பதிவுகள்

Wednesday 27 April 2011

ஐ நா அறிக்கை -முழு விவரம் !

இலங்கையின் இறுதிகட்டப் போர் தொடர்பிலான ஐ நா வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
திங்கட்கிழமை(25.4.11) மாலை நியூயார்க்கில் இந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இறுதிகட்ட யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச தரப்பின் ஷெல் தாக்குதலின் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஐ நா வின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட அந்த மூவர் குழு அளித்துள்ள அறிக்கையில், இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்பட்ட போர் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இலங்கை அரசு இந்த அறிக்கை பாரபட்சமானது என்றும் மோசடியானது என்றும் கூறியுள்ளது 
நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை!
எனினும் இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று தலைமைச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார்.
போர்க் குற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டுமானால், இலங்கை அரசு இணங்கினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அல்லது பாதுகாப்பு சபை அனுமதித்தாலோதான், அது நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த போரில், அரசு வெற்றி பெற்ற நிலையில், அந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை இலங்கை அரசு மறுக்கிறது.
அந்தச் சம்பவங்களுக்கு இலங்கை அரசோ அல்லது இலங்கை இராணுவமோ பொறுப்பல்ல என்று இலங்கை அரசின் பேச்சாளர் லக்ஷமண் ஹுலுகல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அப்பாவி பொதுமக்கள் யாரும் இங்கு குறிவைக்கப்படவில்லை என்றும், அரசு தரப்பு குண்டு வீச்சுக்களையோ அல்லது ஷெல் தாக்குதலையோ நடத்தவில்லை என்றும் கூறும் ஹுலுகல்ல, அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் அதை தம்மால் நிரூபிக்க முடியும் என்றும் கூறுகிறார்.
இந்த அறிக்கை வெளியானால் நாட்டின் நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதகம் ஏற்படும் என்று கூறி இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று அரசு முன்னர் கோரியது. 
மருத்துவமனைகள், ஐ நா அலுவலகம் மீது தாக்குதல்!
ஐ நா வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில், மருத்துவமனைகள் மற்றும் ஐ நா வின் மையங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்கள் ஆகியவற்றின் மீது திட்டமிட்டு ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.
அதே நேரம் சுமார் 330,000 பொதுமக்களை விடுதலைப் புலிகள் கேடையமாக பயன்படுத்தினர் என்றும் தப்பித்துச் செல்ல முயன்றவர்களை சுட்டுக் கொன்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தலையில் சுடப்பட்டார்கள் என்றும், மகளிர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பு மீதும் நம்பகத்தன்மை வாய்ந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை நிரூபிக்கப்பட்டால், பரந்துபட்ட அளவில் சர்வதேச மனித நேய சட்டங்கள், மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டுள்ளதை கோடிட்டு காட்டும் எனவும் அந்த நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக கருதப்படலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 

