பதிவுகள்

Saturday 1 October 2011

நூறே அதிகம்!

எல்லை அழைப்புகள் செப்டம்பர் 27-ம் தேதியுடன் முடிந்துவிட்டன என்பதை செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொரு நுகர்வோரும் மிக நன்றாக உணர முடிகிறது. இப்போது எந்த நிறுவனத்திடமிருந்தும், "உங்களுக்கு இந்தச் சேவை காத்திருக்கிறது', "உங்களுக்கு இந்தப் பாட்டு வேண்டுமா?' "உங்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறது?' என்று பதிவுசெய்யப்பட்ட இனிய குரல் எரிச்சலூட்டுவதில்லை. அழிக்க அழிக்க மாளாமல் மீண்டும் மீண்டும் வந்து குவியும் இத்தகைய வணிகக் குறுந்தகவல்களும் நின்றுவிட்டன. செல்போன் சேவை தொடங்கி, 2ஜி, 3ஜி என வளர்ந்து, இந்தியாவில் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 61.2 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்பட்ட பின்னர்தான் நுகர்வோருக்கு இத்தகைய நிம்மதிப் பெருமூச்சுக்கே வழியேற்பட்டு இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இந்த எளிய நுகர்வோர் சேவையை உறுதிசெய்ய இத்தனை காலமா என்று எரிச்சல் ஏற்பட்டாலும், இப்போதாகிலும் துணிந்து செய்தார்களே என்று நன்றி சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் இந்த வேளையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஒரு சிம்கார்டு மூலம் ஒரு நாளைக்கு 100 குறுந்தகவல்கள் மட்டுமே அனுப்ப முடியும்' என்ற கட்டுப்பாடு குறித்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த 100 குறுந்தகவல் கட்டுப்பாடு என்பது இன்றியமையாச் சேவைகள் வழங்கி வரும் வங்கிகள், "ட்ராய்' அமைப்பில் பதிவு செய்துள்ள டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்குக் கிடையாது என்று அரசு தெரிவித்திருந்தாலும், சாதாரண மக்களுக்கு இந்த 100 கட்டுப்பாடு மிக அநியாயம் என்பதாக இதை எதிர்ப்பவர்கள் பேசுகின்றனர். உண்மையிலேயே இது அநியாயமா அல்லது கட்டுப்பாடற்ற குறுந்தகவல் என்ற அறிவிப்பு மூலம் இளைஞர்களை வளைத்துப்போட்ட செல்போன் நிறுவனங்கள் இப்படியொரு எதிர்ப்பைக் கிளப்பிவிடுகின்றனவா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், டிராய் தனது புதிய அறிவிப்பில், எந்தவொரு செல்போன் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக குறுந்தகவல் எண்ணிக்கைச் சலுகையை 100-க்கு மேலாக அறிவிக்கக்கூடாது என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. ஆகவே, இத்தகைய மக்கள் எதிர்ப்பைக் காரணம் காட்டி செல்போன் நிறுவனங்கள் தங்கள் வணிகநோக்கத்தைப் பூர்த்தி செய்துகொள்ளும் முயற்சியோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. பள்ளி தொடங்கி கல்லூரிவரை அனைத்து மாணவ மாணவியரும் தங்கள் செல்போனில் எந்த நேரம் பார்த்தாலும் ""பேன் பார்த்துக் கொண்டு'' (குறுந்தகவல் அனுப்புவதை பல வீடுகளில் இப்படித்தான் கேலியாகச் சொல்கிறார்கள்) இருப்பதற்கு எல்லா பெற்றோரிடமும் முணுமுணுப்பு இருந்துவரும் காரணத்தாலும், எல்லா வீடுகளிலும் வளர்இளம் பருவத்தினர், இளைஞர்களின் செல்போனில் இரவு முழுதும் குறுந்தகவல்கள் வந்து விழுந்துகொண்டே இருக்க, காலை எழுந்தவுடன் (குறுந்தகவல்) படிப்பு, பின் அழிப்பு, பதில் அனுப்பு என்பதிலேயே பொழுது விரயமாகிக் கொண்டிருப்பதைக்கண்டு