி.மு.க வென்றது. வரும் தேர்தலில் கூட்டணியில் மாற்றமில்லை என்றாலும் வைகோவிற்கு இரட்டை இலக்கில் இடங்கள் கிடைக்காது என்றுதான் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 41, சி.பி.எம்முக்கு 12, சி.பி.ஐக்கு 10 பிறகு சின்ன கட்சிகளுக்கு ஒரிரு இடங்களெல்லாம் முடிவாகிவிட்ட நிலையில் ம.தி.மு.கவின் இடம் குறித்து மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தே.மு.க.தி.க வந்திருப்பதால் அதிக இடம் கொடுக்க முடியாது என்கிறது அ.தி.மு.க. வைகோ இதை உணராமல் இல்லை. எனினும் அவர் 25இல் ஆரம்பித்து 20இல் நின்று இறுதியாக 15வது கொடுங்கள் என்கிறாராம். அம்மாவோ 5இல் ஆரம்பித்து 7,8 என்று நிற்பதாக தகவல். இதனால்தான் புரட்சிப் புயல், புரட்சித் தலைவியை பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட முடியாமல் அண்ணாநகர் வீட்டில் முடங்கி கிடக்கிறது.

ஆனாலும் நண்பர்களே இந்தக்காட்சி இப்போதுதான் முதல்முறையாக நடக்கிறது என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இரு வருடங்களுக்கு முன்னர் கூட அட்சர சுத்தமாக இப்படித்தான் நடந்தது. அதை கொஞ்சம் ஃபிளாஷ்பேக்கில் சென்று பார்ப்போம்.

2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல். அ.தி.மு.க அணியில் ம.தி.மு.க, பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ முதலான கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. இதில் ம.தி.மு.கவைத் தவிர மற்ற கட்சிகள் சமீபத்தில்தான் சேர்ந்திருந்தன. அவர்களுக்குரிய தொகுதிகளெல்லாம் ஒதுக்கப்பட்டாலும் வைகோவுக்கு ஒதுக்கீடு முடியவில்லை. அ.தி.மு.க நான்கு தருவதாக சொன்னது. வைகோ கராராக ஆறு என்று கேட்டார். அப்போதும் இதே நிலைதான். சோகம்தான்.

அப்போது ஈழப்பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தென்மாவட்டங்களை சேர்ந்த 200 மாணவர்கள் ஈழத்தமிழருக்காக சென்னையில் வந்து போராடுவதற்கு இரயிலில் வந்தனர். அவர்களை வரவேற்க வைகோ நிலையம் சென்றார். “ஈழத்தின் எதிரி ஜெயலலிதா அணியிலிருந்து வைகோவே வெளியேறு” என்று மாணவர்கள் முழக்கமிட்டார்கள். அதிர்ச்சியில் உறைந்த வைகோ செய்வதறியாது திரும்பினார். வெளியே நிருபர்கள் இன்னமும் தொகுதி உடன்பாடு முடியாதது குறித்து கேட்டார்கள். ” அது குறித்து பேசும் மனநிலையில் நான் இல்லை” என்று வைகோ வெருட்டென்று போய்விட்டார்.

இந்த மனநிலை ஈழத்தின் சோகத்தினால் வந்ததென்று நீங்கள் தவறாக கருதிவிடக்கூடாது. உண்மையில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் இந்த வருத்தம்.

ஒரு வழியாக ம.தி.மு.கவிற்கு நான்கு தொகுதிகள் விருதுநகர், தஞ்சை, நீலகிரி, ஈரோடு முடிவாகி வைகோவும் சிரிக்காத முகத்துடன் உம்மென்று ஜெயா அருகில் போஸ் கொடுத்து ஒப்பந்தத்தை காட்டினார். இந்த தொகுதிகளெல்லாம் அ.தி.மு.கவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாதது என்பதால் இதில் வெல்ல முடியாதென்பது வைகோவிற்கு தெரியாமல் இருந்திருக்காது. இருந்தாலும் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்?

அப்போதும் ஏன் இப்போதும் கூட அவர் தனியாக தேர்தலில் நின்று பார்க்க முடியாது. அத்தகைய வெற்று சவடால் அடிப்பதற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லை.

