பதிவுகள்

Tuesday 19 April 2011

தோல்விக்கு பின்-கலைஞரின் கண்ணீர் கடிதம்!

கொடி தோரணம் இல்லை. ஆரவாரம், பேரணி இல்லை. பொது கூட்டம், கல்வீச்சு, அடிதடி எதுவுமே இல்லை தமிழக தெருக்களின் வீட்டு சுவர்கள் சுத்தமாக இருக்கிறது. எருமை மாடு உரசுவதற்கும், பசுமாடு திண்பதற்கும் போஸ்டர்கள் கிடையாது. ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் தேர்தல் முடிந்து விட்டதாம். நடந்ததும்  தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. ஒரு நீர்குமிழி விரிந்துபட்டென்றுவெடிப்பதுபோல்எல்லாமேஒய்ந்துவிட்டது.
 பழையகால தேர்தல் என்றால் எத்தனை ஊர்வலங்களை பார்க்கலாம். உங்கள் வீட்டு பிள்ளை, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார், ஏழைகளின்  சின்னம் என்றெல்லாம் எத்தனை ஒலிபெருக்கிகள் அலறி காதை கிழிக்கும். தெருவிளக்கில் மின்சாரம் திருடி கட் அவுட்டுகளை அலங்கரிப்பதாகட்டும், திண்ணை தூங்கிகளுக்கு சாராயம் வாங்கி கொடுத்து அலற வைப்பதாகட்டும், ‘டீ’ கடை பெஞ்சில் கால்மேல் கால் போட்டு அரசியல் கச்சேரி நடத்துவதாகட்டும், வீடு வீடாக தேடி வந்து காலில் விழுகிறேன் பேர்வழி என முரட்டு கையால் பாதங்களை சுரண்டுவதாகட்டும,; அதில் ஒரு அலாதியான போதை இருக்கத்தான் செய்தது, ஒரு மக்கள் அரசு என்பது மக்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச சந்தோசம் இது மட்டும் தான் என்றிருந்த நிலைமாறி அதுவும் இல்லாமல் போய்விட்டது.

     அரசாங்கமும் தேர்தல் கமிஷனும் மக்கள் சந்தோஷத்தை தின்று ஏப்பம் விட்டு விட்டதென்றால் நாமும் அப்படி செய்ய முடியுமா? தேர்தலை முடித்தோம்  ஓட்டுகளை எண்ணி பட்டாசு வெடித்து கொண்டாடியோ தலையில் துண்டு போட்டு ஒப்பாரி வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம் என்றோ கூட போக முடியவில்லை. ஒரு நாள் கூத்தின் விடையை பார்க்க ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமாம். அது வரையிலும் தேர்தலில் நின்றவர்கள் குளிர் ஜுரத்தில் கிடந்து துடிப்பது ஒரு புறம் இருக்கட்டும். நமது திருவாளர் பொதுஜனம் யார் ஜெயிப்பர்? யார் ஆட்சி அமைப்பார்? எந்த கூட்டணி யார் பக்கம் அணி மாறும்? என்ற எதிர்பார்ப்பில் நெஞ்சி படபடக்க காத்திருப்பது தான் மகா பரிதாபம். எனவே நமது திருவாளர் பொதுஜனத்தின் ஆவலுக்கு தீனி போட தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் யார் தோற்றால் என்ன பேசுவார்கள் என்பதை சிறிது கற்பனை செய்து பார்ப்போம்.
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு தோல்வி என்பது புதிய விஷயமல்ல அவர் பல முறை தோற்று இருக்கிறார் எனவே இந்த முறை தோற்று விட்டால் கழக உடன் பிறப்புகளுக்கு எப்படி கடிதம் எழுதுவார்? அவரின் துள்ளிவரும் தமிழ் நமக்கு வராது என்றாலும் முயற்சி செய்து தான் பார்ப்போமே!

உடன் பிறப்பே!
வான்புகழ் கொண்ட வள்ளுவனையும செம்மொழியில் சிலப்பதிகாரம் சமைத்த இளங்கோவையும் தந்த தாய் தமிழ்நாடு இன்று கண்டிருக்கும் அலங்கோலத்தை பார்த்தாயா? உடல் எங்கும் பாய்ந்தோடி கொண்டிருக்கும் பச்சை ரத்தம் நெஞ்சத்தை மட்டும் கிழித்து குபுகுபுவென பாய்வது போல, நீ துடித்திருப்பாய் அன்னை தமிழ்நாடு அமாவாசை இருளில் முழ்க போகிறதே என்று கலங்கி கண்ணீர் வடித்திருப்பாய்.

     தம்பி உன் மூத்த சகோதரனான நான் இளமை பிராயத்தை கடந்து முதுமையை தொட்டுவிட்டாலும், பாழ்பட்டு கிடக்கும் தாய் தமிழகத்தை வாழ வைத்து பார்க்கும் வற்றாத ஆசையில் சுற்றாத இடமில்லை. சூழன்று அடிக்கும் சூறாவளி போல என் தாய் நிலமெல்லாம் தம்பி உன் மலர்ந்த முகத்தை காண ஓடோடி வந்தேன். பல தாய் வயிற்றில் நாம் பிறந்தாலும் ஒரு தாய் மக்களென உன்னை நானும், என்னை நீயும் கண்ணார கண்டு நெஞ்சார தழுவி கொண்டோம். அந்த தழுவிலுள்ள பாசம் பணத்தால் வந்ததல்ல தமிழன் என்று இனத்தால் வந்தது என்று யாருக்கு தெரியும்?


இந்த அண்ணனும் தம்பியும் சேர்ந்து விட்டால் அடிமையாக கிடக்கும் தமிழன் அடலேறு என சீறி எழுந்து விடுவான். தன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆரிய மாயையின் நெஞ்சை பிளந்து விடுவான் என அஞ்சி நடுங்கிய தர்ப்பைபுல் கூட்டத்தார் சதி பேசினார்கள் தங்களுக்குள் உடைந்து கிடந்த பிணக்குகளை தற்காலிகமாக சமன் செய்து வானை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட நாம் பள்ளத்தில் வீழ்வதற்கு குழி வெட்டினார்கள்.

     கிரேக்க வீதிகளில் சுற்றி திரிந்த ஒரு கிழவன் வருவோர் போவோரை எல்லாம் வாயார வரவேற்று உன்னையே நீ அறிவாய் என தத்துவம் பேசினானாம் அதே போல உடன்பிறப்பே உன்னையும் நீ அறிவாய், என்னையும் நீ மட்டுமே அறிவாய். கூழுக்கும், ஆடைக்கும் பாடிய பழந்தமிழ் புலவன் போல தமிழர் நலத்தை மட்டுமே...!