பதிவுகள்

Sunday 2 October 2011

என்ன ஒரு கரிசனம் ?

நேற்று சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா மீதான பிறந்த நாள் பரிசு வழக்கின் குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யவே 4 ஆண்டுகள் தாமதம் ஆனதோடு மட்டுமல்லாமல் புலனாய்வை முடித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கு சிபிஐ தரப்பு போதுமான காரணங்களை எடுத்து வைக்கவில்லை. இந்த தாமதத்தால், மனு தாரர்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இதனால் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21 உத்தரவாதப் படுத்தியுள்ள அடிப்படை உரிமையான வாழும் உரிமையை பறிக்கும். இந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதித்தால், அது நீதிப் பிறழ்வாகும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்த சிறப்பான தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் கே.என்.பாஷா.

ஜெயலலிதா மீதான வழக்கு என்ன ? 1991 முதல் 1992 வரை ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தார். அப்போது 1992ல் 57 நபர்களால் 87 டிமான்ட் ட்ராப்டுகள் ஜெயலலிதாவுக்கு வழங்கப் படுகின்றன. அந்த 87 டிமான்ட் ட்ராப்டுகளும் பல்வேறு நபர்களால் வழங்கப் படுகின்றன. இது தவிர ரொக்கமாக ஒரு 15 லட்சம் வழங்கப் படுகிறது. இது தவிர, வெளிநாட்டில் இருந்து வந்த 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கான டிமான்ட் ட்ராப்டும் அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கப் படுகிறது. 3 லட்சம் அமெரிக்க டாலர்களை நியூயார்க் நகரத்தில் உள்ள பேங்கர்ஸ் ட்ரஸ்ட் கம்பேனி என்ற நிறுவனம், ஏ.என்.இஸட்.க்ரின்ட்லேஸ் வங்கியின், செயின்ட் ஹீலியா, ஜெர்சி, சேனல் தீவுகள், என்ற இங்கிலாந்தில் உள்ள கிளையில் அன்று எடுக்கப் பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் இருந்து ஜெயலலிதாவுக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்களை டிமான்ட் ட்ராப்டாக அனுப்பியவர் கே.டி.பி.மேனன் என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர். அவர் 1992லேயே இறந்து விடுகிறார்.

இந்தப் பணத்தை, ஜெயலலிதா மைலாப்பூர் கனரா வங்கியில் உள்ள தனது சேமிப்புக் கணக்கில் (எஸ்.பி.அக்கவுன்ட் 23282) போட்டுக் கொள்கிறார். இந்த 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அப்போது அமலில் இருந்த வெளிநாட்டிலிருந்து பணம் வருவது தொடர்பான சட்டத்தின் கீழ், வருமான வரி விலக்கு கோருகிறார். அப்போதுதான் இந்த விவகாரம் வெளியே வருகிறது.

கடந்த மாதம் 15ம் தேதி, போபால் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

பகவான் தாஸ் என்பவர் இந்திய ரயில்வே துறையில் 1984 அட்டெண்டராக பணியாற்றி வருகிறார். ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில்உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம்‘நேர்மையான’ இந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு,போர்வைகளை ‘இலவச’பொருள்களாய் எடுத்துச் சென்றுவிடுவதுண்டு.

அப்போதெல்லாம் அவற்றுக்கான தண்டத் தொகை பகவான்தாஸின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, குடும்ப பட்ஜெட்டில் ’வெட்டு’ விழுந்ததுண்டு. ஆனாலும், இளவயதில் பாரம்பரியமாகக் கற்ற நேர்மை குணத்தை அவர் கைவிட்டதில்லை.

கடந்த செப்.15ம் தேதி அவர் நேர்மைக்கு ஒரு சோதனை. ரயிலில் பயணம் செய்த காங்கிரஸ் எம்.பி. சந்தீப்தீக்ஷித் தான் கொண்டுவந்திருந்த ரூ.10 லட்சம் ரூபாய் உள்ள பையை ரயிலில் வைத்துவிட்டு இறங்கிவிட்டார். வழக்கம்போல் ரயில் பெட்டியில் சோதனை மேற்கொண்ட பகவான் தாஸ், பணப் பையைப்பார்த்தார். ரூபாய் கட்டுகள் தெரிந்தன. அவர் மனத்தில் ஒரு நொடிகூட சலனம் எழவில்லை. உடனடியாகஅந்தப் பையை எடுத்தார். அலுவலகம் சென்றார். உயர்அதிகாரியிடம் சொல்லி ஒப்படைத்தார்.

தன் செயல் குறித்து பகவான் தாஸ் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறுவதைக் கேட்டால் நமக்குள் இறைவன் நல்லவரைத்தான் சோதிப்பான் என்ற உண்மை நங்கூரம் பாய்ச்சி நிலைகொள்ளும்.

‘’எனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறேன். என் குடும்பமும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அன்று ரயிலில் சோதனை மேற்கொண்ட போது பணப்பையைப் பார்த்தேன்.உடனே மெக்கானிக்கை அழைத்துக் காட்டினேன். அவரிடம், இந்தப் பையை நாம் நம் உயரதிகாரிகளிடம்ஒப்படைத்து, இந்தப் பணத்தை உரியவரிடம் சேர்க்க உதவ வேண்டும் என்று சொன்னேன்...”

