இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை அமைத்த  நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே 2009-ம் ஆண்டில்  நடந்த இறுதிப்போரில் ராணுவம் அத்துமீறிசெயல்பட்டு, ஏராளமான தமிழர்களை கொன்று  குவித்ததாக ஐக்கிய நாடுகள் சபைக்கு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. அதன்  அடிப்படையில், அதுபற்றி விசாரிக்க 3 பேர் அடங்கிய நிபுணர் குழுவை ஐ.நா.சபை பொதுச்  செயலாளர் பான் கி-மூன் அமைத்திருந்தார். அக்குழு இலங்கைக்குச் சென்று விசாரணை நடத்த  முயன்றபோது அக்குழுவை அனுமதிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில் பல்வேறு நிலைகளில் 3 பேர் கொண்ட நிபுணர் குழு விசாரணை  நடத்தியது. கடந்த வாரம் அக்குழு தனது அறிக்கையை ஐ.நா.பொதுச் செயலாளரிடம் தாக்கல்  செய்துள்ளது. அக்குழு அளித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் இன்னும்  வெளியிடப்படவில்லை. என்றாலும் அக்குழு அளித்த அறிக்கை விவரம், இலங்கையிலிருந்து  வெளியாகும் நாளிதழில் வெளியாகியுள்ளது. அதில் இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இறுதிக்கட்ட போர் நடந்தபோது விடுதலைப்புலிகள் பலர் வன்னியிள்ள மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவந்தனர். அவர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது என அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதுபோல்  வன்னிப்பகுதி மக்களை விடுதலைப்புலிகள் பிணைக் கைதிகளாகப்பிடித்து வைத்துக் கொண்டு  ராணுவத்துக்கு எதிராக போரிட்டனர். அப்போது தப்பியோடிய பொதுமக்களை விடுதலைப்புலிகள்  கொன்றுள்ளனர் என்றும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா. குழு அளித்த பரிந்துரை குறித்து இலங்கை அரசு தரப்பில் கருத்துத்  தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் அளித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்  அடிப்படையில், விசாரணை குழுவை ஐ.நா. அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கை  ஒருதலைப்பட்சமானது என்று கூறியுள்ளது.