கறுப்புப் பணத்தை மீண்டும்  இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் தனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது என்று  அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களிடம் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், ஆளாளுக்கு  ஒவ்வொரு தொகையைச் சொல்கிறார்கள், இந்தத் தொகை அவர்களுக்கு எந்தக் கணக்கீடு மூலம்  கிடைத்ததோ என்கிற வியப்பையும் தெரிவித்தார். அதாவது நாங்கள் நீதிமன்றத்துக்கும்கூட எந்தப் பட்டியலையும் தர  மறுத்துவரும்போது, இவர்கள் மட்டும் எப்படி இதையெல்லாம் சொல்கிறார்கள் என்ற  கருத்தாகவும் இருக்கலாம் அல்லது எல்லா கறுப்புப் பணமும் இந்தியாவுக்கு வந்துகொண்டே  இருக்கும்போது, ஏன் இப்படிப் புரியாமல் பேசுகிறார்கள் என்கிற கருத்தாகவும் இது  இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், கறுப்புப் பணத்தை இந்தியாவில் கொண்டுவந்து கொட்டுவதற்காகவே  மோரீஷஸ் என்கிற நாடு இருக்கிறது. அந்த நாட்டுடன் இந்திய அரசு செய்துகொண்ட இருமுறை  வரிபோடுவதைத் தவிர்க்கும் ஒப்பந்தம் (டி.டிடி.ஏ.ஏ), பல ஆண்டுகளாகத் திருத்தப்படாமல்  இருக்கிறது. இந்தியாவுக்கு வந்து சேரும் அன்னிய நேரடி முதலீடுகளில் 42 விழுக்காடு  மற்றும் அன்னிய நிறுவனங்கள் இந்தியப் பங்குகளில் செய்யும் 40 விழுக்காடு முதலீடு  மோரீஷஸ் தீவு மூலம்தான் வந்துகொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் உதவியுடன் "மணி லாண்டரிங்' என்று பரவலாகக் கூறப்படும்  பணச்சலவை, அதாவது கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சிகள் வெகுசுலபமாக  நடைபெற்று வருகிறது என்பது உலகறிந்த உண்மை. பல்வேறு பொருளாதார நிபுணர்கள் இதுபற்றிய  விமர்சனங்களை எழுப்பிய பிறகு, இதற்கான மறுபேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால்,  2008-ம் ஆண்டு இந்தப் பேச்சுவார்த்தை தொடராமல் நின்றுபோனதற்கான காரணம் என்ன, யார்  என்பது புரியாத புதிர். இப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மோரீஷஸ் தீவில் சிபிஐ  நடத்தியிருக்கும் விசாரணையில், 2007-க்குப் பிறகுதான், அதாவது அலைக்கற்றை ஒதுக்கீடு  தீவிரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான், இந்த ஒதுக்கீட்டால் பயனடைந்துள்ள  வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பணத்தை மோரீஷஸ் நாட்டில் உள்ள சில புதிய  நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. இந்தப் பணத்தை அவர்கள் முதலீடு செய்ததன் அல்லது  பங்குகளை விட்டுக் கொடுத்ததன் காரணம் என்ன என்பதுதான் இந்த ஊழலின் ஊற்றுக்கண். தாராளமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்த 1991-க்கு முன்புவரை அரசியல்வாதிகள்  பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளிக்கும்போது, ஒரு தொகையை கமிஷனாகப்  பெற்றுவிடுவார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி என்று சொன்னாலும் அல்லது  நிலக்கரி கொள்முதல் பெட்ரோலியக் கொள்முதல், போபர்ஸ் போன்ற ஆயுதக்கொள்முதல்  ஆகியவற்றில் ஈடுபடும்போதும் அதற்கான கமிஷன் வெளிநாட்டு வங்கிகளிலேயே அரசியல்வாதிகள்  சொல்லும் கணக்கில் போடப்படும். இந்த நிலைமை 2000-க்குப் பிறகு