பதிவுகள்

Monday 1 April 2013

கூடாது, கூடவே கூடாது!

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக கடுமையான தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள போதிலும், இசைவுக் கலவி (கன்ஸன்ட் செக்ஸ்) வயது நிர்ணயம் 18-லிருந்து 16-ஆக குறைக்கப்பட்டிருப்பது சரிதானா என்பதை நாடாளுமன்றம் விரிவாக விவாதிக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், இன்றைய இளம் தலைமுறை சிறிய வயதிலேயே கணினி மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஈடுபாடு உடையவர்களாக இருப்பதாலும், இளம் வயதிலேயே பாலியல் தூண்டுதலுக்கு உள்ளாகிறார்கள். இன்றைய பள்ளிகளில் மிகப்பெரும் சவாலாக இருப்பது, கல்வியைவிட, இத்தகைய பாலினக் கவர்ச்சியும், அதைத் தொடர்ந்த காதலும் காமமும்தான்.
பல சம்பவங்களில், இந்தக் காதல் விவகாரம் அடிதடி தகராறுகளாகவும், சில சம்பவங்களில் பெண் கருவுறலாகவும் அமைந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து கருக்கலைப்பு நடைபெறுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய "செக்ஸ் சர்வே' மற்றும் ஊடகங்களின் ஆலோசனைகள், திருமணத்துக்கு முன்பாகக் கலவி செய்வது தவறு அல்ல என்றும், ஆனால் பாதுகாப்புடன் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் புத்திசொல்வதாக இருக்கின்றனவே தவிர யாருமே இது கூடாது என்று சொல்வதாக இல்லை.
நடைமுறை உண்மை இது என்ற போதிலும், இசைவுக் கலவி வயது வரம்பை 16 ஆகக் குறைப்பதன் மூலம், இன்றைய நாளில் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர், மாணவியர்களையும் சட்டப்படி தகுதியுடையவர்களாக ஆக்கிவிடுகிறோம். அதுமட்டுமல்ல, வேறு சட்டச் சிக்கல்களும் ஏற்பட இருக்கின்றன.
ஒரு 16 வயது மாணவி, அல்லது இளம்பெண், இசைவுக் கலவியில் கருவுற நேர்ந்தால், அந்தக் கருவைக் கலைக்க அவர் விரும்பவில்லை என்றால், என்ன ஆகும்? அவர் திருமணம் செய்துகொள்ள முடியாது; ஏனென்றால் 18 வயதுக்கு முன்பாக இளவயதுத் திருமணம் நடத்துவது சட்டப்படிக் குற்றம். ஆகவே, அவர் கன்னித்தாயாக, கல்யாணம் இல்லாமலேயே குழந்தை பெற வேண்டும் அல்லது கல்யாணம் செய்துகொள்ளாமல், உடனுறைத்தோழியாக வாழ்க்கை நடத்த வேண்டும். இத்தகைய அவல நிலை இந்தியாவில் சட்டப்படியாக உருவாகத்தான் வேண்டுமா?
இந்தியாவில் பாலியல் வன்கொடுமை மற்றும் வல்லுறவுக்கு ஆளாகும் சிறுமிகளில் பெரும்பகுதியினர் 16 வயது முதல் 18 வயதுக்குள் இருப்பவர்கள். இப்போதைய சட்டத்தின்படி, இந்தச் சிறுமிகள், மனம் இசைந்து கலவி கொண்டாலும்கூட, அவரை வல்லுறவு செய்ததாகத்தான் சட்டம் எடுத்துக்கொள்கிறது. தொடர்புடையவரைத் தண்டிக்கிறது. இப்போது இந்த வயது வரம்பை 16 ஆகக் குறைத்துவிட்டால், பல வல்லுறவு வழக்குகளில், பணம் கொடுத்தும், மிரட்டியும், "இசைவுக்கலவி' என்பதாக காவல்துறை உதவியுடன் வழக்கை திசைதிருப்பிக் குற்றவாளிக்கு சாதகமாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இது தேவையா?
