பதிவுகள்

Monday 28 November 2011

கனிமொழிக்கு ஓர் கடிதம் !


இலக்கிய வீதியில் உலா வர வேண்டிய நீங்கள், திகார் சிறைக்கும் பாட்டியாலா கோர்ட்டுக்கும் இடையே இருக்கும் வீதிகளில் திரிந்துக் கொண்டிருப்பது தான் கொடிய விதி. அதிலே முடங்கிப் போகமாட்டீர்கள் என்பது தெரியும்.

இங்கே இருந்து புதிய பாதையை தேர்வு செய்யப்போகிறீர்களா. அல்லது பழைய பாதையில் பயணிக்கப் போகிறீர்களா என்பதுதான் இக்கடிதத்தின் நோக்கம்.

இளவரசன் சித்தார்த்தன் போதி மரத்தின் கீழே ஞானம் பெற்றான் புத்தன் ஆனான் ! ஆனால் ஊழல் புகாருக்கு அவன் ஆளாகவில்லை. எந்தவித சொர்க்கபுரிகளும் இல்லாத காலத்திலேயே, அரச வாழ்க்கையை துறந்தவன் அந்த இளவரசன்.

நீங்களும் கலைஞரின் ராசாத்தி (ராணி என்று தானே அர்த்தம்) பெற்றதால் இளவரசிதான். திகார் சிறையில் இருந்ததால் ஞானம் பெற்றீர்களா? எதிர்காலம் தான் அதை சொல்லும்.

தயாளு குடும்பத்தின் வாரிசுகளை என் இலக்கிய வாரிசு என்று சொன்னாரா கலைஞர்? அரசியல் வேண்டாம் என்பதுதானே அதன் அர்த்தம்? பக்கம் பக்கமாக எழுதி இலக்கியத்தை படைக்க வேண்டிய உங்களை பார்த்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதி குவிக்கின்றதே?

பத்திரிகையாளர், பெண்ணியவாதி, இலக்கியவாதி, அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் என்ற குடையின் கீழ் நீங்கள் இருந்த காலத்தை எண்ணிப் பாருங்கள்.

எத்திராஜ் கல்லூரியில் படித்ததும், 1989ம் ஆண்டு மிக விமரிசையான திருமண வாழ்க்கை. அதிலே கசப்பு ஏற்பட்டதும் விலகி இருந்தீர்கள். கவிதை புனைய முற்பட்டீர்கள். மெல்ல பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்றதும், தன் பரம எதிரியாக கருதும், ‘தி இந்துபத்திரிகையில் உங்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார் உங்களது தந்தை.

எளிமையின் வடிவாகவே, உங்களை பத்திரிகையாளர்கள் பார்த்தார்கள். பந்தா இல்லாத உங்கள் நட்பில் அன்று இருந்தவர்கள், ‘நீங்கள் பெரிய பத்திரிகையாளராக வரவேண்டும். உங்கள் அப்பாவையே திணறடிக்கும் கேள்விகளை கேட்டு பேட்டி எடுக்க வேண்டும்என்று சொன்னது ஞாபகமிருக்கும் என்றே கருதுகிறேன்.

இதற்குள் தி.மு.க. 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்துவிடுகிறது. முதல்வரின் மகளாக இருந்துக் கொண்டு, தமிழ்நாட்டில் அதுவும் தி இந்துபத்திரிகையில் வேலைக்கு போக வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. அந்த நேரத்தில், நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் முன்னிலை பெற்றுவிடக்கூடாது (அப்பவேவா) என்று கோபாலபுரத்தில் பேசிக் கொண்டதாக தகவல்.

உடனே, சிங்கப்பூரில் இருக்கும் தமிழ் முரசுபத்திரிகையில் வேலை பார்க்கும்படி அப்பா சொன்னதன் பேரில் செல்கிறீர்கள். அங்கே தான் அரவிந்தனை பார்க்கிறீர்கள். காதல்திருமணம் என்ற வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது.