ஆனால், ஜான்ஸி அருகில் உள்ள லலித்பூரில் வசிக்கும் 54 வயது பகவான் தாஸோ, பணம் ஒரு பொருட்டல்ல என்கிறார். எனக்கு மூன்று மகன்கள். அவர்களுக்கு ஏழைக் குடும்பத்தில் இருந்துதான் பெண் எடுத்தேன். என் இரு மகள்களையும் ஏழைக் குடும்பத்துக்குத்தான் மருமகள்கள் ஆக்கினேன். ஆனால் அவர்கள் செம்மையாக வாழக் கற்றுக் கொண்டவர்கள். பணத்துக்காக நற்பண்புகளை விட்டுவிடக்கூடாது” என்கிறார்.

சரி விஷயத்துக்கு வருவோம். என்னடா இது ஜெயலலிதாவுக்கு போட்டி போட்டுக் கொண்டு பிறந்த நாள் பரிசு வருகிறதே என்று நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு 1991 – 1996ல் என்ன நடந்தது என்று தெரியாது. இன்று திமுகவில் சரணடைந்திருக்கும், செல்வகணபதி, சேடப்பட்டி முத்தையா, இந்திரா குமாரி, அழகு.திருநாவுக்கரசு போன்றவர்களெல்லாம், ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று மண் சோறு சாப்பிட்டவர்கள். கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்தவர்கள். ஜெயலலிதாவின் உருவத்தை கையில் பச்சைக் குத்திக் கொண்டவர்கள்.



சிபிஐ விசாரணையில் தெரிய வந்த விஷயம் 89 டிமான்ட் ட்ராப்டுகளை எடுத்துக் கொடுத்த 57 பேர்களில் 12 பேர் போலியானவர்கள். அப்படி ஒரு நபரோ முகவரியோ இல்லை. மற்றொரு 12 பேர் எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை, நாங்கள் டிமான்ட் ட்ராப்ட் எடுக்கவில்லை என்று கூறி விட்டனர். மீதம் உள்ள 33 பேர் யார் என்று பார்த்தால் அத்தனை பேரும், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மந்திரிகளாகவும், வாரியத் தலைவர்களாகவும் இருந்தனர். ஆக, மந்திரியாக இருப்பதற்கும், வாரியத் தலைவராக இருப்பதற்கும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப் பட்ட லஞ்சம் என்று சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததது.

இதுதான் வழக்கு. இப்போது நீதியரசரின் தீர்ப்புக்கு வருவோம். இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யவே 4 ஆண்டுகள் தாமதம் ஆனதோடு மட்டுமல்லாமல் புலனாய்வை முடித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கு சிபிஐ தரப்பு போதுமான காரணங்களை எடுத்து வைக்கவில்லை. இந்த தாமதத்தால், மனு தாரர்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இதனால் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21 உத்தரவாதப் படுத்தியுள்ள அடிப்படை உரிமையான வாழும் உரிமையை பறிக்கும். மேலும், மனுதாரர் தானாக முன் வந்து, வருமான வரித் துறையினருக்கு பரிசு விவகாரத்தை தெரிவித்துள்ளார். அவருக்கு மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதித்தால், அது நீதிப் பிறழ்வாகும்.

எப்ஐஆர் பதிவு செய்ய ஏன் தாமதம் ?

92ல் ஜெயலலிதாவுக்கு இந்த பரிசுகள் கொடுக்கப் பட்டிருந்தாலும், அதை அவர் வருமான வரித் துறையினரிடம் தாக்கல் செய்திருந்தாலும், அப்போது ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க நிர்ப்பந்தப் படுத்தவே நரசிம்மராவ்ண அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித் துறையினரை உசுப்பி விட்டார். இதனால் தான் 1996 வரை இது வழக்காக மாறவில்லை.

1996ல் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தற்கான முக்கிய காரணம் அதற்கு முந்தைய அதிமுக அரசின் ஊழல் தான். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், வெளிநாடுகளில் புலனாய்வு நடத்த வேண்டியிருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆகஸ்ட் 1996ல் உத்தரவிடுகிறது. இரண்டு மாதங்கள் கழித்து, சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்கிறது.

குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய ஏன் 10 ஆண்டுகள் ?

வழக்கின் புலனாய்வு, லண்டன், அமெரிக்கா, சேனல் தீவுகள் போன்ற இடங்களில் செய்யப் பட வேண்டும். வெளிநாட்டில் புலனாய்வு என்றாலே, அந்த நாட்டுக்கு லெட்டர் ரொகேட்டரி என்று அழைக்கப் படும் நீதிமன்றம் மூலமான கடிதம் அனுப்ப வேண்டும். அதற்குப் பிறகே கேட்கப் படும் ஆவணங்கள் கிடைக்கும்.