ஆனால் அப்படி தனியாக வென்று காட்டுவதற்கென்றுதான் கட்சி ஆரம்பித்தார்.

1944-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கலிங்கப்பட்டியில் பிறந்த வை. கோபால்சாமி, மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலமாக அரசியலுக்கு அறிமுகமாகிறார். தி.மு.கவில் சேர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க இளைஞராக உருவெடுக்கிறார். 70களில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார். 80களில் ஈழப்பிரச்சினை முன்னுக்கு வரும்போது தி.மு.கவின் நிலைக்கேற்ப வைகோ அதில் தீவிரம் காட்டுகிறார். தனியாக சென்று பிரபாகரனை பார்க்கிறார்.

தலைமை பண்பு அற்ற மு.க ஸ்டாலினைவிட வைகோவின் செல்வாக்கு தி.மு.கவில் உயர்கிறது. பிரச்சினை வருகிறது. வைகோவா, ஸ்டாலினா என்ற போட்டியில் வைகோ கருணாநிதியிடமிருந்து விலகுகிறார். 1993-இல் ம.தி.மு.க உதயமாகிறது. எப்படியும் கருணாநிதி மரித்த பின் தி.மு.கவை முழுவதுமாக கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கு வைகோவிற்கு இல்லாமல் இருந்திருக்காது.

தி.மு.கவிலிருந்து ம.தி.மு.க பிரிந்தது கொள்கை முரண்பாட்டினால் அல்ல. அது தலைமையை யார் வைத்திருப்பது என்ற ஆதிக்க சண்டையின் விளைவாக நடந்தது. மற்றபடி கருணாநிதியின் உயிருக்கு வைகோவால் ஆபத்து என்ற புளுகை இப்போது கருணாநிதியன் பேரன்களே சட்டை செய்யமாட்டார்கள். இந்த பிளவுக்கு வைகோ காரணமாக இருக்கவில்லை என்றாலும் அவர் இதை ஒரு கொள்கை பிரச்சினையாக பார்க்கவில்லை. தி.மு.கவின் பிழைப்புவாதம், காரியவாதம், ஊழல் அத்தனையும் கொண்டிருந்த பத்து பதினைந்து கொட்டை போட்ட பெருச்சாளிகள்தான் அப்போது வைகோ உடன் சென்றனர். அவர்களும் கூட பின்னர் தி.மு.கவை வைகோ கைப்பற்றுவார் என்று கணக்கு பார்த்து சென்றிருக்கலாம். தற்போது அந்த கணக்கு பொய்த்திருப்பதால் அவர்களில் பெரும்பகுதியினர் ம.தி.மு.கவிலிருந்து விலகிவிட்டனர்.

மேலும் தி.மு.கவில் வைகோ ஒரு தலைவராக உருவானது என்பது தி.மு.கவின் எல்லா தலைவர்களும் தன்னை திட்டமிட்டே ஒரு தலைவராக உருவாக்கிய பாதையில் சேர்ந்ததுதான். படிப்பு, எழுத்து, செயற்கையான அலங்காரப்பேச்சு, உணர்ச்சிவசப்படும் ஆவேசப்பேச்சு, இத்தகைய மலிவான உத்திகளை வைத்தே அண்ணா முதல் கருணாநிதி வரை தலைவர்களாக உருவெடுத்தார்கள் என்றால் வைகோவும் அந்த பள்ளியில் வந்தவர்தான்.

உலகின் எல்லா தலைவர்களும் ஒரு போராட்டப்பாதையின் நிகழ்ச்சிப் போக்கில் ஆளானது போன்றுதான் தி.மு.கவின் ஆரம்பமும் இருந்த்து. என்றாலும் பின்னர் அது செயற்கையான உத்திகள், திறமைகள், சாதி செல்வாக்கு, பணபலம் என்று மாறிப்போனது. இவர்கள் யாரும் மக்கள் நலன் என்ற நோக்கில் புடம் போடப்பட்ட தலைவர்கள் அல்லர். அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

வைகோ தி.மு.கவில் இருக்கும் போது இத்தகைய செயற்கையான தலைவராகத்தான் இருந்தார் என்பதையே இங்கு பதிவு செய்கிறோம். இத்தகைய தலைமைகளுக்குள் அதிகாரத்திற்கான சண்டை என்பது சாதாரணமானதுதான். எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் , மு.கண்ணப்பனும் எதற்காக வைகோவை விட்டு பிரிந்தார்கள்? “மத்தியில் அமைச்சராகும் வாய்ப்பை வேண்டுமென்றே பறித்துவிட்டார், இனி இவரோடு குப்பை கொட்டுவதில் பலனில்லை” என்றுதான் அவர்கள் பறந்து போனார்கள்.

