பதிவுகள்

Monday 12 December 2011

ஆட்டம் போடும் அணு அரசியல்!

ஜெர்மனி அணு உலைகளை மூடுவதாக அறிவித்திருப்பதற்குக் காரணம், அந்நாட்டின் கூட்டணி அரசியல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் ஜெர்மனி அதன் அணு உலைகளை மூடிவருகிறது எனச் சொல்லி வருகிறார்கள். ஜெர்மனியில் இருந்த 19 அணுமின் நிலையங்களில் காலாவதியான 2 நிலையங்கள் மட்டுமே மூடப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 17 உலைகளை இன்னும் 12 ஆண்டுகள் நடத்த ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெர்மன் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமும், அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் ரெய்னரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி அறிவித்தனர்.

ஜெர்மனியைப் போலவே சுவீடனும் அணுமின் நிலையங்களை மூடப் போவதாக அறிவித்திருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி பழுதடைந்த உலைகளுக்குப் பதிலாக புதிய உலைகளை நிறுவிக்கொள்ள சுவீடன் அரசு அனுமதி அளித்ததன் மூலம் அணுமின் நிலையங்களுக்கு எதிரான சுவீடனின் கொள்கை முடிவுக்கு வந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

சுவீடன் அரசும், ஜெர்மனியைப்போல் இல்லாமல், ‘நிதானமாக’ முடிவெடுக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. அணு மின் நிலையங்களை மூடுவதாக ஜெர்மனி அறிவித்தது ஏன்? அதற்குப்பின் இருப்பது ஜெர்மனியின் அரசியல்.

இந்தியாவைப்போல பல கட்சிகள் கொண்ட நாடு ஜெர்மனி. அவற்றுள் முக்கியமானவை இரண்டு. ஒன்று, கிறிஸ்டியன் டெமாக்ரெட்டிக் யூனியன் (CDU), மற்றது, சோஷியல் டெமாக்ரெட்டிக் பார்ட்டி. (SDP). இவற்றைத் தவிர , ஃபிரீ டெமாக்ரெட்டிக் பார்ட்டி (FDP), இடதுசாரிகள்,கிரீன் பார்ட்டி என வேறு சில சிறிய கட்சிகளும் இருக்கின்றன. கிரீன் சுற்றுச்சூழலை மையமாகக்கொண்டு செயல்படும் கட்சி.

பல ஆண்டுகளாக ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏதாவது ஒரு பெரிய கட்சி மற்றொரு சிறிய கட்சியோடு சேர்ந்து அரசமைப்பதே வழக்கமாக இருந்து வருகிறது. இப்போது CDU, சிறிய கட்சியான FDPயோடு சேர்ந்து ஆட்சியில் இருக்கிறது

1998லிருந்து 2005 வரை இரண்டு முறை கிரீன் பார்ட்டி பெரிய கட்சியான SDPயுடன் சேர்ந்து ஆட்சியில் இருந்தது. அப்போது அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் துணைப் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும்இருந்தார். ஜெர்மன் சட்டங்களின்படி ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் இடம் பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் 5 சதவீத வாக்குகள் வாங்க வேண்டும். கிரீன் பார்ட்டி அந்தத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக வாங்கியிருந்தது.

விரைவிலேயே சிவப்பு - பச்சைக் கூட்டணியில் (ஜெர்மனியில் கூட்டணிகளை அந்தந்தக் கட்சிக் கொடிகளின் வண்ணங்களை வைத்தே குறிப்பிடுகின்றனர். SDPயின் நிறம் சிவப்பு; CDUயின் நிறம் கறுப்பு; FDPயின் நிறம் மஞ்சள்) பிரச்சினை முளைத்தது. யுகோஸ்லேவியாவிலிருந்து செர்பியா, கொசாவா பிரிந்தபோது கொசாவா நாட்டிற்கு ஜெர்மன் அரசு படைகளை அனுப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிரீன் கட்சியிலிருந்து பலர் விலகினார்கள். கட்சி, அடுத்து நடந்த மாநிலத் தேர்தலில் தோல்விகளைச் சந்தித்தது.

