பதிவுகள்

Thursday 12 May 2011

வேண்டுகோளுடன் வாழ்த்துகள்!

ஒரு மாணவர் அல்லது மாணவி அதிக மதிப்பெண்கள் பெறும்போது, அதற்காக அதிகம் மகிழ்ச்சி கொள்வது பள்ளி நிர்வாகம்தான். பெற்றோருடைய மகிழ்ச்சி வெறும் குடும்ப மகிழ்ச்சி மட்டுமே.  பள்ளி நிர்வாகத்தின் மகிழ்ச்சி பரந்துபட்டது. அப்பெருமை அவர்களது உழைப்புக்குக் கிடைத்த பரிசு. அதனால்தான் அவர்கள் மாணவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து, இனிப்பு வழங்கி, ஊர்ப்பிரமுகர்களையும், மாவட்ட ஆட்சியரையும் வைத்துப் பாராட்டுகிறார்கள். சில நிர்வாகங்கள் அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குகின்றன. சில நிர்வாகங்கள் அம்மாணவர்களின் உயர் கல்விச்செலவை ஏற்கவும் முன்வருகின்றன.  பள்ளி நிர்வாகங்களின் இந்த மகிழ்ச்சி வெளிப்பாட்டை வெறும் விளம்பரம் என்று சொல்லிவிட முடியாது. இதன் மூலம் கூடுதலாக மாணவர்களைக் கவர்ந்து அதிக கட்டணங்களை வசூலித்துவிடுவார்கள் என்று தடாலடியாகப் பேசிவிடவும் கூடாது. ஏனென்றால், மாவட்ட, மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுவிட்டால், அந்தப் பள்ளிகளுக்கு உயர் அதிகாரிகளின் பரிந்துரைகளும், நெருக்கடிகளும் மேலதிகமானவை. புகழோடு சேர்ந்து பிரச்னைகளும், அன்புக் கட்டளைகளும்கூட அவர்களுக்கு வருகின்றன. இருந்தாலும்கூட, பள்ளி நிர்வாகத்தின் மகிழ்ச்சி களங்கமற்ற ஒன்றுதான்.  தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் கட்}ஆப் மதிப்பெண் 180-க்கும் அதிகமாகப் பெற்றவர்கள் சுமார் 50,000 பேர் என்றால், அதில் 99 விழுக்காடு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள். அரசுப் பள்ளிகளில் இந்தச் சாதனை மிகக் குறைவாகவே நடைபெற்றுள்ளது. அதுவும்கூட, விருதுநகர் போன்ற சில மாவட்டங்களில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில், மாணவர்களைத் தேர்வுக்குச் சரியாகப் பயிற்றுவிக்கும் திறமை படைத்தவர்கள் என்பதைத் தனியார் பள்ளிகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. இதற்காகப் பாராட்டத்தான் வேண்டும்.  இவ்வளவு சிறப்பாகத் தேர்ச்சிபெறச் செய்யும் தனியார் பள்ளிகள், சமூகக் கடமையாக அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஏன் கல்வி புகட்டக்கூடாது என்ற கேள்வியை, ஒரு சிறந்த தனியார் பள்ளி நிர்வாகியிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில் வேதனையானது. அவர் சொன்னார்: "எத்தகைய மாணவர்களை வேண்டுமானாலும் கொடுங்கள். அவர்களுக்கு ஏற்பப் பாடம் நடத்தி, அவர்களை எங்கள் வழிக்குக் கொண்டுவர முடியும். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களை...' என்று கையெடுத்துக் கும்பிட்டார். அவரது பள்ளியில் மிகச்சிறந்த ஆசிரியையாக இருந்தவர் அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியமர்ந்தவுடன் அவரா இவர் என்கிற அளவுக்கு மாறிப்போய்விட்டார் என்பதையும் குறிப்பிட்டார்.  அது தொலையட்டும். அது அரசின் தலைவலி. அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள், அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்கிற நிலை வராத வரை, "மழைக்கு ஒதுங்க அரசுப் பள்ளி, மதிப்பெண்ணுக்குத் தனியார் பள்ளி' என்பதுதான் தமிழகத்தின் தலைவிதியாக இருக்கும்.  இப்போது மகிழ்ச்சியில் திளைக்கும் தனியார் பள்ளிகளிடம் இந்தவேளையில் கேட்டுக்கொள்ள ஒன்று இருக்கிறது. விருந்து இலையில் கொஞ்சம் வேப்பம்பூ குழம்பு போன்றதுதான் இதுவும். தனியார் பள்ளிகள் வசூலிக்கும் அதிகமான கட்டணத்தால் நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டுவரும் வேதனைதான் அது.  