அண்ணாவின் கொள்கையை உண்மையாக பின்பற்றும் கட்சி என்று வைகோ கூறிக் கொண்டாலும் அது இத்தகைய எதிர்மறை உண்மைகளைத்தான் பிரதிபலிக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக ம.தி.மு.க போட்டியிட்டாலும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தனித்து போட்டியிட்ட பா.ம.க கூட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஜெயா எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசியபடியால் தி.மு.க பெரு வெற்றி பெற்றது. தி.மு.கவின் தலைமை தன்னை சதி செய்து நீக்கிவிட்டது என்பதையே மையமாக பேசிவந்த வைகோவின் பாதை அப்போது எடுபடவில்லை.

அந்த வகையில் தமிழக மக்களின் தேவை அறிந்து அரசியல் செய்யும் தலைவராக கூட அவர் இருந்ததில்லை. தி.மு.கவை வேறு வழியின்றி அந்த எதிர்ப்பு அலை ஆட்சியில் அமர்த்தியது.

இனி தனி ஆவர்த்தனம் செய்தால் மறைந்து மண்ணாகிவிடுவோம் என்று பதறிய வைகோ 98 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து மூன்று தொகுதிகளில் வென்றார். தமிழகத்தையே மொட்டையடித்து பாசிச ஆட்டம் போட்ட ஜெயா சசி கும்பலோடு கூடி குலாவுவதற்கு அவர் வெட்கப்படவில்லை. அவரது அரசியல் நிலை மாற்றங்கள் மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அத்தோடு ஒரிஜினல் திராவிட இயக்கம் என்று கூறிய வைகோ பார்ப்பன பாசிசத்தை அரங்கேற்றுவதற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் துடித்த பா.ஜ.க கூடவும் சேர்ந்தார்.

பா.ஜ.க உடனான கூட்டணி 2003 ஆண்டுவரை தொடர்ந்தது. மத்தியில் வாஜ்பாயி அரசை விசுவாசமான அடியாளாக ஆதரித்தார். 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட பாரளுமன்றத்தில் வாஜ்பாயி புகழ்பாடும் பக்தராக இருந்தார். வைகோ இதுவரை பண ஊழல் எதுவும் செய்ததில்லை என்பதை விட இந்த நடவடிக்கை பல மடங்கு ஊழல் தன்மை வாய்ந்தது. பார்ப்பனியத்துக்கு பல்லக்கு தூக்கியது காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைத்தார்.

தமிழகத்தில் பா.ஜ.கவை ஒரு கட்சியாக்கி நிலைநிறுத்தியதில் தி.மு.க, அ.தி.மு.க முதலான பெரியகட்சிகளுக்கும் பங்கிருக்கிறது என்றாலும் சுத்த சுயம்பு என்று கூறிக்கொண்ட வைகோவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தி.மு.கவெல்லாம் சிலபல ஆண்டுகள் கழித்து சீரழிந்தது என்றால் ம.தி.மு.க தோன்றிய வேகத்தில் அதை சாதித்தது. இடையில் அவர் தி.மு.க கூடவும் கூட்டணி சேர்ந்தார். 2001 இல் அவர் ஜெயலலிதாவால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். இத்தகைய சிறை வாசம் கூட அவரது பிழைப்புவாதத்திற்கு நன்மை பயப்பதாக இல்லை.

இருப்பினும் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே பாசிச ஜெயாவோடு கூட்டணி சேர்ந்தார். அதுவும் தி.மு.க ஒரு சீட்டு கொடுக்கவில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணத்திற்காக அணி மாறினார். முக்கியமாக 2009 பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் என்ற பட்டம் வழங்கப்படவும் காரணமாக இருந்தார். தமிழகத்தில் புலி பூச்சாண்டி காட்டி ஏராளமான தமிழுணர்வாளர்களை கைது செய்து அடக்குமுறை ஆட்டம் போட்ட ஜெயலலிதாவின் மூலம் ஈழம் மலரும் என்று பேசுமளவு சீரழிந்தார்.