போர்க்குற்றம் !
குற்றங்கள்
பாரதூரமான ஷெல் தாக்குதல்களில் பொது மக்களைக் கொன்றது.
மருத்துவமனை மற்றும் மனித நேயப் பணிகளுக்குப் பயன்படும் இடங்களை தாக்கியது.
மனிதாபிமான உதவிகளை செய்யவிடாமல் தடுத்தது.
போரால் பாதிக்கப்பட்டோர் மற்றும் போரில் தப்பிப் பிழைத்தோர் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள். அதாவது இடம்பெயர்ந்தோர் மற்றும் புலிகள் என்ற சந்தேகத்துக்குள்ளானோர் நிலை.
போர் பகுதிக்கு வெளியே நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் - குறிப்பாக ஊடகங்கள் மீதும் அரசை விமர்சிப்போருக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் என நடந்த குற்றங்களை ஐ நா வரிசைப்படுத்தி பட்டியலிட்டுள்ளது.
இலங்கைக்குள் மனித நேய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் - சிவிலியன்களின் உயிரிழப்பை சிறிதும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் இலங்கை அரசு அந்த கால கட்டத்தில் சூளுரைத்து வந்தாலும் - ஐ நா குழுவிடம் இதற்கு முற்றிலும் மாறான நம்பத்தகுந்த புகார்கள் கிடைத்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படும் பட்சத்தில் அவை சர்வதேச மனிதநேய சட்டங்களையும் மனித உரிமை சட்டங்களையும் மீறுவதாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் தாக்குதல்கள்!
அதிலும் குறிப்பாக இறுதி கட்டப் போர் நடந்த காலப் பகுதியில் அதாவது செப்டம்பர் 2008 க்கும் 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதிக்கும் இடையேயான காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் தமக்கு கிடைத்துள்ளதாக கூறியுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை.. இலங்கை அரசு மோதல்களற்ற பகுதி என்று தான் அறிவித்த பகுதி மீது மூன்று தினங்களுக்கு தொடர்ந்து ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு வாக்குறுதி அளித்த பிறகு இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
அதே போல ஐநா வேலைகளை ஒருங்கிணைக்கும் மையம், உணவு வினியோகத்துக்குப் பயன்படுத்தப்படும் பாதைகள் மற்றும் போரில் காயமடைந்தவர்களை மீட்டுச் செல்ல வந்த செஞ்சிலுவைச் சங்க கப்பல் போன்றவற்றின் மீது அரசு ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஐ நா கூறியுள்ளது. மேலும் இது போன்ற தாக்குதல்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து தமது உளவுப் பிரிவு மூலமும், ஐ நா முனகூட்டியே தெரிவித்திருந்த தகவல்கள் மூலமும் விபரங்கள் தெரிந்த நிலையிலும் அரசு இதைச் செய்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகள்
வன்னிப் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனைகள் மீது தொடர்ந்து திட்டமிட்ட வகையில் ஷெல் தாக்குதல்களை அரச படையினர் நடத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு மருந்து அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்வதற்கான உபகரணங்கள் போர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவது தடுக்கப்பட்டதன் காரணமாக மக்களின் பிரச்சனைகள் அதிகரித்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
போர் பகுதியில் சிக்கியிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் கூறியதாகவும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போரில் இறந்து போனதாகவும் கூறும் ஐ நா அதிலும் குறிப்பாக போரின் இறுதி நாட்களில் ஏராளமானோர் யாரென்று தெரியாத நிலையில் - அடையாளம் காணப்படாத நிலையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வல்லுறவு
போர்ப் பகுதியில் இருந்து வெளியே வந்தும் மக்களின் துயர்கள் நீங்கவில்லை
விடுதலைப் புலி உறுப்பினர்களை கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோதனைகள் 
ஒளிவு மறைவற்ற  முறையிலும் -மூன்றவது தரப்பின் 
பாதுகாப்பின் கீழும் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ள ஐ நா, 
சோதனையின் போது பிடித்துச் செல்லப்பட்ட சிலர் விசாரணையின்றி 
உடனடியாக கொல்லப்பபட்டதாகவும், பெண்கள் பலர் பாலியல் 
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 
போரில் இடம்பெயர்ந்தோர் மிகவும் நெருக்கடியான இடத்தில் 
குடியமர்த்தப்பட்டதால் 
அங்கு மிக மோசமான நிலைமை ஏற்பட்டதுடன்
முகாம்வாசிகள் சிலர் சித்ரவதைக்குட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்
என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் முகாமில்
இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டோருடன் வெளி
உலகத்துக்கான தொடர்பு அறுந்து விட்டது என்றும், அப்படி கொண்டு
செல்லப்பட்டோர்கள் மேலும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகலாம் என்றும்
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
அறிக்கைக்கு வரவேற்பு!
ஐ நா வின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட அந்த குழுவின் அறிக்கையை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த போரின் இறுதி நாட்களில் என்ன நடைபெற்றது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள இந்த அறிக்கை வழி செய்கிறது என்றும் ஐ நா வின் மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
தமது அறிக்கையை இலங்கை அரசு வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஐ நா வின் மூவர் குழு கோரியுள்ளது. இறுதிகட்ட போரின் போது ஏற்பட்ட பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச அளவுகோலுக்கு அமைய இலங்கை அரசு போரின் இறுதி நாட்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த நியாயமான ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மூவர் குழு தமது அறிக்கையில் கூறியுள்ளது.