உங்கள் தேவைகளை ஸ்டெர்லிங் சிவசங்கரன் பார்த்துக் கொள்வதாக முரசொலி மாறன் மூலமாக தந்தைக்கு தகவல் வருகிறது. உங்கள் தந்தையாரும் ஒரு முறை சிங்கப்பூர் சென்று (1998ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தில்) ஒரு வாரம் தங்கி இருந்தார்.

ஆக, இதுவரை உங்களை தந்தை என்ற முறையில் ஒதுக்கி வைத்திருந்தாரா என்பதுதான் முக்கியமான கேள்வி?

அரசியலில், ஏன் சமூகத்தில் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்களின் இரண்டாவது மனைவியும் முன்னுக்கு வரமாட்டார். இரண்டாவது மனைவியின் வாரிசும் முன்னே வராது. அதாவது, ஒரு வித தயக்கத்துடன், ஒரு வித எச்சரிக்கை உணர்வுடனே வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.

ஆனால், அப்படியொரு குறையை கலைஞர் வைக்கவேயில்லை. காலையில் இங்கே பிற்பகலில் அங்கே. மாலையில் இங்கே இரவில் அங்கே என்று உணவு பழக்கத்தையும் உறங்கும் பழக்கத்தையும் கலைஞர் யாருக்காக மாற்றிக் கொண்டார். கனிமொழி என்ற மகள் இருப்பதால் தானே.

செல்வத்தில், குடும்ப அந்தஸ்தில் எந்த குறையும் வைக்காத அளவுக்கு உங்களையும் உங்கள் தாயாரையும் பார்த்துக் கொண்ட, கலைஞரை நீங்கள் எப்படி பார்த்து கொண்டிருக்க வேண்டும். அதுவும் இந்த தள்ளாத வயதில், அவரை தள்ளிக் கொண்டு சென்னைக்கும் டெல்லிக்கும் அலைய வைத்தது எது?

ஒரு சின்ன பிளாஷ் பேக்!

2003ம் ஆண்டு வாக்கில் முரசொலி மாறன் இறந்ததும், யாருக்கு அந்த இடம். யாரை நிறுத்துவது அந்த இடத்தில் ? என்ற விவாதம் சி.ஐ.டி. காலனியில் எழுந்த நேரம். அந்த காலகட்டத்தில் தான் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு குடிபெயருகிறீர்கள்.

முரசொலி மாறன் இடத்தை நிரப்ப வேண்டியவர்கள் யார் என்று விவாதத்தில், ‘அவர்கள் மகன்களில் யாராவது ஒருவர்என்று குரல் கொடுத்து, ’அத்தைக்கு நன்றிஎன்று புளங்காகிதம் அடைந்தவர்கள் தான் கலாநிதியும் தயாநிதியும்.

அங்கேயும் உங்களுக்கு அரசியல் ஆசை வரவில்லை என்பதற்காகத்தான் இந்த பழசை ஞாபகப்படுத்துகிறேன். 2004 ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிகிறது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் ஆகிறார்.

இங்கே பிளாஷ் பேக் முடிகிறது.

தயாநிதி மாறனுக்கு கிடைக்கும் செல்வாக்கை உங்கள் தாயார் பார்க்கிறார். தனது மகளுக்கு எதிர்காலத்தில் பாதுகாப்பான இடம் வேண்டும். தனக்குப் பிறகு, தலைவர் கலைஞருக்கு பிறகு, கனிமொழியின் எதிர்காலம்? என்ற கணக்கு போடுகிறார்.

தினந்தோறும், கனிமொழியை அரசியலுக்கு கொண்டு வாருங்கள் என்று உங்கள் தாயார் நச்சரிக்க, கலைஞரே எத்தனையோ முறை சீனியர்களிடம் புலம்பினார்.