ஈழப் பிரச்சினையில் கூட வைகோ எப்போதும் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து சாதித்து விடலாம் என்ற அணுகுமுறையையே கொண்டிருந்தார். ஒரு சில லாபி வேலைகள் செய்தால் ஈழப்பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்பதுதான் அவரது நிலை. முக்கியமாக இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக ஈழப்பிரச்சினைக்கு வில்லனாக இருக்கிறது என்ற முறையில் அவரது அணுகுமுறை என்றும் இருந்ததில்லை.

மேலும் 2009ஆம் ஆண்டு ஈழப்பிரச்சினை முன்னணிக்கு வந்த போதும் அதை வைத்து மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு பதில் அதை தேர்தல் முழக்கமாக்கி ஆதாயம் அடைய நினைத்தார். அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் வென்றுவிட்டால் ஈழப்போர் முடிவுக்கு வரும் என்று புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தவறாக வழிநடத்தியதில் வைகோவுக்கும் பெரும் பங்குண்டு.

முத்துக்குமார் இறந்த பிரச்சினையிலும் அது பெரிய போராட்டமாக உருவெடுத்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். பார்வதியம்மாள் சென்னை விமானநிலையம் வந்த போது கூட தனது இலட்சக்கணக்கான தொண்டர்களை விமானநிலையத்தில் திரட்டி போராட அவர் கனவிலும் கருதவில்லை. ஒரு அறிக்கையோடு முடித்துக கொண்டார். எனவே வைகோ ஈழப்பிரச்சினையில் நேர்மையாக இருந்தார் என்ற கருத்து குறித்து அவரைப் போற்றுபவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக அணிமாறிய வைகோ இந்த தேர்தலில் கிட்டத்தட்ட27 சீட்டுகள் கிடைக்காது என்றாலும் அணிமாற இயலாது என்ற இழிவான நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இதில் ஆறு சதவீதம் வாக்குகளும், இரண்டு எம்.எல்.ஏக்களும் இருந்தால்தான் மாநிலக் கட்சி என்ற தேர்தல் க மிஷன் அங்கீகாரம் கிடைக்கும். சென்ற தேர்தலில் பறி போன அந்த அங்கீகாரம் இனி எப்போதும் திரும்பாது என்பதுதான் களநிலவரம். மக்கள் நலன் என்ற அங்கீகாரத்திற்கு துரோகமிழைத்தவருக்கு இந்த டெக்னிக்கல் அங்கீகாரம்தான் தற்போது மிகப்பெரிய கௌரவப் பிரச்சினையாம். எனினும் அவர் இதையும் கடந்து வருவார்.

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் வைகோவின் இலக்குதான் என்ன? அவர் தமிழகத்தில் ஒரு தலைவராக உலா வர வேண்டும். ஊடகங்களில் அவரது கருப்பு மையடித்த மீசை கொண்ட படங்கள் வெளிவர வேண்டும். அவரது அறிக்கைகள் தினசரிகளில் இடம்பெறவேண்டும். சமீபத்தில் கூட உலக மகளிர் தினம், ஜப்பான் சுனாமி குறித்தெல்லாம் அறிக்கை வெளியிட்டார். அதே நேரம் உள்ளுக்குள் அ.தி.மு.க கூட்டணியில் ஒற்றை எண் தொகுதிகள்தானா என்று அவர் கொஞ்சமேனும் அழுதிருக்க வேண்டும்.

இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் ம.தி.மு.கவிற்கான தொகுதிகள் 5 கொடுக்கப்பட்டாலே அது பெரிய விசயம்தான். இதை இல்லை என்று வைகோவால் கூட மறுக்க முடியாது.

