இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த  குற்றச்சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறவைக்கும் நோக்குடன் ஐநா தலைமைச் செயலரால்  அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை அதிகாரபூர்வமாக இன்னும்  வெளியிடப்படாதுள்ள நிலைமையில் அந்த அறிக்கையிலிருந்து கசிந்துள்ள விடயங்கள் என்று  கூறி இலங்கையின் செய்தி நாளிதழ் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது. 
- அரச சார்பு நாளிதழில் வெளியானது
 
 அரச சார்பு பத்திரிகையான தி ஐலண்ட் ஐநா நிபுணர்குழு,  அறிக்கையின் சுருக்கங்கள் என்று இதனை வெளியிட்டிருக்கின்றது. 
ஐநா தலைமைச் செயலரின் ஆலோசனைக்கான  நிபுணர்குழு ஆரம்பம் முதலே பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு உரிய விடயமாகவே இருந்து  வருகின்றது. 
விடுதலைப் புலிகள் நீண்டகாலம் மேற்கொண்ட சிவில் யுத்தத்தின்  போது அவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இறுதி யுத்தத்தின் கடைசிக்  காலப்பகுதியில் பெரும் போர்க்குற்றங்களும் மற்றும் மனித உரிமை மீறல்களும்  இடம்பெற்றதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன.  
இந்த நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து தனக்கு ஆலோசனை  வழங்குமாறு ஐநா தலைமைச் செயலர் பான்கீ மூன் இந்த நிபுணர் குழுவை  அமைத்திருந்தார்.
இந்த நிபுணர் குழு அமைக்கப்படுவதை இலங்கை அரசும் கடுமையாக  எதிர்த்திருந்தது.
இப்போது, அரச ஊடகமான தி ஐலண்ட் நாளிதழே, ஐநா நிபுணர்குழு இறுதி  அறிக்கையின் சுருக்கங்கள் என்று கூறி அவற்றை வெளியிட்டு பரபரப்பை  ஏற்படுத்தியிருக்கின்றது. 
கடுமையான குற்றச்சாட்டுக்கள் அந்த அறிக்கையில்  முன்வைக்கப்பட்டுள்ளன.
- போர்க் குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும்
 
| இறுதிப் போரில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு | 
‘யுத்தம் நடந்தபோது, அங்கிருந்த மருத்துவமனைகள் மீது  திட்டமிட்டே அரசாங்கப் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளன, யுத்த வலயத்துக்குள்  சிக்கிக்கொண்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் விநியோகத்தையும்  அரசாங்கம் தடுத்து இல்லாதுசெய்தது’ என்றும், கசிந்துள்ளதாகக்கூறப்படும் ஐநா அறிக்கை  சுட்டிக்காட்டியுள்ளது. 
யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிவந்த மக்களையும் அரசாங்கம்  எப்படி மூடிய முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தது என்பதையும் விபரித்துள்ள அந்த  அறிக்கை, அந்த முகாம்களின் நிலமையை ‘கொடூரமானது’ என்றும் வர்ணித்துள்ளது. 
ஐநா குழுவின் படி, இங்கு சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்  நிரூபிக்கப்பட்டால், அவற்றில் சில குற்றச் சம்பவங்கள் போர்க்குற்றங்கள் மற்றும்  மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் என்றளவுக்கு பாரதூரமானவை. 
- இலங்கை அரசாங்கம் நிராகரித்தது!
 
| ஐநா குழுவுக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது | 
ஐநா அறிக்கை, பொதுவான அடிப்படையில் தகவல்களை வெளியிட்டுள்ளதே  தவிர, எதனையும் குறிப்பாக சுட்டிக்காட்டவில்லை எனவும் இலங்கை ஆளுங்கட்சி நாடாளுமன்ற  உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க பிபிசிக்குத் தெரிவித்தார். 
இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் வெளிப்படையான அரசியல்  நிகழ்ச்சியே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
- நிபுணர்குழு சிபார்சுகள்!
 
 இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்குமான  சிபாரிசுகள் சிலவற்றையும் ஐநா நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஐநா நிபுணர் குழு முன்வைக்கக்கூடிய சிபாரிசுகளை இலங்கை  அரசாங்கம் கருத்தில் கொண்டு அவற்றை செயற்படுத்த வேண்டும் என மனித உரிமைகளுக்கான  பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்) சங்கத்தை சேர்ந்த கே. சிறிதரன் தெரிவித்தார்