அரசுப் பள்ளிகள் மீதும், அரசுப் பள்ளி ஆசிரியப் பெருந்தகைகள் மீதும் நம்பிக்கையிழந்து, சாதாரண அன்றாடக் கூலித்தொழிலாளியும்கூட தன் குழந்தைக்கு இடம் கேட்டு தனியார் பள்ளி வாசலில் காத்துக் கிடக்கிறார் என்பது நீங்கள் அறியாதது அல்ல. பலதரப்பட்ட மக்களும் உங்களை நாடி வரும்போது, கட்டணத்தை மேலதிகமாக நிர்ணயிப்பது நியாயமானதுதானா என்பதை எண்ணிப் பாருங்கள்.  அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் குழந்தைகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ. 60,000 என்றால் அதைப் பற்றி வருத்தப்படுவோர் யாருமில்லை. ஆனால், ஒரு சாதாரண நடுத்தர வருவாய்க் குடும்பத்தில், ஆறாம் வகுப்புப் படிக்கும் குழந்தைக்கு ரூ. 16,000 கட்டணம் என்றால், குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்றது என்பதைச் சொல்லித் தெரிந்துகொள்ளும் நிலையில் நீங்கள் இல்லை.  கல்விக் கட்டணச் சீரமைப்பு தொடர்பான புதிய குழுவின் அறிக்கை வெளிவரும்வரை 2009-10-ம் கல்வி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக்கட்டணத்தையே வசூலிப்பது என்கிற முடிவு சரியானதாக இருக்கலாம். ஆனால், எல்லா மக்களாலும் தாங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்காது. எல்லோரும் அரசு ஊழியர்கள் அல்ல. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்திலிருந்து அள்ளி வழங்க!  தனியார் நிறுவனங்களில் கணவரும் மனைவியுமாக வேலை செய்து சம்பாதித்து, எப்படியும் தங்கள் குழந்தைகளைக் கரைசேர்க்க வேண்டும் என்று உழைத்துக்கொண்டிருக்கும் சாதாரண மக்கள்தான் பெருவாரியான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர். அவர்கள் தங்களது சக்தியை மீறித்தான் இந்தச் செலவைச் செய்கிறார்கள். அவர்களிடம் ஆசை இருக்கிறது. காசு இல்லை. கவிஞர் மு. மேத்தா வரிகளில் சொல்வதானால், "விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்'.  உங்களை எந்தக் குழுவும் கட்டிப்போட முடியாது. நீதிமன்றத்தின் கதவு எப்போதும் உங்களுக்குத் திறந்தே இருக்கும். அரசியல்வாதிகள் உங்கள் அன்பான குரலுக்காக ஏங்கிக் கிடப்பார்கள். கல்வித்துறை அதிகாரிகளோ, உங்கள் முற்றத்தில்! எத்தனை செய்திகள், எத்தனை வழக்குகள், எத்தனை போராட்டங்கள் எதுவும் உங்களை ஒன்றும் செய்யப்போவதில்லை. நடுத்தர மக்களுக்கு உங்களைவிட்டால் வேறு வழியும் இல்லை. நடுத்தர மக்களின் சக்திக்கு ஏற்பக் கட்டணத்தைக் கேளுங்கள். மனம் வாழ்த்திடக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.  "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்று சொன்ன அதிவீரராம பாண்டியன் ஒருவேளை நடுத்தர வருவாய்ப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்திருப்பாரோ என்னவோ? மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 25 சதவிகித இடங்களைக் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்காக தருமத்துக்காகவும், 25 சதவிகிதம் இடங்களை உயர் வருவாய்ப் பிரிவினருக்காக மிக அதிகமான கட்டணத்துக்காகவும், மீதமுள்ள 50 சதவிகிதம் இடங்களை மத்தியதர வகுப்பினருக்காக சராசரி கட்டணத்துக்காகவும் ஒதுக்கி, ஏன் கல்விக்கூடங்களை வியாபாரக் கேந்திரங்களாக்காமல், உண்மையான சமதர்மக் கல்விச்சேவை ஆக்கக்கூடாது? கொஞ்சம் யோசியுங்களேன், நியாயம் புரியும்!