பதிவுகள்

Thursday 29 March 2012

விதிவிலக்கு பட்ஜெட்!

தமிழக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் எல்லாமும் கருத்து தெரிவித்தாலும்கூட, தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு சுமை கூட்டும்படியான எந்த வரிவிதிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கை பள்ளிக் கல்வி, மின்சேமிப்பு இரண்டுக்கும் மட்டும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இந்த இரண்டு விஷயங்களுமே அரசுக்கு தொடக்க நாள் முதலாகவே தலைவலியைக் கொடுத்து வருவன என்பதால் இதற்கு அரசு அதிக கவனம் செலுத்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் பல இனங்களுக்கு வரி விலக்கும் வரி குறைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ள இனங்கள் பலவும் சாதாரண மக்களுக்கு அப்பாற்பட்டவையே. வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு 14.5% மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எண்ணெய் உற்பத்திக்காக வரிச்சலுகை அளிக்கப்பட்ட ஆலைகள் வரி ஏய்ப்பு செய்வது கண்டறியப்பட்டதால், ரூ.5 கோடிக்கும் குறைவாக உற்பத்தி இருந்தால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, 5 விழுக்காடு மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படவுள்ளது.
2012-13 நிதியாண்டு முதல் பத்திரப் பதிவுகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள புதிய வழிகாட்டுதல் மதிப்புப்படி தீர்மானிக்கப்படும் என்பதாலும், நிலத்தின் மதிப்பு பல நூறு மடங்கு உயர்ந்துள்ளது என்பதாலும், பத்திரப் பதிவு மூலம்தான் அரசுக்குக் கணிசமான வருவாய் கிடைக்கவுள்ளது. இதனால் ஏழைகள் யாரும் பாதிக்கப்படப்போவதில்லை என்றாலும், மத்திய தர வகுப்பினர் வீடு வாங்குவதற்கு பத்திரப் பதிவுக்கான அதிகரித்த தொகையையும் சேமித்தாக வேண்டுமே என்பது பயமுறுத்துகிறது.
இந்த பட்ஜெட்டில் மின்சேமிப்பைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். ரூ.3,573 கோடி மின்விநியோக திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வழித்தட மின் இழப்பை குறைக்க இது உதவும். மின்சேமிப்புக் கருவிகள், பேட்டரிகளில் செயல்படும் வாகனங்கள், புளோரசண்ட் பல்புகள் ஆகியவற்றுக்கு மதிப்புக்கூட்டு வரி 14.5 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு விளக்குத் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா புளோரசண்ட் பல்புகள் வழங்க அறிவிப்பும் செய்துள்ளனர். இதனால், மின் சேமிப்பு மிகப்பெரிய அளவில் கிடைக்காது என்றாலும் இது ஒரு நல்ல தொடக்கம்.
சர்க்கரை நோயாளிகளுக்காக அவர்களுக்குத் தேவைப்படும் இன்சுலின் மருந்து மீதான மதிப்புக்கூட்டு வரி ரத்தும், கோவை மற்றும் மதுரையில் புற்றுநோய் மையங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியவை.
இந்த நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்கு மிக அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.14,552 கோடியை ஒதுக்கியுள்ளனர். ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சீருடை, காலணி, புத்தகங்கள் என எல்லாவற்றையும் இலவசமாக அளித்துவந்த அரசு, தற்போது மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்களையும் இலவசமாக அளிக்க அறிவிப்பு செய்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை எந்தவிதச் செலவும் கட்டணமும் இல்லாமல் படிக்க முடியும் என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, பட்ஜெட்டுக்கு முன்பாகவே, 1223 அறிவுசார் பள்ளிகளை, கணினி பலகை கொண்ட வகுப்பறை வசதிகளுடன் உருவாக்கவும் அரசு அறிவித்திருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதை உணர முடியும்.
இன்றைய சூழ்நிலையில் பள்ளிக் கல்விச் செலவு ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிக அதிகமாக இருக்கிறது. 10-ம் வகுப்பு வரை ஒரு ரூபாய் செலவு இல்லாமல் கல்வி பெறும் வசதி இருந்தும் மக்கள் ஏன் தனியார் பள்ளிகளைத் தேடிப் போகிறார்கள்? இதற்குக் காரணம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான். அவர்கள் தங்களது குழந்தைகளையே அரசுப் பள்ளியில் சேர்க்கத் தயங்கும்போது, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நன்றாகச் சொல்லித் தருகிறார்கள் என்ற நம்பிக்கையை எப்படி ஏற்படுத்த முடியும்?
அரசு அலுவலர்களும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும் அரசில் பதவி வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டால் மட்டுமே, பொதுமக்கள் தங்கள் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க மனமுவந்து முன்வருவார்கள். அரசுப் பள்ளிகளின் தரமும் அப்போதுதான் அதிகரிக்கும்.
நிதிநிலை அறிக்கை என்பது இலவச அறிவிப்புகளும், வரவு செலவு அறிக்கையும் மட்டுமல்ல. அது அரசின் கொள்கை முடிவுகளையும், செயல்திட்டங்களையும் வெளிப்படுத்தும் ஆவணமும் கூட. அந்த வகையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மாநில அளவிலான கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு, விவசாய உற்பத்தி அதிகரிப்புக்கான செயல்திட்டம் போன்றவைகள் பற்றி தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லையோ என்கிற தோற்றம் வெளிப்படுகிறது. அதற்குக் காரணம், நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடுகள் காணப்பட்டாலும் அந்த ஒதுக்கீடுகள் எப்படி செலவிடப்படும் என்பதில் தெளிவு காணப்படாததுதான்.
அதிமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்திருக்கும் முழுமையான முதல் நிதிநிலை அறிக்கை இதுதான். நிர்வாகம் முழு கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டு அவகாசம் கொடுத்து அதற்குப் பிறகு கருத்துக் கூறுவதுதான் நாகரிகம் என்பதால் விமர்சனங்களை அடக்கி வாசித்திருக்கிறோம். ஆட்சியாளர்கள் நல்ல ஆட்சியை உறுதி செய்ய அவகாசம் அளிப்பதில் தவறில்லை!