மக்கள் நலன் என்ற நோக்கில் வைகோவின் அரசியல் பயணம் என்றுமே நடந்தில்லை என்பதை வைத்து பார்க்கும்போது இன்று அவர் அரசியல் அனாதையாக ஓரங்கட்டப்பட்டார் என்பதற்கும் நாம் வருந்தத் தேவையில்லை. தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் எல்லா வகை சீரழிவுகளோடும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அவர்களது நிழலில் தங்கி வேலை செய்த வைகோ அவர்களது செல்வாக்கை மிஞ்ச முடியுமா என்ன?
ஆக இந்த இடம் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் புறநிலையான காரணங்களும், அகநிலையான காரணங்களும் உண்டு. அதில் வைகோ விரும்பி செய்த பணிகளையே மேலே விமரிசித்திருக்கிறோம். ஆக வைகோ வாய்ப்பு கிடைக்காததால் ஒருபெரிய தலைவராக முடியவில்லை என்று யாராவது சொன்னால் அவர் ம.தி.மு.க கட்சியில் சேரும் தகுதியைக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அதாவது அவரும் அரசியல் அனாதையாக முடிவு செய்து விட்டார். நாமும் நமது அனுதாபங்களை அவருக்கு தெரிவித்துக் கொள்வோம்.

Monday 14 March 2011

சிறுபான்மையினரின் காவலனா தி.மு.க.?-சீறுகிறார் ஜவாஹிருல்லா -ஜீனியர் விகடன்!


'2009 மக்களவைத் தேர்தலில் தி.மு.க.அணியில், இரண்டு எம்.பி. ஸீட் தரவில்லை’ என த.மு.மு.க-வின் மனித நேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டனர். இந்த முறை அ.தி.மு.க. அணியில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே பெற்று த.மு.மு.க-வின் 'ம.ம.க.’ போட்டியிடுகிறது. ஏன் இந்த மனமாற்றம்? தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்டோம்.

''அ.தி.மு.க. அணியில் லட்சியம் 12, நிச்சயம் 6 பெறு​வோம் என சொன்னீர்கள். கடைசியில் மூன்று தொகுதிகள்தானே பெற முடிந்தது?''

''துடிப்புமிக்க, ஆற்றல்மிகு தொண்டர் பலம்​கொண்ட கட்சியான ம.ம.க-வுக்கு கூடுதல் இடம் பெற முயற்சித்தோம். கிடைக்கவில்லைதான். ஆனால், ஊழல் மலிந்த, மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அ.தி.மு.க. அணியில் இணைந்துள்ளோம். சிறுபான்மை அரசியலில் இது முக்கியமான சாதனையாகச் சொல்லலாம்.91-ம் ஆண்டுக்குப் பிறகு மூன்று தொகுதிகளுடன் தனிச் சின்னம் பெற்றுள்ளோம். 2001-ல் அ.தி.மு.க. அணியில் தேசிய லீக் லத்தீஃப் ஒரு தொகுதி பெற்று 'பஸ்’ சின்னத்தில் நின்றார். அதே அணியில், 2006-ல் இரண்டு இடங்கள். ஆனால், இரட்டை இலை சின்னம்தான். தி.மு.க. அணியிலோ முஸ்லிம் லீக்குக்கு இரண்டு இடங்கள், ஆனால் போட்டியிட்டது உதயசூரியன் சின்னத்தில்தான். எனவே, முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் ம.ம.க-வுக்கு, தனி சின்னத்தில் மூன்று தொகுதிகள் என்பது நல்ல நிலைதானே!''

''சிறுபான்மையினரின் பாதுகாவலன் என தி.மு.க-வைப்பற்றி சொல்லப்படுகிறதே?''

''இது ஒரு மாயை. முஸ்லிம்கள் தனி அரசியல் பலம் பெற்றுவிடாமல் தடுக்கும் பணியை தி.மு.க. நாசூக்காகவே செய்கிறது. அங்கு முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். சாதிக் பாட்சாவுக்குப் பிறகு, அங்கு தலைமை நிர்வாகிகளில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. வேலூர் முகமது சகியும், நீலகிரி முபாரக்கும் மாவட்டச் செயலாளர்களாக இருந்தார்கள். இப்போது, தி.மு.க-வில் ஒரு மாவட்டச் செயலாளர்கூட முஸ்லிம் இல்லை.