இன்றைய நாள் வரை பாலியல் தொழிலில் சிறுமிகளை ஈடுபடுத்துவது இந்தியாவில் அரிதாக இருந்து வருகிறது. வயது வரம்பைத் தளர்த்துவதால், 16 வயது சிறுமிகளை ஈடுபடுத்தும் போக்கினை இது அதிகப்படுத்தும்.
சில இடங்களில், சில நேரங்களில் மறைவாக நடந்துகொண்டிருக்கும் சிறார்களின் திசைமாறல்,அத்துமீறல் அல்லது வன்கொடுமைகளை, நாடு முழுமைக்கும் சட்டப்படி பொதுமைப்படுத்துவது சரியல்ல. இது பாலினக் கவர்ச்சியில் இயல்பாகவே எழும் உள்ளுணர்வு சார்ந்த தடையை, அச்சத்தை, இல்லாமலாக்கிக் காமத்தை தாராளமயமாக்கிவிடும். கலாசாரச் சீரழிவை ஏற்படுத்திவிடும்.
இளவயதிலேயே பாலியல் தூண்டுதலுக்கு வடிகால் அமையுமானால், பாலியல் கொடுமை, வல்லுறவு ஆகிய குற்றங்கள் குறையும் என்று மத்திய அரசு கருதினால் அது அறிவுடைமை அல்ல. இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் குழந்தைத் திருமணத்தால் எத்தகைய தீமைகள் விளைந்தனவோ அதற்குச் சற்றும் குறைவில்லாத தீமைகள் இந்த வயது குறைப்பிலும் வந்து சேரும் என்பதை அரசு உணர வேண்டும்.
இன்றைய தேவை - 16 வயதுச் சிறுவன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்டால், அந்தக் குற்றத்தின் தன்மை கருதி அவனைச் சிறுவனாகக் கருதாமல், 18 வயது நிரம்பியவரை விசாரிப்பது போல விசாரிக்கவும் தண்டிக்கவும் வேண்டும் என்பதுதான். "நிர்பய' வழக்கு நமக்கு உணர்த்துவதும் இதைத்தான்.
புதிய மசோதாவில் "பாலியல் தாக்குதல்' என்பதை "வல்லுறவு' என்று மாற்றித் திருத்தப்பட்டுள்ளது. வல்லுறவு என்பது ஒரு பெண்ணிடம் ஆண் நிகழ்த்தும் பாலியல் வன்கொடுமை என்பதாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பது சரியான வாதம் என்றாலும், மறுசிந்தனைக்கு உரியது.
சிறுவர்களைப் பெண்கள் தமது இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டாலோ, அல்லது சிறார் அல்லது ஆணை மற்ற ஆண்கள் பயன்படுத்திக்கொண்டாலோ அதனை வல்லுறவு என்று கருதக்கூடாது என்ற எண்ணத்தில் இந்தத் திருத்தம் செய்யப்படுகிறது. அது அப்படியாகவே இருந்தாலும், "வல்லுறவு அல்லது பாலியல் தாக்குதல்' என்பதாக மாற்றப்படுவதுதான் சரியானதாக இருக்கும்.
அப்போதுதான், பாதிக்கப்பட்டவர் பெண்ணாக இருந்தால் வல்லுறவு என்ற வகைப்பாட்டிலும், பாதிக்கப்பட்டவர் சிறுவர் அல்லது ஆணாக இருந்தால் பாலியல் தாக்குதல் என்ற வகைப்பாட்டிலும் உறுதிபட ஒரே விதமான தண்டனை கிடைக்க வழியேற்படும்.
நுகர்வோர் கலாசாரமும், உலகமயமாக்கலும் மிக அதிகமான கலாசாரச் சீரழிவுகளையும், வக்கிரத்தனங்களையும் ஏற்படுத்தி இருப்பது 16 முதல் 18 வயதான வயதுப் பிரிவினரிடம்தான். இன்றைய தேவை இசைவுக் கலவிக்கான வயதைக் குறைப்பதல்ல; 18 வயதுக்குக் கீழேயுள்ள சிறார்கள் மத்தியில் காதல், கலவி போன்ற போக்குகளைத் தடுத்து நிறுத்துவது, பள்ளிக்கூட மாணவர்களின் காதலைக் கருவாக்கித் திரைப்படங்கள் எடுக்கும் போக்கு உள்ளிட்ட செயல்பாடுகளை சட்டப்படி தண்டனைக்கு உள்ளாக்குவதே!