பதிவுகள்

Tuesday 8 March 2011

இலவு காத்த கிளி' கதையாகி போனதே !

தி.மு.க., கூட்டணியில் இணைந்து செயல்படுவோம், என அறிவித்தும் இது வரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் புதிய நீதிக் கட்சியினர், "அப்செட்' ஆகியுள்ளனர். அ.தி.மு.க., வில் இருந்து விலகிய ஏ.சி.சண்முகம் 1999ம் ஆண்டு முதலியார் பேரவை துவங்கினார். பின்னர் 2000ம் ஆண்டு, "புதிய நீதிக் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கினார். சட்டசபை தேர்தலில் ஒரு முறை அ.தி.மு.க., வுக்கும், மறுமுறை தி.மு.க., வுக்கும் ஆதரவு அளித்தார்.

"வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இணைந்து செயல்படும். எத்தனை தொகுதிகள் என்பதை தி.மு.க., தலைமையுடனான பேச்சு வார்த்தைக்குப் பின் முடிவு செய்யப்படும்' என அக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், கடந்த மாதம் கடலூரில் நிருபர்களிடம் கூறினார்.


இதனால் எப்படியும் இந்த தேர்தலிலாவது கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், புதிய நீதிக் கட்சி தொண்டர்கள் காத்திருந்தனர். தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பா.ம.க., - வி.சி., உள்ளிட்ட கட்சிகளுடன், தி.மு.க., பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி உடன்பாடு செய்தது. ஆனால் புதிய நீதிக் கட்சியை பேச்சுவார்த்தைக்கு தி.மு.க., அழைக்காததால், அக்கட்சி நிர்வாகிகள் "இலவு காத்த கிளி' கதையாகி விடுமோ என புலம்பி வருகின்றனர்.