இன்னொன்று... முஸ்லிம் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் அவர்களில் ஒருவரை மக்கள் பிரதிநிதி ஆக்காமல், 'அந்தப் பகுதி தி.மு.க. தலைவர்​களுக்குப் பாதுகாப்பானது’ என அந்தக் கட்சித் தலைவர்கள் பலரும் போட்டியிட்டு வெற்றி பெற்​றனர். சென்னை துறைமுகம் தொகுதியில் திருப்பூர் மொய்தீனுக்குப் பிறகு, செல்வராஜ் வந்தார். அடுத்து கலைஞரும், அன்பழகனும் போட்டி​யிட்டார்கள். சேப்பாக்கத்தில் லத்தீஃபுக்கு அடுத்து, ரகுமான்கானை தி.மு.க. நிறுத்தியிருக்க முடியும். ஆனால், கலைஞரே போட்டியிட்டு எளிதாக வென்றார். ரகுமான்கானோ, பூங்காநகர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

சிறுபான்மைக் கட்சிகள் தனி அரசியல் அடையாளம் பெற்று​விடக் கூடாது என்பதில் தி.மு.க. கவனமாக இருக்கிறது. தங்களுடன் ஒரு பச்சைக் கொடி வேண்டும் என்பதற்காக, முஸ்லிம் லீக்கை சிறுபான்மை அணியைப்போல வைத்திருக்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில்கூட முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், 'காதர் மொய்தீனை ஏணிச் சின்னத்தில் நிறுத்துவது’ என அந்தக் கட்சியின் பொதுக் குழு முடிவு செய்தது. தி.மு.க. தலைமை இதில் தலையிட்டு, துபாயில் இருந்து அப்துர் ரஹ்மான் என்பவரை வேலூர் மக்களவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தினர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. அணியில் முஸ்லிம் லீக், உதயசூரியன் சின்னத்தில்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. இப்போதும், தி.மு.க. அணியில் முஸ்லிம் லீக்குக்கு மூன்று இடங்கள், உதயசூரியன் சின்னம் என அறிவித்தார்கள். அந்த மூன்று இடங்கள்கூட கடைசியில் இரண்டாகிவிட்டது.''

''முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு பெற்றது தி.மு.க. ஆட்சியில்​​தானே... அது தவிர, காங்கிரஸ் கட்சியையும் எதிர்ப்பது ஏன்?''

''கேரளத்தில் 71-ம் ஆண்டிலேயே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வந்துவிட்டது. 67-ல் இருந்தே தி.மு.க-வுக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு அளித்துவந்தனர். மறைந்த அப்துல் லத்தீஃப் 99-லேயே கருணாநிதியிடம் ஒரு சதவிகிதம் இடஒதுக்கீடு கேட்டார். ஆனால், அவர் தரவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து நாங்கள் போராடிய பிறகு, தேர்தல் ஆதாயம் கருதியே, தி.மு.க. ஆட்சி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. அதைச் செயல்படுத்துவதில் பலவிதமான சிக்கல்கள். இதுபற்றி வெள்ளை அறிக்கை கேட்டோம். அதை வெளியிடுவதற்குத் தயங்குகிறார்கள்.

உருதுவைத் தாய்மொழியாகக்கொண்ட முஸ்லிம்கள் சமச்சீர் கல்வியால் பாதிக்கப்படுவதைத் தடுக்க, உரிய நேரத்தில் உரிய திருத்தம் செய்யப்படவில்லை. கட்டாய 'திருமணப் பதிவு’ச் சட்டத்தில்... பள்ளிவாசல், ஜமாத்துகள் பதிவுசெய்து தரும் ஆவணங்களை ஏற்பதாக சட்ட அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்தார். ஆனால், இந்துக் கோயில்களில் வழங்கப்​படும் சான்றிதழ்களை மட்டும் ஏற்றுக்கொள்ள உத்தர​விட்டுவிட்டு, முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றவே இல்லை.

மேலும், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கு​மாறு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு 2007-ல் பரிந்துரைத்தது. இதுவரை, மத்திய காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு அதைச் செயல்படுத்தவே இல்லை. தேர்தல் அறிக்கை​யில் இதைச் செயல்படுத்த நடவடிக்​கை எடுப்பதாக உறுதியளித்த தி.மு.க-வும், கண்டுகொள்ளவே இல்லை. மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு​வெடிப்புகள் தொடர்பாக, ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கப்​பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் மறுக்கின்றன. எனவே, சிறுபான்மையினரின் காவலன் தி.மு.க. என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.''

''பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்தது தவறு எனக் கூறிவிட்டு, பிறகு அந்தக் கட்சியுடன் கூட்டு சேர்ந்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவருடன் சேர்ந்திருப்​பதன் மூலம் கொள்கையைவிட தேர்தல் ஆதாயம்தான் முக்கியம் என நீங்களும் மாறிவிட்டீர்களே?''

''99-ம் ஆண்டு சென்னைக் கடற்கரை சீரணி அரங்கில் த.மு.மு.க. நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில்தான், ஜெயலலிதா அம்மையார், 'பி.ஜே.பி-யுடன் இனி கூட்டணிவைக்க மாட்டேன்’ என உறுதிமொழி அளித்தார். ஆனால், 2004 மக்களவைத் தேர்தலில் அவர்​களோடு கூட்டணிவைத்தார். அது உண்மைதான். ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதில் ஒன்றாக நிற்கிறோம். அம்மையார் இனியும் பி.ஜே.பி-யுடன் கூட்டுவைக்க மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!''

நன்றி - ஜீனியர் விகடன் -16-மார்ச் -2011

Sunday 13 March 2011

யதார்த்தத்தை உலகுக்கு உணர்த்த உண்மை உரைத்த தினமணிக்கு வாழ்த்துக்கள்!


