பதிவுகள்

Tuesday 9 August 2011

வேஷம் கலைகிறது!




தனது கடன்வரம்பை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்ட இரு தினங்களில், கடன்பெறும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், மிக உயர்ந்த இடத்தில் (ஏஏஏ) இருந்த அமெரிக்கா, தற்போது ஏஏ+ என்று சற்று தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டது.  உலகுக்குச் சந்தைப் பொருளாதாரம்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் என்றும் மக்கள் சேமிப்பதைவிட செலவழிப்பதை ஊக்குவிப்பது தான் ஒரு பொருளாதாரத்தின் உயிர்த்துடிப்பு என்றும் பாடம் சொல்லித்தந்த அமெரிக்கா இப்போது தள்ளாடுகிறது. பெரியண்ணன் பாதையில் வீரநடை போட்ட நாடுகள் - இந்தியா உள்பட - இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றன. வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தடுமாறுகின்றன.  தடுமாற இருந்த பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்க அமெரிக்காவில் மிகப் பெருமளவில் வீட்டுக் கடன் அளிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கடனை மீட்கவும் முடியாமல், பறிமுதல் செய்த வீடுகளை விற்கவும் முடியாமல் வங்கிகள் தடுமாறியதால், அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதை ஒருவழியாகச் சமாளித்து, வீட்டுக்கடன் வாங்கி அவதிப்படுபவர்களை மீட்கும் நடவடிக்கைகளையும் அதற்கான மானியங்களையும் மேற்கொண்டு வந்தநேரத்தில், அமெரிக்காவின் கடன் வரம்பை உயர்த்தி, மேலும் கடன் வாங்குவதன் மூலம்தான் இந்தச் சரிவை சமாளிக்க முடியும் என்று அந்நாட்டு வல்லுநர்கள் அறிவுரை கூறியதால், வேறுவழியின்றி அமெரிக்க அதிபர் ஒபாமா மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.  தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, கடன்பெறும் வரம்பை 2 லட்சம் கோடி டாலராக அதிகரிப்பதும், செலவுகளை  3 லட்சம் கோடி டாலராகக் குறைப்பதும்தான்.  இந்தப் பிரச்னையைச் சமாளித்துவிட்டதாக அமெரிக்க அரசுத் தரப்பில் கூறிக்கொண்டாலும், பொருளாதார நிபுணர்கள் இந்த நிலை அமெரிக்காவை மேலும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குக் கொண்டு செல்லும் என்று எச்சரிக்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணம் இதுதான்: ஒரு நாட்டின் நிதிப் பற்றாக்குறையை இரு வழிகளில் மட்டுமே சமாளிக்க முடியும். ஒன்று - வரியை உயர்த்தி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டுவது. இரண்டாவதாக - மக்களுக்காகச் செலவிடப்படும் தொகையைக் கட்டுப்படுத்துதல்.  இந்த இரண்டில், வரிகளை உயர்த்தினால் பாதிக்கப்படுவது அமெரிக்காவின் செல்வந்தர்களும், பெரும் தொழில்நிறுவனங்களும்தான். ஏனென்றால் அவர்கள்தான் வரியைச் செலுத்தியாக வேண்டும். ஆனால், அவர்கள் கூட்டணி அமெரிக்காவில் மிக உறுதியாக உள்ளது என்பது மட்டுமல்ல, அமெரிக்கா போன்று சந்தைப் பொருளாதாரத்தை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படும் நாடுகளில் அவர்கள்தான் அரசையே வழிநடத்துகிறார்கள். ஆகையால் இரண்டாவது வழியில் அடியெடுத்து வைத்திருக்கிறது அமெரிக்கா.  மக்களுக்காகச் செலவிடப்படும் நிதி என்பது, வெறும் நிர்வாகச் செலவுகள் மட்டுமல்ல. விவசாய உற்பத்திக்கான மானியம், மருத்துவச் சிகிச்சைகளுக்கான வசதிகள் மற்றும் மானியம், வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை, வட்டித் தள்ளுபடி என்கிற இத்யாதி செலவுகளைத்தான் தற்போது அமெரிக்கா கட்டுப்படுத்தப்போகிறது. இந்தச் செலவுகளை உடனே அமல்படுத்தாமல் படிப்படியாகக் குறைத்துக்கொள்வோம் என்று அமெரிக்க அரசு சொன்னாலும்கூட, இது சராசரி அமெரிக்கப் பிரஜையை பெருமளவில் பாதித்து, அவர்களது அதிருப்தியைத் தேடித்தரும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.  ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது அமெரிக்க தொழிற்கூடங்களுக்கு அதிகச் சலுகைகள், வரிக் குறைப்பு எல்லாமும் அறிவிக்கப்பட்டது. வரியை மெல்லமெல்ல உயர்த்தியிருந்தால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் அமெரிக்கா கொஞ்சம் மீண்டிருக்கும். ஆனால், செல்வந்தர்கள் கூட்டணி இதைச் செய்யவிடவில்லை.  இப்போது மக்களுக்கான நலஉதவிச் செலவுகளைக் குறைத்தால் அமெரிக்க மக்கள் அதை ஈடுசெய்ய என்ன செய்வார்கள்? ஏதாவது கூடுதலாக வேலை செய்தாக வேண்டும். ஏற்கெனவே வேலையில்லாதவர்கள் நிறையப் பேர் இருக்கும்போது, சலுகைகளை இழந்து குடும்பச்செலவைச் சமாளிக்க விரும்புவோரும் இரண்டாவது வேலைதேடத் தொடங்கினால் என்ன ஆகும்? சம்பளத்தைக் குறைத்து, வேண்டுமானால் வந்து வேலைசெய் என்பார்கள். உழைப்புச் சுரண்டலுக்குத்தான் இப்போதைய முடிவு கொண்டுசெல்லும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.  கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் வருவாய் 18 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆனால் உழைப்பாளர்களின் வருமானம் 12 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த முரண்பாடு சரியல்ல என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.  இன்னொரு புள்ளிவிவரத்தையும் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்புக் குறைந்துகொண்டே போகிறது என்கிறார்கள். 2007-ல் வேலைவாய்ப்புப் பெற்ற இளைஞர்கள் எண்ணிக்கை 63 விழுக்காடு. 2009-ல் 59.4 விழுக்காடு, 2011-ம் ஆண்டில் 58.2 விழுக்காடு. பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டுவிட்டதாகச் சொல்லப்படும் இன்றைய காலக்கட்டத்திலும்கூட வேலைவாய்ப்புக் குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.  இதெல்லாம் அமெரிக்க அரசுக்குத் தெரியாமலா இருக்கும். நிச்சயம் தெரியும். ஆனால், அமெரிக்கத் தேர்தலில் அரசியல்வாதிகளின் பிரசார செலவுக்குப் பணம் கொடுப்போர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். இதற்கு கணக்கு, தணிக்கை எல்லாமும் உண்டு. ஆகையால் அங்கே வல்லான் வகுத்ததே வாய்க்கால்.  இந்தச் சரிவிலிருந்து அமெரிக்கா மீளுமா, சமாளித்து எழுமா என்பது போகப் போகத் தெரியும். இப்போது ஒன்று மட்டும் தெரிகிறது: வேஷம் கலைந்துவிட்டது!