அப்போதுதான் கிரீன் கட்சி, அணுமின் நிலையங்கள் விஷயத்தைக் கையில் எடுத்தது. SDPக்கு தர்மசங்கடமாகப் போனது. ஏனெனில், அதன் உறுப்பினர்களில் பலர் அதை ஏற்கவில்லை. ஆனால், அரசைக் காப்பாற்றிக்கொள்ள மெல்ல மெல்ல, அதாவது 2010க்குப் பின், அணு உலைகளை மூடுவதற்கு ஒப்புக் கொண்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, இப்போது ஆளும் கட்சியாக உள்ள CDUவும் அன்று அணு உலைகளை மூடுவதை எதிர்த்தது.

இந்த ஆண்டு மார்ச் இறுதியில் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், கிரீன் பார்ட்டி கணிசமான வெற்தீவூளப் பெற்றது. ஒரு வளம் மிகுந்த மாநிலத்தில், அறுபது ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த CDUயை (அதுதான் இப்போது மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி) வீழ்த்தி, ஆட்சியைக்கைப்பற்றியது. கட்சி துவங்கி, 30 ஆண்டுகளில் இப்போதுதான் அது முதல் முறையாக ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது.

CDUவின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம், வாகனங்களில் பெட்ரோலோடு 10 சதவீதம் ஆல்கஹாலையும் கலந்து பயன்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன், அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக விளைநிலங்களில் தானியங்களுக்குப் பதில், பயோ ஃபூயலுக்கு உதவும் பயிர்களை மக்கள் பயிரிட ஆரம்பித்து விடுவார்கள் என எதிர்ப்பு எழுந்தது. அதனால், அது போன்ற நிலங்களுக்கு வரியை உயர்த்தியது அரசு. சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

கீரின் பார்ட்டியின் வெற்றியைக் கண்டு உஷாரான CDU, அவர்களது கோரிக்கையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தது. அதாவது, முன்னால் அணு உலைகளை மூட எதிர்ப்புத் தெரிவித்த CDU, இன்று அணு உலைகளை 2022க்குள் படிப்படியாக மூடப் போவதாக அறிவித்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஜெர்மனி எடுத்துள்ள முடிவுக்குப் பின்னால் இருப்பது, சுற்றுச்சூழல் அல்ல, பாதுகாப்பு அல்ல, கூட்டணி அரசியல்.

ஆனால், அந்த முடிவுக்கு எதிரான முணுமுணுப்புகள் கிளம்பியிருக்கின்றன. அணுமின் உலைகளை மூடிவிட்டு காற்றலைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால், ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் கடலோரமாகக் காற்றாலைகளை அமைக்க வேண்டும். இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஜெர்மனியின் தொழில் நகரங்களான மியூனிக், ஸ்ட்ரட்கார்ட் ஆகியவற்றுக்கு அருகில் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளன. எனவே, வடக்குப் பகுதியிலிருந்து உயர் வோல்ட்டேஜ் கேபிள்கள் அமைத்து, மின்கோபுரங்கள் நிறுவி, மின்சாரத்தைஎடுத்துச் செல்ல வேண்டும். அப்படி கேபிள்கள் அமைப்பதற்கும், மின்கோபுரங்கள் நிறுவுவதற்கும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே உள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் அரசு முழிக்கிறது.

வேறு ஒரு பிரச்சினையும் எழுந்துள்ளது. மின்சாரத்தை வீணடிக்காத வகையில் கட்டிடங்களை அமைப்பதன் மூலம், 10 சதவீதம் மின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என அரசு சொல்கிறது. அதெல்லாம் பேசுவது சுலபம், ஆனால், வேலைக்காகாத காரியம் என சிலர் சொல்கிறார்கள். இது, கடைசியில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில்தான் போய் முடியும். கரியைப் பயன்படுத்துவதை அதிகரித்தால், அது வளி மண்டலத்தில் மாசை அதிகரிக்கும், அதனால், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அரசில் இருப்பவர்கள்வேறு விதமான கவலைகளை எழுப்புகிறார்கள். அணுமின் நிலையங்களை ஜெர்மனி மட்டும்தான் மூடுகிறது. அண்டை நாடான பிரான்ஸ் மூடவில்லை. இன்னொரு அண்டை நாடான போலந்து மேலும் இரண்டு உலைகளைத் திறந்திருக்கிறது. எனவே, இனி வரும் நாள்களில் ஜெர்மனி, பிரான்சிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் (ஏற்கெனவே தேவை உச்சத்திற்குப் போன நாட்களில் அது அவ்வாறு வாங்கியிருக்கிறது). நாட்டின் பொருளாதாரம் அயல் நாட்டைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுவிடும் என்பது அவர்களது கவலை.

முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கிறது ஜெர்மனி.