பதிவுகள்

Sunday 15 January 2012

வரவேற்கிறோம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கியுள்ள "முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை' பொதுத்துறை நிறுவனமாகிய யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கும் முடிவு பாராட்டுக்குரியது.
திமுக அரசில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தேர்தல் பிரசாரத்தின் போதும், அதற்கு முன்பும்கூட, இத்திட்டத்தால் மக்கள் பயனடையவில்லை என்றும், காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற்றன, இதற்குப் பின்னணியில் ஆட்சியில் இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் குற்றம் சாட்டினார்.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்காக தனியார் நிறுவனத்துக்குத் தரப்படும் கட்டணத்தை, பொது மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தினால், நிரந்தரமான முதலீடாக அது இருக்கும் என்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெறுவர் என்றும் தனது பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கூடிய முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது நடந்த ஆளுநர் உரையில், ""கடந்த அரசின் காப்பீட்டுத் திட்டம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே, அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி, அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்'' என்று குறிப்பிடப்பட்டது.
அப்போது நாம் குறிப்பிட்டிருந்த ஒரு கருத்து, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் அரசு மருத்துவமனைகளின் மேம்பாடு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது. அதை இப்போதும் நாம் முதல்வருக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.
கடந்த ஆட்சியில், கலைஞர் உயிர்காப்பு சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்துக்காக ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டபோது, ஒரு குடும்பத்துக்கு ரூ.469 பிரீமியம் வீதம், ஒரு கோடி குடும்பங்களுக்காக ரூ.469 கோடி வழங்கப்படவும், அதே நேரத்தில், இத்திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கேட்புத்தொகை 65 விழுக்காடு எட்டாத நிலைமை இருக்குமேயானால், மீதமுள்ள தொகையை தமிழக அரசுக்கே திரும்பத் தர வேண்டும் எனவும் கூறுகின்ற ஒரு நிபந்தனை இருக்கிறது. ஆகவே கொடுக்கப்பட்ட சந்தாத் தொகையையும், இதுவரை சிகிச்சைகளுக்காக வழங்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகையையும் கணக்கிட்டு, 65 விழுக்காட்டுக்குக் குறைவாக கேட்புத்தொகை இருக்குமேயானால், மீதித்தொகையை கவனமாகக் கேட்டுப் பெற வேண்டும் என்பதையும் தமிழக அரசுக்கு நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
பொதுத்துறை நிறுவனத்திடம் இத்திட்டம் அளிக்கப்பட்டதால் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபம் அடைவது தவிர்க்கப்பட்டு, ஊழல் இல்லாமல் ஆகிவிட்டாலும்கூட, தமிழக அரசு கவனமாகச் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது.
கடந்த திமுக ஆட்சியில் இருந்த காப்பீட்டுத் திட்டத்தில் 642 நோய்களுக்காக சிகிச்சை பெற முடியும் என்றால், தற்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள காப்பீட்டுத் திட்டத்தில் 1,016 சிகிச்சை முறைகளுக்குப் பலன் பெற முடியும். ஆகவே, நிறையப் பேர் பயனடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள் மட்டும்தான் லாபம் பெற வேண்டும் என்பதில்லை. அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அதே சிகிச்சைக்கும் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். காப்பீடு சிகிச்சைக்குத்தானே தவிர, எங்கே சிகிச்சை பெறப்படுகிறது என்பதற்காக அல்ல. அரசு மருத்துவமனைகளும் இத்தகைய உயிர்காப்பு சிகிச்சைகளை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளித்து, அதற்கான கேட்புத் தொகையைப் பெற்று, அதை ஏன் அந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்றும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள்தான். காப்பீட்டுத் திட்டத்தில் கேட்புத்தொகை பெற வாய்ப்புள்ளது என்பதை நிரூபிக்க, முதல் ஆதாரமாகத் தங்களது குடும்ப அட்டையைக் காட்டினாலும் அவர்களை அரசு மருத்துவர்களே சில குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதும், அங்கே போய் அவர்களே அறுவைச் சிகிச்சை செய்வதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைக்கும் அந்த அரசு மருத்துவருக்கும் தனிப்பட்ட முறையில் பணம் கிடைக்கிறது.
இந்த அவலத்தைத் தடுக்க அரசு மருத்துவமனைகளில் நடத்தப்படும் அறுவைச் சிகிச்சைகளுக்கு அரசு இந்த மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவிக்கலாம். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையிலேயே அறுவைச் சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு, ஒரு சிறு தொகையை மருத்துவருக்கும் உடன் பணியாற்றும் செவிலியர் மற்றும் மருத்துவக் குழுவினருக்கும் பகிர்ந்து அளிக்க வகை செய்தால், அரசு மருத்துவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் பலனைத் தனியார் மருத்துவமனைகளுக்குத் திருப்பிவிடும் அவலம் தொடராது.
முன்பு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் வரை கேட்புத்தொகை அளிக்க முடியும் என்றாலும்கூட, ""ரூ.80 ஆயிரத்துக்கு மேல் கிடையாது, அதற்கேற்ப பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று மருத்துவமனைகளுக்கு வாய்மொழி அறிவுரை இருந்தது. இதனால் மருத்துவமனைகளுக்குத் தடை இல்லாமல் பணம் கிடைத்தது என்றாலும், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் மற்றும் மருந்து மாத்திரை செலவுகளுக்காக நோயாளிகள் பட்டபாட்டைச் சொல்லி மாளாது.
ஆனால், முதல்வரின் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முந்தைய நாள் மற்றும் சிகிச்சை முடிந்த பிறகு 5 நாள்களுக்கு ஆகும் செலவு வழங்கப்படுவது பாராட்டத்தக்கது.