இவ்வாறு வழக்கின் புலனாய்வை சிபிஐ முடிக்கும் போது, மீண்டும் திமுக ஆட்சி வந்து விடுகிறது. லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பொது ஊழியர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப் பட்டால், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் முன் அனுமதி பெற வேண்டும். ஜெயலலிதா 2001ல் மீண்டும் எம்.எல்.ஏவாக ஆகி விட்டதால், அப்போது சட்டசபை சபாநாயகர், ஜெயலலிதா மீது வழக்கு தொடுப்பதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் சபா நாயகரிடமிருந்து ஒப்புதல் கிடைக்குமா ?

மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் 2006ல் சபாநாயகர் வழங்கிய ஒப்புதலுக்குப் பிறகு ஜுலை 2006ல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

மனுதாரர் தானாக முன் வந்து, வருமான வரித் துறையினருக்கு பரிசு விவகாரத்தை தெரிவித்துள்ளார். அவருக்கு மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை

மனுதாரருக்கு இதை மறைக்கும் எண்ணம் இல்லையா ? மனுதாரர் இதை எப்படி மறைக்க முடியும் என்பதுதான் வினோதமாக உள்ளது. ரொக்கமாக இருப்பவற்றை மறைத்து பூட்டி வைத்துக் கொள்ளலாம். டிமான்ட் ட்ராப்டுகளை வங்கிக்குச் செல்லாமல் எப்படி மறைக்க முடியும் ? மேலும், வருமான வரிச் சலுகை பெறுவதற்காகவே ஜெயலலிதா இதை தெரிவித்தார் என்பதையும் மறுக்க முடியாது. இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி, டிமான்ட் ட்ராப்டுகளை வங்கிக்கு செல்லாமல், எப்படி பணமாக்குவது என்ற விபரத்தையும் தனது தீர்ப்பிலேயே தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வாழும் உரிமை பாதிக்கப் பட்டுள்ளதா ?

ஒரு குண்டு வெடிப்பு வழக்கில், அப்துல் ரஹீம், முபாரக் அலி, குணங்குடி ஹனீபா உள்ளிட்டோர் 1997ல் கைது செய்யப் படுகிறார்கள். அவர்களுக்கு 13 ஆண்டுகளாக ஜாமீன் வழங்கப் படவில்லை. 2 மாதங்கள் தன் மகள் சிறையில் இருப்பதைக் கண்டு ரத்தக் கண்ணீர் விடும் இந்தக் கருணாநிதி அரசு, அவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதை தடுத்ததோடு அல்லாமல், வழக்கு விசாரணையையும் தொடர்ந்து தாமதித்து வந்தது. சாட்சிகளை ஆஜர் படுத்தாதது, நீதிபதிகளை மாற்றுவது என்று பல்வேறு இடைஞ்சல்களை செய்தது. அப்துல் ரஹீம் மீதான ஒரே குற்றச் சாட்டு என்ன தெரியுமா ? அல் உம்மா என்று எழுதப்பட்ட ஒரு நோட்டீசை வைத்திருந்தார் என்பது மட்டும் தான். இதற்காக 13 ஆண்டுகள் சிறை.

13 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர்கள் 2009ல், ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். தங்களது ஜாமீன் மனுவில், விரைவான நீதி விசாரணையை உத்தரவாதப் படுத்தியிருக்கும் அரசியல் சட்டப் பிரிவு 21 தங்களுக்கு மறுக்கப் பட்டுள்ளது. 13 ஆண்டுகளாக சிறையில் ஜாமீன் இல்லாமல் அடைத்திருப்பது கடுமையான மனித உரிமை மீறல் என்று ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அந்த ஜாமீன் மனு நீதியரசர் கே.என்.பாட்சா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணை முடியும் தருவாயில் இருப்பதால், ஜாமீன் வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.

ஜெயலலிதா, செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர், சிறையில் இருப்பவர்கள் அல்ல. அவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறுவதே நீதிப் பிறழ்வு என்று சொல்லும் கே.என்.பாட்சா, 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களின் மனித உரிமை மீறலை கண்டுகொள்ளவில்லை.

அந்த வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்புக்காக நாள் குறிக்கப் பட்ட பிறகு, அந்த நீதிமன்றத்தின் நீதிபதி மாற்றப் பட்டார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், நீதிபதியை மாற்றக் கூடாது என்று முற்றுகை போராட்டம் நடத்திய பிறகு அந்த ஆணை ரத்து செய்யப் பட்டது. அவர்கள் அத்தனை பேரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப் பட்டார்கள். இதில் யாருடைய வாழும் உரிமை பாதிக்கப் பட்டது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

சரி நீதியரசர் கே.என்.பாட்சா எப்படிப் பட்டவர் ? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிலேயே மிகச் சிறந்த நீதிபதி என்று கருதிய கருணாநிதி, நீதியரசர் கே.என்.பாட்சா அவர்களுக்கு “சமூகத்தில் சிறப்பு வாய்ந்தவர்” என்பதால் சென்னை திருவான்மியூரில், உயர் வருவாய் பிரிவில் எஸ்.8 என்ற வீட்டு மனையை ஒதுக்கி கவுரவித்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.