பதிவுகள்

Monday 18 April 2011

இலங்கை அதிபரின் மே தின அழைப்புக்கு எதிர்ப்பு !

இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மே தின ஊர்வலங்களை பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போதே சனிக்கிழமையன்று அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
ஊடகங்களில் கசிந்த ஐநாவின் அந்த அறிக்கையின்படி இலங்கை அரசாங்கத்தின் மீது போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், அதனை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
தமது அரசாங்கத்துக்கும், செயலுக்கும் பொதுமக்களின் பூரண ஆதரவு இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காகவே, இந்த மே தின கொண்டாட்டங்களை ஐநாவின் அறிக்கைக்கு எதிராக குவிப்பதற்கு அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.
தனது நாட்டுக்காக மின்சார நாற்காலியில் அமரவும் தான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், தொழிலாளர் தினமான மே தினத்தை ஐ நாவின் போர் குற்ற அறிக்கையை எதிர்ப்பதற்கான தினமாக பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் எதிர்த்துள்ளன.
இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிப்பவரும், செங்கொடிச் சங்கம் உட்பட பல மலையக தொழிற்சங்கங்களின் மூத்த தலைவருமான ஓ. இராமையா அவர்கள, தொழிற்சங்கவாதி என்ற ரீதியில் மே தினத்தை இதற்கு பயன்படுத்துவதை தான் ஆதரிக்கவில்லை என கூறினார்.
அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு இடதுசாரி அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கமான லங்கா தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான ரி. எம். ஆர் . ரசூல்டீனும் அதிபரின் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். தமது சங்கங்கள் எல்லாம் அரசாங்கத்தின் தனியார் துறைக்கான பென்சன் திட்டத்தை எதிர்த்து அதனையே மே தின கோசமாகக் கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.