பதிவுகள்

Tuesday 28 June 2011

சட்டத்தின் ஓட்டைகள்!


நமது நாட்டில் சட்டம் இயற்றுவதில் நாம் காட்டும் சுறுசுறுப்பையும் வேகத்தையும் அந்தச் சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்துவதில் காட்டுவதில்லை என்பதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உணவு என்று கடந்த ஐந்து ஆறு வருடங்களில் மெய்சிலிர்க்க வைக்கும் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இதனாலெல்லாம் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கையோ, பள்ளிக்குப் போகாத குழந்தைகளின் எண்ணிக்கையோ குறைந்திருக்கிறதா என்பது உலகறிந்த ரகசியம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இயற்றிய சட்டங்களிலேயே அதிகமான பயனளித்திருக்கும் சட்டம் ஒன்று இருக்குமானால் அது தகவல் பெறும் உரிமைச் சட்டம்தான். எந்தத் துறையிலிருந்தும், எந்தத் தகவலை வேண்டுமானாலும் பெறுவதற்கு உதவும் இந்தச் சட்டத்தின் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்கிற குறிக்கோளுடன் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. தகவல் ஆணையமும் சரி, தகவல் பெறும் உரிமைச் சட்டமும் சரி, ஓரளவுக்கு பயனளித்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியேகூட இந்தச் சட்டத்துக்குப் புறம்பானவராக இருக்க முடியாது என்று ஒரு சாதாரணக் குடிமகன் கோருமளவுக்கு, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டமாக இது அமைந்திருக்கிறது. அகில இந்திய அளவில் பல தகவல்களை இந்தச் சட்டத்தின் உதவியுடன் கோரிப் பெற முடிந்திருக்கிறது. அதன் விளைவாகப் பல முறைகேடுகளும், அரசில் உயர் பதவி வகிப்பவர்கள் தொடர்புடைய ஊழல்களும்கூட வெளி வந்திருக்கின்றன. யாரையும் தட்டிக் கேட்கவும், தவறு நடந்திருந்திருந்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டவும் இந்தச் சட்டம் ஊடகங்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்கிற நிலைமைதான் தொடர்கிறது. மாநிலத் தகவல் ஆணையத்தின் செயல்பாடு என்பது கையையும், காலையும் கட்டிப் போட்ட நிலையில்தான் தொடர்கிறதோ என்று தோன்றுகிறது. குறிப்பாக, தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்படுபவர்கள், அரசு நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் என்பதால், தங்களுடன் பணியாற்றிய சக அதிகாரிகளைக் காப்பாற்றுவதில் காட்டும் முனைப்பை, தகவல் கோரும் குடிமகனின் கேள்விக்குப் பதிலளிப்பதில் காட்டுவதாகத் தெரியவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சில தகவல்களை ஒருவர் கோருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, சம்பந்தப்பட்ட துறையில் உள்ள தகவல் அதிகாரி கடமைப்பட்டவர். அவர் தவறான தகவல்களை அளித்தாலோ, அரைகுறைத் தகவல்களை அளித்தாலோ அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு உண்டு. இது போன்ற பிரச்னைகளில், ஆணையம் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் வழி இருக்கிறது. இதுவரை அப்படி தகவல் ஆணையத்தால் அபராதம் விதிக்கப்பட்டு, அபராதம் கட்டிய அதிகாரிகள் எத்தனை பேர் என்கிற புள்ளிவிவரம் கிடைக்காது. காரணம், மிகச் சிலர் மட்டும்தான் தகவல் ஆணையத்தின் உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறார்கள். பெருவாரியான அதிகாரிகள், தகவல் ஆணையத்தின் ஆணைக்கு உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிவிடுகிறார்கள். சாதாரணமாகத் தடை உத்தரவு வாங்கினால் கூடப் பரவாயில்லை. தங்களது தடை உத்தரவு மனுவில் தகவல் பெற விண்ணப்பம் கொடுத்தவரையும், தகவல் ஆணையத்தையும் எதிர்தரப்பினராகச் சேர்த்து விடுகிறார்கள். நல்லெண்ணத்துடன் தகவல் பெற முயன்றவர் நீதிமன்றம், நோட்டீஸ் என்பதை எல்லாம் பார்த்து பயந்து, விட்டால் போதும் என்று ஒதுங்கி விடுகிறார். தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் விசாரித்தால், ஆணையமே ஒரு நீதித் துறை போன்ற அரசியல் சட்ட அமைப்பு என்பதால் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது என்று கூறித் தப்பித்துக் கொள்கிறது. இதை உயர்நீதிமன்றமே ஒரு வழக்கில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தகவல் ஆணையமும் தனது தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவை விலக்கத் தயாராகாமல், தகவல் கோரியவரும் சலித்துப் போய் வேண்டாம் விவகாரம் என்று ஒதுங்க, முறையாகத் தகவல் தராமல், அல்லது பொய்யான தகவலைத் தந்த அதிகாரி சாதுர்யமாகத் தப்பித்துக் கொள்கிறார். இதுவரை ஏறத்தாழ 50க்கும் அதிகமான தகவல் அதிகாரிகள் தவறான தகவல் தந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தும், உயர் நீதிமன்றத் தடை உத்தரவு பெற்று சட்டத்தின் ஓட்டை வழியாகத் தப்பி இருக்கின்றனர். தகவல் ஆணையத்தின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பிப்பதில்லை என்று நீதித்துறை முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால், தவறான தகவல் அளித்த அதிகாரிகளை இடைக்காலப் பணிநீக்கம் செய்ய அரசாவது முன்வர வேண்டும். இரண்டும் இல்லாத நிலையில், சட்டம் பிரேம் போட்டு சுவற்றில் மாட்டிய சட்டமாகத் தொங்குமே தவிரத் தனது கடமையைச் செய்யாது. சட்டம் போட்டாகிவிட்டது என்றாலே எல்லாம் ஆயிற்றா என்ன?