பதிவுகள்

Sunday 6 March 2011

டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே பெண்கள் முற்றுகை போராட்டம் எதிரொலியாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை உடனடியாக திறக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த கொண்டமாநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்களின் போராட்டம் காரணமாக பிப்ரவரி 17ம் தேதி நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மூடப்பட்டு கிடக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்கக்கோரி கொண்டமாநல்லூரைச் சேர்ந்த சில மகளிர் சுயஉதவிக்குழுவினர் நேற்று முன்தினம் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.. அப்போது அவர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் எங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் குடிப்பதற்காக 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆந்திர மாநிலமான ஆரூர் கிராமத்திற்கு செல்கிறார்கள். அப்படி சென்று விட்டு வரும் போது நல்ல நிலையில் வருவது இல்லை. அவர்கள் அங்கிருந்து வாகனங்களில் வரும்போது விபத்து ஏற்படும் அபாயமான நிலையும் உள்ளது. இங்கேயே கடை இருந்தால் குடித்து விட்டு வீட்டோடு இருப்பார்கள் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராமஜெயத்திடம் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்ககோரி பெண்கள் மனு ஒன்றையும் கொடுத்தனர். இந்த நிலையில் கொண்டமாநல்லூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க டாஸ்மாக் மாவட்ட உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து 15 நாட்களாக மூடப்பட்டு கிடந்த டாஸ்மாக் கடை நேற்று காலை மீண்டும் திறக்கப்பட்டது.