அந்நியர் புகலென்ன நீதி?
லிபிய அதிபர் மும்மார் கடாஃபி ஒரு சர்வாதிகாரி என்பதிலும், அவரது ஆட்சி பொற்கால ஆட்சியொன்றும் அல்ல என்பதிலும் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், உலக சர்வாதிகாரிகளில் மிகவும் மோசமான சர்வாதிகாரி என்றோ, ஏனைய ஆட்சியாளர்களைவிட அவரது தலைமையிலான ஆட்சி மோசமானதென்றோ வர்ணிக்கவும் முடியாது என்பதுதான் நிஜம்.
லிபிய அரசியலையும், லிபியாவின் கடந்த நூற்றாண்டு சரித்திரத்தையும் புரிந்து கொள்ளாமல் எழுதும் பல மேலைநாட்டுப் பத்திரிகைகளும், கடாஃபியை ஒரு கொடுங்கோலனாக வர்ணிப்பதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்த முயலும் தொலைக்காட்சிச் சேனல்களும், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல லிபியாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்துக்குக் குறிவைக்கும் ஏகாதிபத்திய சக்திகளும், பிரச்னையை வளர்க்க முயற்சிக்கின்றனவே தவிர, முறையான தீர்வுக்கு வித்திடவில்லை என்பதை யாருமே சொல்லத் தயாராக இல்லை. இதற்குக் காரணம், அதிபர் மும்மார் கடாஃபியை வீழ்த்தியாக வேண்டும் என்று மேலைநாடுகள் கடந்த 30 ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருவதுதான்.
உலக எண்ணெய் வளத்தில் 2% லிபியாவில்தான் கிடைக்கிறது. இன்னும் பல எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்படக் கூடும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், எல்லா எண்ணெய்க் கிணறுகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல், நீண்ட காலத்துக்கு லிபியாவின் எண்ணெய் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிபர் மும்மார் கடாஃபியின் பிடிவாதம், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்கு எரிச்சல் ஊட்டுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
1951-ல் இத்தாலியக் காலனியாக இருந்த லிபியா விடுதலை பெற்று சுதந்திர நாடானது. லிபியாவின் கிழக்குப் பகுதியான சைரனைக்காவின் முக்கியமான செனூசி ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒன்றாவது இத்ரிஸ் என்கிற ராஜா, லிபியாவின் மன்னரானார். லிபியாவின் மேற்குப் பாதியில் கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா என்கிற மூன்று முக்கியமான ஆதிவாசி இனங்களும் கதத்ஃபா இனத்தவரான மும்மார் கடாஃபியின் தலைமையில் உள்நாட்டுக் கலகத்தில் ஈடுபட்டு, மன்னராக இருந்த முதலாம் இத்ரிசைப் பதவியிலிருந்து துரத்தி 1969-ல் ஆட்சியைக் கைப்பற்றின.
1969-ல் பதவியைக் கைப்பற்றியது முதலே, ஆதிவாசி இனக் குழுக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வைத்திருக்கும் அதிபர் மும்மார் கடாஃபி மேற்கு லிபியாவின் முக்கியமான இனங்களான கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா, ஃபெஸ்ஸன், திரிபோலித்தானியா போன்றவற்றின் முழுமையான ஆதரவையும், நம்பிக்கையையும் தக்க வைத்திருப்பதால்தான் இன்றுவரை அதிபராகத் தொடர முடிகிறது. எகிப்து, டுனீசியா போன்ற நாடுகளின் அதிபர்களைப்போல அல்லாமல் மும்மார் கடாஃபி தனது பெயரில் வெளிநாட்டு வங்கிகளின் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றோ, அளவுக்கு அதிகமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவோ அவர்மீது குற்றச்சாட்டுகளும் கிடையாது. தன்னைச் சுற்றி பெண்களைக் காவலர்களாக வைத்திருக்கிறார் என்கிற ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது.
மேற்கு லிபியாவைச் சேர்ந்த அதிபர் மும்மார் கடாஃபி புத்திசாலித்தனமாக கிழக்கு லிபியாவைச் சேர்ந்த ஆதிவாசி இனக்குழுக்களை பொருளாதார ரீதியாக வளர விடாமலும், அவர்கள் பெரிய அளவில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. மேலும், தனது ராணுவத்தையே முழுமையாக நம்பாமல் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதும் நிஜம்.
கிழக்கு லிபியாவைச் சேர்ந்த இனக்குழுக்கள்தான் இப்போது அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், மேற்கு லிபியாவிலுள்ள எல்லா இனக்குழுக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால்தான், எகிப்திலும் டுனீசியாவிலும் ஏற்பட்டதுபோல, லிபியாவில் உள்நாட்டுக் கலகம் இன்னும் தொடர்கிறதே தவிர, ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், லிபியாவின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டுப் புரட்சியாளர்களுக்கு உதவ வேண்டும் என்கிற முனைப்புடன் வல்லரசு நாடுகள் செயல்படத் துடிக்கின்றன.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களைப் பாராசூட் மூலம் விநியோகம் செய்தால் என்ன என்று யோசனை கூறுகிறார். சவூதி அரேபியா மூலம் ஆயுதங்களைத் தந்து உதவினால் என்ன என்று அமெரிக்கா யோசிக்கிறது. புரட்சியாளர்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்தும் லிபிய அரசும் படைகளை முடக்க, அந்த நாட்டிலுள்ள விமானநிலையங்களின் மீது குண்டு வீசித் தகர்த்தால் என்ன என்று யோசனை கூறுகிறார் அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி. இன்னொரு செனட்டரான ஜான் மெக்கெய்ன், இராக்கில் நடத்தியதுபோல நேசப்படைகள் நுழைந்து, அதிபர் மும்மார் கடாஃபியைப் பதவியிலிருந்து அகற்றிப் புதிய ஆட்சியை நிறுவினால் தவறில்லை என்கிறார்.
லிபியாவில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதிபர் கடாஃபியின் அரசு, ஆட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களுக்கு எதிராகத் தனது முழு ராணுவ பலத்தையும் பிரயோகித்துக் கலகத்தை அடக்க முயற்சிக்கிறது என்பதும் உண்மை. அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?
நமது காஷ்மீரிலும்தான் பிரச்னை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது. இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா?
அதிபர் மும்மார் கடாஃபி அரசின் ராணுவத்தின் கை ஓங்கி வருவதாகவும், புரட்சியாளர்களின் எதிர்ப்புக் குறைந்து வருவதாகவும் தெரிகிறது. உள்நாட்டுக் கலகத்துக்கு மேற்கு லிபிய ஆதிவாசி இனக்குழுக்களுக்கும், கிழக்கு லிபிய இனக்குழுக்களுக்குமான பதவிப் போட்டிதான் காரணம். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாட்டினரின் அக்கறைக்குக் காரணம் லிபியாவின் எண்ணெய் வளம். 2003-ல் இராக். 2011-ல் லிபியா. என்றுதான் தணியும் இந்த ஏகாதிபத்திய மோகம், தெரியவில்லையே!