வெளியில் சொல்ல முடியாமல் நொந்துகொள்ளும் பெற்றோர்கள் இந்தக் கட்டுப்பாட்டை வரவேற்கவே செய்வார்கள். இத்தனை காலமும் குறுந்தகவலில் இலவசமாகக் கேலி பேசிவந்த இளைஞர்கள், இனி நேரடியாக செல்போனில் பேசத் தொடங்கினால், மாதக்கட்டணம் அதிகமாகுமே என்கின்ற கவலை பெற்றோருக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் இருக்கிறது. இந்தச் செலவு பயம், இவர்களை அளவோடு பேசப் பழக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு இளம்பெண் தினமும் தன் காதலனுக்கு குறைந்தது 300 குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்ததாகவும், இப்போது இரண்டு சிம்கார்டு வாங்கினாலும் 200 மட்டுமே அனுப்ப முடியும் என்று கவலைப்படுவதையும் "என் வீட்டில் நடக்கும் பிறந்தநாள் விழாவுக்கு எப்படி எல்லோரையும் குறுந்தகவல் மூலம் அழைப்பேன்" என்று குடும்பத் தலைவி வருத்தப்படுவதையும் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. ஆனால், ஒரு பள்ளி அல்லது கல்லூரி தனது மாணவர்களுக்கோ அல்லது பெற்றோருக்கோ "மழையினால் பள்ளி விடுமுறை' போன்ற குறுந்தகவல்களை பல ஆயிரம் பேருக்கு அனுப்ப வேண்டும் என்றால் என்ன செய்வது? அவர்கள் டிராய் அமைப்பில் பதிவு செய்துகொண்டு, வங்கிகள் வாடிக்கையாளருக்குப் பணம் இருப்பு விவரங்களைத் தெரிவிப்பதைப் போலத்தான், இந்தச் சேவையைப் பெற முடியும் என்பதைப் பரவலாக விளம்பரப்படுத்த "ட்ராய்' முன்வர வேண்டும். குறுந்தகவல் 100 முடிந்த நிலையில் மிக அவசரமான குறுந்தகவல் அனுப்பியாக வேண்டும் என்ற நிலை வந்தால் நான் என்ன செய்வது? என்று அப்பாவித்தனமாகக் கேட்பதும், ஒரு மரணச் செய்தியை 100 பேருக்கு மட்டும்தான் நான் குறுந்தகவலாக அனுப்ப முடியுமா? என்பதும் கேட்பதற்கு நியாயமான கோரிக்கைபோலத் தோன்றினாலும், இத்தகைய சூழலில் அவர்கள் தொடர்புடைய நபர்களிடம் நேரடியாக தொலைபேசியில் பேச முடியும் என்பதையும், அவர்கள் மூலமாக இத்தகவலை மற்றவர்களுக்குக் குறுந்தகவலாகக் கொண்டு சேர்க்கும் வசதியும் இருக்கிறது என்பதையும் பார்க்கும்போது, இத்தகைய அச்சக் குரல்கள் அர்த்தமிழந்து விடுகின்றன. குறுந்தகவலை ஒரு நாளைக்கு 100 என்று நிறுத்திக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் சில உண்டு. அதிக நேரம் குறுந்தகவல் அனுப்ப எழுத்துகளை அழுத்தும் கட்டை விரலுக்கு சீக்கிரத்தில் நரம்பு வலி வருகின்றது என்று சொல்லப்படுகிறது. மேலும் குறுந்தகவலை, ஒவ்வொரு செல்போனுக்கு ஏற்ப, அவை அனுமதிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை எழுத்துகளுக்குள் முடிக்க, வார்த்தைகளைச் சுருக்கிச் சுருக்கி, சொற்களின் அழகைக் குலைப்பதுடன், இளைஞர்கள் தங்கள் தேர்வு வினாத்தாள்களிலும் அத்தகைய வார்த்தைகளையே பயன்படுத்தும் அவலங்கள் குறையும். குறுந்தகவல் கட்டுப்பாடு இன்றைய சமுதாயத்தின் கடப்பாடு! நவீன தொழில்நுட்ப வசதிகள் நேரத்தை மிச்சப்படுத்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டுமே தவிர, கால விரயத்துக்கும், உபயோகமற்ற கருத்துப் பரிமாற்றத்துக்கும் பயன்படுவது தவிர்க்கப்பட வேண்டும். கட்டுப்பாடே இல்லாத தொழில்நுட்ப வசதி, கடிவாளம் இல்லாத குதிரையைப் போல "ட்ராய்' எடுத்திருக்கும் முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.