மாறத் தொடங்கியது. எந்த நிறுவனம்  தொடங்கப்பட்டாலும் அதில் அமைச்சர்கள் தங்களுக்குச் சொந்தமான நபர்களின் பெயரில்  இயங்கும் நிறுவனங்களையும் பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று  கட்டாயப்படுத்துவது தொடங்கியது. இதில் தங்களது உறவுக்கார நிறுவனங்களால் கணக்குக்  காட்டமுடியாத அளவுக்குத் தொகை பெரியதாக இருந்தால், மோரீஷஸ், சிங்கப்பூர், சைப்ரஸ்  போன்று, இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளில் குட்டியாக ஒரு போலி  நிறுவனத்தைப் பெயரளவில் தொடங்கி அதில் முதலீடாகப் பணத்தைப் போடச் செய்வது அல்லது  அந்தநாட்டில் உள்ள நிறுவனத்தில் பங்கு வைத்திருந்தால் அதை இந்திய நிறுவனத்துக்கு  (அரசியல்வாதியின் பினாமி நிறுவனம்) விற்றுவிடச் செய்வது ஆகிய தகிடுதத்தங்களில்  ஈடுபடும் போக்கு தலையெடுக்கத் தொடங்கியது. இப்போது மோரீஷஸில் ஐந்து நிறுவனங்களின் முதலீடு விவகாரங்களில் சிபிஐ கவனம்  செலுத்தி வருகிறது. பிளாக் லயன் லிட், கேபிடல் குளோபல் லிட், டெக்கான்ஸ் ஏசியன்  இன்ப்ராஸ்ட்ரக்சர், எய்டுடெல் ஹோல்டிங், இன்டிடெல் ஹோல்டிங் ஆகிய ஐந்து  நிறுவனங்களும் ருயாஸ் ஆர் எஸ்ஸார் குரூப் நிறுவனத்துக்குச் சொந்தமானவை அல்ல  என்றும், கெய்த்தான் குடும்பத்துக்குச் சொந்தமானது என்றும் தெரியவந்துள்ளது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் 9.9 விழுக்காடு பங்குகளை வாங்கிய டெல்பி  இன்வெஸ்ட்மென்ட், மோரீஷஸ் தீவில் உள்ள மாவி இன்வெஸ்ட்மென்ட் ஃபன்டு என்ற  நிறுவனத்துக்குச் சொந்தமானது என்றும் தெரியவந்துள்ளது. ஸ்வான் டெலிகாம்  நிறுவனத்தின் ரூ. 1.07 கோடி பங்குகள் டெல்பி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துக்கு  2007-ல் விற்றது ஏன் என்பதை விசாரிக்கிறது சிபிஐ. எபிசிடி போல, ஆல்பா பீட்டா காமா  டெல்டா போல டெல்பி இன்வெஸ்ட்மென்ட் ஏதோ பினாமி நிறுவனமா என்கிற ரீதியில் விசாரணைகள்  விரியும். இத்தனை குளறுபடிக்கும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள ஓட்டைகள் காரணம் என்று  தெரிந்திருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏன் வேடிக்கை பார்த்தது? இந்த  ஒப்பந்தத்தில் சில முக்கிய திருத்தங்கள் தேவையாக இருக்கிறது என்று கடந்த ஜூன்  இறுதியில்கூட நிதியமைச்சர் பிரணாப் சொல்லியிருக்கிறார். அத்தனை கறுப்புப் பணமும்  இந்திய முதலீடாக வந்து சேரும்வரை ஏன் காத்திருந்தார்கள்? அண்டை நாடுகளுடனான உறவு என்பது நமது பாதுகாப்புக்காக இருக்க வேண்டும்.  சரித்திர ரீதியிலான பிணைப்பின் காரணமாகவோ, இன ஒற்றுமை காரணமாகவோ இருக்கக்கூடும்.  பொருளாதார ரீதியிலான பரஸ்பர நன்மையின் அடிப்படையிலும் இருக்கலாம். இந்திய  அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், இடைத்தரகர்கள் போன்றவர்களின் கறுப்புப் பணத்தை  வெள்ளைப் பணமாக்கி முதலீடு செய்வதற்காக ஒரு அண்டை நாட்டுடன் நல்லுறவு  வைத்துக்கொண்டிருக்கும் விசித்திரத்தை இப்போதுதான் பார்க்கிறோம். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு  வருவது இருக்கட்டும். முதலில், கறுப்புப் பணம் சலவை செய்யப்பட்டு வெள்ளைப் பணமாக  இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய உதவும் ஓட்டைகளையாவது அடைக்கக்கூடாதா?