அரசியல் விதை உங்களுக்கும் ஆரம்பித்தது. சென்னை சங்கமம்என்ற பெயரில் ஏதேதோ செய்யத்தொடங்கி, வேலை வாய்ப்பு முகாம் என்ற பெயரில் வலம் வந்து, அரசியலில் குதித்தேவிட்டீர்கள்.

அரசியல் வாழ்க்கை என்று விதையை தூவியவர் உங்கள் தாயாராக இருந்தாலும், உங்களுக்கும் ஆசை அதிகமாகவே இருந்தது.

தனக்குப் பிறகு பாதுகாப்பான இடம் என்று தாயார் சொன்ன இடம், திகார் சிறையா?

இதற்குதானா ஆசைப்பட்டீர்கள் கனிமொழி?

நீங்கள் சிறை சென்ற பிறகு கூடா நட்புஎன்று கலைஞர் அளித்த பேட்டி மற்றவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ. உங்களுக்கு புரிந்திருக்குமே?

ஆ.ராசா, பூங்கோதை ஆலடி அருணா, ஜாபர் சேட், ஜெகத் கஸ்பர், நீரா ராடியா, சுப்ரியா சுலே, ஆசிப் பல்வா ஆகியோருடன் இருந்த நட்பு கூடா நட்பா? அல்லது கூட வேண்டிய நட்பா என்று யோசிக்கும் வேளை வந்துவிட்டது.

இந்த நட்புகளை தூக்கி எறிவதும் தூக்கிப் பிடிப்பதும் உங்கள் முடிவு. ஆனால், யார் நல்லவர்கள்- யார் கெட்டவர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க ஐந்தரை மாதங்கள் என்ற நீண்ட காலம் கிடைத்திருக்கிறது. தனிமையில் உங்கள் தவறுகளை நீங்களே பட்டியல் போட்டு, அதில் யாரெல்லாம் தொடர்புடன் இருந்தார்கள் என்று நினைத்து நினைத்துப் பார்த்திருப்பீர்களே?

ஆக, நட்பு பாராட்ட வேண்டியவர்கள் யார்? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து, அரசியலில் இனியும் இருக்க வேண்டுமா என்பது இரண்டாவது எடுக்க வேண்டிய முடிவு.

இத்தனை தூரம் கடந்துவந்துவிட்டு, அரசியலை துறவரம் செய்துவிட முடியுமா என்று கேட்டால், சிரித்துவிடுவீர்கள்.

அரசியலை துறவரம் செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. புதிய பாதையாக அது இருந்தால், உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது?

கலைஞருக்கு 2016ம் ஆண்டு 93 வயது.

அழகிரிக்கு 2016ம் ஆண்டு 67 வயது.

உங்களுக்கு 2016ம் ஆண்டு 47 வயது.

அட 2021ம் ஆண்டு தேர்தலில் கூட 52 வயது தான்.

உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது?

ஸ்தீரி லோலன் என்ற பெயர் எடுத்த அருணகிரிநாதர் தான் திருவாசகத்தையும் தேவாரத்தையும் பாடியவர்.

வழிப்பறி கொள்ளையன் என்று பெயர் எடுத்த வால்மீகி எழுதியது தான் ராமாயணம்.

இதையெல்லாம் குத்திக் காட்டி, உங்கள் கோபத்தை தூண்டுவதாக நினைக்க வேண்டாம்.

தமிழ்நாடு அல்ல இந்திய அரசியலில் சமூகத்துக்காக, பொதுமக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நேரத்தில், ஒரு தகவல் வந்து சேருகிறது.

டெல்லியிலிருந்து வந்து சேரும் முன்பே, ‘எனக்கொரு பதவிவேண்டும் என்று நீங்களும் உங்கள் தாயாரும் நெருக்கடி கொடுப்பதாக அத்தகவல் சொல்கிறது.

ஆக, அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதை உங்கள் எதிர்கால நடவடிக்கையில்தான், நான் உணர முடியும்?

அதுவரை

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவை கெடுத்தார்

- என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டி

விடைபெறுகிறேன்.

நன்றி !